இதே மார்ச். இதே 11ம் தேதி. சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் பத்திரிகையாளர் நண்பர் முப்பிடாதியின் உதவியுடன் சிறைச்சாலைக்குச் சென்று அவனைச் சந்தித்தபோது காக்கி அரை நிக்கரும் கைவைத்த பனியனும் நெற்றியில் துலங்கிய திருநீறுமாக என்னை அன்புடன் வரவேற்றான்.
‘எனக்குத் தெரியும் சார். கண்டிப்பா நீங்க யாராவது வருவிங்கன்னு நினைச்சேன். என் கதைக்குப் பரிசு கிடைச்சிருக்கு இல்ல?’
அந்த வருடம் அவனது சிறுகதை, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தது. கைதி எண்ணும் பாளையங்கோட்டை சிறைச்சாலை முகவரியுமாக கவரிங் லெட்டரில் அவன் தன்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதியிருந்தான். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை. சிறை வாழ்க்கைக்குப் பழகி ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன. வார்டன்கள் இப்போது அவனுடைய சிநேகிதர்கள். எழுதுவதற்குத் தாள்களும் படிப்பதற்குப் புத்தகங்களும் தடையில்லாமல் கிடைக்கிறது. ஓய்வு நேரத்தில் தோட்டவேலை செய்கிறான். தையல் கற்றிருக்கிறான். சிறை நண்பர்கள் விரும்பினால் உட்காரவைத்துக் கதைகள் சொல்கிறான். அவனுக்குத் தெரிந்த இலக்கியங்கள். அவன் படித்த நாவல்கள்.
‘என்ன வழக்கு உங்கமேல? யாரை, ஏன் கொலை செஞ்சிங்க? இலக்கியம் விரும்பற மனசுக்குள்ள அத்தனை குரோதம் வருமா?’
சிரித்தான். இலக்கியம், தீர்ப்புக்குப் பிறகு அவனது தேடலில் கிடைத்த விஷயம்தான். சிறைச்சாலையில் அவனது அறைக்குள் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லை. எனவே அவன் படிக்கத் தொடங்கியிருக்கிறான்.
‘தினம் ஆறு மணி நேரமாவது படிப்பேன் சார். ரெண்டு வருஷம் அப்படிப் படிச்சப்பறம் எழுதலாம்னு தோணிச்சி. இருபது கதைகள் எழுதி எனக்கே பிடிக்காமல் கிழிச்சிப் போட்டுட்டேன். அப்பறம்தான் இதை எழுதினேன். கதைய நீங்க படிச்சிங்களா சார்? உங்களுக்குப் பிடிச்சிருந்ததா சார்?’
புன்னகையுடன் அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘என்ன வழக்கு உங்க மேல? யாரை ஏன் கொலை செஞ்சிங்க?’
முதலில் மிகவும் தயங்கினான். வற்புறுத்துகிறோமோ என்று தோன்றியது. ஆனாலும் எனக்கு பதில் வேண்டியிருந்தது. ஒரு சராசரி எழுத்தாளர் எழுதினால் மிகவும் உணர்ச்சிகரமாக அமைத்துவிடக்கூடிய ஒரு கதைக்கருவை, சற்றும் பதறாமல், நிதானம் இழக்காமல், மிகை கூட்டாமல், அமைதி வழுவாமல் அவன் எழுதியிருந்தான். அதனால்தான் போட்டியில் முதல் பரிசும் கிடைத்திருந்தது.
அத்தனை அமைதியைக் கதையிலே காப்பாற்றக்கூடியவன் எந்தக் கணத்தில் தன்னை இழந்து ஒரு கொலை செய்யுமளவுக்குப் போயிருப்பான்?
‘வேண்டாமே சார். அது ஒரு நேரம். நான் உணர்ச்சிவசப்படவேயில்லை. என்ன செய்யறோம்னு தெரிஞ்சேதான் செஞ்சேன். அவனைக் கொன்னுடணும்னு புத்தில பட்ட நிமிஷமே செயல்படுத்த ஓடலை. நிதானமா யோசிச்சி, கொன்னுதான் தீரணும்னு முடிவு பண்ணித்தான் கொன்னேன். ஆயுள் தண்டனை கிடைச்சா என்ன ஆகும், தூக்குன்னா என்ன ஆகும்னு உக்காந்து ஆர அமர யோசிச்சேன். என்னோட வாழ்க்கை வீணாகும்னு தெளிவா எனக்குத் தெரியும். பரவாயில்லைன்னு முடிவு செஞ்சித்தான் கொன்னேன்.’
அதிர்ந்து போனேன். ஒரு கொலையை யாரும் இவ்வாறு செய்யமுடியாது. கொலைகளும் தற்கொலைகளும் அறிவுக்கு எதிரானவை. Emotional Intelegence வேலை செய்யாதபோது மட்டுமே சாத்தியமாகக்கூடியவை. தொழில்முறைக் கொலையாளிகள் இதில் சேர்த்தியில்லை. நான் குறிப்பிடுவது சாமானியர்களைப் பற்றி.
எனவே என் வியப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தன் வாழ்வு வீணானாலும் பரவாயில்லை, இன்னொருத்தன் இல்லாது போகவேண்டுமென்று எண்ணுவது எவ்விதமான மனநிலை?
‘வன்மம்தான் சார். வேறென்ன? மனுஷனோட ஆதார குணங்கள்ள ஒண்ணு. காமம் மாதிரியேதான் அதுவும். உள்ளுக்குள்ள பொங்கிக்கிட்டிருக்கறப்ப மத்த எதுவும் பெரிசா தெரியாது. தணிஞ்சிட்டா இருந்த சுவடே தெரியாது. என் விஷயத்துல வன்மம் மேலோங்கியிருந்தப்பவும் விழிப்போட இருந்தேன். அவனைக் கொல்லவேண்டியது என் வரைக்கும் நியாயம். ஆனால் விளைவு எனக்குப் பாதகமாத்தான் இருக்கும். இது எனக்குத் தெரியும். கொன்னுதான் பாப்பமே, மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே இருந்து அவஸ்தைப் படறதைவிட கொன்னுட்டு உள்ள போயி உக்காந்து தியானம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அதான் கொன்னேன்.’
நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றபோது அவன் தனக்காகப் பெரிய அளவில் வாதாடவேயில்லை என்று சொன்னான். ஆமாம், கொன்றேன். என்ன தண்டனை? அவ்வளவுதான்.
ஆயுள் என்று தீர்ப்பானது. சிறையில் அவனது நடவடிக்கைகளைக் கண்டு அதிகாரிகள் வியப்படைந்திருக்கிறார்கள். அவன் ஒரு கனவான். ஓரளவு படித்தவன். நாகரிகமாகப் பேசுகிறவன். மனிதர்களை அவர்தம் குறைகளுடன் அப்படியே புரிந்துகொள்ளக்கூடியவன்.
சிறையில் தான் சந்தித்த குற்றவாளிகள் அத்தனை பேருக்கும் அவன் வாசிப்பின் மகத்துவத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எதையாவது படி. எப்போதும் படி. சிறைக்குள் இருப்பவனுக்கு மீட்சிகொள்ள வேறு வழி கிடையாது. மேலும் மேலும் மனத்துக்குள் குற்றவாளியாகி வீணாகாதே. கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாதே. என்ன செய்துவிட்டு உள்ளே வந்தாய் என்பது முக்கியமல்ல. செய்ததை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருக்காதே. ஒவ்வொரு நாளும் உனக்காகப் பிறக்கிறது. சிறை வாழ்க்கை ஓர் அனுபவம். எல்லோருக்கும் கிடைத்துவிடாத அனுபவம். அதை விழிப்புணர்வுடன் அனுபவித்து வாழப்பார்.
அவன் பத்தாம் வகுப்போ என்னவோ படித்திருந்தான். கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவன். வறப்புத் தகராறு ஏதேனுமிருக்கலாம் என்று நினைத்தேன். இல்லை. ஏதோ Adultery விஷயம். அவனது மனைவி அல்லது சகோதரி தொடர்புடையதாக இருக்கலாம் என்று யூகித்தேன். அவன் சொல்ல விரும்பவில்லை. கடைசி வரையிலுமே.
மேற்கொண்டு வற்புறுத்தாமல் அவனது சிறுகதை குறித்துக் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். தனது புகைப்படம் பிரசுரமாக வாய்ப்பிருந்தும் முடியாமல் போவது பற்றி வருத்தப்பட்டான்.
‘இன்னமே நிறைய எழுதப்போறேன் சார். ஒரு நாவலுக்கு யோசனை இருக்குது. நெய்ப்பந்தம்னு டைட்டில் வெச்சிருக்கேன். யாரும் கேள்விப்பட்டிருக்கமுடியாத வாழ்க்கையா இருக்கும் சார். ஆனா உண்மையா சொல்லுங்க. எனக்கு நல்லா எழுத வருதா?’
அவன் நன்றாகவே எழுதியிருந்தான். மொழி சார்ந்த பிழைகள் மட்டும் நிறையவே இருந்தன. அது ஒரு பிரச்னையில்லை. பிறந்த குழந்தையின் உடல் சூட்டுக் கதகதப்பு போல் அனுபவம் புத்தம்புதிதாகப் பதிவாகும்போது மொழியின் தடுப்புச் சுவர்கள் தானாக உதிர்ந்துவிடும். எனவே கவலைப்படாமல் எழுதச் சொன்னேன்.
அதன்பிறகு அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தகவல் இல்லை. கண்டிப்பாக விடுதலை அடைந்து வெளியே வந்திருப்பான். அந்த நாவல் ‘நெய்ப்பந்தம்’ எழுதி முடித்தானா? வேறு ஏதேனும் எழுதினானா? எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்?
எதுவும் தெரியவில்லை.
சிறையில் அவனிடம் விடைபெறும்போது ஒன்று மட்டும் கேட்டேன். ‘அவனைக் கொன்று முடித்த கணம் என்ன நினைத்தாய்?’
கொஞ்சம் யோசித்தான். புன்னகை செய்தான். ‘நம்பமாட்டீர்கள். அவனது பெற்றோர் அழுவார்களே என்று நினைத்தேன். என்னையறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.’
கதையல்ல; அந்தக் கண்ணீர்த் துளிதான் அவனது கலையின் வெற்றி என்று எண்ணிக்கொண்டேன்.
[பி.கு : அவன் பெயரை இங்கு குறிப்பிடாமல் விட்டிருப்பது தற்செயலல்ல.]