பொன்னான வாக்கு – 18

கோடிக்கணக்கான பணம் என்றால் அது எப்படி இருக்கும்? எத்தனை சூட்கேசுகளில் நிரம்பும்? சராசரித் தமிழனின் தணியாத தாகங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதல் இரண்டு மூன்று இடங்களுக்குள் இது நிச்சயமாக வரும். சினிமாக்களில் காட்டப்படும் பணக்கட்டுகளெல்லாம் திருவல்லிக்கேணி வெப் ஆஃப்செட் ப்ரஸ்களில் அடித்தவை என்பது தரை டிக்கெட்வாசிகள் வரை தெரிந்துவிட்ட நிலையில் நிஜ கோடிகளைக் காணும் தாகமானது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அதுவும் அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி விவகாரம் வெளியே வந்த பிறகு சிண்டைப் பிய்த்துக்கொள்ளாத குறை. ம்ஹும். செய்தித் தாள்களில் நம்பருக்குமேல் எதையும் போடுவதில்லை. அட ஒரு பத்திருபது சூட்கேசுகளையாவது போட்டோ பிடித்துப் போடுங்களப்பா என்றால் மாட்டார்கள்!

விமான நிலையக் கடத்தல் பிரகஸ்பதிகளிடம் கைப்பற்றிய தங்க வைர வைடூரிய டாலர் வகையறாக்களைக் காட்சிப் படுத்தும்போதுகூட பலகோடி ரூபாயின் முப்பரிமாணம் தெரிவதில்லை. நெற்றியில் பட்டையடித்த பஸ் ஸ்டாண்டு சிட்டுக்குருவி லேகிய டாக்டர் தமது சூரண பாட்டில்களுடன் போஸ் கொடுப்பது போல யாராவது போட்டோவுக்குத் தலைகுனிந்து நிற்பார்கள். அட ஒரு தகவல் அறியும் உரிமை மனு எழுதிப் போட்டால் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி எடுத்துக் காட்டித் தொலைப்பார்களா என்றால் அதுவும் கிடையாதாம்.

என்ன ஒரு இம்சை ஜனநாயகம்!

ஒரு பக்கம் தேர்தல் கமிஷன் கைப்பற்றும் கோடிகளைப் பற்றிய செய்திகள். மறுபக்கம் மங்காத்தா கூட்டணி பேர அக்கப்போர்கள். இவர் இத்தனை கோடி வாங்கினார், அவரை அத்தனை கோடிக்கு விலை பேசினர் என்ற குற்றச்சாட்டுத் திருவிழா கனஜோராக ஆரம்பமாகியிருக்கிறது. மார்ச் மாசமே இத்தனை சூடு என்றால் மே மாசம் வெளியே வரவே முடியாது போலிருக்கிறது.

ஒரு செய்தி படித்தேன். செய்தி என்று சொல்வதா? வதந்தி என்று ஒதுக்கிவிடவும் தோன்றவில்லை. இல்லாமலா தேர்தல் கமிஷனுக்கே புகார் போயிருக்கும்? சிறுதாவூருக்குப் போன கண்டெய்னர் லாரிகள். மேற்படி கிராமத்தில் உள்ள ஓர் இனிய இல்லத்தில் இருக்கக்கூடிய ரகசியச் சுரங்க அறைகள். லாரிகளில் போனது என்ன?

ஒரு பத்திரிகை இவ்விவரத்துக்கு இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டு எழுதியிருந்தது. பங்களாவை நோக்கிப் போன கண்டெய்னரை நட்ட நடு ராத்திரி நேரத்தில் யாரோ சில ஊர் மக்கள் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்ததாகவும், லாரியில் நிலக்கரி எடுத்துப் போவதாக அவர் சொன்னதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இதையெல்லாம் பத்திரிகை ஆபீசுக்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டுத்தான் ஸ்டியரிங்கே பிடிப்பார்களோ என்று நினைக்கும்படியாகிவிடுகிறது.

ஒன்றும் கேட்கப்படாது. ஏ, மனிதனே! ஒன்றல்ல பத்து கண்டெய்னர் லாரிகள். போடு அடுத்த குண்டு.

இவரை இழுத்து வர ஐந்நூறு கோடி பேரம். அவரை இழுத்துப் போக ஆயிரத்தி ஐந்நூறு கோடி பேரம். நீ இதைச் சொல்கிறாயா? இந்தா ஒரு வக்கீல் நோட்டீஸ். பதிலுக்கு இந்தா ஒரு புகார்ப் பட்டியல். தொலைக்காட்சி நேர்காணல்கள். வெளிநடப்பு வைபவங்கள். வீர உரைகள். ஆனால் கோடிகளாலான கேடிகளின் உலகை இன்னும் யாரும் முழுதாக ஒரு டியூப் லைட் போட்டு அடையாளம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. தமிழனுக்குப் பல்லாயிரம் கோடியைப் பார்த்துப் பரவசப்படும் ப்ராப்தம் இன்னும் வாய்க்கவில்லை. போதும் ஒரு குவார்ட்டரும் கோழி பிரியாணியும்.

மாநிலத்தில் வங்கிகளெல்லாம் இருக்கிறதா, வேலை செய்கிறதா என்றே குழப்பம் வந்துவிடுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகளெல்லாம் வெளியே இருந்தால் ஏடிஎம்களில் எப்படி அஞ்சு பத்தாவது இருக்கும்? என் பேட்டையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் எப்போது போனாலும் ரிப்பேர் என்று போர்டு மாட்டி வைத்திருப்பான் பரதேசி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

இந்தப் பண உற்சவம் கன ஜோராக நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மாநிலத்தில் தினமும் குறைந்தது ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் முடங்கிவிடுவதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சிறு வியாபாரிகள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போக முடிவதில்லை. அட சந்தையில் ஒருஜோடி மாடு பிடிப்பதென்றால் என்ன செலவு? எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினாலே பறக்கும் படை வந்து பறிமுதல் செய்துவிடுகிறது. இந்தப் பணத்துக்கு என்ன கணக்கு? ஐயா ஏடிஎம்மில் எடுத்தேன் என்றால் எங்கே ரசீது? எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்ததற்கான ரசீது ஒழுங்காக வருகிறது?

நடைமுறை நரக அவஸ்தைகள். விடுங்கள்;

இந்தக் கோடிக் கரையில் மீன் பிடிக்கும் தேர்தல் கமிஷன் கட்சிக்காரர்களிடம் பறிமுதல் செய்யும் பணமூட்டைகளை ஒருமுறையாவது பகிரங்கமாக மக்கள் முன் வைக்கவேண்டும். அத்தனை பணத்தைப் பார்த்த கணத்திலாவது ஒரு ஞானம் சித்திக்காதா? நவீன கால போதி மரமென்பது பணங்காய்ச்சி மரமாகத்தான் இருக்கவேண்டும்.

(பா ராகவன் – தொடர்புக்கு: writerpara@gmail.com)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி