ஒரு வழியாகப் பழம் நழுவிவிட்டது. பால் என்ன பெரிய பால்? பால் வண்டியிலேயே விழுந்திருக்கிறது. என்ன ஒரு பரபரப்பு! எப்பேர்ப்பட்ட உற்சாகம்! எத்தனை ஏகாந்தச் சிரிப்புகள், எகத்தாள இளிப்புகள்! இப்படியெல்லாம் கிளுகிளுப்பூட்டக்கூடிய காட்சிகள் இல்லாமல் அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு ஒரு தேர்தல்? வாழ்க கேப்டன்.
பொதுவாக இந்த ரக ஆச்சி மசாலா கூட்டணிகளின் கல்யாண குணங்கள் தேர்தல் தேதிக்குக் கொஞ்சம் முன்னால்தான் வெளிப்பட ஆரம்பிக்கும். யார் வேலை செய்கிறார்கள்? யார் பஜனை பண்ணுகிறார்கள்? கூட்டணியின் இதர கட்சித் தொண்டர்களுக்கு என்னென்ன ரகசிய உத்தரவுகள் போயிருக்கின்றன? வேலை செய்; ஆனால் ஓலையை மாற்றிப் போடு என்று சொல்லப்பட்டிருக்கிறதா?
சகட்டு மேனிக்கு சந்தேகாஸ்பதங்கள். இந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி ஆட்சி அமைக்குமளவுக்கு போனால் அப்போது வேறு ரகக் குடுமிப்பிடிகள். சரித்திரம் பார்க்காத கூட்டணிகளா?
ஆனால் எந்தக் கூட்டணியும் இப்படி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆதித்யா, சிரிப்பொலி சானல்களைப் புறமுதுகிடச் செய்யுமளவுக்கு இறங்கி அடித்ததில்லை.
மக்கள் நலக் கூட்டணி அமைந்தபோது அதை ஒரு மாற்று அரசியல் சக்தியாக முன்வைத்தார்கள். யார் முன்வைத்தார்கள்? மநகூ முதலாளிகள் முன்வைத்தார்கள். கொள்கைக் குன்றுகளின் கூட்டமைப்பு. விடுதலைப் புலிகள், ஈழம் தொடர்பாக எதையும் காமன் மினிமம் ப்ரோக்ராமில் சேர்க்காத வரைக்கும் கம்யூனிஸ்டுகள் மதிமுகவுடன் முஸ்தபா முஸ்தபா பாடுவதில் பிரச்னை இல்லை. சாதித் திமிர் படுகொலைகளைத் திருமா எத்தனை தீவிரமாகக் கண்டித்தாலும் ஒரு சில தொகுதிகளிலாவது சாதி ஓட்டுகளுக்கு நாக்கைச் சப்புக்கொட்டும் மதிமுக கண்டுகொள்ளாது. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சீட்டு வாங்குவது ஒன்றுதான் கொள்கை. அது எந்தக் கூட்டணி என்பது குறித்து அவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். நாளது தேதி வரைக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்ததில்லை. நாளைக்கு அதுவும் நடந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இத்தனை உட்கசமுசாக்கள் இருந்தாலும் திமுக – அதிமுகவுக்கு மாற்று என்று தம்மை முன்னிறுத்துவதில் இந்தக் கூட்டணிக்காரர்களுக்குப் பெரிய பிரச்னை இருக்கவில்லை. வைகோ பெரிய பார்லிமெண்டேரியன். கம்யூனிஸ்டுகள் படித்தவர்கள். பக்குவப்பட்டவர்கள். தவிரவும் சொந்த லாபம் கருதாதவர்கள். திருமாவோ எனில், தலித்துகளின் கனவு நாயகன். ஆனால், இந்தப் படிப்பு, அனுபவம், அறிவுத் திறனெல்லாம் போற்றிப் பாடடி பெண்ணே, கேப்டன் காலடி மண்ணே என்று கும்மி அடிக்கத்தான் உதவி செய்யும் என்றால் அது எப்பேர்ப்பட்ட மாற்று அரசியல்!
கேப்டன் வருகிறார் என்றதும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரையே விசிறிக் கடாசிவிட்டு கேப்டன் விஜயகாந்த் அணி என்று ஆத்ம சுத்தியோடு அறிவித்தார் வைகோ. நடப்பது நடிகர் சங்கத் தேர்தல்தான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. என் கவலையெல்லாம் ஒன்றுதான். முன்னர் ஜெயலலிதாவை ஜோன் ஆஃப் ஆர்க்காக வருணித்தவர், மறந்துபோய் கேப்டனை மாவீரன் நெப்போலியனென்று வருணித்துவிடாதிருக்க வேண்டும்.
நல்லது. இனி அது கேப்டன் அணி. எனக்கு நூத்தி இருவத்தி நாலு. உனக்கு நூத்திப் பத்து. உன் நூத்திப் பத்துக்குள் நீ பங்கு போட்டுக்கொள், என் நூத்தி இருவத்தி நாலை நான் பார்த்துக்கொள்கிறேன். ஜெயித்தால் நான் முதல்வர் என்பதில் மட்டும் ஒத்துப் போய்விடுவோம்; ஒரு பிழையுமில்லை.
தமிழக அறிவுஜீவிகளின் தணியாத தாகத்தைத் தணிக்கும் விதத்தில் ஒருவேளை இக்கூட்டணி ஜெயித்துத் தொலைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவே படு பயங்கரமாக இருக்கிறது. மெஷின் கன் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கச்சத்தீவுக்குப் போவாரா? அங்கிருந்து வைகோ அவரை அப்படியே கள்ள போட்டில் ஏற்றி ஈழத்துக்குத் தூக்கிச் செல்வாரா? இங்கே முத்தரசனும் மற்றவர்களும் கேப்டனின் அதிரடிகளைத் தொட்டுக்கொண்டு விழுங்கித் தொலைக்க சித்தாந்தத் துவையல் அரைத்துக்கொண்டிருப்பார்களா? ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.
இந்தக் கூட்டணி, தமிழ்நாட்டு மக்களுக்கு மிக நேரடியாகச் சில பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. பதவி ஆசை, அதிகார வெறி இவையெல்லாம் எப்பேர்ப்பட்ட பழுத்த அரசியல்வாதியையும் இடக்கையால் உண்ணச் செய்யும் என்பது அதில் தலையாயது. தலைவர்களை விடுங்கள். காலகாலமாகக் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களையும் அனுதாபிகளையும் எண்ணிப் பார்க்கலாம். ஒரு மானமுள்ள கம்யூனிஸ்ட் எப்படி வீதி வீதியாகப் போய் விஜயகாந்துக்கு ஓட்டுக் கேட்பான் என்று ஃபேஸ்புக்கில் நேற்று ஓர் இடதுசாரி கதறியிருந்தார்.
ராஜதந்திரம் என்றும் சாதுர்யம் என்றும் இத்தகைய நகர்வுகளைச் சம்மந்தப்பட்ட தலைவர்கள் வருணித்தாலும், இது ஓர் அப்பட்டமான கேவல அரசியல் என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி: தினமலர் – 25/03/16)