பொன்னான வாக்கு – 21

இது அதிமுக தொகுதி; இது திமுக தொகுதி; இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி, இங்கே விடுதலைச் சிறுத்தைகள் ஜெயிக்கும்; என்று ஒவ்வொரு கட்சியும் அடித்துப் பேச இருநூற்று முப்பத்தி நாலில் ஒண்ணே ஒண்ணாவது கைவசம் இருக்கும். அட தமிழ்நாட்டில் காங்கிரஸ்கூட அந்த மாதிரி ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஒரு ஶ்ரீபெரும்புதூரை வைத்திருக்கிறது. சட்டமன்றமா, நாடாளுமன்றமா என்பதை விடுங்கள். சென்னைக்கு மிக அருகே காளஹஸ்திக்குப் பக்கத்தில் கோவண சைஸில் ஒரு நிலம் இருந்தால்தான் மக்களுக்கே மரியாதை என்றாகிவிட்ட சூழ்நிலையில் கட்சிகளுக்கு ஒரு தொகுதியாவது வேண்டாமா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு அப்படி ஏதாவது இருக்கிறதா? சும்மா ஒருதரம், ரெண்டு தரம் ஜெயித்ததையெல்லாம் வைத்துக்கொண்டு பேசப்படாது. ஒரு முப்பது முப்பத்தைந்து வருட காலமாக அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் இயக்கத்தின் கொண்டைக்கு ஒரு சிறகாவது உத்தரவாதமாகியிருக்க வேண்டாமா?

நேற்றும் முந்தாநாளும் இங்கே நான் லீவில் போயிருந்த நேரத்தில் ஹரன் பிரசன்னா ‘ஒண்ணு’ என்று போட்டு ஒரு திகில் கட்டுரைத் தொடரையே ஆரம்பித்திருக்கிறார். பத்தாத குறைக்கு மோடியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அரவிந்தன் நீலகண்டன் ஒரு பக்கம் ஸபஸ பிடித்திருக்கிறார். ஆள் ஏமாந்தால் இந்த மோடிதாஸ் மஸ்தான்கள் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை இந்துத்துவ ரசகுல்லா கவுண்ட்டர்கள் திறக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு கரப் போராட்டமே (அறப் போராட்டமல்ல) ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால் யார் சொன்னால் என்ன? தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலை அல்ல; கால் சுண்டு விரலையாவது ஊன்றிக்கொள்வதற்குத் தேவையான உள் கட்டுமானத்தையோ உள்குத்து வெட்டுமானத்தையோ இன்னும் செய்துகொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தப் பதார்த்தம்.

நான் கேட்கிறேன், ஒரு வெற்றிகொண்டானைப் போலவோ, வண்ணை ஸ்டெல்லாவைப் போலவோ, மல்லை சத்யாவைப் போலவோ பாரதிய ஜனதாவில் ஒரு நாவன்மை நாயகருண்டா? ஏய் தட்சிணாமூர்த்தியே என்று கூப்பிட்டு அறம்பாட அங்கே யாருக்காவது வக்கிருக்கிறதா? மக்கள் ஏற்கிறார்களா, காறித் துப்புகிறார்களா என்பது முக்கியமல்ல. சாலையோரம் பத்தடி உயரத்தில் ப வைக் கவிழ்த்துப் போட்டாற்போலக் கம்பு நட்டு அதில் டான்ஸ் ஆடியபடியே நடந்து காட்டும் திராணியல்லவா கும்பல் சேர்க்கும்? ஏசி ஹால் பரதக் கச்சேரிகளுக்கு என்ன பெரிய கூட்டம் வரும்?

செய்தியில் இருப்பது என்பது ஒரு கலை. மக்கள் மனம் என்னும் சொந்த வீட்டுக்குப் போவதற்கு முன்னால் செய்தி மடத்தில் டேரா போட்டேதான் தீரவேண்டும். திருச்சிக்குப் போகிற வழியில் மாமண்டூரில் இறங்கி டீ சாப்பிட்டுவிட்டு எதிர் சைட் பஸ் பிடித்து சென்னைக்கே திரும்பும் சரத்குமாரால் முடிவதுகூட பாஜகவில் உள்ளவர்களால் இங்கே முடிவதில்லை.

பத்தாத குறைக்கு அந்த ஜீ கலாசாரம். அஜித் நடித்தே ஓடாத பட டைட்டிலைத் தமது அடையாளமாக வைத்துக்கொண்டு இந்தக் கட்சி இங்கே என்ன சாதிக்கப் போகிறது? மோடிஜி, தமிழிசை சௌந்தர்ராஜன்ஜியெல்லாம் தமிழன் மனத்தில் தனியொரு இடம் பிடிக்கவேண்டுமென்றால் முதலில் அவர்கள் அந்த ஜியை விட்டொழிக்க வேண்டும். முடியாதென்றால் ஆனியன் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜிக்காவது மாறவேண்டும்.

இரண்டு நாள் முன்பு இந்தப் பக்கத்திலேயே எழுதியிருந்தேன். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்துவிட்டேன் என்று வானதி சீனிவாசன் போட்ட ஸ்டேடஸ் பற்றி. நினைவிருக்கிறதல்லவா? அப்படியா ஒரு பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள்? கலைஞரைப் பாருங்கள். அவர் ரெடியா என்று அப்புறம் கேட்டுக்கொள்ளலாம். முதலில் அவரது வண்டி ரெடி. ஆஜானுபாகுவான தேர்தல் பிரசார வாகனம். உள்ளே உள்ள அசகாய வசதிகள். தள்ளாத வயதில் தளராமல் பிரசாரம் செய்ய ஏதுவாக அதில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். வண்டி சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஒரு வெள்ளோட்டம். ஸ்டாலினுக்குத் தனி வண்டி. அதில் அமர்ந்து அவர் கொடுக்கும் அழகு போஸ்கள்.

நாளொரு போட்டோ போட்டு என்ன பிரமாதமான பில்டப் செய்கிறார்கள்? இந்தத் திராவிடக் கலையைப் பயிலாமல் பாரதிய ஜனதா எப்படி இங்கே குப்பை கொட்ட முடியும்?

அனைத்திலும் முக்கியமானதொன்று உண்டு. இங்கே ஜெயலலிதாதான் எல்லாம் என்றாலும் புரட்சித் தலைவர் நாமமும் சேர்ந்தேதான் வாழும். களப்பணியாரப் புலியாக ஸ்டாலின் இருந்தாலும் கலைஞர் சீட்டுக்கு மாற்றுக் கிடையாது. அட, ஆத்தா சத்தியமாக அன்புமணிதான் முதல்வர் என்று சொல்லும் பாமககூட மருத்துவர் இராமதாசுவைக் கழட்டிவிட்டா வேலை பார்க்கிறது?

ஆனால் பாஜகவில் அடல் பிஹாரி வாஜ்பாயி, லால் கிஷன் அத்வானியெல்லாம் எங்கே ஒழிந்துபோனார்கள்? கஷ்டப்பட்டு அந்த வடக்கத்திப் பெயர்களையெல்லாம் தமிழன் நினைவில் ஏற்றிக்கொண்ட நேரத்தில் எக்ஸ்பயரி ஆன மருந்துக் குப்பிகளைத் தூக்கிக் கடாசுவதுபோல விசிறிவிட்டு, ஜவ்டேகர், பக்கோடா காதர் என்று புதிய பல்லுடைப்புப் பெயர்களைக் கொண்டுவந்து கொட்டினால் என்ன அர்த்தம்?

தமிழக பாஜக என்பது ஹிந்துஸ்தான் லீவருக்கு இங்கே ஒரு பிராஞ்ச் என்பதுபோல் இருக்கும்வரை ரொம்பக்க்க்க்க்க்க்க்க்க்க் கஷ்டம்.

(நன்றி: தினமலர் 04/04/16)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!