யதி – துறவின் அறியாத பக்கங்கள் (ஜார்ஜ் ஜோசப்)

ஒரு வாரமாக யதி நாவலில் மூழ்கியிருந்தேன். சன்னியாசிகள் குறித்து ஆயிரம் பக்கங்கள். சலிப்பே தராமல் அழைத்துச் சொல்கிறது எழுத்து.
நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளும், ஒருவர் பின் ஒருவராக சந்நியாசி ஆகிவிடுகின்றனர். அவர்களைப் அப்பாதையில் செலுத்தியது என்ன? என்கிற முடிச்சை இறுதியில் தான் அவிழ்க்கிறார் பாரா. ஆனால், முன்பே அது எப்படி அவிழும் என்று கோடிட்டு காட்டிவிடுகிறார். முடிந்தால் கண்டுகொள் என்று.
நான்கு பிள்ளையையும் துறவிற்குப் பறிகொடுத்த வலியுடன் வாழ்நாள் முழுதும் தவிக்கும் தாயின் இறப்பிற்கு நான்கு பேரும் வரவேண்டும் என்கிற கடமையோடு ஆரம்பிக்கும் நாவல், சொன்னபடியே நிறைவு பெறுகிறது.
இடையில் தான் எத்தனை எத்தனை கதைகளும் உபகதைகளும்! நால்வரின் துறவுப் பாதையும் வெவ்வேறாக இருக்கிறது.
மூத்தவனே பரம யோகியாக உருவெடுத்து தம்பிகளை நெறிப்படுத்துகிறான். ஆனாலும் நேரடியாக அல்ல. சித்தர்கள், சித்துகள், ஆயுர்வேதக் குறிப்புகள், உணவுகள் என பாரா வழங்கும் பல்துறை ஞானங்களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆன்மீகக் கதைக்களம் என்பதால் மாயவாத எழுத்துப் போக்கு நிரம்பியிருக்கிறது.
யோகம், தவம், தவ முயற்சி, துறவின் தோல்வி, அலைக்கழிப்பு, விரக்தி, வெறுமை, பூரணம் என ஒவ்வொன்றையும் பக்கம் பக்கமாக நுணுகிப் பேசுகிறது யதி. நாவலில் பல வாக்கியங்கள் நம்மை அதிலிருந்து மீள விடாமல் மனதில் நின்றபடியே இருக்கின்றன.
விஜய், வினய், வினோத், விமல் என நான்கு சகோதர சந்நியாசிகளில் விஜய்யே பிரமிக்கத்தக்க மகோன்னத நிலையை அடைகிறான். விஜய் குறித்த யாவும் அவனது தம்பிகளின் வார்த்தைகள் மூலமாக மட்டுமே நமக்கு அறியத்தரப் படுகின்றன. அதுவே விஜய் என்ற கதாப்பாத்திரத்தின் மீது பிடிப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது.
நால்வரின் பாதையும் வெவ்வேறு என்றாலும் அந்தப் பாதைகள் இந்தியத் துணைக்கண்டம் அறிந்த மரபுப் பாதைகள் தாம். மூத்தவன் விஜய் சித்தன். அவனது பாதை ஞானமும் கிரியையும். வினய்யின் பாதை பரிபூரண கிரியா மார்க்கம். வினோத்தின் மார்க்கம் பக்தி. விமல் என்கிற இளையவனின் மார்க்கம் தான் நாவலின் சிறப்பும் புதியதும். அவனது தத்துவம் சுதந்திரம் அதன் பாதையாக அவன் வடிவமைத்துக் கொண்டது தர்க்கம். சுத்த சிந்தனை என்றும் சுத்த தர்க்கம் என்று சொல்ல முடியாத புதிர் மார்க்கம் இளையவனுடையது. அவனே மற்ற அண்ணன்மாரையும் குடும்பத்தையும் பற்றி அவனது நினைவுகளின் வழி கதைகளாய் அறிமுகம் செய்கிறான்.
இளையவன் விமல் நித்தியும் ஜக்கியும் கலந்த கலவை. ஆனால் அவன் அவர்களைப் போல் போலியல்ல என்று சொல்ல வருகிறார் பா.ராகவன்.
இஸ்கான் அமைப்பு. சித்தர்கள் குழாம். வடமொழி வேதங்கள், வடக்கத்திய தரிசனங்கள் என தமிழ் மண்ணிலிருந்து விலகிய துறவாக நிற்பது இந்நாவலின் பெருங்குறை.
பாரா யதியை தினமணியில் தொடராக எழுதியதால், தொடர் எழுத்துக்கே உரிய திரும்பத் திரும்ப சொல்லும் பாங்கும் சில சம்பங்களைத் தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதும் தேவையற்ற கதை நீட்டங்களும் விவரிப்புகளும் கண்களில் அகப்படும் குறைகள். இக்குறை தொடர்கதை எழுத்தில் தவிர்க்க இயலாதது தான் போல. மோகமுள்ளிலும் உள்ளக் குறை இது தானே. ஆனாலும் இதுவல்லாத குறை, சில அத்தியாயத்தில் கூறிய ஒன்று பின்வரும் அத்தியாயத்தில் மாறி வருவது.
அக்குறைபாடுகளை நாவல் பற்றி முழுமையாக அலசக் காலம் அமைகையில் எழுதுவேன்.
குறை நிறைகள் கடந்த தனித்துவம் இந்நாவலுக்குண்டு. ஏனெனில் இதன் கரு, சாமானியன் சாதிக்கத் துடிப்பது ஆனால் துறவிகளுக்கே அகப்படாதது என்பதாகும்.
மதச் சடங்கின் அடிப்படையில் இந்நாவலின் துறவறம் அமைந்திருக்குமோ என்று தயங்கித் தான் நாவலில் நுழைந்தேன். ஆனால் அப்பகுதியை வினோத்திற்கு மட்டும் அளித்துவிட்டு மற்ற சகோதரர்களை மதங்களில் சிக்காத துறவிகளாகப் படைத்து அசத்திவிட்டார்.
பல இடங்களில் மதப் பற்றையும் அது சார்ந்து சிந்திக்கும் சார்பையும் சொரிமுத்து சித்தனைக் கொண்டு மலம் என்று சாடியதில் பாரா கவர்கிறார்.
தவறவிடவேண்டாம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி