மாமல்லனைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் உடனே மெசஞ்சரில் வந்து அந்தாள் ஒரு கிறுக்கன், முரடன் என்று குறைந்தது பத்துப் பேராவது சொல்வார்கள். இவ்வளவு நாகரிகமாகக்கூட இல்லாமல் நீங்கள் ஒரு சைக்கோ என்றே அவரிடம் சொன்னேன், இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதே. மனத்தில் தோன்றுவதைச் சற்றும் வடிகட்டாமல் எழுத்தில் கொண்டு வருவது எளிதல்ல. இது வெறும் கவன ஈர்ப்புக்காகவோ, தாதாத்தனம் காட்டுவதற்காகவோ செய்யப்பட்டால் காலம் அழித்துவிடும். தாம் சம்பந்தப்படும் அனைத்துப் பிரச்னைகளின் மீதும் (அவர் சம்பந்தப்படாதது என்ற ஒன்று உண்டா!) தனது தரப்பை அவர் முன்வைக்கும் விதத்தில் முரண்படுபவர்கள்கூட அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணராதிருக்க மாட்டார்கள்.
இன்று கிண்டிலில் இலவசமாகக் கிடைத்த அவரது ட்விட்களின் இரண்டு தொகுப்பில் (8ம் தேதி புதன்கிழமை மதியம் வரை இலவசம்) ஒன்றைப் படித்தேன். வருடம் 2011. பேயோன் செய்ததைப் போலவோ நான் செய்ததைப் போலவே அவர் வடிகட்டித் தொகுக்கவில்லை. அப்படியே தூக்கி வைத்திருக்கிறார். எனவே அந்த ஒரு வருடத்தில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்ட முக்கியமான பிரச்னைகள் அனைத்தும் இதில் வந்துவிடுகின்றன. #tnfisherman விவகாரம் தொடங்கி, பார்ப்பான், பூணூல், பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், எஸ்.ரா., போன்ற ரெகுலர் குறிப்பிடுதல்களைத் தாண்டி, விக்கிபீடியாவில் சரித்திரப் புரட்டு செய்பவர்களைப் போட்டு சாத்துவதுவரை ஒரு வருடத்தில் இந்த மனிதர் எவ்வளவு விவகாரங்களில்தான் மூக்கை நுழைப்பார் என்று எண்ணாதிருக்க முடியவில்லை.
இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய சிறப்பும் அதைவிடப் பெரிய பிரச்னையும் ஒன்றே. மாமல்லனின் ட்விட்டர் மொழி பெரும்பாலும் சங்கேதமானது. காண்டெக்ஸ்ட் தெரியாதவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும். 2011ல் எல்லாம் நான் ட்விட்டரில் தீவிரமாக இருந்த காரணத்தால் எனக்குப் புரிவதில் பெரிய பிரச்னை இல்லை. அப்படியும் பல ட்விட்களின் மூலாதாரம் சட்டென நினைவுக்கு வரவில்லை. யோசித்துத்தான் தொகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஆங்காங்கே அவர் தூவும் சில குறிச்சொற்கள் இதற்கு ஓரளவு உதவும். உதாரணம்:- நாய் செத்தா நாலு நாள் பட்னி கிடக்கிற புத்தர்கள், சைகை யாட்டிரிஸ்டு, களப் பணியாரம், தேஷ் பேமானி இன்னபிற.
மாமல்லனுடன் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது மனித குலத்துக்கு முடியாத காரியம். என்னாலும் முடியாதுதான். ஆனால் இந்தக் குரல் நிராகரிக்க முடியாத அசாதாரணமான வலுவைக் கொண்டது. அவரது வாதங்களை, நியாயங்களை முற்றிலுமாக நிராகரிப்பவர்கள்கூட அவரது மொழியில் இருந்து பெறுவதற்கு நிறைய உண்டு. சத்தியம் என்று தாம் நம்புவதை நாசூக்குகள் இன்றி வெளிப்படுத்தும்போது மட்டுமே சாத்தியமாகும் மொழி அது.
கிண்டிலில் ‘என் குரல்’ நூலை வாங்க
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.