அரசியல்

பொன்னான வாக்கு – 16

கல்யாணமென்றால் பத்திரிகை அடித்தாக வேண்டும். கருமாதி என்றாலும் ஒரு கார்டு அச்சடித்தே தீரவேண்டும். பிறந்த நாளுக்கு ஃப்ளக்ஸ் பேனர், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போஸ்டர் – அட, யாராவது கருங்குழியிலிருந்து கலிபோர்னியாவுக்குக் கிளம்பிப் போனால்கூட பேப்பரில் ஒரு விளம்பரம் கட்டாயமாகியிருக்கும் “பண்பாட்டு”ச் சூழலில் தேர்தலுக்கு ஓர் அறிக்கை என்பதென்ன கொலைக் குத்தமா? போடு, ஆளுக்கொரு அறிக்கை.

ஆனால் இந்த தேர்தல் அறிக்கைகளை எத்தனை பேர் பொருந்திப் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை விஞ்சுமளவுக்கு இந்த அறிக்கைகளில் சுவாரசியமும் நகைச்சுவையும் கொட்டிக்கிடக்கும். தமிழ் சமூகத்துக்கு இந்த ரகசியத்தை யாரும் இதுவரை சரிவர எடுத்துச் சொல்லாத காரணத்தால் அறிக்கைகள் அநாதைக் குழந்தைகள் போலாகிவிடுகின்றன. எழுதியவர்களே ஆட்சிக்கு வந்தாலும் அதைக் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நமக்காகத்தானே வேலை மெனக்கெட்டு மண்டபத்தில் ஆள் பிடித்து எழுதிப் பிரசுரிக்கிறார்கள்? ஒரு மரியாதைக்குப் புரட்டிப் பார்க்க வேண்டாமா?

இந்தத் தேர்தலுக்கு கேப்டன் விஜயகாந்தின் வாக்குறுதிகளை வாசித்தீர்களா? பெட்ரோல் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய்க்குக் கொடுப்பேன் என்கிறார். டீசல் என்றால் முப்பத்தைந்து. மக்களின் முதல்வரல்ல; ரசிகர்களின் முதல்வராகப் போகிற கேப்டனுக்கு பெட்ரோலை பாமாயில் ரேஞ்சுக்குக் கீழே இறக்கிவிடும் உத்வேகம் இருப்பதைப் பாராட்டித்தான் தீரவேண்டும். ஆனால் துரதுருஷ்டவசமாக பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில முதலமைச்சருக்கு இங்கு இல்லையே?

கேப்டனுக்கு இது தெரியாதா என்றெல்லாம் கேட்கப்படாது. அவர் முதல்வரானால் பெட் ரோலியத் துறையையே மாநில அதிகார வரம்புக்கு மாற்றிவிடுவாராயிருக்கும். ஆனானப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

கேப்டன் இப்படி பெட்ரோலியப் புரட்சிக்குத் தயாராகிற நேரத்தில் அந்தப் பக்கம் புரட்சித் தமிழர் சீமான் என்னடாவென்றால் மாநில அரசு இனி ஒரு வங்கி நடத்தும் என்கிறார். தமிழீழ வங்கி மயக்கம் இன்னும் அவருக்குத் தீர்ந்தபாடில்லை. அந்த வங்கி திவாலாகி, புலிகளே இல்லாமல் போய், புரட்சியெல்லாம் காலாவதியாகிவிட்ட பிறகும் விடுவேனா பார் என்கிறார்.

சந்தன வீரப்பனுக்கு ‘வனக்காவலர்’ என்றொரு பட்டம் கொடுத்து, அவனை ‘ஐயா வீரப்பனார்’ ஆக்கி, மணி மண்டபம் கட்டுவேன் என்கிறார். திம்மம், ஆசனூர் பகுதி வாக்காளர்களை மொத்தமாக அள்ளி எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் முயற்சிதான் இது என்கிற பட்சத்தில் ஆட்டோ சங்கர் பெயரில் ஓர் அறக்கட்டளை அமைக்கவாவது சீமான் நடவடிக்கை எடுக்கலாம். சென்னை நகரத்து பாட்ஷாக்களில் பாதி பேராவது வாக்களிக்கமாட்டார்கள்?

கேப்டனின் இன்னொரு அசகாயத் திட்டத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே? நல்லி, போத்தீஸ் போன்ற துணிக்கடைகளுக்கு வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்படும் என்று தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. திடீரென்று நல்லி போத்தீஸுக்கு என்னடா புது வாழ்வு என்று குழம்பிவிட்டேன்.

பயங்கரமாக யோசித்துப் பார்த்ததில் ஒருவாறாக இதற்கு அர்த்தம் புரிந்தது. கேப்டன் அரசு அமைத்தால் கைத்தறித் தொழில் செழிக்கும். கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அவர்கள் உற்பத்தி செய்வார்கள். ஆனால் கேப்டன் தான் விலை நிர்ணயம் செய்வார். அவர் சொல்லுகிற விலைக்கு துணிமணியைத் தலையில் தூக்கிக்கொண்டு வெளிநாடுகளுக்குப் போய் விற்பனை செய்யும் உரிமம் நல்லி, போத்தீஸுக்குக் கிடைக்கும்.

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!

இந்த சிந்தனைச் சிற்பிகளோடு ஒப்பிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சந்தேகமில்லாமல் உயர்தரம். கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, நீர்வள மேலாண்மை என்று ஒவ்வொரு அம்சத்தையும் உற்றுநோக்கி, நடைமுறை சாத்தியங்களையும் ஆலோசித்தே வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் அன்புமணி. ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம், தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் அவர் சார்ந்த சாதிக்கு கன்வர்ட் ஆனால்தான் அன்புமணி முதல்வராக முடியும்.

பொதுவாக, தேர்தல் பணிகளை அனைவருக்கும் முன்னால் தொடங்கிவிடும் அதிமுக இம்முறை எதையுமே இன்னும் தொடங்காமல் நேர்காணல் நடத்திக்கொண்டிருக்கிறது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் எல்லாம் கொடுத்தாகிவிட்டது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி வகையறாக்கள் இன்னும் பாக்கியிருக்கிறது. அதிமுக அறிக்கையில் அவற்றை எதிர்பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்து இத்தனை வருஷத்தில் நடைமுறை சாத்தியங்களை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவது திமுகதான். அபத்தங்கள் இருக்காது. சிரிக்க வாய்ப்புத் தரமாட்டார்கள். நிறைவேற்றுவார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். இந்த இரு பெரும் கட்சிகளின் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் இன்னொரு ரவுண்டு சுற்றி வரலாம்!

0

(நன்றி: தினமலர் 28/03/16)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி