என் மிகச் சிறு வயதில் கண்ட ஒரு காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு மாட்டு வண்டி. அதற்கு கலர் பேப்பர் ஒட்டி, பலூனெல்லாம் கட்டி சைடில் சாத்துக்குடி பழங்களை வரிசையாகத் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பார்கள். வண்டிக்குப் பின்னால் ஒரு தட்டி, முன்னால் ஒரு தட்டி. ஃப்ளோரசண்ட் நிறங்களில் வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் கொட்டையாக வரைந்திருப்பார்கள். வண்டியில் நாலு பேர் உட்கார இடம் இருந்தாலும் யாரும் உட்காரமாட்டார்கள். உள்ளே பிட் நோட்டீஸ் கட்டுகள் மட்டும்தான் இருக்கும். அப்புறம் மைக் செட். கொண்டையில் கட்டிய கூம்பு ஸ்பீக்கரில் வண்டிக்குப் பின்னால் நடந்துவரும் தொண்டரின் குரல் கமறும். வாக்காளப் பெருமக்களே, மறந்துவிடாதீர்கள்! மறந்தும் இருந்து விடாதீர்கள்!
அடக்கடவுளே, இதற்கு என்ன அர்த்தம்? தப்பித்தவறி மறந்துவிட்டால் உடனே மண்டையைப் போட்டுவிடச் சொல்கிறார்களா?
வீடுதோறும் வண்டி நிற்கும். கைகூப்பிய வேட்பாளர் படியேறி வந்து வாக்குக் கேட்பார். உரிமையுடன் வீட்டுப் பெண்களிடம் தண்ணீரோ மோரோ வாங்கிக் குடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய் கைகூப்புவார். ஊர்வலம் வீதியைக் கடந்து சென்ற பிறகு சாலையெங்கும் பிட் நோட்டீசுகள் காற்றில் உருண்டு மறந்துவிடாதீர்கள்! மறந்தும் இருந்து விடாதீர்கள்! என்று மௌனமாக அலறும்.
முப்பத்தைந்து நாற்பது வருட இடைவெளியில் மாற்றமும் முன்னேற்றமும் ஜோராக கனபரிமாணம் பெறத்தான் செய்திருக்கிறது. இன்னொருத்தர் உடன் வந்து அறிமுகம் செய்யவோ, பிரசாரக் குரல் கொடுக்கவோ இன்று அவசியமில்லை. வெள்ளக்கிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு, பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டேன் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போடுகிறார். உடனே எத்தனை ஆசீர்வாதங்கள், எவ்வளவு வாழ்த்துகள், உற்சாகக் கூக்குரல் கமெண்ட்டுகள்! போகிற வழியில் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரைச் சந்தித்து (இவருக்கு மட்டும் ஏன் எப்போதும் திருதிரு?) ஆசி பெற்ற விவரமும் ஸ்டேடஸாகிவிடுகிறது.
விஜயகாந்த் கூட்டணியில் இருப்பதால் மநகூவினர் ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு ஸ்டேடஸ் போடுகிறார். தமது தடாலடித் திருவாய்மொழிகளால் எப்போதும் டைம்லைனை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருக்கிறார்.
அந்தப் பக்கம் வைகோ என்னடாவென்றால் அந்த பாலிமர் டிவி வெளிநடப்பு விவகாரத்தின் பின்னணி விவரங்களை ஒரு ஆடியோ போஸ்டாக சமூகத்தின் முன் வைக்கிறார். ஊர் ஊராகப் போய்ச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் ஓர் ஒலித்தகவல் போதும். கடும் வேலை நெருக்கடிகளுக்கு நடுவே பெரிய மனசு பண்ணி பேட்டிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்ததையும் நிருபராகப்பட்டவர் திட்டமிட்டு வெறுப்பேற்றும் கேள்விகளால் சீண்டியதையும் எடுத்துச் சொல்லி, நானோ கள்வன்? நானே நல்லவன் என்கிறார்.
பேரியக்க காங்கிரசின் புதுப் புதல்வி குஷ்புவின் பக்கத்துக்குப் போய்ப் பாருங்கள். அழகழகாக எத்தனை எத்தனை செல்ஃபிகள்! குஷ்புவின் முகம்தான் அவரது செய்தி. அவரைக் கிண்டல் செய்து பரப்பப்படும் நகைப் பழிகைகளையும் (Memesக்கு இத்தமிழ்ச் சொல்லை உருவாக்கித் தந்த கவிஞர் மகுடேசுவரனுக்கு நன்றி.) அவரது பக்கத்திலிருந்தே பெற முடிவதன்மூலம் அம்மணியின் ஜனநாயக சிந்தனை எத்தனை உயர்வானது என்பதை உணர முடியும்.
கலைஞர் இல்லாத சமூக வலைத்தளமா? ஒரு சீட்டுக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட விவரங்களை சலிக்காமல் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். போகிற போக்கில் கலைஞர் ஒப்பந்தம் செய்யும் ஒரு சீட்டுக் கட்சிகளின் எண்ணிக்கை 234ஐயே தாண்டிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் முக்கியமான சங்கதி என்னவெனில், கலைஞரின் அப்டேட்டுகள் மூலம்தான் தமிழ்நாட்டில் இப்படியாப்பட்ட கட்சிகளும் இருக்கின்றன என்கிற விவரமே தெரியவருகிறது.
ஸ்டாலின் ஒரு பக்கம், அன்புமணி ஒரு பக்கம் யுத்த முஸ்தீபுகளுடன் பிரசார ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருக்கும்போது, ஜிகே வாசன் அப்புராணியாகப் பரம்பிக்குளம் அணையைப் பாதுகாக்கும் உரிமையைத் தமிழகத்திடமிருந்து பறிக்க நினைக்கும் கேரள அரசைக் கண்டித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த அஞ்சு வருஷத்துக்குத் தென்னந்தோப்பில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று எண்ணியிருப்பார் போலிருக்கிறது.
சந்தேகமில்லாமல் இந்தத் தேர்தலின் போக்கையும் முடிவுகளையும் சமூக வலைத்தளங்கள் தீர்மானிக்கப் போகின்றன. தலைவர்களின் நேரடிப் பிரசாரம் ஒரு புறமிருக்க, தொண்டர்கள் மற்றும் விசுவாசிகள், அவிசுவாசிகளின் பரப்புரைகள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமென்று தோன்றுகிறது. திமுக அனுதாபிகள் ஓயாமல் மநகூ-விஜயகாந்த் அணியினரைத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் தமிழர் விசுவாசிகள் பாமகவின் தேர்தல் அறிக்கையே சீமானிடமிருந்து சுட்டது என்று பீதியைக் கிளப்புகிறார்கள். அன்புமணி நாலாப்பு படிக்கும்போதே நான் முதல்வரானால் கட்டுரை எழுதிவிட்டாரல்லவா! ஒரே குழப்ப இம்சை.
இந்த ஆட்டத்தில் சேராத ஒரே கட்சி அதிமுக. சமூகமாவது? வலைத்தளமாவது? மே 16க்குள்ளாவது அவர்கள் நேர்காணல் யக்ஞத்தை முதலில் முடித்தாக வேண்டும்.
0
(நன்றி: தினமலர் 31/03/16)