ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும்.
கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு வாங்கவில்லை. ஏனென்றால் இவர் சொல்லித்தான் கிண்டில் வாங்கி வைத்திருக்கிறேன். எப்படியும் கிண்டிலில் வெளியிடுவார், அதில் வாங்கிக் கொள்ளலாம் என்றுதான்.
கிண்டிலில் வெளியானது. பொறுமையாக வாங்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இடையில் புத்தகத்தை வாசித்த ஒருவர் “இது உன்னை வச்சு எழுதுன மாதிரியே இருக்கு, படிச்சு பாரு” என்று சொல்லவும், ஆர்வமாக வாங்கினேன். அதை படிப்பதற்குள் எழுத்தாளர் Lakshmi Saravanakumar அவரிடமும் இந்த புத்தகம் அவரை வைத்து எழுதியது போலவே இருப்பதாக தோழி ஒருவர் சொன்னதாக பதிவிட்டிருந்தார். எனக்கு ஆர்வம் போய் விட்டது. ஏனென்றால் சில விசயங்களில் இருவரும் முழுக்க எதிர் துருவங்கள். அதிலும் அவர் முழுக்க பயணிப்பவர். நான் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பவன். ஆனால் இவ்விரண்டுமாக இருப்பவனின் கதை என்பது புத்தகத்தினை வாசிக்கும் போது புரிந்தது.
ய்தெச்சையாக இரண்டு நாள் முன்புதான் வாசிக்க எடுத்தேன். முழுமையாக முடித்து விட்டுதான் கீழே வைக்க வேண்டும் என விரும்பினேன். அந்தளவு கதை உள்ளே இழுத்தது. ஆனால் சூழல் அமையவில்லை. இன்றைய விடுமுறையை இறவானுக்கு ஒப்படைத்தேன். நிதானமாக வாசித்தேன். அதில் நீந்தினேன் என்றும் சொல்லலாம்.
புத்தகத்தின் இடையிலேயே அவருக்கு குறுந்தகவல் அனுப்பலாமா என்று பல இடங்களில் தோன்றியது. வேண்டாம் என கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஒருவனுக்கு அதீத திறமைகளை கொடுத்து , அதனை அங்கிகரிக்காத உலகில் அவனை படைத்து தண்டிப்பதே கதையின் சாரம்.
இறையின் பிள்ளையாய் பிறந்த
ஆப்ரஹாம் ஹராரி,
இசையாய் உருமாறி,
தனது புராதான நிலத்திற்கு சென்று,
தன் இனத்தின் குரலை
இசையாய்
படைத்தவனிடம்
ஒப்புவிக்க
துடிக்கிறான்.
இறையே அவனது பாதைகளை
அவ்வபோது மாற்றி விட்டு
அவனை தொடர்ச்சியாக உடனிருந்து தண்டித்து ஆறுதல்படுத்தி,
அழவைத்து
ஆற்றுப்படுத்தி,
உச்சத்தையும் தாழ்ச்சியையும் மாற்றி மாற்றி கொடுத்து
எதிலும் திருப்தியுராதவன்
மேகங்களுக்கு நடுவே சென்று
அமர்ந்து கொண்டு,
உடலற்ற நிலையிலும்
குளிரில் நடுங்கியவாறு
தன் கதையை நமக்கு சொல்வதே இந்நூல்.
இசை,
மதம்,
காதல்/காமம்(இரண்டும் ஒன்றுதான்)
இம்மூன்று புள்ளிகளினாலான முக்கோணத்தினுள் சிக்கி, மூன்றையும் இணைக்கும் மையத்தில் தன்னிலை உணர்ந்து விடைபெறுகிறான் எட்வின் என்கிற ஆப்ரஹாம் ஹராரி என்கிற சந்தானப் பிரியன்.
அவெஞ்சர்ஸ்ல் தானொஸ் அயர்ன்மேனிடம் சொல்வான். “நாம் இருவரும் ஒன்றுதான், நமது அறிவே நமக்கான சாபம்” என்று. அப்படி இசையை சாபமாக படைத்தவனிடம் பெற்ற பாவப்பட்ட மேதைதான் தன்னை ஆப்ரஹாம் ஹராரி என்று நம்பும் எட்வின்.
தனது திறமையை நேசிப்பவர்களுக்கு உலகில் வேறு எதன் மீதும் அக்கறை இருக்காது. அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. சொல்லப்போனால் அவர்களுக்கு வேறு மனிதர்களே தேவைப்பட மாட்டார்கள். அது அவர்களின் இயல்பு. ஆனால் அதை சத்தியமாய் பணத்தின் பின்னால் ஓடும் சராசரி ஆட்களால் புரிந்துக் கொள்ளவே முடியாது. அத்தகைய உலகத்தில் வாழ்வது இம்மாதிரியானவர்களுக்கு பெருந்தண்டனை. அதை புரிந்து கொள்ளவாவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என பரிந்துரைப்பேன்.
சிறுவயதில் கேட்ட குரலையே, முகமாக்கி நேசித்து, யோனியாக்கி புணர்ந்து, வாழ்வையே அவளை தேடித்திரிவதற்கு அர்ப்பணித்து, கண்டு கொண்டு, அவளை வளமாக்க, மொத்த திறமையையும் பயன்படுத்தி, பதிலுக்கு என்ன வேண்டும் என கேட்கையில் “தயவு செய்து செருப்பால் அடி” என்று கேட்டு வாங்குமிடம் இருக்கிறதே….! என்னவென்று சொல்ல…!
இவன் எனக்கில்லை, ஆனால் இவனுக்காகத்தான் நான் என்றிருக்கும் ஒருத்தியை காதலிக்காமல் கூட ஒருவனால் இருக்க முடியுமென்றால் உண்மையில் அவன் சபிக்கப்பட்டவந்தான். சந்தேகமில்லை.
மிகவும் சிலரால் மட்டுமே, சிலருக்கு மட்டுமே இப்படியான கட்டுப்பாடற்ற நேசத்தை வாரியிறைக்க முடியும். அதே நபர்கள் வேறு சிலரிடம் வேறு முகம் காட்டுவார்கள்.
“நன்றி” என்று சொன்னால் “அது வேண்டாம். ஒரு முத்தம் தா” என்பாள். முத்தமிட்டதும் அதற்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.
என்னதான் உயிரையே கடைந்தெடுத்து ஊட்டி விட்டாலும் அவனுக்கு அவளை விட முக்கியமானவை வேறு இருக்கும் என்பதுதான் கொடுமை.
புத்தகத்தில் நடுவிலேயே பின்னனியில் ஏதேனும் சிம்பொனியை ஒலிக்க விட்டவாறு வாசிக்கலாமா என்று தோன்றியது. பிறகு அது புத்தகம் ஒலிக்க விடும் இசைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதனை செய்யவில்லை
“நான் ஒரு கோழை. என்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது. நான் ஒரு தன்முனைப்பாளன். அடுத்தவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கத் தெரியாது. உணர்ச்சிகளுக்கு என்னிடம் பெரிய இடமில்லை. ஒரு மிருகம் அளவுக்குக் கூடா நான் உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவேன் என்று தோன்றவில்லை”
இந்த இடத்தில் என்னை உணர்ந்தேன்.
என்னை எப்படி அறிந்தீர்கள் பாரா? என்று கேட்க விரும்பினேன்.
உண்மையில் புத்தகம் வாங்கி விட்டால், அது குறித்த எந்த தகவல்களும் வந்தடையாவண்ணாம் தவிர்த்து விட்டு, நேரடியாக நானே எதிர்கொள்வதையே விரும்புவேன். இந்த புத்தகத்தையும் அப்படித்தான் வாசித்தேன்.
வாசிப்பில் நான் பெற்றது ஒரு போதையான மன நிலை. எழுத்து அப்படித்தான். மயங்கடிக்கும். கிறங்கடிக்கும். அப்படி எழுத்தை மிகச்சரியாக கையாள்வது சிலர்தான்.
பின் இன்னொரு விசயம். சிலர் சொன்னது போல் எனக்கு எங்கும் பாலியல் விசயங்கள் எதுவும் தனித்து தென்படவில்லை. இயல்பாக இருப்பதாகவே உணர்ந்தேன்.
உண்மையில் வாசிக்கையில் இப்புத்தகம் குறித்து நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அத்தனையும் வடிந்து மௌனியாய் வார்த்தைகளற்ற நிலையில் இப்போது இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நான் வாசிக்கும் பாராவின் முதல் புதினம் இது. அட்டகாசம்.