மறுபடியும் விளையாட்டு

Alagila Vilaiyattu
அலகிலா விளையாட்டு, இலக்கியப்பீடம் இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் [2004] பரிசு வென்ற நாவல். அந்தப் பரிசை நிறுவியவர் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அமரர் ஆர். சூடாமணி என்பதும், அப்போட்டிக்கு நான் எழுதியே ஆகவேண்டும் என்று என் நண்பர் நாகராஜகுமார் மிகவும் வற்புறுத்தியதுமே இதனை இவ்வடிவில் நான் எழுதக் காரணம்.

பரிசுக்குப் பிறகு இது இலக்கியப்பீடம் மாத இதழில் தொடராக வெளியாகி, இலக்கியப்பீடம் வெளியீடாக நூலாகவும் வந்தது, பெரும்பாலான வாசகர்களுக்கு அநேகமாகத் தெரிந்திருக்க முடியாது. பணி நிமித்தமாக எந்த ஊருக்குச் செல்ல நேர்ந்தாலும், அங்குள்ள புத்தகக் கடையில் என் நாவல் இருக்குமா என்று ஆர்வமுடன் தேடிப்பார்ப்பேன். பெரும்பாலும் இருந்ததில்லை.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இலக்கியப்பீடம் ஆசிரியர் விக்கிரமனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நாவலின் மறுபதிப்பைக் கிழக்கு மூலம் கொண்டுவரலாம் என்று இருப்பதாக அதில் தெரிவித்திருந்தேன். அவரது பதில் கடிதம் எனக்குத் தாங்கவொண்ணா துக்கத்தை அளித்தது. நூலக ஆணை இன்னும் வரவில்லை; அச்சிட்ட பிரதிகள் அப்படி அப்படியே இருக்கின்றன; இந்நிலையில் கிழக்கு மறுபதிப்பு கொண்டுவந்தால், இலக்கியப்பீடம் வெளியிட்ட பதிப்பை எதிர்காலத்தில் விற்க வாய்ப்பே இல்லாது போய்விடும் என்று சொல்லியிருந்தார்.

இதனிடையே நாவலுக்குச் சில பத்திரிகை மதிப்புரைகள் நல்லவிதமாக வந்திருந்தன. தப்பித்தவறி அதனை வாசிக்க நேர்ந்த ஒரு சிலர், வஞ்சனையில்லாமல் நல்வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். பிறகு இதன் மின் நூல் வடிவத்தினை என் நண்பர் கணேஷ் சந்திரா தமது தமிழோவியம் இணையத்தளத்தின்மூலம் கொண்டுவந்தார். இணையத்திலும் ஒன்றிரண்டு விமரிசனங்கள் வெளிவந்தன. பதிப்பாளர் மனம் மகிழத்தக்க விதமாகவே அம்மதிப்புரைகளும் இருந்தன என்றபோதிலும் விற்பனை பிரமாதமாக இல்லை. சுமார் ஒன்று முதல் பத்து பிரதிகளுக்குள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நல்ல நாவல், சிறந்த நாவல், பரிசு பெற்ற நாவல், புதுவிதமான நாவல் – இவையெல்லாம் தமிழில் புனைகதை விற்பனைக்கான எந்த ஒரு சிறு சாத்தியத்தையும் உருவாக்கத்தக்க அடைமொழிகளல்ல. படைப்புக்கு வெளியே படைப்பாளி நிகழ்த்தும் அக்கப்போர்களும் இலக்கிய குண்டாகுஸ்திகளும் தடாலடிப் பிரகடனங்களும் சினிமா பிரபலமும் இன்ன பிறவுமே ஒரு தமிழ் நாவலின் விற்பனைக்குச் சற்றாவது உதவக்கூடிய காரணிகளாக சமகாலம் கண்டுவந்திருக்கிறது. அப்படியும் தமிழில் நாவல் எழுதிக் கோட்டை கட்டி வாழ்ந்த படைப்பாளிகள் யாருமில்லை. அதன் காரணம் பற்றியே செம்மொழி தழைக்காமலும் இருந்ததில்லை.

0

இன்று இது மீள் பிரசுரம் காண்கிறது. சந்தோஷமே. தாங்கமுடியாத மனக்கொந்தளிப்புகளும் இருப்பியல் சார்ந்த நெருக்கடிகளும் மிகுந்த ஒரு காலக்கட்டத்தில் இதனை நான் எழுதினேன். ஒருவகையில் இதனை நான் நினைத்தபடி எழுதி முடித்ததனால் கிடைத்த தன்னம்பிக்கையே என்னை அப்போதைய புற நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல் நடக்க வைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. நாவலை வாசித்துப் பார்த்த என் மதிப்புக்குரிய எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், ‘நன்றாயிருக்கிறது. ஆனால் கட்டுக்கோப்பும் திட்டமிடலும் ரொம்ப அதிகம். நாவலுக்கு இத்தனை கூடாது’ என்று சொன்னார். எழுதி ஏழு வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது சொற்கள் அப்படியே நினைவில் நிற்கின்றன. நானும் சற்றும் மாறியதாகத் தெரியவில்லை. எனக்காக நானே விதித்துக்கொள்ளும் சட்டங்கள் இல்லாமல் என்னால் ஒழுங்காக வாழ முடியாது. அவ்வண்ணமே என் எழுத்தும் என்றாகிப் போனதற்கு வேறு காரணங்கள் இருந்துவிட முடியாது.

இந்நாவலின் மையம் ஒரு தத்துவ முடிச்சாக இருந்தாலும், வாழ்க்கை சார்ந்த ஒரு விசாரணை அதன் அடிப்படையாக இருப்பதை நுணுக்கமான வாசகர்கள் புரிந்துகொள்ள இயலும். நடைமுறை வாழ்வுக்குப் பொருந்தாத தத்துவங்கள் திடீர்ப் பணக்காரன் வீட்டு வரவேற்பரை அலங்கார நூலகம் போலத்தான். தத்துவங்களையல்ல; அவற்றின் காலப்பொருத்தத்தையும் உபயோகத்தையுமே பிரதானமாக நினைக்கிறேன். மனித வாழ்வைக் காட்டிலும் மகத்தான அற்புதம் வேறில்லை.

இது அப்படியொரு அற்புதத்துடன் துவந்த யுத்தம் புரியும் தத்துவத்தைப் பற்றிய கதை.

ஆர். சூடாமணி, விக்கிரமன், நாகராஜகுமார், கணேஷ் சந்திரா, வாசித்துப் பாராட்டிய வாசகர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. என் பிரியத்துக்குரிய மாணவனும் நண்பனுமான ச.ந. கண்ணனுக்கு இப்புதிய பதிப்பை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

[கிழக்கு வெளியீடாக விரைவில் வரவுள்ள ‘அலகிலா விளையாட்டு’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.]

அலகிலா விளையாட்டு பற்றி கிருஷ்ண பிரபு எழுதியது.

பாஸ்டன் பாலாஜி எழுதியது

சிங்கப்பூர் சுரேஷ் எழுதியது

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

9 comments

  • Para, A request.

    Can we have a link in nhm website so that we know when exactly this book is released?
    for example, after I filter by author(your name) I can see the books written by you.

    We can have a link to recently releasable book and we get update using email id once it is released.

    You can publish the same link in this blog too.
    Kindly consider this request.

    • சரவணா: புத்தகம் அச்சாகி, என்னெச்செம் தளத்தில் ஏற்றப்பட்டதும் கண்டிப்பாக லிங்க் தருகிறேன். https://www.nhm.in/shop/Pa.-Raghavan.html இது அங்கே என் நிரந்தரச் சுட்டி. புத்தகம் வந்ததும் இந்தப் பக்கத்திலும் அப்டேட் ஆகும் (என்று நினைக்கிறேன்.)

  • அளவில்லா மகிழ்ச்சி ராகவன். ஒரு முறை விக்ரமன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜாடை மாடையாக ‘அலகிலா விளையாட்டு’ புத்தகத்தை சந்தைப்படுத்த வேண்டியதுதானே என்று சொல்லிப்பார்த்தேன். ஏதேதோ சொல்லி போக்குக் காட்டினார்.

    http://thittivaasal.blogspot.com/2009/09/blog-post.html

    இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை நண்பர்கள் படிப்பதற்காகவே சுற்றில் விடுவேன். அது பல கை மாறி இப்பொழுது அதிஷாவிடம் இருக்கிறது.

    🙂

  • >>புத்தகம் அச்சாகி, என்னெச்செம் தளத்தில் ஏற்றப்பட்டதும் கண்டிப்பாக லிங்க் தருகிறேன்.
    என் எச்சம் என்று ( பிரித்துப் ) படித்துத் தொலைத்து பீதியில் மீதித் தூக்கம் தொலைத்தேன்.
    ஐயன்மீர். நீர் அப்பழுக்கில்லா எழுத்தாள இலக்கியவாதி 😛

  • //இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை நண்பர்கள் படிப்பதற்காகவே சுற்றில் விடுவேன்.//

    இப்படிப் பண்ணினா எப்படி சார் புத்தகம் விக்கும்? நீங்க வலியுறுத்தி அவங்களை வாங்க வச்சிருக்க வேண்டாமா !?

  • அன்புள்ள பாரா, நான்கூட உங்கள் அலகிலா விளையாட்டைப் படித்திருக்கிறேன். மறந்துவிட்டீர்களா?

    அன்புடன்
    ரூமி

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading