யதி – ஒரு மதிப்புரை (அபிலாஷ் சந்திரன்)

பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் – அதற்கு காரணம் பா.ரா கதையை வெளியவயமாக நகர்த்தி விடுகிறார் என்பது.

ஆனால் ஆன்மீக வளர்ச்சி, விடுதலை, துறவு, குடும்ப பந்தங்கள், காமம், தாய்-மகன் இடையிலான சிக்கலான உறவைப் பேசும் நாவலாக இது நிறைய உள்விசயங்களை பேச வேண்டியது. ஆக, அந்த அகவயமான இடங்கள் வரும் போது நாவல் இயல்பாகவே சற்று மந்தமாகிறது. ஆனால் இந்த இரண்டையும் – சம்பவங்கள், உள்விசாரணை – அவர் சாமர்த்தியமாக சமநிலைப்படுத்தி கொண்டு போகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

நிறைய பேர் சொல்வதைப் போல இது சாமியார்கள், துறவிகள், யோகிகள் பற்றின கதை அல்ல. மாறாக, இது ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் கதை. மகன்களுக்கு அன்னையர் மீதான இச்சை, அவர்கள் வளர்ந்து அது பிற பெண்களிடம் இடம்பெயர்ந்து, அது ஒரே பெண்ணை இயல்பாகவே சகோதர்கள் ஒருசேர இச்சிப்பது, அதன் விளைவுகள் எனப் பேசுகிறது. நினைக்கவே ஆபாசமான ஒரு விசயம் இது – ஆனால் அம்மாதிரி விசயங்களை பா.ரா பேசாமல் நம் ஊகத்துக்கு விட்டுவிட்டு அந்நிய பெண்களிடம் மைய பாத்திரங்களுக்கு ஏற்படும் பிரேமை, ஆசை, உடல் அங்கங்கள் மீது அவர்களுடைய மனம் கொள்ளும் ஆட்கொள்ளல் என நகர்த்தி விடுகிறார்.

அதுவும் நாவலில் வரும் நான்கு சகோதர்கள் தமது அன்னையருக்கு பிறந்தவர்கள் அல்ல என்பது step mom fantasy போல மிக மிக ஆபத்தான் ஒரு தளத்துக்கு செல்ல வேண்டியது. அதை பூடகமாக விட்டு பா.ரா நன்றாக சமாளித்திருக்கிறார். அன்னையல்லாத அன்னை மீதான அன்பு, பொறுப்புணர்வு, அதற்கு நிகராக அவளை கைவிட்டு விலகிச் செல்வதற்கான அவர்களின் தீவிர விழைவு, அவளை எட்டி நின்று துன்புறுத்தும் ஆசை என முரணான உணர்வுகள் இந்த ஆண்களுக்குள் செயல்படுகின்றன. இதை அந்த அன்னையே விரும்பி மறைமுகமாக அவர்களை பின்னிருந்து இயக்கி இருக்கிறார் என நாவலின் முடிவில் திறப்பு வரும் போது கதை இன்னும் இன்னும் சிக்கலாகிறது.

 

இவ்விதத்தில், “யதிக்கு” முன்னோடி தி.ஜாவின் நாவல்கள் தாம் (குறிப்பாக “அம்மா வந்தாள்”). ஆனால் இந்த சிக்கலுக்குள் ஓரளவுக்கு மேல் செல்லாமல், அதற்குள்ளிருந்து அதற்குரிய நாடகீயத்தை உருவாக்காமல், பா.ரா தன்னுடைய பாணியில் வெளியே நின்று சித்தரித்து விட்டு முடியும் தறுவாயில் கூட ஒரு மர்மத்தை தக்க வைக்கிறார். கொந்தளிப்பாக அமைந்திருக்க வேண்டிய நாவலை அவர் விட்டேந்தியாக எழுதிச் செல்கிறார். விமலின் பார்வையில் நாவல் விரிவதும் இதற்கு ஒரு காரணம். ஆனால் அதனாலே படிக்கும் வாசகனுக்கு இதிலுள்ள தி.ஜா நீட்சி புலப்படவே செய்யாது. ஆனால் இது அங்கிருந்து தான் வருகிறது.

 

துறவு பூணும் நான்கு சகோதர்களின் பாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வினய் தான். அவனிடம் தன்னை இன்னதென நிலைநிறுத்திக் கொள்ள இயலாத தவிப்பு, கொந்தளிப்பு, சடேரென்று முந்தின கணத்தின் நிலைப்பாட்டை உதறி இன்னொன்றுக்குள் புகுந்திடும் ஆவேசம், ஒருவித குழந்தைமை உள்ளது. அவனுடைய பரிதவிப்பும், சுய இரக்கமும் வாசகனை ஈர்ப்பவை. இந்நாவலை வினய்யின் கண்ணோட்டத்தில் இருந்து எழுதி இருந்தால் இது ஜெ.மோவின் “விஷ்ணுபுரத்தின்” ஒரு பகுதியை ஒத்திருந்திருக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதனால் விமலின் தரப்பை பா.ரா தேர்ந்திருப்பது “யதிவை” ஜெ.மோ சாயலில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.

 

மூத்த அண்ணனும், பரிபூரண சித்தனாக சித்தரிக்கப்படுபவனுமாகிய விஜய்யின் பாத்திரத்தை பிற சகோதர்களின் நினைவுகளின் ஊடாக மட்டுமே பா.ரா சித்தரித்துள்ளது சிலாகிப்பானது. விஜய் ஒரு தொன்மம். ஒரு லட்சிய தொன்மம். மூன்று சகோதர்களும் இறைவனை நாடியல்ல, அவனைப் பின் தொடர்ந்தே சென்று துறவை அடைகிறார்கள். (அதனாலே அட்டைப்படத்தில் மூன்று துறவிகளின் பாதங்கள் மட்டும் உள்ளன.) துறவு குறித்த தனிநபர்களின் பயணத்தை குடும்பம் எனும் வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் எனும் பா.ராவின் நோக்கம் விஜய்யின் இந்த தொன்ம நிலையால் சாத்தியமாகிறது. ஏனென்றால் விஜய் தனது காமம் குறித்த சிக்கல்களை தன் சகோதரர்களைக் கொண்டு தனக்காக வாழச் செய்கிறான் என ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. இதை விமல் உணர்ந்தவன் என்பதாலே அவனை மட்டும் நேரில் சந்திக்க விஜய் தயங்குகிறான் என்றும். வருகிறது. மேலும் விஜய்யில் ஆரம்பித்து அவனுடனே முடியும் இந்நாவலில் ஒரு பாத்திரத்தின் வாழ்வை பலர் வாழ்கிற ஒரு உளவியல் நுணுக்கமும் – ஒருவித கடப்புநிலைவாதம் (transcendetalism) – உள்ளது. இதை முராகாமி தன் நாவல்களில் வெளிப்படையாக மாய எதார்த்தமாக கையாண்டிருப்பார். பா.ரா இதையும் நுட்பமாக சாதித்திருக்கிறார்.

 

சித்தர்கள் நாய்களாவது, துறவிகளிடம் பேசுவது, இது அவர்களின் கற்பனையா, அல்லது நிஜமா எனும் பூடகம், அதிலுள்ள மாய எதார்த்தமும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எதார்த்த படைப்பில் அங்கங்கே மாய எதார்த்தத்தை பயன்படுத்துவது சுலபம் அல்ல; ஆனால் இது மாந்திரிகம், ஆன்மீகம், சித்து விளையாட்டுகள் சார்ந்த கதை என்பதால் எதார்த்தத்தின் நடுவே மாய எதார்த்தம் துருத்திக் கொண்டு தெரியவில்லை. முக்கியமாக, பிற சித்து விளையாட்டுகள், மாய மந்திர சாகசங்கள் வரும் போது அவற்றை விமலின் பார்வையில் பகடி செய்து மறுக்கும் பா.ரா சித்தர்கள் நாய்களாகி பேசுவது, இறுதியில் விஜய் தன்னை ஒளியாக்கி தன் தாயின் சிதைக்கு நெருப்பூட்டி தானும் உயிர்துறப்பதை அப்படி கேள்வி கேட்காமல் தவிர்த்து விடுகிறார். இதுவும் கதைக்குள் மாய எதார்த்தத்தை உறுத்தாமல் தக்க வைக்க உதவுகிறது. இந்த விசயத்தை படிக்கும் வாசகன் சுலபத்தில் உணராதவகையில் புத்திசாலித்தனமாக பா.ரா செய்திருப்பது பாராட்டத்தக்கது.

 

நாவலில் இன்னொரு அழகான பகுதி விமலுக்கும் அவனது குருநாதருக்கும் இடையிலான உரையாடல்கள், அவர்களுடைய உறவு, அதிலுள்ள பாசம், கருணை, பரிவு, ஒரு குழந்தையை போல தன் சீடனை கவனித்துக் கொள்ளும் குருவின் பக்குவம். அந்த பெயரைத் துறந்த குருநாதர் எனக்கு சு.ராவை நினைபடுத்தினார். அச்சுஅசலாக அவர் பேசுவது, நடந்து கொள்வது, அவருடைய ஸ்டைல், பக்குவம், நிதானம் நான் நாகர்கோவிலில் சு.ராவிடம் பலமுறை கண்டுள்ளவை. சொல்லப்போனால் ஜெ.மோவின் “நினைவின் நதியில்” புத்தகத்தை இப்பகுதி நினைபடுத்துகிறது.

இந்நாவலின் பலவீனம் (1) விமல், வினோத் உள்ளிட்ட பல பாத்திரங்கள் உறைந்த நிலையிலே, பெரிய தடுமாற்றங்கள், சின்னச்சின்ன மாற்றங்கள் இன்றி இருப்பது. நாவலின் இறுதி அத்தியாயத்தில் தான் விமலின் பார்வையில் ஒரு சிறிய மற்றம் வருகிறது. இது நாவலின் வேகத்துக்கு, வளர்ச்சிக்கு தடை போடுகிறது. (2) இதை பா.ரா ஒரு தொடராக எழுதியதால் நிறைய அத்தியாயங்களில் மீளக்கூறல் இருக்கிறது. ஒரு முக்கியமான வெளிப்பாடு நிகழத் தேவைப்படும் போது பா.ராவின் உபமனம் அதை தள்ளிப் போட விரும்புகிறது என நினைக்கிறேன். ஆகையால் ஏழெட்டு அத்தியாயங்களை தேவையில்லாமல் நடுவே நுழைத்து விடுகிறார். இந்த அத்தியாயங்களையும் மீளக்கூறல் வரும் இடங்களையும் கத்தரித்தால் சுலபமாக 300 பக்கங்களை குறைக்க முடியும். இன்னும் கச்சிதமாக எழுதியிருக்க முடியும்.

 

“யதியை” ஆங்கிலத்தில் மொழியாக்கினால், பெங்குயின் போன்ற பிரசித்தமான பதிப்பகங்கள் வெளியிட்டால் நல்ல வரவேற்பு பெறும் எனத் தோன்றுகிறது. அதற்கான ஒரு “அகில இந்திய” சங்கதி இதில் உள்ளது. (ஜெ.மோவின் “விஷ்ணுபுரத்துக்கும்” அந்த potential உள்ளது.) ஆனால் அது நடக்க பா.ரா எதையாவது பயங்கர சர்ச்சையாக எழுதி அதை வைத்து சங்கிகள் அவரை ஊர் ஊராக துரத்தி, தாக்கி, அல்லது அவர் கைதாகி அதை ஆங்கிலப்பத்திரிகைகளும் ஊடகங்களும் கவனப்படுத்தி, உலகப்புகழ் பெற வேண்டும்.

எதற்கு, நல்ல மனுஷன், இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி