
அன்பு ஆசிரியருக்கு வணக்கம்.
நான் இப்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமான ரோமில் வசிக்கிறேன். எங்கு பார்த்தாலும் ஆலயங்கள். ஆலயங்கள் தோறும் வண்ண வண்ண ஓவியங்களும், கலை நயமிக்க சிற்பங்களும் நிறைந்து இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்த செழித்திருந்த இறை நம்பிக்கைக்கு சான்றாக இருக்கின்றன இந்த ஆலயங்கள். ஆனால் இன்று இங்கு இறை நம்பிக்கையாளராக இருப்பதே கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதான ஒன்றாகிவிட்டது. இந்த சமூகத்தில் இறை நம்பிக்கையாளராக இருப்பதே புரட்சியானது தான் என்று தோன்றுகிறது. நம் ஊரில் நாத்திகவாதியாக இருப்பதே நவீனம் என்பது போல.
தாங்கள் ஒரு நவீனராகவும், இறை நம்பிக்கையாளராகவும் எனக்கு தோன்றுகிறீர்கள். நம் ஊரிலும் இப்போது எங்கு பார்த்தாலும் பகுத்தறிவு பதிவுகளுக்கு குறையேயில்லை. தங்களைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் இறை நம்பிக்கையாளராக இருப்பது என்றால் என்ன? உங்கள் பகுத்தறிவுவாளர் நண்பர்கள் (எ.கா. எழுத்தாளர் சரவண கார்த்திகேயன்) இது பற்றி உங்களோடு உரையாடுவார்களா? அவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன? இதைப்பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஆண்டனி ஃப்ரான்சிஸ்
antonyfrancisomd@gmail.com
—
நண்பருக்கு,
ஆத்திகம், நாத்திகம் இரண்டிலுமே இரண்டு ரகங்கள் உண்டு. மரபு வழி சொல்லித்தரப்பட்டு, எதையும் உணராமல் கடைப்பிடிப்பது ஒரு ரகம். முட்டி மோதி நமக்குரியதைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்வது இன்னொரு ரகம். என் குடும்பத்தில், எனக்குத் தெரிந்து நாத்திகர்கள் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறை நம்பிக்கை உள்ளவர்களே. ஆனால் அது மரபு வழி – மதம் கற்றுத் தந்த இறை நம்பிக்கை. அதாவது தப்பு செஞ்சா சாமி கண்ணக் குத்தும் ரகம்.
நான் பயிலும் ஆன்மிகம் வேறு. அது மதத்தின் தொடர்பற்றது. அதாவது சொல்லி வைக்கப்பட்டதை அப்படியே நம்பி ஏற்காமல், எதையும் கேள்வி கேட்டு பதிலைத் தேடிப் பெறுகிற வழி. இறை என்ற ஒன்று உண்டா என்று தேடத் தொடங்கி நான் பெற்ற விடைகளைத்தான் சாத்தானின் கடவுள் புத்தகத்தில் எழுதினேன்.
இன்னொன்று, நம்பிக்கையாளராக இருப்பது என்பதற்குத் தனிப் பொருள் ஏதுமில்லை. அதை நிரூபிக்கவோ, வாதாடவோ அவசியமும் இல்லை. என் நம்பிக்கைகளை நான் யாருக்கும் நிரூபிக்க அவசியமே இல்லை. அவை எவ்வளவு மோசமான நம்பிக்கைகளாக இருந்தாலும் என்னுடையவை அல்லவா?
உதாரணமாக எனக்குச் சடங்குகளில் அறவே நம்பிக்கை கிடையாது. ஒருவர் இறந்தால் உடல் கரியாகிறது, மூச்சுக் காற்று வெளியேறி ஆக்சிஜனோடு கலந்துவிடுகிறது. அவ்வளவுதான். சூரியக் குடும்பத்துக்கு வெளியே வேறு பல சூரியக் குடும்பங்கள் வரை அறிவியல் பார்த்துவிட்டது. சொர்க்கமோ நரகமோ பாற்கடலோ இன்னொன்றோ எங்குமில்லை. ஆனாலும் மதம் இன்றுவரை அவற்றைப் பிடித்துக்கொண்டுதான் உயிர் வாழ்கிறது. இறந்தவர் சொர்க்கத்துக்குப் போய்விட்டார், இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறுகிறார் என்று சொல்கிறோம். ஆனால் மாதாமாதம் அமாவாசைக்குத் தர்ப்பணமும் வருடாந்திரத் திதியும் காலமெல்லாம் கொடுக்கிறோம். யாருக்கு? இறைவன் திருவடிக்குச் சென்றுவிட்டவருக்கு எதற்கு அது? இல்லை, அவர் பிசாசாகத்தான் அலைகிறார் என்றால் இறைவன் திருவடி என்பது பொய் என்றாகிவிடாதா? உடனே கர்ம வினை, பாவம் புண்ணியம் என்று தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். மதங்கள் நமக்குக் கற்றுத் தருவது அபத்தங்களின் அழகியலைத்தான்.
முன்னோரை மறக்காதே என்று சொன்னால் போதும். அதைச் சடங்காக்கி வைத்தால் இப்படித்தான் கேள்வி வரும்.
இவ்வளவு பேசுகிறேன் அல்லவா? ஆனால் மாதம் தவறாமல், வருடம் தவறாமல் மறைந்த என் தந்தைக்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன? அவருக்கு அதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இறுதிப் படுக்கையில் விழும் நாள்வரை ஒரு மாதம் தவறாமல் அவர் தனது தந்தைக்கு நம்பிக்கையுடன் செய்ததைப் பார்த்திருக்கிறேன்.
எனக்கு என் தந்தையைப் பிடிக்கும். எனவே அவருக்குப் பிடித்ததைச் செய்கிறேன்; அவ்வளவுதான். என் தந்தை ஒரு குடிகாரராக இருந்திருந்தால் மாதம் தவறாமல் யாராவது ஒரு குடிகாரருக்கு குவாட்டர் வாங்கிக் கொடுப்பேன். இதில் சந்தேகமே இல்லை. என் நம்பிக்கைக்கு இங்கே இடமும் இல்லை, அவசியமும் இல்லை. கோயில்களுக்குச் செல்வது, பண்டிகைகளைக் கொண்டாடுவது போன்றவையும் இதன் அடிப்படையில்தான்.
இதனைக் கொண்டு என்னை மதவாதி என்றும் பிற்போக்குவாதி என்றும் யாராவது சொன்னால் தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கவலையே படமாட்டேன், பதிலும் சொல்ல மாட்டேன். நான் யார் என்பது எனக்குத் தெரிந்தால் போதாதா?
சித்தர்களையும் வள்ளலாரையும் ஓரளவு படித்து உள்வாங்கியிருக்கிறேன். என் மன அமைப்புக்கு அந்த வழி ஆன்மிகம்தான் சரியாக இருக்கிறது. தூய அறிவு என்பது எவ்வளவு பெரிய விஷயம்! மதத்துக்கோ மனித குலத்தின் காலைப் பிடித்துக் கீழே இழுத்துப் போட முயற்சி செய்யும் மற்ற எதற்குமோ அங்கே இடமே இல்லை. அந்தத் தூய அறிவை எட்டிப் பிடித்தால் நான் என் கடவுளைக் கண்டுவிட்டதாகப் பொருள். நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். முயற்சியை ஒழுங்காகச் செய்கிறேனா என்பதில் மட்டும்தான் என் கவனம்.
உங்கள் கேள்வியின் இன்னொரு பகுதி, நண்பர்களுடன் விவாதிப்பது. நான் எப்போதுமே அதனைச் செய்ததில்லை. இன்னொன்று எனக்கு நண்பர்களாக இருப்பவர்களை ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். மிகச் சிறிய வட்டம்தான். எப்படி அவர்களைப் புரிந்துகொண்டு அவர்தம் உணர்வுகளை நான் மதிக்கிறேனோ அப்படித்தான் அவர்களும் என் விஷயத்தில் நடந்துகொள்வார்கள். நான் எப்படி அறிவு தெளிந்த ஆத்திகனோ, அதைப் போலத்தான் சரவண கார்த்திகேயன் அறிவு தெளிந்த நாத்திகர். நாத்திகமா ஆத்திகமா என்பது ஒரு பொருட்டே அல்ல. இரண்டும் தூய்மையானதா என்பதுதான் முக்கியம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.