ஆசானுக்கு வணக்கம்!
நான் நீண்ட நாட்களாக ஒன்றைக் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறேன். அதாவது ஒழுங்கீனம் அல்லது சோம்பேறித்தனம் குறித்து நீங்கள் அதிகம் வருந்திக் கொள்கிறீர்கள். ஆனால் அது குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.
சென்னை நூலகப் பயிலரங்கம் தொடர்பான அறிவிப்பு தங்கள் இணையத்தில் இன்று காலையில் காணக்கிடைத்தது. அதில் எனக்குப் பயன்பெற ஏதுமில்லை என்பதால், இணையத்தளத்தின் மெனுவில் சென்று ஆர்கைவில் போய் உருட்டியதில் 2009, ஜூனுக்கு சென்றேன். அது நான் பாடசாலை படிப்பை முடித்த காலம். அப்போது என். சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளுக்கான பதில்களை அந்த காலப்பகுதியில் தங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளீர்கள்.
அதில் பேச, பகிர பல விடயங்கள் இருந்தாலும் எட்டாவது கேள்விக்கான பதிலில் ஒழுங்கீனன் என்றும், சோம்பேறி என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்று பதினாறு வருடங்கள் கடந்தும் அதையேதான் சொல்கிறீர்கள். ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எழுதுதல் பற்றிய குறிப்புகள் என்று நினைக்கிறேன். தினமும் இரண்டாயிரம் சொற்களாவது எழுதிவிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது வெளியாகும் மிருது 25 நாவல் மதிப்புரையில் கூட நான் சொல்லியிருந்தேன். சலம் எழுதி அதன் தாக்கம் அல்லது மொழியில் இருந்து வெளிவருவதற்காக ஓய்வெடுக்க மிருதுவில் கால் வைத்தீர்கள். ஆகவே பதினேழாவது கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுள்ள வகையில், உங்களுக்கு எழுத்துதான் எல்லாமே.
26ஆவது கேள்விக்கு ஒரு மணிநேரத்தில் நாலாயிரத்து ஐநூறு சொற்கள் எழுத முடியும் என்பதே உங்கள் தனித்திறமை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மட்டுமல்ல எழுதும் முன் அதற்கான தயார்படுத்தலையும் சரிவர செய்து விடுகிறீர்கள். சலம் எழுதத் தாங்கள் மேற்கொண்ட தயார்படுத்தல் இதன் அண்மைய உதாரணம். நீங்கள் எழுதி, முடிக்காதவை அதிகம் இருந்தாலும், 75 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை வெளியாகிவிட்டன என்பது முக்கியமானது இல்லையா? உங்கள் படைப்புகள் வாசகர்களால் கொண்டாடப்படுகிறதே. அது முக்கியமில்லையா? அந்த அளவுக்கு ஒவ்வொரு படைப்புக்காகவும் உங்கள் உழைப்பை வழங்கியிருப்பதால் தானே இது சாத்தியமானது?
இத்தனை வருட எழுத்துலக வாழ்க்கையும் அது தந்தவைகளும் நீங்கள் சொல்லும் ஒழுங்கீனத்தாலா வந்தது? நீங்கள் திட்டமிடுவதற்கும் செய்து முடிப்பதற்குமான மாறுபாடு தான் ஒழுங்கீனம் என்றால் எல்லோருடைய வாழ்க்கையும் திட்டமிட்ட வகையில், அச்சில் வார்த்தது போலவா அமைந்திருக்கிறது?
நான் கேட்க விரும்புவது இதைத்தான். என் போன்றோரின் ஒழுங்கீனங்களும் உங்கள் ஒழுங்கீனங்களும் ஒன்றா? இரண்டையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடுவது சரிதானா? ஒவ்வொரு ஆண்டிறுதியிலும் திட்டமிடலுக்காகவே ஒருநாளை செலவிடுபவர் நீங்கள். திட்டமிடலே அறியாதவன் நான். நாமிருவரும் எப்படி ஒரே ஒழுக்கீனர் ஆக முடியும்?
உங்கள் குறைபாடுகளை நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் செய்யும் எதிலும் ஒழுக்கமே இல்லாதிருப்போர் பயன்படுத்தும் சொற்களையே உங்கள் கிரீடத்திலும் சூடிக்கொண்டால் அது சரிதானா என்பதே நான் கேட்க விரும்புவது. ரொம்ப நாளாக மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி இது. பந்தை நான் எறிந்துவிட்டேன். அடித்தாடுவதும் மட்டையைத் தாழ்த்தி பந்தைப் பின்னால் போகவிட்டு டிபென்ஸ் ஆட விடுவதும் உங்கள் பாடு.
சிகரம் பாரதி
இலங்கை
மலையகத்தில் இருந்து…
அன்புள்ள நண்பருக்கு,
ஒரு மணி நேரத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் என்பது அன்றைய நிலவரம். இப்போது எனக்கு அது சாத்தியமில்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தபோது வேகம் என்பது வாழ்க்கை முறையாக இருந்தது. எனவே அது ஒரு பொருட்டாகக்கூட அன்று தோன்றியதில்லை. இன்று நிதானத்தை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறேன். எண்ணிக்கை அல்ல. வேறு எதுவுமல்ல. இப்போதெல்லாம் ஒரு மணி நேரத்தில் நாநூறு சொற்கள் எழுத முடிந்தால் அதிகம். பல சமயம் 200-300ஐக் கூடத் தாண்டுவதில்லை. நிதானமாக, கவனம் குவித்து எழுதும்போது எடிட்டிங்குக்கான நேரம் குறைகிறது. அதுதான் இப்போது முக்கியமாக இருக்கிறது.
நிற்க. ஒழுங்கீனத்துக்கு வருகிறேன். நாம் நிறைய வேலை செய்வதாக, எப்போதும் பணியில் தீவிரமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது ஒரு பாவனை அல்லது மாயை. விலகி நின்று நமது பணியை நேர்மையாக மதிப்பிட்டால் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு நேரத்தைக் கூட நாம் நேர்த்தியாகச் செலவிடுவதில்லை என்பது புரியும்.
நான் முழுநேர எழுத்தாளன். என்றால், இருபத்து நான்கு மணி நேரமும் எழுதிக்கொண்டே இருப்பேன் என்று பொருளல்ல. விழித்திருக்கும் நேரமெல்லாம் எழுத்து சார்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பேன். அதில் சந்தேகமில்லை. ஆனால், எழுதும் செயல்பாடு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குள் முடிந்துவிடுகிறது. இந்த இரண்டு மூன்று மணி நேரச் செயல்பாட்டைத்தான் இடைவெளி விட்டுவிட்டு எட்டு-பத்து மணி நேரங்களுக்கு இழுக்கும்படி ஆகிறது. வேண்டுமென்று செய்வதில்லை. அது அப்படித்தான் ஆகும்.
இதிலும் நாவல் எழுதும்போது ஒரு விதம், அரசியல் நூல்கள் எழுதும்போது வேறு விதம். இரண்டு வித எழுத்துக்கும் பொருத்தமான மொழி அளவில் என்னைக் கோத்துக்கொள்ளக் கணிசமான நேரம் எடுக்கும். நடுவில் வேறு ஏதாவது சொந்தச் சிக்கல் ஏற்படுமானால் எல்லாம் கலைந்து, மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்படி ஆகும்.
இதனைக் குறைபாடு என்று நான் கருதவில்லை. இந்தப் பணி இப்படித்தான் நடந்தாக வேண்டும். ஆனால், நான் எழுதாதிருக்கும் நேரம் பற்றிய கணக்கு எனக்குத் தெரியும் அல்லவா? அதுதான் அவ்வப்போது உறுத்தும். எழுதாதிருக்கும்போது வேறு ஏதாவது முக்கியப் பணியில் கூட இருக்கலாம். வீட்டு வேலைகள் செய்யலாம். தூங்கலாம். படம் பார்க்கலாம். எல்லாமே முக்கியம்தான். ஆனாலும் முதன்மைச் செயல்பாட்டின் நேரம் குறைகிறது என்பதற்கு என்னுடைய இந்த இதர செயல்பாடுகளே காரணம் அல்லவா. அதைத்தான் ஒழுங்கீனம் என்கிறேன்.
வாழ்வில் நாம் எதை முக்கியம் என்று கருதுகிறோமோ, அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் துச்சமாகக் கருத வேண்டும். வருத்தமளிக்கும் விஷயங்கள், கவலை தரும் விஷயங்கள், கோபம் ஏற்படுத்தும் விஷயங்கள், பதற்றத்தைக் கூட்டும் விஷயங்கள் எதுவும் சிந்தனையின் வெளி வாயிலைக்கூடத் தொடக்கூடாது என்று நினைப்பேன். அதற்குப் பெயர்தான் தவம். ஒன்றென்று இருப்பது.
ஆனால் ஒரு நாளின் பெரும்பகுதியைச் சாதாரண மனிதனாகவும் ஒருசில மணி நேரங்களை மட்டுமே முதன்மைச் செயல்பாட்டுக்கு ஒதுக்குபவனாகவும் இருக்க நேர்ந்துவிடுகிறது. இதனை ஒரு குற்றமாகவே கருதுகிறேன். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சிலர் என்னைக் காட்டிலும் அதிக நேரம் எழுத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அறிவேன். அது எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். உறுத்தலே குற்ற உணர்வாகும். குற்ற உணர்வு காரணத்தை ஆராயச் சொல்லும். அப்படி ஆராய்ந்து பெற்ற முடிவுதான் எனக்கு ஒழுக்கம் போதவில்லை என்பது.
புத்தக எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதெல்லாம் ஒரு பொருட்டா? பிறந்ததில் இருந்து எத்தனை கிலோ தின்றிருப்போம்? எத்தனை முறை சுவாசித்திருப்போம்? அதையெல்லாம் எண்ணி பிரமிக்கிறோமா என்ன.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.


