பீதியைக் கிளப்புவதில் நம் மக்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைத்தளங்களில் அவிழ்த்துவிட்ட நகரத்து மாடு போல் ஒரு புகைப்படம் இஷ்டத்துக்குச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. கனிமொழியுடன் நடிகை ஷகிலா இணைந்திருக்கும் புகைப்படம். ஷகிலா திமுகவில் சேர்ந்துவிட்டார் என்பது படக்குறிப்பு.
என்னதான் தமிழகத்தில் ஷகிலாவுக்கு இன்னும் கோயில் கட்டப்படவில்லை என்றாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிகளைக் காட்டிலும் அதிக ரசிகர்கள் அவருக்கு உண்டு. ஆனாலும் அம்மணி அண்டை மாநிலத்து வாக்காளராயிற்றே; இவர் எப்படி இங்கே வந்து திமுகவில் சேருவார் என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனால் புகைப்படம் பொய் சொல்லுமா? கறுப்பு சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்த ஷகிலா. அருகே புன்னகையுடன் கனிமொழி. ‘திமுகவுக்காகப் பிரசாரம் செய்வேன்; இவ்வாறு அவர் கூறினார்’ என்று டிபிகல் பத்திரிகைத்தனமான மொழியில் எழுதப்பட்ட குறிப்பில் கொஞ்சம் அசந்துவிட்டேன்.
தவிரவும் சாத்தியமில்லாததென்று ஒன்று உண்டா? அரசியலில் எதுவும் நடக்கும். இனி எண்ட ஸ்டேட் தமிழ்நாடு. எண்ட முதல்வர் கலைஞர். எண்ட நாஷ்டா பொங்கல் வடை என்று முன்னோர் உரைத்தவண்ணம் முழுதும் மாறிவிட்டிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எதற்கும் இருக்கட்டும் என்று திமுகவில் உயர்மட்டத் தொடர்பில் உள்ள நண்பர் ஒருவருக்கு போன் செய்து விசாரித்தபோது அது வெறும் வதந்திதான் என்று சொன்னார். படம் எப்போதோ எதற்கோ எடுக்கப்பட்டது. இப்போது “உபயோகப்படுத்தப்பட்டு” வருகிறது.
பொய்த் தகவல்தான். ஆனாலும் திமுகவில் ஷகிலா என்கிற பரப்புரையின் பின்னால் உள்ள திட்டமிட்ட கள்ளச் சிரிப்புக் கபடநாடகம் படு பயங்கரமானது. குஷ்பு விட்டுச் சென்ற பேரிடத்தை (பேரிடரையல்ல) இனி இவர் நிரப்புவார் என்றொருவர் காவியத்துக்குப் பாயிரம் பாட ஆரம்பித்தார். தொடர்ந்து இந்த வதந்தி எப்படியெல்லாம் புதுப்பூச்சு எடுக்கும் என்பதையோ, என்னென்ன மாதிரி இடக்கரடக்கல்களுக்கு இடமளிக்கும் என்பதையோ விவரிக்கத் தேவையில்லை.
ஆ, நடிகைகள்! அரசியலில் இவர்கள் பங்குதான் எத்தனை மகோன்னதமானது! வைஜெயந்தி மாலா பாட்டி காலத்திலிருந்து சமூகம் காணாததில்லைதான். ஆனாலும் ஒவ்வொரு முறை யாராவது ஒரு நடிகை அரசியலில் இறங்கும்போதும் அல்லது குதிக்கும்போதும் அது ஒரு முக்கியச் செய்தி ஆகிவிடுகிறது. தொழிலதிபர்கள் அரசியலுக்கு வருவதில்லையா? சாமியார்கள் அரசியல் பண்ணுவதில்லையா? ரிடையர்டு அரசு ஊழியர்கள் களமிறங்குவதில்லையா? விளையாட்டு வீரர்கள் வருவதில்லையா? நேற்றுக்கூட ஒருத்தர் வந்தாரே. ஆ, ஶ்ரீசாந்த்! என்ன கவனமாக கிரிக்கெட்டிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கியிருக்கிறார்கள்!
ஆனாலும் நடிகைகளின் பெயர்கள் அடிபடும்போதெல்லாம் எப்படியோ ஒரு கவன ஈர்ப்பு கூடிவிடுகிறது. புடைவைக்கு மேலே அங்கவஸ்திரத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அரசியல் மேடைகளில் அம்மா இங்கே வாவா சொல்லும் தேசிய நீரோட்ட நடிகைகள். புடைவை பார்டரிலேயே கட்சிக்கறை காட்டும் மாநில நீரோட்ட நடிகைகள். டப்பிங் இல்லாத அந்த மகரக் குரல்கள் கொஞ்சம் பேஜார்தான் என்றாலும் கூட்டத்தைக் கட்டிப்போடும் விற்பன்னர்கள் இவர்களே என்பதில் நமது கட்சித் தலைவர்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது.
இந்த நடிகையர் வரப்பிரசாத விஷயத்தில் மற்ற யாரையும்விட காங்கிரஸ் அதிர்ஷ்டம் செய்த கட்சி. சீசனுக்கு ஒருத்தராவது காங்கிரசில் சேர்ந்து கலர்ஃபுல்லாக்கிவிடுகிறார்கள். என்ன இருந்தாலும் நூற்றாண்டுப் பாரம்பரியம். நடிகைகளைச் சுண்டி இழுக்கும் விஷயத்தில் மட்டும் காங்கிரசின் தேசிய, மாநிலத் தலைவர்களை அடித்துக்கொள்ளவே முடியாது.
திமுகவில் குஷ்பு திமுகவில் இருந்தவரை, அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவரைக் குறித்த பேச்சு இருந்தது. அவர் ஒரு குட்டி அதிகார மையமாகிக்கொண்டிருப்பதாகவே சொன்னார்கள். திமுகவில் அன்னிய முதலீடா? வாய்ப்பே இல்லை. திராவிடம் அதற்கெல்லாம் இடம் கொடுக்காது. அன்னிய முதலீடெல்லாம் காங்கிரசில்தான் சாத்தியம். எனவே காலக்கிரமத்தில் அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். நாளது தேதி வரை சௌக்கியமாகவே இருக்கிறார். இந்தத் தேர்தலில் விளையாட வருகிறாரோ இல்லையோ. எப்படியும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி உறுதி.
அதிமுகவிலும் சமகால நடிகைகள் உண்டு. ஆனால் அமைச்சர்களே வெளியே தெரியாத கட்சியில் அவர்கள் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்?
எனக்குத் தெரிந்து சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போய் அதிரடியாகக் களமாடிக்கொண்டிருக்கும் ஒரே நபர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ரோஜாதான். எத்தனை போராட்டங்கள், சிறைவாசங்கள், புரட்சிப் பொதுக்கூட்டங்கள்! விட்டேனா பார் என்று சுழன்று சுழன்று ரவுண்டு கட்டிக்கொண்டிருக்கிறார்.
அன்று திருப்பதியை விட்டது, இன்று ரோஜாவை விட்டது இரண்டுமே தமிழனின் துரதிருஷ்டம்தான். இந்தத் தேர்தல் சீசனுக்கு மட்டுமாவது யாராவது அவரை இங்கே இரவல் வாங்கி வரலாம். அட, ஒரு சீட் கட்சிகள் லிஸ்டில் கூட இங்கே ஒய்யெஸ்ஸார் காங்கிரஸ் இல்லை பாருங்கள்! பெரும் துக்கம்தான்; சந்தேகமில்லை.
0
(நன்றி: தினமலர் 29/03/16)
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.