பொன்னான வாக்கு – 20

முன்னொரு காலத்தில் ஓட்டு என்பது மூன்று வகைப்படும். நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு. இன்றைக்கு இது நான்கு வகையாக மாறியிருக்கிறது. நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, இல்லாத ஓட்டு, போட விரும்பாத ஓட்டு.

வாக்குச் சீட்டில் சின்னம் பார்த்து முத்திரையிட்டுக்கொண்டிருந்த காலத்தில் செல்லாத ஓட்டுப் பிரச்னை நிறைய இருந்தது. இரக்க சுபாவம் மிக்க அப்பாவி மகாஜனங்கள் ஒன்றுக்கு இரண்டு மூன்று இடங்களில் கும்மாங்குத்து குத்திவிடுவார்கள். அது கடைசியில் யாருக்கும் இல்லாது போய்விடும்.

மின்னணு இயந்திரம் புழக்கத்துக்கு வந்துவிட்ட பிறகு அந்தப் பிரச்னை இல்லை. ஒரு சின்னத்துக்கு எதிரே ஒரு பட்டன். ஒரே அமுக்கு. தீர்ந்தது விஷயம். ஓட்டு செல்லாது போக வாய்ப்பே இல்லை. ஆனால் அது இல்லாது போகும்போது கள்ள ஓட்டாக மாறிவிடுகிறது.

இல்லாது போவதென்பது வாக்காளர் பட்டியல் குளறுபடிகளால் நேர்வது. இது பழைய செல்லாத ஓட்டுகளைக் காட்டிலும் இம்முறை அதிகம் இருக்கும் போல் தெரிகிறது. எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்.

இருந்தும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அதையும் பதிவு செய்வதே போட விரும்பாத ஓட்டு – நோட்டா. இது பெரும்பாலும் அறிவுஜீவி இனத்தாருக்கானது. சாதாரண மக்கள், அடி மனத்தில் அரைக்கால் வீசமாவது பொறுப்புணர்வு உள்ளவர்கள் யாரும் இதைச் செய்ய விரும்பமாட்டார்கள்.

இந்தப் பீடிகை என்னத்துக்கு என்பீர்களானால் விஷயமிருக்கிறது.

கடைக்குப் போய் கால்கிலோ கத்திரிக்காய் வாங்கி வரச் சொல்லி உங்கள் இல்லத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர் உங்களை அனுப்பி வைக்கிறார் என்று வையுங்கள். உடனே உங்களுக்கு ஒரு பதற்றம் பற்றிக்கொள்ளுமா, இல்லையா? எனக்கெல்லாம் ஜுரமே வந்துவிடும்.

ஐயே இதென்ன பழைய கத்திரிக்கா? புதுசா ஃப்ரெஷ்ஷா பாத்து வாங்கத் தெரியாதா? என்று வீட்டுக்கு வந்ததும் முதல் அம்பு வந்து விழும். எல்லாம் புதுசுதான்; இப்பத்தான் லாரில வந்து இறங்கிச்சி என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தால் அடுத்த அம்பு சொய்யாவென்று உடனே வரும்.

ஒரு காரியம் ஒழுங்கா பண்ணத் துப்பில்லை. பத்து காய்ல ஆறு காய் சொத்தை.

அதெல்லாம் ஒண்ணும் சொத்தை இல்லை. காய் வாகே அப்படித்தான். நானே கடைக்காரண்ட்ட கேட்டேன் என்று அந்த அம்பையும் சமாளித்தால், மூச்சு விடுவதற்குள் மூன்றாவது.

அவந்தான் கால் கிலோ இருவது ரூபான்னு சொன்னான்னா மண்டைய மண்டைய ஆட்டிட்டு அப்படியே வாங்கிட்டு வந்துடுவிங்களா? நேத்து சாயங்காலம் கூட நான் விலை கேட்டேன். பன்னெண்டு ரூபாதான். எனக்குன்னு வந்து வாய்ச்சிங்களே. ஒரு காரியத்துக்குத் துப்பில்ல.

ஆக, ஒரு கத்தரிக்காய் வாங்குவதென்றால் அது புதிதா என்று பார்க்க வேண்டும். சுருக்கங்கள் இல்லாமல் இருக்கிறதா, சொத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான விலைதானா என்று தெரிந்திருக்க வேண்டும். மேற்படி அனைத்து சங்கதிகளிலும் கோட்டை விட்ட கோயிஞ்சாமி என்றால், வீட்டில் உதைபடாமல் தப்பிக்கும் கலையையாவது அறிந்திருக்க வேண்டும்.

கேவலம் கால் கிலோ கத்திரிக்காய்க்கு இத்தனை மெனக்கெடும்போது, ஐந்து வருடங்களுக்கு நம்மை ஆள ஒருத்தருக்கு அதிகாரம் கொடுக்கிற விஷயத்தில் எத்தனை கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்!

ஒரு கட்சி நமக்குப் பிடிக்கலாம். அல்லது ஒரு வேட்பாளர் நல்லவராக, உத்தமோத்தமராக இருக்கலாம். விதியின் சதியாக அவர் நாம் விரும்பாத ஒரு கட்சியின் சார்பில் நிற்பவராக இருந்துவிட்டால்?

அட கட்சி சார்பே இல்லையப்பா. ஏதோ ஆர்வக் கோளாறு சுயேச்சை. ஆனால் மனுஷன் படித்திருக்கிறான். ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். நம்மோடு சேர்த்து அவனுக்கு நாலே முக்கால் ஓட்டுதான் விழும். போட்டால் வேஸ்ட். ஆனால் போடலாம் என்று தோன்றுகிறதே? என்ன செய்யலாம்?

இந்த இடத்தில்தான் கத்திரிக்காயை நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அப்பழுக்கே சொல்ல முடியாத அற்புத குண்டு கத்திரிக்காய்களாகப் பார்த்துப் பொறுக்கி, மலிவு விலையில் வாங்கிச் சென்று வீட்டில் கொடுத்துப் பாருங்கள்! இதற்கும் ஓர் அம்பு நிச்சயம் உண்டு.

‘கொஞ்சமாச்சும் ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் இருக்கா உங்களுக்கு? நேத்துதானே கத்திரிக்கா பொறியல் நம்ம வீட்ல? இன்னிக்கும் அதையே வாங்கிட்டு வந்து நிக்கறிங்களே, கடைல வேற எதுவுமே உங்க கண்ணுல படலியா?’

ஆட்சிக்கு யார் வந்தாலும் அப்படித்தான். கல்யாண குணங்கள் மாறப்போவதில்லை. ஆனால் கத்தரிக்காய் வாங்கப் போகிற பிரகஸ்பதி, அது சொத்தையாக இல்லாதிருக்கிறதா என்று மட்டும் பார்க்கலாமல்லவா?

என்ன கட்சியோ, என்ன ஜாதியோ இருந்துவிட்டுப் போகட்டும். வேட்பாளர் சரியானவரா? குற்றப்பின்னணி இல்லாதவரா? கொஞ்சமாவது படித்திருக்கிறாரா? ஊருக்கு உபகாரியா?இவ்வளவு பார்த்தால் போதும்.

மாநிலம் பயனுறுவதைப் பற்றி மற்றவர்கள் யோசிக்கட்டும். நமது பேட்டை உருப்பட என்ன வழி என்று முதலில் பார்ப்போம்.

0

(நன்றி: தினமலர் 01/04/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி