மதிப்புரை

யதி – அபிலாஷின் விமரிசனத்தை முன்வைத்து (Jinovy)

யதிக்கு இன்று அபிலாஷ் எழுதிய விமரிசனத்தில் Jinovy ஒரு கமெண்ட் போட்டிருந்தார். அது கூட்டத்தில் காணாமல் போய்விடாமல் தனியே வாசிக்க வேண்டிய குறிப்பு என்று தோன்றியதால் இங்கே பிரசுரிக்கிறேன்.

மரியாதைக்குரிய பாரா சார் அவர்களுக்கு,

எவ்வகையிலும் இது ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் விளைவாக என்னால் காண இயலவில்லை. அதற்கான காரணங்கள்:

1. இந்த கதை விமலின் ஊடாக வெளிப்படுவது. மற்ற மூவரின் உள்ளுணர்வுகளின் தீவிரத்தன்மை முற்றாக அவன் வழியே வெளிப்படுவதில்லை. அதுவே இவ்வகை nonlinear கதைக்கு தேவையான multiple expositions க்கான சாத்தியங்களை நிச்சயப்படுத்துகிறது. அதுவும் விமல் ஒரு கட்டத்தில் அவனது தாயின் அளவற்ற பாசம் மற்றும் கண்ணீரின் பொருட்டே விலகிச் செல்கிறான்.

2. நால்வர்க்கும் அம்மாவின் பொருட்டோ அல்லது அனிச்சையாகவோ அவர்களது தந்தையிடம் எவ்விதமான கசப்புணர்வோ காழ்ப்போ எழுவதாக குறிப்பிடப்படவில்லை.

சித்ரா :-

யோனியைக் கடந்து இவ்வுலகில் பிரவேசிக்கும் குழந்தையைப் போல், இச்சையைக் கடந்து துறவில் பிரவேசிப்போராக அவர்களைப் பார்க்கிறேன். அவர்களது இச்சையின் உருவகம் சித்ரா. இச்சையைக் கடந்தவன், இச்சையில் சிக்குண்டவன், இச்சையை வெறுத்தவன், இச்சையை போகிப்பவன் என்பதாக நான் அவர்களைக் காண்கிறேன். சித்ராவை அவர்கள் மனதளவில் எவ்விதம் வரித்துக் கொள்கிறார்கள் என்பதே அதற்கு சான்று. ஒவ்வொருவரும் சந்தித்துக் கொள்கையில் அவர்களது இச்சையை பற்றிய பிரக்ஞையை ஒப்பிட சித்ரா தேவைப்படுகிறாள். சித்ராவின் கோரிக்கைக்கு வினய் மறுக்கையில் அவன் யோகிக்கான தரத்தை எட்டிவிடுகிறான்.

அது மட்டுமில்லாமல் திரு. அபிலாஷ் கூடுதல் அத்தியாயங்கள் ஒரு வித மந்தத்தன்மை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். எனக்கு அந்த அத்தியாயங்கள் subtext களாய் ஒருவித நெகிழ்வு தன்மை கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அவை இல்லாவிட்டால் இலக்கியத்தரம் குறைந்திருக்கும் என்பது எனது கருத்து. நாவல் இறுதிக்கட்டத்தை எட்டுகையில் ஒருவித அவசர கதி தென்படுவது இயற்கையே. ஆனால் நிச்சயமாக ஒரு அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்ட விஷயம் போல் அல்ல. அது அவ்விடத்தில் நீங்கள் ஆசிரியராகவும் வாசகனாகவும் மாறி மாறி இயங்கிய விதத்தினால் இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த நாவல் எனக்கு இரு திருக்குறள்களை நினைவுறுத்துகின்றன.

1. ஊழிற் பெருவலி யாவுள
2. இருவே றுலகத் தியற்கை
என்று தொடங்கும் குறள்கள்.

அவரது கட்டுரைக்கு எவ்வகையிலும் இது எனது மறுப்பல்ல. ஆனால் யதி ஒரு உளவியல் சிக்கல் மற்றும் அதன் விளைவுக்குள் அடைபடும் தன்மை கொண்டதல்ல என்பதை தெளிவுபடுத்தவே இதை எழுதுகிறேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி