அமெரிக்க உளவாளி

தொழில் முறையில் எடிட்டராக இருப்பதால், புத்தகங்கள் விஷயத்தில் நான் இழக்கும் விஷயங்கள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது, தனை மறந்து ரசிப்பது.

ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த புத்தகங்களை பத்து முறை, இருபது முறையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் அதிகபட்சம் அரை மணி நேரம். எமகாதக சைஸ் புத்தகம் என்றால் அரைநாள். முடிந்தது. வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக அனுபவிப்பது எல்லாம் முடிவதே இல்லை. ஒரு வரி படிக்கும்போதே அடுத்த வரி மனத்துக்குள் ஓடத் தொடங்கிவிடுகிறது. ஒரு பேரா முடிந்தால் அடுத்தது இன்னமாதிரிதான் தொடங்கும் என்று உள்ளுணர்வு பல்பு எரிந்துவிடுகிறது. இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள், ஒரே ஆசிரியருடையதை வாசித்துவிட்டால் போதும். அவருடைய சொல் வங்கி என் தலைக்குள் ஏறிவிடுகிறது. இந்த இடத்தில் இவர் இன்ன வார்த்தைதான் போடப்போகிறார் என்று நாலைந்து வார்த்தைகளுக்கு முன்பே புரிந்துவிடுகிறது.

கதையல்லாத எழுத்தை எடிட் செய்வதற்காகப் படித்துக்கொண்டே இருப்பதன் விபரீதம் இது. என்னை வியப்பில் ஆழ்த்தும் எழுத்து என்று தட்சிணாயத்துக்கு ஒன்று, உத்தராயணத்துக்கு ஒன்று கூடக் கிடைக்கமாட்டேனென்கிறது. என் முன் தீர்மானங்களை உடைத்து நொறுக்கவல்ல ஒரு புத்தகத்துக்காக வருடம் முழுதும் படித்துக்கொண்டிருக்கிறேன். நமது எழுத்தாளர்கள் அத்தனை சாதாரணமானவர்களா? மகனே விட்டேனா பார் என்று எப்போதும் என்னைத்தான் ஓட ஓட விரட்டுகிறார்கள். சில சமயம் கிடைக்கிறது. பெரும்பாலும் சொதப்பல்தான்.

சென்ற வருடம் அவ்வாறு எனக்குக் கிடைத்த ஒரு அபூர்வமான புத்தகம் சீனாவைப் பற்றி பல்லவி ஐயர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. [சீனா: விலகும் திரை]

மொழிபெயர்ப்பு வாசிப்பது என்பதே ஒரு இம்சை. அதிகபட்சம் நல்ல மொழிபெயர்ப்புதான் இதில் சாத்தியம் என்பது என் தீர்மானமாக இருந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜா, ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை எனக்கு இதில் சொல்லிக்கொடுத்தார். திரும்பத் திரும்பப் படித்தேன். மூல நூலுடன் சேர்த்து வைத்தும் படித்துப் பார்த்தேன். தமிழில் அந்நூல் ஒரு ரகளை. இதில் சந்தேகமே இல்லை.

இந்த வருடம் எனக்கு அம்மாதிரி வாய்த்த ஒரு புத்தகம், அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்க உளவாளி’.

ஈழத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான முத்துலிங்கம் ஓர் உலகம் சுற்றும் வாலிபர். அநேகமாக அண்டார்டிகா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உத்தியோகம் பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விதவிதமான தேசங்கள், விதவிதமான மனிதர்கள், புதுப்புது அனுபவங்கள். போதாது? அவர் எழுத்தாளராக இருப்பதற்காகவே எம்பெருமான் வடிவமைத்துக் கொடுத்த வாழ்க்கை போலிருக்கிறது என்று எப்போதும் ரகசியமாகப் பொறாமை கொள்வேன். தனது ஒவ்வொரு அனுபவத்தையும் நினைவுகூர்ந்து அவர் எழுதும் கட்டுரைகள் ஒரு வகையில் தமிழுக்கு ஒரு முதல். இவை புனைவு – அபுனைவு இடைவெளியை அறவே அழித்துவிடக்கூடிய தன்மை கொண்டவை. தமது கட்டுரைகளின் உண்மையும் செழுமையும் ஆழமும் அடர்த்தியும் அப்படியே ஜொலிஜொலிக்க, புனைவின் வாசனையை அதற்குச் சேர்த்துவிடுவதில் முத்துலிங்கம் கைதேர்ந்தவர்.

ஓர் உதாரணம் சொல்லலாமா?

அவன் கூர்ந்து கவனித்தான். இது ஒரு சொற்றொடர். இதை நாம் எப்படிச் சொல்வோம்? முத்துலிங்கம் சொல்கிறார்: ‘ஒரு நிமிடத்தில் வெடிக்கப்போகும் வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை உள்வாங்குவதைப் போல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார்.’

அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது. அதைக் கலையாக்குவது எழுத்தாளரின் திறமை. கட்டுரை வடிவில் அதைச் சாத்தியமாக்குவது என்பது ரொம்ப சிரமமான காரியம். ஒரு கதையிலோ கவிதையிலோ வித்தை காட்டுவது பெரிய விஷயமல்ல. முலாம் பூசப்படாத உண்மைகளுக்கு மட்டுமே கட்டுரை வடிவத்தில் இடமுண்டு. அந்தச் சிறு டேபிளுக்குள் ஃபெடரர் மாதிரி டென்னிஸ் ஆடுபவர் முத்துலிங்கம்.

ஓர் அமெரிக்க உளவாளியைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது ஆசிரியருக்கு. எத்தனை பெரிய வாய்ப்பு. அபூர்வமானதும்கூட. என்னென்னவோ பேசலாம், எத்தனையோ தகவல்கள், விவரங்களைக் கேட்டுப் பெறலாம். சி.ஐ.ஏவின் ஜாதகத்தையேகூட வாங்கிவிடலாம், சற்றுத் திறமையுடன் செயல்பட்டால். முத்துலிங்கத்துக்கு அறிமுகமாகிற சி.ஐ.ஏ., உளவாளி நன்கு பேசக்கூடியவர்தான். வாய்த்த சந்தர்ப்பமும் அழகானதே. ஒரு விருந்து. கையில் கோப்பையுடன் காவியமே பாடிவிட முடியும். ஆனாலும் அன்று நடக்கிற விஷயங்கள்!

‘அந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்புத் தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம் நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.’ என்ற வரிகளில் அமெரிக்க உளவாளியை மட்டுமல்ல, அ. முத்துலிங்கத்தையும் சேர்த்துப் புரிந்துகொண்டுவிட முடியும்.

தமிழில் யாருடனும் ஒப்பிட இயலாத அபூர்வமான தனித்துவம் பொருந்திய எழுத்து அவருடையது. திருவிழாவில் வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனின் மனோபாவத்துடன் வாழ்க்கையை அணுகி, தேர்வுத்தாள் திருத்தும் ஒரு கணக்கு வாத்தியாரின் கறார்த்தனத்துடன் சொற்களில் அதனைப் படம் பிடிக்கிறார். கட்டுரையானாலும் சரி, சிறுகதையானாலும் சரி. ஒரு வரி, ஒரு சொல் அநாவசியம் என்று நினைக்க முடிவதில்லை. ஓரிடத்திலும் குரல் உயர்த்தாத மிகப்பெரிய பக்குவம் முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பிலும் காணக்கிடைக்கிறது.

அவர் பேசவே பேசாத கதைகளிலும் சரி, அவர் மட்டுமே பேசும் கட்டுரைகளிலும் சரி. விவரிக்கப்படும் வாழ்க்கை அல்லது அதன் ஓர் அத்தியாயம் அதன் முழுப்பூரணத் தன்மையை வெகு இயல்பாக எய்திவிடுகின்றது. பாசாங்கில்லை, போலித்தனங்கள் இல்லை, தத்துவ தரிசனங்களை நோக்கிய தகிடுதத்தப் பயணங்கள் இல்லை. கடுமையான அனுபவங்களைத் தந்தாலும் வாழ்க்கை நேரடியானது. சரியாக உடைத்த தேங்காய் போன்றது. எனவே எழுத்தும் அவ்வண்ணமேதான் இருந்தாக வேண்டும். முத்துலிங்கத்தின் எழுத்தில் தொடர்புச் சிக்கல் என்ற ஒன்று எந்த இடத்திலும் இல்லை.

அப்புறம் அவரது நகைச்சுவை உணர்வு. முத்துலிங்கத்தின் நகைச்சுவையை உள்ளர்த்தங்கள் தேடாமல், நகைச்சுவைக்காகவே ரசிக்க முடிகிறது என்பது எனக்கு மிக முக்கியமான விஷயமாகப் படுகிறது.

கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் வரக்கூடிய இந்தப் புத்தகத்தில் சுமார் இருபது, இருபத்தி ஐந்து வரிகளுக்குள் அடங்கும் ஒரு குட்டிக் காதல் கதை ஒன்றை முத்துலிங்கம் விவரித்திருக்கிறார். எல்லாம், நடந்த கதைதான். கதையை நான் இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால் ஒரே ஒரு அலங்காரச் சொல்கூட இல்லாமல் ஒரு முழுக் காதல் வாழ்க்கையை அத்தனைக் குறைவான வரிகளில், செய்தி வாசிப்பாளர் தொனியில் விவரித்துவிட்டு, இரண்டு நாள் தூக்கமில்லாமல் அல்லாட வைப்பதென்பது சத்தியமாக வேறு எந்த எழுத்தாளருக்கும் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு ஓர் எடிட்டராக என்னை மறந்து, வாசகனாக, ரசிகனாகப் படிக்க வைத்த புத்தகம் இது.

[கிழக்கு வெளியீடாக விரைவில் வரவுள்ள அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்க உளவாளி’ நூலுக்கு எழுதிய முன்னுரை.]

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

17 comments

  • படிக்க தூண்டுகிறீர்கள். முத்துலிங்கம் அவர்களின் “அங்கே இப்ப என்ன நேரம்?” வாசித்திருக்கிறேன். அற்புதமான புத்தகம். நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் அதைக்காட்டிலும் இது இன்னும் சிறப்பாக இருக்குமென்று தோன்றுகிரது. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். புத்தகம் எப்போது கடைக்கு வரும்?

    • வினோத்குமார்: சென்னை புத்தகக் காட்சியில் புத்தகம் வெளியாகும். அதற்கு முன்பே வெளியாகிவிட்டால், கண்டிப்பாகத் தகவல் தருகிறேன்.

  • முன்னுரையே இத்தனை அழகு என்றால் புத்தகத்தினைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது. வெளியாகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். பதிவுக்கு நன்றி.

  • நல்ல முன்னுரை பாரா! நீங்கள் அடுத்தவர்கள் புத்தகத்துக்கு முன்னுரை கூட எழுதுவீர்களா!

    • ரசிகன்: நன்றி. நான் முத்துலிங்கம் எழுத்துக்கு ரசிகன். இந்த முன்னுரை, அவர் எனக்களித்த வாய்ப்பு. அவ்வளவே. இதை ஒரு ரசிகனின் உரையாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  • I have read the writings of Muthulingam in Tamilpaper.net only. Its really Hilarious to read “Padatram” superb.

    • ராஜசேகர்: திரு முத்துலிங்கத்தின் இணையத்தளத்துக்கு நீங்கள் சென்றதில்லையா? என் கட்டுரையிலேயே லிங்க் கொடுத்திருக்கிறேனே?

  • அ.மு வின் விசிறிகளில் நானும் ஒருவன்.

    ‘அமெரிக்கக்காரி’ எனும் சிறுகதையில் அடையாள ‘அரசியலை’ இரு வரிகளில் அடுக்குவதைப் பாருங்கள்

    ‘இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்கக் கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாகப் பிறக்கும்?’

    அவரின் ‘தாழ்ப்பாள்களின்’ அவசியம் சிறுகதையில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. வாய்விட்டு சிரிக்கலாம்.

    வடக்கு வீதி தொகுப்பிற்கு திரு. அசோகமித்திரன் எழுதிய ஒரு சுருக்கமான முன்னுரை கீழே –

    சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ‘வம்சவிருத்தி’ நூலை முன்னிட்டுச் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு இலங்கைத் தமிழரின் ஒரு மிக முக்கிய படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை இருந்தார். கோவி மணிசேகரனும் இருந்தார். கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் இருந்தார். லேனா தமிழ்வாணனும் இருந்தார். பல ருசிகளையுடைய படைப்பாளிகள் அங்கு முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டக் குழுமியிருந்தனர். அன்று நான் அவர் படைப்புகள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் ‘வம்சவிருத்தி’ நூலிலுள்ள பதினொரு கதைகளையும் இந்தத் தொகுப்பில் அடங்கப்போகும் இன்னொரு பனிரெண்டு கதைகளையும் படித்த பிறகு முத்துலிங்கம் அவர்கள் ஏராளமான படைப்பாளிகளையும் வாசகர்களையும் கவர்ந்திருப்பதில் காரணம் தெரிந்தது. அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேற ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகியிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப்போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன.

    முத்துலிங்கத்துடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடமளிக்கிறது. இன்று சுற்றுக் சூழ்நிலைபற்றி யார் அக்களை காட்டுவது, சில தருணங்களில், நகைப்புக்கிடமாகக்கூட உள்ளது. முத்துலிங்கத்தின் கவனத்தில் மரம் செடிகளும் மிருகங்களும் அவற்றுக்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மரம் வீழ்த்தப்படும்போதோ ஒரு வீட்டுப் பிராணி கொல்லப்படும்போதோ முத்துலிங்கத்துக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்-தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து அந்த நிகழ்ச்சிகளின் தவிர்க்க வியலாமையையும் குறிப்பிட்டு விடுகிறார்.

    இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், முத்துலிங்கத்தின் நகைச்சுவையுணர்வு. எல்லா மனிதர்களையும் மிகுந்த பரிவோடு பார்க்கும் ஆசிரியர் அவர்களுடைய நடவடிக்கைகளில் உள்ள சில உம்சங்களையும் கவனித்துப் பதிவு செய்கிறார். ஒரு தகவல், நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது.

    புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன’. ஒரு நல்ல புனைகதாசிரியர் மனித நேயமும் ஜனநாயக உணர்வும் பெற்றிருப்பது அவருடைய வெளிப்பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது. முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்.

    சென்னை,
    17, டிசம்பர் ’97 அசோகமித்திரன்

  • நான் வாசிக்கும், நேசிக்கும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் அ.மு அவர்கள். அன்னாரின் நூலைப் பற்றிய உங்களது விமர்சனம் மிகவும் அருமை..

  • ஜெயமோகனுக்கு நன்றி சொல்ல வேண்டும் . அவர் எழுதியதன் மூலம் முத்துலிங்கம் அவர்களை வாசிக்கத்தொடங்கினேன். என்னவொரு நெருக்கம் கிடைக்கிறது இவருடன் ! அபாரம்! இவருக்கெல்லாம் இயற்கை இன்னுமொரு நூற்றாண்டிரும் எனவேண்டும். எழுத்தின் பல பயன்களுள் முக்கியமான ஒன்றாக நான் நினைப்பது வாசகனைக் கவலை மறந்து மகிழ்விப்பது. அதைச் சரியாகவே செய்கின்றன இவரது எழுத்துக்கள்! திரு . ராகவனின் அருமையான முன்னுரை பொது வாசகனின் பிரதிபலிப்பு . குமுதம்.காமில் ரபிபெர்னார்டுடன் இருந்தபோது நான் பார்த்த ராகவன் சாரா இது! மை பூசா பேராண்மைக்குத் தலைவணக்கம்!

    வெங்கடப்பிரகாஷ்
    ஜீ தமிழ்

  • அ. முத்துலிங்கம் அய்யா எனக்கு புத்தகங்களுக்டாக அறிமுமாகி ஆண்டுகள் அதிகமில்லை. அவரின் ”அங்கே இப்ப என்ன நேரம்” என்பது தான் நான் முதலில் வாசித்த புத்தகம். வாசிக்கத் தொடங்கியதும் என்னைச் சுறிறியிருந்து முழு உலகமும் மறைந்து புதியதோரு உலக்தினுள் புகுந்திருந்தேன். அவரின் ஒவ்வொரு வசனங்களும் சுரீர் என தாக்கவும், குபீர் என சிரிக்கவும் வைக்கும். அவரின் தமிழ் மிக அலாதியானது. இலகு தமிழில், நகைச்சுவை உள்ளடக்கி, யதார்த்தம் உணர்த்தி, சமுதாயச் சீர்கேடுகளை சாடும் ஈழத்து எழுத்தளன் அவர். அவரின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்னும் புத்தகத்தைவாசித்துக் கொண்டிருக்கிறேன் இந் நாட்களில். மிக அருமையான புத்தகம்

    ”அங்கே இப்ப என்ன நேரம்” புத்தகத்தில் இருந்து ஒரு சில பகுதிகள்.
    தை: கனடாவில் வீடு:

    குளிர் காலத்தில் ஒரு நாள், வெளியில் மைனஸ் 20…. திரு முத்துலிங்கத்தின் வீட்டில் எரிவாயு, மின்சாரம் இல்லாமல் போகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது என அவர் எழுதுகிறார்.

    வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்கமுடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள் சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டி விட்டார்களோ, அல்லது மெசினில் ஏதும் குறைபாடோ குளிர் ஏறிக்கொண்டே போனது. உடனே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் நீங்கள் பேசுவது புரியவில்லை எனக் கத்தினார்கள்.

    அதற்குக் காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன. ஆவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வசனங்களாக வெளியே வந்தன.

    நாங்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறோம் என சத்தம் வைத்தேன்.
    பலமணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியில் இருந்து பூமி அதிர மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் பூமியின் மத்திய ரேகை மாதிரி சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயதங்களை அவர் தரித்திருந்தார். அவர் நடக்கும் போது அவை மணிகள் போல அசைந்து சப்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்கக் சரிந்து விட்டார். நாலு மணிநேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்குப் பிறகு தான் எங்கள் ரத்தம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

    அவர் தந்த பில்லை பார்த்த மறு கணமே நான் மலைத்துவிட்டேன். இரத்தம் கொதித்தது. அதை முதலே செய்திருக்கலாம். திருத்த வேலைகளை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். ………………………………………………………………………………………………………
    கதை: கனடாவில் சுப்பர் மார்க்கட்:
    எமது படைப்பாளி கனடாவில் ஒரு கடையில் காசு கொடுக்கும் வரிசையில் நிற்கிறார் அப்போது. அவரின் முறை வருகிறது.. அவர் எழுதுவதைப் பாருங்கள்

    நான் பொருட்களைத் தூக்கி ஓடும் பெல்ட்டில் வைத்தேன். பக்கட்டுக்கள் பட்டாள (ராணுவ) வீரர்களைப் போல நின்ற நிலையிலே போயின, போத்தல்கள் உருண்டன, டின் உணவு வகைகள் துள்ளிக் கொண்டு நகர்ந்தன, அவளுடைய திறமையான விரல்கள் மெசினில் வேகமாக விளையாடத் தொடங்கின. லாவகமாக சாமான்களைத் தூக்கி மந்திரக் கோடுகளைக் காட்டியதும், மின் கண்கள் அவற்றை நொடியிலே கிரகித்து விலைகளைப் பதிவு செய்தன. ஒவ்வொரு பொருளும் டிங் என்ற தாள கதியுடன் ஒலி எழுப்பி மறுபக்கம் போய்ச்சேர்ந்தது. அந்த அசைவுகள் பெயர் போன ரஸ்ய நடனம் போல ஓர் ஒயிலுடன் நடந்தேறின.

    நட்புடன்
    சஞ்சயன்
    visaran.blogspot.com

  • எனது ஆதர்ஸ எழுத்தாளர் முத்துலிங்கத்தினுடைய எழுத்துக்கள் எப்பொழுதும் கிளைமோர் குண்டு மாதிரி பரவி பாய்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வல்லமை இருக்கும்

  • // ஒரே ஆசிரியருடையதை வாசித்துவிட்டால் போதும். அவருடைய சொல் வங்கி என் தலைக்குள் ஏறிவிடுகிறது. இந்த இடத்தில் இவர் இன்ன வார்த்தைதான் போடப்போகிறார் என்று நாலைந்து வார்த்தைகளுக்கு முன்பே புரிந்துவிடுகிறது

    //

    உங்கள் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கும் “ஐயன்மீர்” “எம்பெருமான்” இவர்களெல்லாம் வந்துவிடுவார்கள் 🙂

    • அப்துல்லா: எம்பெருமான் நம்மாளுதான். ஆனால் ஐயன்மீர் என் சொல்லல்ல. ரிபீட் செய்யுமளவு என் காதுக்கு சௌகரியமான சொல்லாக இது இல்லை.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading