கூறாமல் சன்னியாசம்

ஓடிப்போய்விடலாம் என்று நான் முடிவு செய்து, புறப்பட்ட தினத்தைத் தேவர்கள் ஆசீர்வதித்திருக்க வேண்டும். அன்று நல்ல மழை. சென்னை நகரம் அதற்கு முன் பார்த்திராத இயற்கைத் தாண்டவம் அது. கடற்கரையில் அபாயச் சின்னம் ஏற்றி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, வீட்டுத் தரைகளில் ஈரக் கோணிகள் நிரம்பியதும் புறப்பட்டேன்.

‘இந்த மழையில் எங்க கிளம்பறே கிருஷ்ணா? போய்த்தான் ஆகணும்னா குடை எடுத்துண்டு போ’ என்று மன்னி சொன்னாள்.

சற்று தாமதித்தேன். அது கவித்துவம் நிரம்பிய அபத்தக் கணம். கடவுளுக்கு நன்றி. சில தினங்களாக என் உணர்ச்சிகளை மறைக்கப் பழகியிருந்தேன். அப்போது பீறிட்ட வெடிச் சிரிப்பை மிதித்துக் கொன்றுவிட்டுத் திரும்பிப் பாராமல் தெருவில் இறங்கினேன். நனைந்தபடி நடந்து, அரைமணி நேரத்தில் கடற்கரையை அடைந்தேன்.

என்னைப் போலவே சிலையும் நனைந்திருந்தது. கால் கடுக்க நிற்கிற காந்தியின் சிலை. ஒரு வழியாக அன்று அவருக்கு ஸ்நானப் பிராப்தி கிடைத்தது என்று நினைத்துக் கொண்டேன்.

“அக்டோபர் ரெண்டாம் தேதி மட்டும்தான் இப்பல்லாம் காந்தி குளிக்கறது வழக்கம்.” என்பான் என் அண்ணா.

சிலையின் மேனியெங்கும் ஒழுகிக் காய்ந்திருக்கும் காக்கைகளின் எச்சம். உற்றுப் பார்க்கிற கணத்தில் மனத்தில் படரும் அருவருப்பும் வருத்தமும்.

சிலையே என்றாலும், உயிரற்ற ஒன்றாக அதனை அவனால் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. மேல் விழும் எச்சங்களைச் சகித்துக் கொண்டு அவர் அக்டோபர் இரண்டுக்காக முந்நூற்று அறுபத்தி நான்கு நாட்கள் காத்திருப்பதாகவே அவ்வப்போது சொல்வான்.

மனிதர்கள் சிலர் இப்படித்தான். ஆளைக் கொல்லும் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் பிறக்கும்போதே உடுத்திக் கொண்டு வந்து விடுகிறார்கள். என் அண்ணாவைப் போல.

ஆனால் அவனை எந்த மழை வந்து குளிப்பாட்டி, பாவங்களைக் கரைத்தது என்று தெரியவில்லை.

அவனை விட்டு விலகி, ஆயிற்று பதினெட்டு வருஷம். ஆயினும் என்ன மனுஷன் இவன் என்று நினைக்காத தினம் இல்லை.

கயா அருகே எனக்குக் காஷாயம் கொடுத்த ஒரு படித்த சந்யாசி, ஒருநாள் நான் தியானத்திலிருந்த லட்சணத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்:

“தியானம் என்பது சிந்திப்பதல்ல. தியானமென்பது உறக்கமல்ல. தியானமென்பது வெட்டியாக அமர்ந்திருப்பதல்ல. அலைபாயும் மனத்தை விழிப்புடன் வேடிக்கை பார்ப்பது. உன் மனத்துக்கு உன்னை அந்நியமாக்கிக் கொள்வது. இதன் மூலம் மனம் விரும்பும் விஷயங்களிடமிருந்து நீ அந்நியப்படலாம்.”

என் மனம் எதையும் விரும்புவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகின்றன என்று அப்போது பதில் சொன்னேன். புவியின் ஒரு பக்கத் தோற்றம் போன்ற சத்தியம் அது. உண்மையில், என் அண்ணாவின் வாழ்க்கையில் மையம் கொண்டிருந்த புயல் குறித்த ஞாபகத்தை என்னால் உதறமுடியவில்லை. தந்தை ஸ்தானத்திலிருந்து என் உயிரை வளர்த்தவன் அவன்.

“இத்தனை அழகான பெண்டாட்டி வாய்ச்சபோது எனக்கு ஏன்டா மறுக்கத் தோணலை? நான் மறுத்திருக்கணும். இதுகூட அந்தஸ்து சம்பந்தப்பட்டதுதான்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் புரிந்தது. அழகு ஒரு அந்தஸ்து இல்லையோ?” என்றான் ஒரு நாள்.

எழிலகத்தில் அவனுக்கு உத்தியோகம். கடலும் காந்தியும் அவனது மாலைப் பொழுதுக்கு இதம் கொடுத்துக் கொண்டிருந்த தினங்கள் அவை. அங்கேயேதான் தன் ரணத்துக்கும் ஒத்தடம் தேடிக் கொண்டிருந்திருப்பான், பிறகு.

மன்னி அழகானவள்தான் என்பதைப் பிறகு நான் பலமுறை நினைத்துப் பார்த்து உணர்ந்திருக்கிறேன். நானறிந்த அவளது மெட்டிப் பாதங்கள் பவுத்தத் துறவிகளுடையது போலிருக்கும். கொலுசு அணி கிற வழக்கம் அவளுக்கு இல்லை. மிக மென்மையாகத்தான் அடியெடுத்து வைப்பாள் – ஒரு கோழிச் சிறகு காற்றில் மிதப்பது போல. ஆயினும் அவளது அசைவுகளில் இருந்த சங்கீதத்தை உணர்ந்தேன்.

குணங்களால் பேரழகனாயிருந்த என் அண்ணாவுக்கு அவள் சரியாகத்தான் இருப்பாள் என்று நினைத்தேன்.

சொந்தமாகப் படித்து, சொந்தமாக உத்தியோகம் தேடிக்கொண்டு, தினசரியில் விளம்பரம் கொடுத்து, சொந்தமாகவே போய்ப் பெண் பார்த்து, மணமுடித்துக் கொண்டு – தன் முப்பது வயதிலேயே அவன் முழு மனிதனாகியிருந்தான். யாரும் நீரூற்றாத காட்டுச் செடியின் கம்பீரம் அவனது ஒவ்வொரு அசைவிலும் இருந்ததை அந்நாளில் நான் கண்டேன்.

வாழ்வெனும் ஒத்திகையற்ற நாடகத்துக்கான திரைக்கதை, எப்போதும் விநோதங்கள் நிரம்பியதாகத்தான் இருக்கிறது. அவனால் தாங்கவே இயலாதது போல ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.

அன்றுதான் சொன்னான், அவளது அழகைப் பற்றி. அதன் அருகில் வாசம் செய்ய நேர்ந்ததன் அருகதை பற்றி.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இருளில் நாய் துரத்த, ஓடியவன் போலிருந்தான் அன்று. காலமெலாம் நீண்டிருக்கும் புதுப்புது நாட்களைக் குறித்து அவன் அச்சம் கொண்டிருந்தான்.

எதையும் விண்டுகாட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவன் கண்கள் கலங்கியிருந்தன. எந்தக் கணமும் உதிரக் காத்திருந்த ஒரு துளியில் அவன், நான் அறிந்திராத எங்கள் வம்சத்தின் கெளரவத்தையும் கண்ணியத்தையும் தேக்கி வைத்திருப்பதாக உணர்ந்தேன்.

என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். பிறகு என் கேள்வியின் மடத்தனத்தில் நானே தலைகுனிந்தேன். நதியாகவும் கரையாகவும் இருக்க முடியாதவர்கள் படகாக இருப்பதைத்தான் அதிகமும் உத்தேசிக்கிறார்கள்.

அவன் என்னைச் சுமந்த படகு. கரை தொடும்வரை, ஏறிக் கொண்டவர்களைக் கவிழ்க்க விரும்பாத படகு. அவன் வலிக்குமுன் என்னுடையது எம்மாத்திரம்?

வரலாறு காணாத அந்த மழை நாளில், என் இயலாமை ஓர் அவமானமாகத் தாக்க, கடைசியாக ஒருமுறை அவள் பாதங்களைப் பார்த்து விட்டுக் குடையில்லாமல் புறப்பட்டேன். அதே கோழிச் சிறகுப் பாதம். மிதந்து கொண்டுதான் இருந்தது.

அன்று தொடங்கிய என் தினங்கள் இலக்கற்றதாய் இருந்தன. முதலில் திருப்பதிக்குப் போனேன். இலவசச் சோறும் ஏழுமலையான் தரிசனமும். அதுநாள் வரை நான் நம்பி, துதித்து வந்தவனிடம் மானசீகமாகச் சண்டை போட்டேன்.

என் மனக் குழந்தையைப் பிறகு நானே சமாதானப்படுத்தினேன். ‘பார்த்து ரசிக்கிறேன், இன்னும் ஆடு’ என்று வானம் பார்த்துச் சொல்லிவிட்டு மேலே நடந்தேன். சத்திரங்களில் உண்டேன். சாலையோரம் உறங்கினேன். நீர் கண்டால் குளியல். நிழல் கண்டால் ஓய்வு.

உண்மையில் என் துக்கத்தின் வலிமையை என் நடையின் வேகத்தில்தான் உணர்ந்தேன். எலும்புகள் உடைந்து நொறுங்கிவிடுமோ என நானே அச்சப்பட்ட வேகம்.

நிலைக்கண்ணாடியில் நான் நிச்சயம் மாறியிருப்பேன். எரிந்து தணிந்த உள்ளத்தின் சாம்பல் என் மேனியெங்கும் படர்ந்திருக்கக்கூடும். அமைதியின் விளிம்பை எட்டித் தொட்டபோது நானொரு புத்த மடாலயத்தில் இருந்தேன்.

முதலில் உணவுக்குச் சேவை செய்தேன். பிறகு உயிருக்கு. அங்கே எனக்கு மூன்றாவதாக ஒரு வாசலைக் காட்டினார்கள். அதன் எழிலில் என்னை இழக்கத் தொடங்கினேன்.

வருஷங்களில் என் வாழ்க்கையும் வாசனையும் மாறிப் போனது. மடாலயத்தின் நூலகராக என் செய்நேர்த்தி யாவரும் விரும்பும் வண்ணம் அமைந்திருந்தது.

என் வாழ்வின் லயத்தை மீட்டுக் கொண்டாற் போலிருந்தது.

ஆனால் அவனை மறக்க முடியவில்லை. மனத்தின் வெகு ஆழப் பள்ளங்களில் இன்னும் அவன் சலிக்காமல் படகு ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவனைத் தனியாக விட்டு வந்தது பற்றிய வருத்தம் முதலில் இருந்தது. மனம் தெளிந்தபோது துயரமற்றுப் போனேன். அவன் படகை அவன் மட்டுமே அல்லவா ஓட்ட முடியும்?

பதினெட்டு வருடங்கள். என் வயதின் பக்குவத்தில் மனம் லேசாகிவிட்டிருந்த ஒருநாள், என்னை சென்னைக்குப் போ என்றார்கள்.

ஒரு வார முகாம். சொற்பொழிவுகளும் நிர்வாகப் பணிகளும்.

என்னைச் சிறு துரும்பென உணர்ந்த கணம் அது. அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பீறிட்டு அடித்தன. யாரிடம் பாவ மன்னிப்புக் கேட்பது?

என் துறந்த கோலத்தின் அர்த்தம் உதிர்ந்து விட்டாற் போலிருந்தது.

அன்று பார்த்த அதே காந்தி. அதே எச்சங்கள். கூட்டம் மட்டும் அதிகரித்திருந்தது. குழந்தைகள் ஆரவாரமாக ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். கடவுள் கரைக்காத கவலைகளைக் கடற்கரை கரைத்துக் கொண்டிருந்தது.

அவன் எழிலகக் கட்டடத்தின் நாற்காலி, மேசை, மின்விசிறிகளுள் ஒன்றாக மாறிவிட்டிருந்தான். சலனமற்ற மனத்துடன் நான் தொலைபேசியில் அழைத்தபோது சில விநாடிகள் பேச்சே வராமல் ஆகிப்போனான். நீயா, நீயா என்று திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

அதிகம் பேசாமல், அவனைக் கடற்கரைக்கு வரச் சொல்லியிருந்தேன். வருஷங்களில், அவன் தோற்றம் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.

குணம் மாறியிருக்காது, நிச்சயம். அலுத்துப் போகிறதென்று பூக்கள் வாசனையை மாற்றிக் கொள்ளுமா என்ன?

என் கோலம் அவன் எதிர்பாராததாயிருக்கும் என்பதை நானறிவேன். ஆனால் என் படகு கரை சேர்ந்து விட்டிருந்தது. வாழ்வின் அர்த்தமும் தத்துவமும் மானுட மீட்சியில் இருப்பதை நான் கண்டுகொண்டதை அவனுக்குச் சொல்வேன். பற்றற்ற சேவையில் முகிழ்க்கிற மீட்சி.

பரவசமடையக் கூடாதென்ற உறுதியை ஒரு தியானமாக்கிக் கொண்டு மணல் வெளியில் அமர்ந்திருந்தேன்.

எதிர்பாராதவற்றைக் கோத்து மாலையாக்கும் காலம், இப்போதும் தன் பணியைச் செய்தது. அவன் தன் மனைவி, குழந்தைகளுடன் ஒரு திருவிழாவுக்குச் செல்பவனின் உற்சாகமுடன் வந்தான்.

நீயா, நீயா என்று மீண்டும் மீண்டும் ஆதாரக் கேள்வியால் என்னைத் துளைத்தார்கள் அவனும் அவனது மனைவியும். இதென்ன கோலம் என்றும், இத்தனை நாள் எங்கிருந்தேன் என்றும் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

வாழ்வின் சில கணங்களில் இயல்பாக நாடகத்தன்மை வந்து கூடிவிடுகிறது. காட்சிகளுக்கிடையே சூழும் சில விநாடி இருளில் அதற்கான அர்த்தம் புதைந்திருக்கிறது.

சொற்கள் களைப்புற்று, மெளனம் தன் சிறகை அடர்த்தியாக விரித்துப் பரவிய கணம் அவன் கேட்டான்: “ஏண்டா போனே? உனக்கு என்ன குறை வெச்சேன்?”

ஒரு விநாடி நிலைகுலைந்து போனேன். தொடர்பற்ற வேறொரு பெருவெளியிலிருந்தல்லவா தொடங்குகிறான்?

நான் அவனையும் அவளையும் அருகருகே கண்டு, மனத்தில் செதுக்க முயன்றேன். வயதுக்கேற்ற மாறுதல்களுடன் இப்போதும் அவள் அழகாகத் தான் இருந்தாள். பாதங்களில்தான் பித்தவெடிப்பு உண்டாகியிருந்தது.

ஒரு கணம் முடிவு செய்தேன். கேள்விகள் எதற்கும் பதில் சொல்வதில்லையென. பதிலற்று இருக்கும் வரைதான் கேள்விகளுக்கு உயிர். கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதுதான் தத்துவங்களின் சூட்சுமம்.

ஆனால் எனக்கு ஒரு பதில் வேண்டி இருந்தது. தொடர்ந்து என் படகைச் செலுத்திப் போவதற்கு அது அவசியமானது. துடுப்பல்ல; அதுவே நதி.

ஓர் அலை கரைதொட்டு மீண்டபோது அறுந்த செருப்பொன்று மண்ணில் தேங்கியது. நான் கேட்டேன்:

“சொல்லு! நீ எப்படி இருக்கே?”

அர்த்தமும் ஆழமும் மிக்கதான என் கேள்வியை அவன் நிச்சயம் உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். உண்மையைத் தவிர அவனால் இன்னொன்று பேச முடியாது என்கிற என் அசைக்க முடியாத நம்பிக்கையை இரு கட்சிக்கும் இடையே பொதுவாக முன் வைத்தேன் – மானசீகமாக.

காத்திருந்தேன்.

அவன் தன் குழந்தைகளை அழைத்து இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான். பார்வையால் அவளையும் அணைத்தபடி சொன்னான்.

“எனக்கென்னடா? கண்ணும் மனசும் நிறைஞ்ச குடும்பம். சந்தோஷமா இருக்கேன்.”

ஒரு கணம்தான்.

அதுபோதும் என்று தோன்றிவிட்டது.

இல்லறம் ஒருபோதும் எனக்கு விளங்காது என்பதை உணர்ந்தேன். அந்த விநாடியே என் துறவின் அர்த்தை நான் கண்டுகொண்டேன்.

[2003]
Share

1 comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!