32

சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் பதில்களும்:

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது என் சொந்தப்பெயர். பத்திரிகை நாள்களில் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என் சொந்தப்பெயரில் எழுதுவதே எனக்குத் திருப்தி அளிக்கிறது. யாராவது கூப்பிடும்போது ராகவன் என்று கூப்பிடாமல் பாரா என்றால்தான் சரியாக பதில் சொல்கிறேன் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

2) கடைசியா அழுதது எப்போது?

யூ ட்யூபில் அனகாவின் பாடலைக் கேட்டபோது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

நான் கம்ப்யூட்டருக்கு மாறுவதற்கு முன்னால்வரை என் கையெழுத்து மிக மிக அழகாக இருக்கும். அச்செழுத்து போலவே இருக்கிறது என்று நண்பர்கள் வியப்பார்கள். எத்தனை வேகமாக எழுதினாலும் என் கையெழுத்து மாறாது அப்போதெல்லாம். ஆனால் இப்போதைய என் கையெழுத்தை எதனுடனும் ஒப்பிட இயலாது. நான் வெறுக்கக்கூடிய விஷயமாக அது மாறிவிட்டது.

4) பிடித்த மதிய உணவு?

முதல்நாள் சமைத்து ப்ரிட்ஜில் வைத்த வத்தக்குழம்பு. தொட்டுக்கொள்ள பீன்ஸ் அல்லது முட்டை கோஸ் பொறியல். கூடவே ஒரு கரண்டி கீரை இருக்குமானால் அதிவிசேஷம்.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

கேள்வி சரியாகப் புரியவில்லை. எனக்கு நண்பர்கள் மட்டும்தான். பார்க்கிற, பழகுகிற அனைவரும் எனக்கு நண்பர்களாகிவிடுவார்கள். எதிரி என்று எனக்கு யாருமில்லை, அநேகமாக என்னைத் தவிர.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நீச்சல் குளம் மிகவும் பிடிக்கும். குளிக்காமல் முழுநாள் வேலை பார்க்க அதைவிடப் பிடிக்கும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

மேனரிசம். உபயோகிக்கும் சொற்கள். பிறகு நிற்கும்போது கைகளை எங்கே வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பேன்.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

என்னை அத்தனை எளிதில் யாரும் சீண்டவோ, கோபப்படுத்தவோ முடியாது. சுபாவமாகவே எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடியவன். பிடித்தது என்றால் இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. பிடிக்காதவை ஒன்றல்ல. பெரிய பட்டியலாகும். அறவே ஒழுங்கு இல்லாதது அவற்றுள் முதலானது. விதிமுறையாக எதையுமே என்னால் தொடர்ந்து பின்பற்ற முடியாது. மிகப்பெரிய சோம்பேறியாக இருப்பது எப்போதும் என்னை உறுத்துகிறது. நான் செய்கிற பணிகள் மிக அதிகம் என்று நண்பர்கள் எப்போதும் சொல்லும்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. நான் வேலை பார்க்கும் நேரத்தைக் காட்டிலும் வீணடிக்கும் நேரம் அதிகம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

என் மனைவி என்னைச் சகித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பிடித்த / பெரிய விஷயம் வேறில்லை என்பது என் கருத்து. எனது அனைத்துச் செயல்களிலும் அவளுக்கு மட்டும் எப்படியோ ஏதாவது குற்றம் குறை தட்டுப்பட்டுவிடுவது, பிடிக்காதது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நான் எழுதலாம் என்று நினைத்த மிகத் தொடக்க காலத்திலேயே என்னை மிகவும் ஊக்கப்படுத்தி, நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த அபத்த ஆரம்பக் கதைகளையெல்லாம் அமர காவியங்கள் என்று புகழ்ந்து உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தே இருந்தவர் கவிஞர் நா.சீ. வரதராஜன். அவர் அளித்த ஆரம்ப உற்சாகம் கிடைக்காது போயிருந்தால் நான் இன்றைய நிலைக்கு வந்திருப்பேனா என்று தெரியவில்லை. நான் உண்மையிலேயே எழுத்தாளனாகி ஒரு நல்ல நிலைக்கு வந்தபோது அவர் இல்லை. இது எனக்குத் தீராத வருத்தம்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

லுங்கியாக அடித்த நாலு முழ வேட்டி மட்டும்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். மின் விசிறியின் சத்தம் கூட எனக்கு இடைஞ்சல்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்

14) பிடித்த மணம்?

மெந்த்தால் டெட்டால் சோப்பின் மணம்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

பி.கே. சிவகுமார். பல சந்தர்ப்பங்களில், பெரும்பாலான விஷயங்களில் என்னுடன் மாறுபட்டே நிற்பவர். எப்போதும் எனக்கு என் விமரிசகர்களைப் பிடிக்கும் என்பதால் சிவகுமாரை அழைக்க நினைக்கிறேன். இன்னொரு காரணம், அவர் ரொம்ப நாளாக ஒன்றுமே எழுதாமல் அவரது பதிவில் வெறும் வார்த்தை விளம்பரமாகப் போட்டு போரடிக்கிறார் என்பதனால்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

துரதிருஷ்டவசமாக இன்றுவரை எதுவும் பிடிக்கவில்லை. சொக்கனுக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.

17) பிடித்த விளையாட்டு?

எனக்கு விளையாட்டுப் பிராப்தி இல்லை. பள்ளி நாள்களில் ஹெட் மாஸ்டர் பையன் என்பதால் கிரிக்கெட், கோக்கோ, டெனிகாயிட், பேஸ்பால் என்று அனைத்து டீம்களிலும் பி.ஈ.டி. மாஸ்டர் மாசிலாமணி என்னை டீஃபால்டாகச் சேர்த்துவிடுவார். எதிலும் நான் சிறந்து நின்றதில்லை. சில வருடங்கள் முன்னர்வரை கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது அதுவும் இல்லை. எனக்குத் தொழில், வாழ்க்கை, பொழுதுபோக்கு, விளையாட்டு, தியானம் எல்லாம் ஒன்றுதான். எழுத்து.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம். சோடாபுட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

அது பருவநிலைக்கேற்ப மாறும். எல்லா விதமான படங்களும் பார்ப்பேன். உலகப் படங்கள் முதல் பேரரசு படம் வரை. வித்தியாசமே பார்ப்பதில்லை. எல்லாவற்றிலும் ரசிப்பதற்கு விஷயங்கள் இருக்கின்றன. தோல்வியுற்ற தமிழ்ப் படங்களைப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது எனக்குப் பிடித்தமான செயல்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

சிவராமன் புண்ணியத்தில் கிம் கி டுக்கின் படம். மிகவும் ரசித்துப் பார்த்தேன். பக்கத்தில் அதிஷா இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் ரசித்திருப்பேன். விடலைப் பையனைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு படம் பார்க்காதே என்பது நேற்றுக் கிடைத்த பாடம்.

21) பிடித்த பருவ காலம் எது?

சென்னைக்காரனுக்கு அப்படியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லவராது.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

ராமச்சந்திர குஹாவின் India after Gandhi. மொழிபெயர்ப்பு சரி பார்ப்பதற்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். என்ன அபாரமான உழைப்பு!

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

என் டெஸ்க்டாப்பில் படம் கிடையாது.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பொதுவாக எனக்கு சத்தம் பிடிக்காது.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

வடக்கே டார்ஜிலிங், வட கிழக்கே அருணாசல பிரதேசம் வரை போயிருக்கிறேன். மகாராஷ்டிரம் தவிர அநேகமாக இந்தியா முழுதும் சுற்றிய அனுபவம் உண்டு. மறக்க முடியாத பீஹார் அனுபவம் பற்றி ஒரு கட்டுரை எழுதியது நினைவுக்கு வருகிறது. கல்கியில் இருந்த காலத்தில் நிறைய பயணம் செய்திருக்கிறேன்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நிச்சயமாக உண்டு. எழுத்தில் என்னுடைய வேகம் ஒப்பிட இயலாதது. இது கடும் பயிற்சியினால் வந்தது. ஒரு மணி நேரத்தில் என்னால் தடையில்லாமல் நாலாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுத இயலும். மொழிக்காகவோ, நடைக்காகவோ, சொற்களுக்காகவோ காத்திருப்பதே இல்லை. எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. சரியாகவே எழுதியிருப்பேன். எழுத்துப் பிழைகள் கூட இருக்காது. எழுத்துக்கான முன் ஆயத்தங்கள் அதிகம் செய்துகொள்வேன். ஆனால் எழுத உட்கார்ந்துவிட்டால் எனக்கு அது சின்ன வேலை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வன்முறை.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

கன்யாகுமரி. எத்தனை முறை போயிருப்பேன் என்று கணக்கே இல்லை. ஆனால் எப்போதும் புதிதாகவே தெரிகிற ஊர்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கை. ஆரோக்கியம் குறையாத வாழ்க்கை. இவைதான் என் ஆகப்பெரிய ஆசைகள்.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

என் மனைவி எனக்கு ஒருபோதும் இடைஞ்சல் இல்லை. அவளைச் சமாளிக்க நானும், என்னைச் சமாளிக்க அவளும் பழகிவிட்டபடியால் அவள் இல்லாமல் செய்ய நினைக்க எனக்கு ஒன்றுமில்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

அழகானது. ரசிக்கத் தொடங்குவதற்குள் பெரும்பாலும் ரிடையர் ஆகிவிடுகிறோம்.

Share

16 Comments

 • //நிச்சயமாக உண்டு. எழுத்தில் என்னுடைய வேகம் ஒப்பிட இயலாதது. இது கடும் பயிற்சியினால் வந்தது. ஒரு மணி நேரத்தில் என்னால் தடையில்லாமல் நாலாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுத இயலும். மொழிக்காகவோ, நடைக்காகவோ, சொற்களுக்காகவோ காத்திருப்பதே இல்லை. எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. சரியாகவே எழுதியிருப்பேன். எழுத்துப் பிழைகள் கூட இருக்காது. எழுத்துக்கான முன் ஆயத்தங்கள் அதிகம் செய்துகொள்வேன். ஆனால் எழுத உட்கார்ந்துவிட்டால் எனக்கு அது சின்ன வேலை.//

  Amazing! Hats off!!

 • \\ஒரு மணிநேரத்தில் நாலாயிரத்து ஐநூறு சொற்கள்.\\

  \\சோம்பல் -எதிரி\\
  \\வீண்டிக்கும் நேரம் அதிகம் \\

  ம்… என்னத்தைச் சொல்ல.

 • msathia: எழுதத் தொடங்கினால் வேகம் வந்துவிடும். ஆனால் எழுதும் பொழுதுகளைவிட சும்மா இருக்கும் நேரம்தான் அதிகம். அதைத்தான் குறிப்பிட்டேன்.

 • சுவாரசியமா இருந்தது உங்கள் பதில்கள். உங்களை ஒரு தடவை சந்திக்கணும் சார்.

 • அறுபது நிமிஷத்தில் 4500… ஒரு விநாடிக்கு ஒண்ணேகால் வார்த்தை. நம்பமுடியவில்லை.

  (சமீபத்தில் குத்திக்கல் தெரு எழுதிய அனுபவத்தில் என்னால் தட்டச்ச முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன்.)

  • BABA:
   நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள். 4500 சொற்கள் என்பதை மூன்று சேப்டர்கள் என்று நான் பார்ப்பேன். அதனால்தான் முடிகிறது.

 • எனக்கு வந்த இந்தத் தொடர் விளையாட்டை நண்பர் சொக்கனுக்கு நான் அனுப்பி, அவர் உங்கள் பெயரைத் தயக்கத்தோடு முன்மொழிய… நீங்களும் பதில் அளித்தது என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. சிலர் குறிப்பிட்டிருந்தது போல் இது அபத்தமான, அசட்டுத்தனமான விளையாட்டல்ல! (இந்தக் கட்சி நல்லது செய்யும், இந்தக் கட்சி அந்தக் கட்சியை விட மோசம் என்று நம்ம்ம்ம்பி ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் அசட்டுத்தனத்தைவிடவா?) ஒருவரை ஒருவர் இன்னும் நன்கு புரிந்துகொள்ள ஒரு வழிமுறையாகவே இதை நான் கருதுகிறேன். பதில் அளித்தமைக்கு நன்றி!

 • //பிறகு நிற்கும்போது கைகளை எங்கே வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பேன்//

  எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. நிற்கும் போது கூட இல்லை. யார் எதிரிலாவது உட்காரும்போது என் கைகளை எங்கே எப்படி வைத்துக் கொள்வதென்று.

  சில நேரங்களில் பாக்கெட்டில் கையைவிட்டும் (ஈரமான ரோஜாவே படம் பார்த்துட்டீங்கதானே?), சில நேரம் கையை கட்டியும் சமாளிக்கிறேன். இருந்தாலும் போலித்தனமாக எதையோ செய்கிறோமே என்ற குற்றவுணர்வு இருக்கிறது.

  இதற்கெல்லாம் யாராவது நன்னடத்தை விதிகளை தெளிவாக வரையறுத்தால் தேவலை. எப்பவும் ஏ.வி.எம்.சரவணன் மாதிரி கட்டிக் கொண்டிருக்கவும் சங்கடமாக இருக்கிறது 🙁

 • I got a chance to read your “YAALI” in Thendral..

  Don know how to explain.. after a long time i enjoyed

  reading when i read yours.. Thank you Sir.

  My hearty wishes for you..

  • Sathiya Jothi, Thanks. It was first published in ‘Paditthurai’ – a little magazine run by Yugabharathi & Vijayaraghavan. Just for info.

 • நேர்மையான பதில்கள். சுவாரஸ்யமாக இருந்தது. 23 வது கேள்விக்கு desktop ல் படம் கிடையாதுன்னு சொல்லியிருக்கீங்க. அசின் படம் இருக்குமோன்னு ஒரு doubt. May be அசின் காணாமல் போய்விட்டதால் டெஸ்க்டாப் காலியாக இருக்கிறதா பாரா சார்? (என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?)

  • //என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் //
   தெய்வமே, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை. குற்றமெல்லாம் அவர்மேலே.

 • உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  நீலம் – நானும் இதையே தான் சொல்லியிருந்தேன்

  வாழ்வு பற்றிய எதார்த்தம் அருமை.

  \\துரதிருஷ்டவசமாக இன்றுவரை எதுவும் பிடிக்கவில்லை.\\

  ஆச்சர்யபட வைத்த பதில்.

 • Oops. நிஜமாகவே மன்னிக்கவும் ஐயா. பணிந்து என்பது பயந்து என்று தவறாகிவிட்டது. வேண்டுமெனில், டிவிட்டரில் பாருங்கள். இதற்கு முன் எழுதிய அதில், பணிந்து என்றுதான் எழுதியிருப்பேன். நன்றி.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி