வயது என்னை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம், இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று, நானொரு தேர்ந்த பொறுக்கியாகி விடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. டெய்ஸி வளர்மதி என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன்.
நண்பர்கள் வியந்தார்கள். குறிபார்த்துப் பேராசிரியர்களின் வாகனங்களின் மேல் கல்லெறிவதும், ஸ்டிரைக்குகள் சமயம் கல்லூரி நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்து திராவிட இயக்கங்களின் அடியொற்றி அடுக்குமொழியில் அறைகூவல் விடுவதும், பெண்கள் கல்லூரிக் குட்டிகள் மொத்தமாக எதிர்ப்படுகையில் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் சீண்டுவதும், பரங்கிமலைத் திரையரங்க இருளில் பேரின்பப் பெருவிழா நிகழ்த்துவதும், இன்ன பிறவுமான என் அடையாளங்கள் எதிர்பாராத ஒரு நாளில் அழிந்தொழிந்து போயின.
கவிஞனல்லவா! அமைதியை என் ஆபரணமாக்கிக் கொண்டேன். என் பிரத்தியேகமான பல அநாகரிகச் சொற்களை மறந்தே போனேன். எனக்கே தெரிந்தது. மனத்துக்கண் மாசிலன் ஆகியிருந்தேன்.
உலகம் ரம்யமானது. காற்று, வாசனை மிக்கது. ஒளி இனிது. இருள் அதனிலும் இனிது. நெருப்பில் அவசியம் நந்தலாலா வசிப்பான். நிலம் செழிப்பானது. நீரே அமிர்தம்.
டெய்ஸி வளர்மதி. அவளை வருணித்து அல்லது புகழ்ந்து நான் எழுதிய பாக்கள் எதுவும் அவளுக்கு ரசிக்கவில்லை. கடற்கரையை அடுத்த புல்வெளியில் ஒரு மாலை, காவல்காரர் போல் நிற்கும் காந்தியின் பீடத்தினருகில் அமர்ந்து என் கவிதைகளை நான் அவளுக்கு உணர்ச்சி ததும்பப் படித்துக் காட்டுவேன். எதுகைகளாலானது என் உலகம்.
என்னையறியாமல் ஒரு பயிற்சிக் கால சொல்லேருழவன் ஆகியிருந்தேன். வானம், கானம், பூக்கள், பாக்கள், விழிகள், மொழிகள், பறவை, இரவை, கண்ணே, பொன்னே, கவியே, புவியே, நித்திரை, முத்திரை, சித்திரை, பத்தரை, வித்து, பித்து, முத்து, முன் கழுத்து.
அது, நான் எதிர்பாராததுதான். டெய்ஸி வளர்மதிக்கும் கவிதைகளுடனான பரிச்சயம் சற்று இருந்தது. அந்நாளில் உறங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டி எழுப்பக் கைகள் போதாமல் நெம்புகோல்களை எடுத்து வந்த ஒரு புதுக் கூட்டத்தை விரும்புபவளாயிருந்தாள் அவள்.
என் வாழ்க்கை நாடகத்தில் எத்தனையோ காட்சிகள், எத்தனையோ காட்சிகளில் எழமுடியா வீழ்ச்சிகள் என்று உடனே அவளால் ஒரு இரவல் எதிர்ப் பாட்டை எடுத்துவிட முடிந்ததில் எனக்குச் சற்று மகிழ்ச்சியே என்றாலும், எங்களின் ஆதாரக் கவிதை ரசனையிலிருந்த அடிப்படை வேறுபாட்டை முதற்கண் களைந்துவிட விரும்பினேன்.
புதுக் கவிஞர்களின் போலி சமூக அக்கறைகள் குறித்து அவளுக்கு நானறிந்த அளவில் விளக்க ஆரம்பித்தேன். மேலும் நவீனக் கவிதையின் ஊற்றுக்கண் பாரதியிடம் தொடங்குவதையும் மரபின் பலம் உணர்ந்த முன்னோர்களான பாரதிதாசன், திருலோக சீதாராம், தமிழழகன், நா.சீ.வரதராஜன் என நான் விரித்துப் போட்ட கவிதைப் பாயில் அவள் ஏறிப் படுக்க நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாள்.
மாறாக, கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் என்று சொன்னாள். அப்புறம் கண்ணீர்ப் பூக்கள். பால்வீதி. சர்ப்பயாகம்.
நான், இனியொரு உரைநடையாளனாக மாறி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்ததைச் சொன்னபோது அவள் மிகவும் வருத்தப்பட்டாள். “கோபால் பல்பொடி பாரம்பரியம் மிக்கதுதான்; அதற்காக கோல்கேட் வந்தபோது வாங்கி உபயோகிக்காமலா இருந்தீர்கள்?” என்று என்னைத் திடுக்கிடும் உவமை சொல்லி நிலைகுலையச் செய்தாள்.
வேறு வழியின்றி நானும் பாக்கட் பால் வீதிகளுக்குள் புகுந்தேன்.
கவிதையிலிருந்து தொடங்கிய எங்கள் காதலின் பரிணாம வளர்ச்சி, திரைப்படங்களில் தன் இரண்டாம் பாகத்தை அடைந்தது.
அப்போது நான் பார் புகழும் பச்சையப்பன் கல்லூரி மாணவன். ஒருவிதமான ரகளையான கேளிக்கைகளில் ஆர்வமுடன் பங்கேற்கக் கூடியவனே. எனினும், இயல்பில் எனக்குள் வேறொரு ரசனை கூடி வந்திருந்தது.
பாரதிராஜா எனும் மண்வாசனைக் கலைஞன், நிறைய தையல்காரர்களுக்கு வேலை கொடுத்து வெள்ளித் திரையெங்கும் வெண் உடை தரித்த துணை தேவதைகளின் ஊர்வலம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் உதிரிப் பூக்கள், சில நேரங்களில் சில மனிதர்கள், பசி என்று தொடங்கிப் (பார்த்திராத) பதேர் பாஞ்சாலி குறித்தெல்லாம் டெய்ஸி வளர்மதியிடம் அளவளாவத் தொடங் கினேன்.
அவள் சற்றுக் கலங்கியிருக்க வேண்டும். ஏவி.எம்.மின் சகலகலா வல்லவனும் தேவர் பிலிம்ஸின் ஆட்டுக்கார அலமேலுவும்தான் இந்தியாவுக்கு ஆஸ்கார் வாங்கித் தரக்கூடிய படங்கள் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணவேணி திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த முரட்டுக்காளை என்ற படத்துக்கு என்னை அழைத்துச் சென்றாள். காட்சிக்குக் காட்சி அவளடைந்த பரவசமே எனக்கு மற்றுமொரு திரைப்படமாயிருந்தது. எனில், அவளை மேலும் பரவசப்படுத்தலாமே.
ஒரு முகூர்த்தக் கணத்தில், இல்லாத என் உணர்ச்சிகளின் போலி வெளிப்பாடாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக ஒருமுறை விசிலடித்தேன்.
எங்கள் காதல் தன் மூன்றாம் கட்டப் பரிமாண வளர்ச்சியை எட்டிப் பிடித்தது.
படிப்பு முடிந்து ஒரு உத்தியோகம் ஆன மறுகணமே திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தோம்.
நான் எதிர்பார்த்தது போலவே இப்போது வளர்மதியின் முகம் வாடிச் சுருங்கிப் போனது. அவளது குடும்பம், அவளது தந்தை காலத்தில்தான் நாடாரிலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியது.
வீட்டில் யாவருக்கும் பழைய ஹிந்துப் பெயர்களின் முன்பக்கமோ, பின் பக்கமோ ஒரு கிறிஸ்துவ அடையாளம் கூடியிருந்தது. கோயிலை விடுத்து, சர்ச்சுக்குப் போகத் தொடங்கினார்கள்.
ஆதார நம்பிக்கைகளின் வேர், இடம் மாறினாலும் புழக்கத்தில் அவள் சற்று பழைய வாசனையுடன்தான் இருந்தாள். பொட்டு வைப்பாள். சிலுவையும் தரிப்பாள். தீபாவளியை இழந்தது பற்றிய வருத்தம் அவளுக்கு உள்ளூர உண்டு. ஆயினும் கிறிஸ்துமஸுக்காக மூன்று மாதங்கள் முன்பிருந்தே காத்திருப்பாள். தன் நான்கு வயதில் அறிமுகமான ஏசு சுவாமியிடம் அவளுக்குப் பூரண விசுவாசமிருந்தது. கருணை வடிவானவர்களை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
அதுகாறும் வில்லன்களற்று வளர்ந்து கொண்டிருந்த எங்கள் காதல், முதல் முறையாக ஒரு நடைமுறைச் சங்கடத்தைச் சமாளிக்க வேண்டி வந்தது.
நாங்களிருவரும் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தை ஸ்டார் திரையரங்கில் பார்த்திருந்தோம்.
ஆயினும் கார்த்திக்கும் ராதாவும் செய்த சமூகப் புரட்சி குறித்துக் கொஞ்சம் அச்சம் இருந்தது. அடுத்த வேளை உணவு குறித்த நிச்சயம் உண்டாகாத வரை புரட்சி குறித்துச் சிந்திப்பது ஒருவிதமான ஆடம்பரமே என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் கலவரம் அடைந்திருந்தேன் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் என் காதலிக்கு எந்தக் கவலையும் அப்போது இல்லை. முன்னதாக, சரோஜ் நாராயண் ஸ்வாமி செய்தி வாசிக்கும் தன்னம்பிக்கைக் குரலில் அவள் எங்கள் காதல் குறித்துத் தன் வீட்டாரிடம் சொல்லிவிட்டிருந்தாள்.
நாங்கள் கடற்கரையிலிருந்த ஒரு மாலைப் பொழுதில் அவளது தந்தையார் எங்களைப் பார்க்க வந்தார். இப்படியொரு அப்பாவாக என் அப்பா இருக்க மாட்டார் என்று எனக்குத் தோன்றியது.
சுற்றி வளைக்கவில்லை. அறிவுரைகள் ஏதும் அவர் சொல்லவில்லை. முக்கியமாக, மிரட்டவில்லை. தன் மகளுக்குப் பிடித்த ஒருவன் தன் மாப்பிள்ளையாக வருவதில் சந்தோஷமே என்று தெரிவித்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த ஏ.ஜி. கூட்டுப் பெருங்காயப் பையிலிருந்து ஒரு சிறிய புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தையும் ஏசு சுவாமியின் திரு உருவப் படம் ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
கிளம்பும்போதுதான் அதனைச் சொன்னார். நானொரு கிறிஸ்தவனாக மாறிவிட்டால் திருமணத்தை நடத்தி வைத்து, ஒரு உத்தியோகமும் அவரால் சம்பாதித்துத் தர முடியும்.
எனக்கு உடனே திரைப்படங்களில் நான் பார்த்த, இத்தகைய பல காட்சிகள் நினைவுக்கு வந்தன. பிரச்னைகளும் தீர்வுகளும். அல்லது பிரச்னைகளும் சோகங்களும். இரண்டரை மணி நேரத்துக்குள் ஏதாவதொரு முடிவுக்கு எப்படியோ கட்டாயம் வந்துவிடுவார்கள். அம்ருதாஞ்சன்கள் தலைவலிக்கு உதவுவதுபோல வாழ்க்கையின் வலிகளுக்குத் தைலமற்றிருக்கிற காலமல்லவா?
அதே கடற்கரை. காந்தி சிலை. சஞ்சலம் கவிந்த சாயங்காலம். அன்று டெய்ஸி வளர்மதி வரவில்லை. நான் மட்டுமே புல்வெளியிலிருந்தேன். கலப்பு மணங்களின் அவசியம் குறித்த காந்தியின் ஹரிஜன் கட்டுரைகளை அதற்குள் நான் கல்லூரி நூலகத்தில் படித்திருந்தேன். அவரே ஓர் உதாரணத் தந்தை அல்லவா?
மனிதர்கள் மனம் நிறைந்த பிரச்னைகளுடன் கடற்கரைச் சிலைகளருகே வருகிறார்கள். சில சிலைகள் தீர்வு சொல்கின்றன. சில, மேலும் குழப்பத்திலாழ்த்துகின்றன.
காந்தியினிடத்தில் நான் என் அப்பாவை நிற்க வைத்து யோசித்தேன். திருமணத்துக்கு மறுக்க மாட்டார் என்றுதான் தோன்றியது. ஆனால் மற்றதுக்கு? எனக்கேகூட அதை எண்ணிப் பார்ப்பதில் சங்கடம் இருந்தது.
முழு விருப்பம் என்பது இயல்பாகக் கணிகிற பூரணம். கிள்ளியெடுத்தாலும் குறையாத பூரணம். பூரணமாயிருப்பதைக் காட்டிலும் அது இயல்பாகக் கணிவதல்லவா இன்றியமையாதது?
பிறகு நான் மீண்டும் தீவிரமாக மரபுக் கவிதைகளில் இறங்கிவிட்டேன். திரைப்படம் சார்ந்த என் ரசனைகளிலும் சமரசமற்றுப் போனேன்.
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஓரிரவு மொட்டை மாடியில் என் அப்பாவுடன் தனியாகக் காற்று வாங்கியபடி படுத்திருந்தபோது அவர் அதுவரை அறியாத என் அந்த பாலகாண்டப் பகுதியை மிகையான நகைச்சுவை உணர்வுடன் விவரித்தேன்.
ஆனால் அப்போது அவர் சொன்னதுதான் எதிர்பாராதது.
“உன் காதல் உண்மையில்லை. இல்லாவிட்டால் நீ அதைச் செய்திருப்பாய் என்பதுதான் என் கருத்து.”
சற்று நேரம் இடைவெளிவிட்டு, “உனக்கொன்று தெரியுமா? காந்தியின் ஒரு மகன் முஸ்லிமாக மாறியவன்.”
ஹரிலால் முஸ்லிமானதற்குக் காதல் அல்ல காரணம் என்பதை நானறிவேன். அவனுக்குத் தன் தந்தையின் மீது அதிருப்தி இருந்தது. ஏதாவது செய்து தொடர்ந்து அவரை வெறுப்பேற்ற விரும்பியவன் அவன்.
‘பாவம், மகாத்மா’ என்று தன்னையறியாமல் சொன்னார் என் அப்பா.
நான் அதைச் செய்யாததற்கு அதுதான் காரணம் அப்பா. நீங்கள் மகாத்மாவாக இல்லை. ஆனால் ஒரு நல்ல தந்தையாக இருந்தீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன்.
அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். புரியாதிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.
என் குழந்தைக்கு வளர்மதி என்றுதான் பெயர் வைத்திருந்தேன்.
[2002]