நாளும் கள்ளும்: ஒரு கேள்வி – ரமணன்

அன்பின் பாரா,

எழுத்தில் தங்களின் இலக்கணச் சுத்தம் ஊரறிந்தது.

சலத்தில் பலவிடங்களில் தாங்கள்நாள்கள்என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இச்சொல் தொடர்பாக எனக்கிருக்கும் நீண்டகாலச் சந்தேகமொன்றை இங்கே தங்கள் முன் வைக்கிறேன்.

இலக்கணப்படிநாள்கள்’, என்ற சொல் சரியானதாக இருக்கலாம். ஆனால், நாள்கள் என்று நான்கு முறை உச்சரித்தால் நாக்கு வலிக்கிறது.

உச்சரிப்பில் இனிமையை, எளிமையை நிலைநிறுத்துவதுதான் புணர்ச்சி விதிகளின் நோக்கம் என்பது என் தாழ்மையான கருத்து. அவ்வாறிருக்க, இந்தக் கடின உச்சரிப்பை ஏன் கட்டிக்கொண்டு அழவேண்டும்? பல பழந்தமிழ்ப் பாடல்களில் நாட்கள் என்ற பதம் இடம் பெற்றிருக்கின்றதே? உதாரணத்திற்கு நமக்கு மிகப்பரிச்சயமான சிவவாக்கியரின் ஒரு பாடல்,

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடிநாட்களும் கழிந்துபோய்…’

பழங்காலப் பாடல்களில் இந்தக்கள்விகுதியைப் பற்றிய குழப்பங்கள் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பின்வந்த சந்ததியினர்தான்கள்விகுதியைக் கலவரமாக்கிவிட்டனர் போலத் தெரிகிறது.

கள்என்பது ஒரு பெயர்ச்சொல்லாக இருப்பதுதான் சிக்கலுக்குக் காரணம் போல் தெரிகிறது. அது ஒரு பன்மை விகுதியாக மட்டுமே இருந்திருப்பின் இந்தக் குழப்பங்கள் நேர்ந்திருக்காது. ‘கள்ளு’-க்குக்கள்என்று பெயர் வைத்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை.

நாட்கள்என்று உச்சரிக்கும்போதுநாளினது கள்அல்லதுநாள்பட்ட கள்  என்ற பொருள் வருவதாக ஒரு சாரார் வாதிடுகின்றனர். நன்கு கவனித்தால், இங்குநாட்கள்என்று புணர்வதற்கான விதி இருக்கிறது. பொருள் கொள்வதில்தான் குழப்பம் நேர்கிறது. தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது ஒன்றும் புதிதில்லையே? இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருள்கொள்வதுதானே நம் வழக்கம்? இதில் மட்டும் ஏன் இந்த விசித்திர வாதம்?

தோள்கள் தோட்களாகவும் தாள்கள் தாட்களாகவும் புணர்த்தாதபோது நாள்கள் நாட்களாகவும் ஆள்கள் ஆட்களாகவும் ஏன் புணர்த்தவேண்டும்?’ என்று வாதிடுகின்றனர் மற்றொரு சாரார். புணர்ச்சிக்கான இடம் இருக்கிறது என்பதற்காகவே கண்டிப்பாக புணர்த்திதான் எழுத வேண்டுமென்று எந்த விதியுமில்லை. தமிழழகன் என்பதைத் தமிழ் அழகன் என்று எழுதுவதில் தவறில்லையே. சொற்களைப் புணர்த்துவதும் புணர்த்தாததும் அவரவர் விருப்பம் சார்ந்தது; உச்சரிப்பு வசதி சார்ந்தது; பயன்படுத்தும் இடத்துக்குத் தேவைப்படும் சந்த நயம், இயைபு நயம் போன்ற இலக்கிய ஒலி நயங்கள் சார்ந்தது. ஒன்றைப்போலவே மற்றொன்றும் இருக்கவேண்டுமென்றக் கறாரானப் பிரபஞ்ச விதி ஏதும் இங்கில்லைதானே?

பொதுஜனப் பயன்பாடு என்று வரும்போது, உச்சரிப்பு எளிமை அல்லது உச்சரிப்பு இனிமை, இவற்றில் ஒன்றுதான் இரு அசைகள் ஒன்றோடொன்று புணர்வதையும் புணராமையையும் அல்லது புணரும் வகையையும் (இயல்பு/விகாரம்) தீர்மானிக்கின்றன என்பது என் பணிவான கருத்து. அத்தகைய பொதுஜனப் பயன்பாடுதான் என்றும் நிலைத்திருக்கும். அதுவே பரவலாகப் பயன்படுத்தவும்படும். பொதுமக்கள் ஏற்றுக்கொண்ட அத்தகைய சொற்கள் இலக்கண விதிகளுக்குப் புறம்பாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலக்கணத்துக்கு ஏற்பட்டுவிடும். ‘இலக்கணப்போலிகள் அதற்கொரு உதாரணம். இலக்கணத்துக்காக மொழியன்று. மொழிக்காகத்தான் இலக்கணம். மொழிதானே முதலில் தோன்றியது? இக்காரணத்தால்தான் நாட்கள், ஆட்கள், வாட்கள் போன்ற சொற்களை விகாரப்புணர்ச்சியிலும் கோள்கள், தோள்கள், தாள்கள், தேள்கள் போன்ற சொற்களை இயல்புப்புணர்ச்சியிலும் பயன்படுத்துகிறோம் என்பதே என் நிலைப்பாடு.

கள்என்ற பன்மை விகுதிக்கான இலக்கண விதிகள் தொல்காப்பியம் மற்றும் நன்னூலில் காணப்படவில்லை என்று படித்ததுபோல் நியாபகம் (எனவே, ‘கள்விகுதியைப் பொறுத்தவரை நம் மூதாதையர்க்கு எந்தக் குழப்பமும் இல்லை எனக்கொள்ளலாமல்லவா?). நவீன இலக்கணத்தில்தான் இவற்றுக்கான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தனிநெடிலை அடுத்துள்வரும்போது அதுகள்விகுதியுடன் இயல்பாகப் புணரும். எனவே, நவீன இலக்கண விதிகளின்படி, நாள்கள், ஆள்கள் என்பதே சரி.

சரி போகட்டும். இந்த நவீன இலக்கண விதி மற்றொன்றையும் கூறுகிறது. தனிக்குறிலுக்கு அடுத்துள்வரும்போது அதுகள்விகுதியுடன் விகாரப் புணர்ச்சியில் ஈடுபடும். எனவே, முட்கள், புட்கள் என்பதே சரி. ஆனால், தாங்கள் முள்கள் என்ற பதத்தைத்தான் பயன்படுத்துகிறீர்கள் (சலம்பத்தாவது அத்தியாயத்தில்). முள்கள் என்று மூன்றுமுறை தொடர்ந்து உச்சரித்தால் அச்சொல்லே முள்ளாக மாறி மேலண்ணத்தில் குத்துகிறது.

இப்போது என் கேள்விகளைத் தொகுத்துக் கொள்கிறேன்.

1.       நாள்கள், ஆள்கள் போன்ற சொற்களில் இலக்கணப்போலி வகையறா வசதிகளைப் புகுத்தி நாட்கள், ஆட்கள் என்று உச்சரிக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? (இருப்பின் பலரின் நாக்குகள் நன்றி சொல்லும்). நாட்கள், ஆட்கள் என்று உச்சரிப்பதை ஏன் ஒரு குற்றமாகக் கருத வேண்டும்?

2.       தாங்கள் முட்கள் என்று எழுதாமல் முள்கள் என்று எழுத ஏதேனும் பிரத்தியேகக் காரணம் உள்ளதா?

தங்கள் பதில் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஆசானே.

. இரமணன்

அன்புள்ள ரமணன்,

இலக்கண விதிகளுக்குக் கவிஞர்களை உதாரணமே எடுக்கக் கூடாது. பொயட்டிக் லைசென்ஸ் என்று சட்டென வித்தவுட்டில் போய்விடுவார்கள். அதுவும் நீங்கள் எடுத்திருப்பது சிவவாக்கியர். அவர் கவிஞர் கேடகரியிலும் வரமாட்டார். புலவர் கேடகரியிலும் வரமாட்டார். கருத்து கடத்தப்படுவது ஒன்றே அவரது நோக்கம்.  அதெல்லாம் முடியாது, கவிஞர் அல்லது புலவர்தான் சரி என்பீரானால் இலக்கணம் தெரிந்தவர்களை மட்டுமே பார்க்க வேண்டும்.

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே, தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய், வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான், தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே.

என்று பெரியாழ்வார் எழுதுகிறார்.

முட்கள் என்று எழுதாமல் முள்கள் என்று எழுதினால் அதிகமாகக் குத்துகிறதென்றால் அதுதான் சரி என்று பொருள். முள்ளென்றால் குத்தத்தானே வேண்டும்? ரமணனுக்கு இரண்டு தோள்கள் உள்ளன. தோட்கள் உள்ளனவென்று சொல்ல முடியுமா?

பிகு: நாள்கள் என்பதே இலக்கணப்படி சரி. அதைத்தான் நான் பயன்படுத்துகிறேன்.  அதே சமயம் உக்கிரமாக இலக்கணம், புணர்ச்சி விதி பார்க்கப் போனால் எழுத்தாளனாக இருக்க முடியாது. தமிழ் வாத்தியாராகிவிட வேண்டியதுதான். நானே ஒரு தேவை ஏற்பட்டால் நாட்கள் என்றும் என்றாவது எழுதலாம். எழுத்தைப் பொறுத்தவரை சொல்ல வரும் பொருளும் சொல்லும் தொனியும் பொருந்திப் போக இலக்கணம் உதவ வேண்டும். அவ்வளவுதான்.

பாரா

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading