அனுபவம்

தூர்தர்ஷன் நினைவுகள்

திடீரென்று இன்றைக்கு எங்கள் அலுவலகத்தில் – ஆசிரியர் குழுவில் பணியாற்றுவோருக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தோம். தூர்தர்ஷன் நினைவுகள் என்பது கருப்பொருள். எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கட்டுரை இது. போட்டியில் நான் கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே இங்கே போட்டுவைக்கிறேன்.

1

வழிய வழிய எண்ணெய் தடவித் தலை சீவி, ஒரு இஞ்ச் தடிமனுக்கு குட்டிக்குரா பவுடர் அடித்துக்கொண்டு, மஞ்சள் டெரிலின் ஷர்ட்டும் முழங்கால் வரை நீண்ட நிக்கரும் ஒரு புறம் காதறுந்த ஹவாய் செருப்புமாக மூச்சிறைக்க ஓடி, திருநீலகண்ட முதலியார் வீட்டு மொட்டை மாடியை அடைந்தபோது ஆடும் அலமேலுவும் ஆடிப்பாடத் தொடங்கியிருந்தார்கள்.

‘நாலணா எடுத்தாந்தியா தம்பி?’

முதலியார் சம்சாரம்தான். சிறுவாட்டுக் காசுக்கு இப்படியொரு நூதன வழியைக் கண்டுபிடித்துவிட்ட பெருமிதம் அவர் முகமெங்கும் தெரிந்தது. ஒரு தேர்ந்த போக்குவரத்துக் காவலர் போல, குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, இடையில் போகவர ஒரு பாதை உண்டாக்கி வைத்திருந்தார். அடிக்கடி பெட்டியின் அருகே சென்று ஏதோ குமிழ்களை இடதும் வலதுமாகத் திருப்பினார். படம் ஒழுங்காகத்தான் ஆடுகிறது. இவர் திருகுகிற திருகலில் என்னவாவது ஆகிவிடப்போகிறதே என்கிற பதைப்பு எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் ஏதும் முணுமுணுத்துவிட முடியாது. நாலணா காசுக்கு ஆட்டுக்கார அலமேலு என்பதைக் காட்டிலும், டிவி என்கிற அந்த நூதனம் மக்களை பிரமிக்கச் செய்திருந்ததுதான் பிரதானம். கோவூரில் நான் வசித்த காலத்தில் அங்கே டிவி வாங்கிய முதல் மனிதர் திருநீலகண்ட முதலியார். ஒளிபரப்பான முதல் படம் ஆட்டுக்கார அலமேலு. இடைவேளைக்குப் பிறகு மின்சாரம் தடைப்பட்டு, கொடுத்த நாலணாவைத் திரும்பக் கேட்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியபிறகு பல ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் அவர் வீட்டில் படம் பார்த்திருக்கிறேன். வெள்ளிக்கிழமை விரதம். கவரி மான். சவாலே சமாளி.

வெள்ளிக் கிழமை ஒளியும் ஒலியும் என்றால் பத்து காசு. அப்போதெல்லாம் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் ஒளிபரப்புவார்கள். கண்டிப்பாகப் பட்டியலில் ஒரு ஜெமினி பாடல் இருக்கும். வெள்ளிக்கிழமை ஜெமினி கணேசன் சோகமாக அழுது பாடாமல் தினம் சுதினமாகாது.

சிறிய வடிவத்தில் சினிமாவும் பாடல்களும் என்பதுதான் டிவி குறித்த எனது முதல் மனப்பதிவாக இருந்தது. நம் வீட்டில் எப்போது ஒரு டிவி வாங்கப்போகிறோம் என்று அப்பாவை நச்சரிக்கத் தொடங்கினேன். ‘நீ எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைல எண்பது பர்செண்ட் வாங்கு. மறுநாளே டிவி வாங்கித்தரேன்’ என்று அவர் சொன்னார்.

அந்தப் பரீட்சைக்கு அப்போது 2190 தினங்கள் இருந்தன.

2

என் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாங்கள் கேளம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்தபோது மாநிலத்துக்கு கிரிக்கெட் ஜுரம் பிடித்திருந்தது. இரும்பு உலக்கைகளை நினைவுபடுத்தும் விதத்தில் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து கார்டன் கிரீனிட்ஜும் டெஸ்மாண்ட் ஹெயின்ஸும் கர்ட்னி வால்ஷும் ஜோயல் கார்னரும் இன்னபிறரும் சேப்பாக்கத்துக்கு வந்து இறங்கியிருந்தார்கள். எங்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அனைவரும் லாரி கோம்ஸைக் காதலிக்கத் தொடங்க, அவசர அவசரமாகப் பள்ளி மாணவர்கள் ஒரு கிரிக்கெட் குழு அமைத்து சகட்டு மேனிக்கு மட்டை வீசத் தொடங்கினார்கள்.

தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு. பக்கத்து வீட்டில் குடியிருந்த போக்யோ டானரீஸ் நிறுவன ஊழியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் பெரிய கிரிக்கெட் ரசிகர். அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு ஐந்து நாள்களும் அமர்ந்து பார்க்க ஆயத்தமாகியிருந்தார். ஒருவாரம் முன்பிருந்தே பிஷன் சிங் பேடி, டைகர் பட்டோடி, எம்.ஜே.கோபாலன் என்று பரணிலிருந்து பலபேரைத் தூக்கிப் போட்டு தூசு தட்டி ஒரு மூட் உருவாக்கிக்கொண்டிருந்தார்.

ஆர்வமுடன் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் என் அப்பாவுக்கு கிரிக்கெட்டெல்லாம் தெரியாது, புரியாது என்பது அப்போது என் அபிப்பிராயம். குறிப்பாக அவரால் எல்.பி.டபிள்யூவைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று திடமாக நம்பினேன். இடையிடையே அவர் கூறிய கருத்துகள் யாவும் அபத்தமாகவே எனக்குப் பட்டன. [இன்றுவரையிலுமே நான் புரிந்து வைத்துள்ள எல்.பி.டபிள்யூ இலக்கணங்கள் தவறு என்பது மிகச் சமீபத்தில்தான் எனக்கே தெரிந்தது.]

ஆனாலும் வெளியிட்டுவிட முடியாது. வெளில போன, கால உடைச்சிடுவேன். உக்காந்து படிடா என்று தடுத்துவிடுவாரேயானால் எனக்கு ஆல் இந்தியா ரேடியோவில் அப்துல் ஜப்பாரும் ராமமூர்த்தி ஐ.ஏ.எஸ்ஸும் மட்டுமே அடைக்கலம் தரவேண்டியிருக்கும். சற்றே அளவு குறைவாக வந்த பந்து என்பதை எப்படி மனக்கண்ணில் கண்டுகளிக்க முடியும்? தவிரவும் மிட் ஆன், டீப் மிட் விக்கெட், லாங் ஆஃப் என்றெல்லாம் அவர்கள் உபயோகிக்கும் கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் எனக்கு அப்போது புரிந்ததில்லை.

சினிமாக்கள் மட்டுமே பார்த்த டிவியில் முதல்முதலில் ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஒரு வாய்ப்பு. இழக்க நான் தயாராயில்லை.

ஐந்து நாள் மேட்சில் விட்டு விட்டு இரண்டு நாள் அளவுக்குப் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சுனில் காவஸ்கர் ஏழெட்டு நாள் நின்று விளையாடி நூத்தி நாலோ, அஞ்சோ ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் பம்பாய் போய்ச் சேர்ந்தார். லாரி கோம்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு விமானம் ஏறியபோது என் வகுப்புத் தோழிகள் வளர்மதியும் ராஜாத்தியும் ரகசியமாகக் கண்ணைக் கசக்கினார்கள்.

தூர்தர்ஷன்மீது பிரத்தியேகமாக ஒரு விருப்பம் உண்டாக அந்த கிரிக்கெட் மேட்ச் எனக்குக் காரணமானது. மால்கம் மார்ஷலின் பந்துவீச்சு பாணியை ஒரு தியானம் போல் விழிப்புடன் கவனித்து, மனத்தில் இருத்திக்கொண்டு பள்ளி அணியில் கோணலாக ஓடி வந்து பந்து வீசத் தொடங்கினேன். ஒன்றிரண்டு விக்கெட்டுகளும் அந்நாளில் எனக்கு விழுந்தன. துரதிருஷ்டவசமாக விரைவிலேயே மூக்குக்கண்ணாடி அணியவேண்டி வந்துவிட, நான் வலுக்கட்டாயமாக லாரி கோம்ஸின் பாணிக்கு மாறவேண்டியதானது.

ஆனால் வளர்மதிக்கும் ராஜாத்திக்கும் ஏனோ அப்போதும் என்மீது காதல் உண்டாகவில்லை.

3

யாருடைய சிபாரிசு என்று நினைவில்லை. ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை சொல்லிவிட்டு என்னையும் எனது ஒன்று விட்ட, இரண்டு விட்ட சகோதர சகோதரிகள் சிலரையும் எங்கள் சித்தி தூர்தர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். கண்மணிப் பூங்காவில் ஒரு வாய்ப்பு.

என்ன நிகழ்ச்சி, நான் என்ன செய்தேன், பேசினேனா, பாடினேனா, டான்ஸ் ஆடினேனா என்பது நினைவில்லை. ஆனால் முதல்முதலாக அங்கே ஷோபனா ரவியைப் பார்த்தது நினைவிருக்கிறது.

தூர்தர்ஷனுக்கு இரண்டு சின்னங்கள். அந்த சிப்பிக்குள் முத்து ஒன்று. ஷோபனா ரவி இன்னொன்று. அவரது கஷ்மீர், ரஜிவ் காந்தி, ஹிமச்சல் ப்ரதேஷ், சபாநாயஹர் போன்ற பிரயோகங்கள் ஆரம்பத்தில் வினோதமாக இருந்தாலும் போகப்போக அவர் சொல்வதுதான் சரி என்னும் உணர்வை எளிதில் உண்டாக்கிவிட்டன. இழுத்துப் போர்த்திய புடைவையும் நெருக்கி நறுக்கிய புருவங்களும். தொடங்கும்போதும் முடிக்கும்போதும் மட்டும் தீக்குச்சி கிழிக்கிற கணத்துக்கு ஒரு புன்னகை.

முதல் முதலில் தூர்தர்ஷன் வளாகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தபோது உண்டான பரவசத்தை விவரிக்கவே முடியாது. தினசரி நான் பெட்டிக்குள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி. உயிரும் உணர்வுமாக இதோ என் முன்னால் நிற்கிறார். அதேமாதிரி பேசுகிறார். அதே மாதிரி சிரிக்கிறார். யாருக்கோ கைகுலுக்குகிறார். அவசரமாக இடது கையை உயர்த்தி மணிபார்த்து ஸ்டுடியோவுக்குள் சென்று மறைகிறார். வணக்கம். இன்றைய தலைப்புச் செய்திகள். கஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் ஆறுபேர் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல் துறைத் தலைவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்தக் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

செய்திகள் நேரடியாக அல்லாமல் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பான காலம் அது. சில தினங்களில் அபூர்வமாக இடையே யாருடைய கரமோ ஒரு தாளை நீட்ட, சற்றும் கலவரமடையாமல் வாங்கிப் படித்துப் பார்த்து, சற்றுமுன் கிடைத்த செய்தி என்று அவர் இன்ஸெர்ட் செய்யும் லாகவத்தில் வெகுவாக மனம் பறிகொடுத்திருந்தவர்களுள் நானும் ஒருவன்.

என் அம்மா ஒருநாளும் ஷோபனா ரவியின் புடைவை டிசைனை கவனிக்கத் தவறியதில்லை. எப்படி அவருக்கு மட்டும் இப்படியெல்லாம் புடைவைகள் கிடைக்கின்றன, புடைவையின் நிறத்திலேயே கழுத்தணியும் காதணியும் கிடைக்கிறது என்று காம்பவுண்டில் பல சமயம் பேசக்கேட்டிருக்கிறேன்.

தூர்தர்ஷனின் சிறப்புகளுள் சந்தேகமில்லாமல் ஷோபனா ரவியும் ஒருவர் அல்ல – ஒன்று.

4

தூர்தர்ஷனின் பொற்காலம் என்று ராமானந்த சாகரின் ராமாயணம் ஒளிபரப்பான காலத்தைச் சொல்வேன். 1985 அல்லது 86 என்று நினைக்கிறேன். ஞாயிறு தோறும் காலை ஒன்பதரைக்கே ஊரடங்கிவிடும். டிவி பெட்டிக்கு கற்பூர ஆரத்தி காட்டுமளவுக்கு மக்களை சுருட்டிப் பொட்டலம் கட்டி வைத்திருந்த தொடர் அது. அருண் கோயலோ என்னமோ அவர் பெயர்.

கண்டிப்பாக இதிகாச காலத்து ராமர் இவரைப்போலத்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு காட்சியில் கூட ஷேவ் செய்ததில்லை என்றாலும் எப்போதும் மழமழவென்றே இருக்கிற முகம். மாறாத புன்னகையும் மறக்கமுடியாத நடிப்புமாக தேசம் முழுவதையும் கொள்ளை கொண்டுவிட்டுப் பின்னாளில் அரசியலுக்கு வந்து வீணாய்ப் போனார்.

சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த காலத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சிகரெட் பிடிப்பது மாதிரி ஒரு புகைப்படம் ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியாக, கர்மசிரத்தையாக அதை வெட்டி எடுத்து வந்து என் அம்மாவின் கண்ணில் படும்படி வைத்தேன். அன்றைக்கு முழுவதும் வீட்டில் அனைவருக்கும் தொட்டதற்கெல்லாம் அர்ச்சனை விழுந்துகொண்டே இருந்தது. அடுத்த எபிசோடின்போது அம்மா கற்பூர ஆரத்தி காட்டவில்லை.

சோப்ராவின் மகாபாரதமும் அதே அளவு புகழ்பெற்ற தொடர்தான். இந்தத் தொடருக்குத் தான் முதல் முறையாகப் பத்திரிகைகள் வசனங்களை மொழிபெயர்த்து வெளியிடும் வழக்கத்தை ஆரம்பித்தன. தினமலரில் ஞாயிறு தோறும் என் சகோதரர் சௌரி. வரதராஜன் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். துக்ளக்கில் டி.எஸ்.வி. ஹரி என்கிற வெங்கட்.

இருவர் மொழிபெயர்ப்புகளுமே அன்று வெகுவாக சிலாகிக்கப்பட்டன. [துரதிருஷ்டவசமாக இன்றைக்குப் படித்துப் பார்த்தால் மொழிபெயர்ப்பு திராபையாகத் தெரிகிறது.]

இன்றைய மெகா சீரியல்களின் முன்னோர்களான ராமானந்த சாகரும் பி.ஆர். சோப்ராவும் கண்டிப்பாக இந்த வடிவம் இத்தனை தூரத்துக்கு நாரடிக்கப்படும் என்று நினைத்திருக்கமாட்டார்கள். நேற்றைக்கு ராமாயண சீரியலின் இரண்டு எபிசோட்களைத் [சிடி கிடைக்கிறது.] திரும்பவும் பார்த்தேன். ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காத அத்தனை இறுக்கமான திரைக்கதை. அநாவசியமாக ஒரு வரி கிடையாது. தேவையற்ற அலங்கார ஜோடனைகள் கிடையாது. திடுக்கிட வைக்கும் கட் ஷாட், ஜம்ப் ஷாட் உத்திகள் கிடையாது. ட-ட்-ட-ட்-ட-ட்-ட-ட்-ட என்று ஸ்லோமோஷனில் யாரும் கண்களை உருட்டி விழித்து பயமுறுத்துவதில்லை. இருபது வருடங்கள் கழிந்தும் புதுசாகவே இருக்கிறது.

5

தூர்தர்ஷனும் அதன் தமிழ் ஒளிபரப்பும் தொடங்கி வெகுகாலம் வரை குழந்தையாகவே இருக்க, முதல் முதலாக அது வயசுக்கு வந்த விவரத்தை அறிவித்த மெட்ரோ ப்ரியாவைக் குறிப்பிடாது போனால் இக்கட்டுரை முழுமை பெறாது.

மெட்ரோ சானல் என்ற ஒன்றுதான் இன்றைய தனியார் தொலைக்காட்சிகள் அனைத்துக்கும் முன்னோடி என்று தயங்காமல் சொல்லுவேன். திரைப்படப் பாடல்களுக்கு இணைப்புரை என்றொரு வடிவத்தை ப்ரியா அப்போது ஆரம்பித்தார். இரண்டாவது இடத்தைப் பிடித்த பா…டல், ஏழாவது இடத்தைப் பிடித்த பா..டல் என்று நேயர்களைப் பார்த்து செல்லத் துப்பாக்கி நீட்டி, முகம் முழுதும் சிரித்துக் கொஞ்சி அவர் அறிவிக்கும்போதெல்லாம், பாடல் வேண்டாம், நீயே பேசு என்று மானசீகத்தில் அனைவரும் கதறியதை மனச்சாட்சி இருப்போர் மறுக்கமாட்டார்கள்.

ப்ரியாவின் லாகவமும் லயமும் உச்சரிப்பு சுத்தமும் குரல் வளமும் புத்துணர்ச்சியும் அவருக்குப் பிறகு இன்று வரையிலுமே யாருக்கும் இல்லை என்பது என் அபிப்பிராயம். டிடிக்கு ஷோபனா ரவி போல் மெட்ரோவுக்கு அவர் ஒரு இலச்சினை ஆவார் என்று மிகவும் எதிர்பார்த்தேன். குறுகிய காலத்தில் ப்ரியாவும் டிடி மெட்ரோவும் காணாமல் போனதற்குப் பிரமாதமான காரணங்கள் ஏதுமில்லை. சன் டிவி அப்போது தோன்றிவிட்டது.

6

நிறைய விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது. பொறுமைதான் இல்லை. ஒரு காலத்தில் வயலும் வாழ்வும், வாழ்க்கைக் கல்வி, யுஜிசி கல்வி ஒளிபரப்பு, காது கேளாதோருக்கான செய்திகள் என்று பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் கூட தூர்தர்ஷனில் ரசிக்கும்படி இருந்தன.

இன்று நினைத்தாலும் சகிக்கமுடியாத தரத்தில் இருந்த ஒரே அம்சம், அதன் நாடகங்கள். ஒரே செட்டும் ஒரே நடிகர்களும் ஒரே மாதிரி கதைகளும் ஒரே மாதிரி பின்னணி இசையும் இப்போதும் நினைவிருக்கிறது. சன் டிவி தொடங்கியதும் தனது சீரியல்களுக்கு உடனடியாக ஒரு திரைப்படத் தோற்றத்தை அளித்துவிட்டதுதான் அவர்களது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். சரக்கு எத்தனை குப்பையாக இருப்பினும் இந்த உடனடி வித்தியாசம் மக்களைக் கவர்ந்துவிட்டபடியால் நகர்ப்புற நேயர்கள் மெல்ல மெல்ல தூர்தர்ஷனைக் கைகழுவிவிட்டார்கள்.

புறநகர்ப் பகுதிகளிலும், நகரங்களிலேயே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியிலும் தூர்தர்ஷன் இன்னமும் செல்வாக்கு பெற்றிருப்பதாக சமீபத்தில் ஏதோ ஒரு கூட்டத்தில் நடராஜன் பேசியது நினைவுக்கு வருகிறது. தூர்தர்ஷனிலிருந்து ஓய்வு பெற்றுப் பல்லாண்டுகள் ஆனபின்பும் தூர்தர்ஷன் நடராஜனாகவே இருக்கும் நடராஜன்.

ஒருவேளை உண்மையாகவே இருக்கலாம். இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுத்த நிறுவனம் என்கிற வகையில் தூர்தர்ஷனின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. அதன் பழமை வாசனை மாற்றம் கொண்டு காலத்துக்கேற்ற முகம் கொள்ளவேண்டியதன் அவசியத்தை மட்டும் உணர்ந்தால் போதும்.

பெருந்தலைவர்கள் யாரேனும் இறந்துவிட்டால் ஒலிக்கும் இசைபோலவே இன்றைக்கும் ஒலிக்கும் அதன் சிக்னேச்சர் இசையை பாலசந்தர் தனது திரைப்படம் ஒன்றில் [அழகன். மம்முட்டி நடித்தது. மரகதமணி என்கிற கீரவாணியின் இசை.] நவீனப்படுத்தி, ஒரு பாடலின் ஆதார ட்யூனாகவே அமைத்து பெரிய ஹிட் ஆக்கியதை [சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னும் இருக்கா?] இன்றைய தூர்தர்ஷன்காரர்கள் யோசித்துப் பார்க்கலாம்.

நிகழ்ச்சிகளின் தரத்துக்கும் அதுவேதான் வேண்டியிருக்கிறது. துடிப்புடன் கூடிய ஒரு வசீகர மாற்றம்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி