Technically Yours

சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன்.

பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே பலிகடாவாக்கினார்கள். லக்கி லுக் போன்ற சிலர் டிப்ளமடிக்காகப் பேசி என் ஆஃபரை நிராகரித்தார்கள். எங்கள் அலுவலகத்தில் வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றும் நண்பர்கள் அத்தனை பேரும் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். தீபாவளி வேறு வருகிறது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைன் வாழ்த்து அட்டை செய்து அனுப்பப்போகிறீர்களா என்று நானே எண்ணியிராத அற்புதமான யோசனைகளையும் தமது அச்சத்தினிடையே தெரிவிக்கிறார்கள்.

இந்தத் தளத்தின் வலப்புறம் நீங்கள் பார்க்கிற என்.எச்.எம். வெளியிட்டுள்ள என்னுடைய புத்தகங்கள் பற்றிய விளம்பரமும், கணேஷ் சந்திராவின் ஓவியம் ஹோஸ்டிங்ஸ் விளம்பரமும் நான் தயாரித்தவைதான். ஒரு புத்தகம் எழுதி முடிப்பதில் உள்ள பரவசம் இந்த விளம்பரங்களைச் செய்து முடித்ததும் உண்டானது. எந்த ஒரு கலையையும் புதிதாகக் கற்பதில் இத்தகைய பரவசம் இருக்கவே செய்யும்.

யோசித்துப் பார்த்தால் இந்தமாதிரி திடீர் ஆர்வங்கள் உண்டாவது என் ரத்தத்தில் இருக்கிறது. ஆதியில் இசையார்வம் மேலோங்கிக் கிடந்த சமயத்தில் கொஞ்சநாள் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். ரகு-ரவி என்கிற குழல் சகோதரர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ஒருமாதிரி கீதம் முடித்து வர்ணம் வரை வந்தபிறகு தடாலென்று வீணைக்குத் தாவினேன். ஏழெட்டு வருடங்கள் அந்த ஆர்வம் ஒரு தீயாக எனக்குள் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது. சகலவிதமான சினிமா பாடல்களையும் வீணையில் வறுத்தெடுப்பது என் வழக்கம். சில தேங்காய் மூடிக் கச்சேரிகளிலும் வாசித்து ஒருவழியாக அந்த வாத்தியத்தைக் கடைத்தேற்றி [அதாவது பரணில் ஏற்றி] வைத்துவிட்டு இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தேன்.

முதல் சிறுகதை என்று ஒன்று பிரசுரமாவதற்கு முன்னால் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியிருப்பேன். அத்தனையும் வெறும் அபத்தம் என்று முதல் புத்தகம் வெளியான காலத்தில் புரிந்தது. சிறுகதை கொஞ்சம் பிடிபட்டது போல் தோன்றியதும் நாவல்களின் பக்கம் ஆர்வம் திரும்பியது. அப்படியே கட்டுரைகள், விமரிசனம்.

திரும்பிப் பார்த்தால் புத்தகங்களாக வந்த சிறுகதைகள் கூட மட்டரகமாகவே பட்டது. ஐந்து நாவல்கள் எழுதி முடித்தபிறகு நான் எழுதிய எதுவுமே நாவல் இல்லை என்று உறுதிபடத் தோன்றியது.

என் ஆசிரியர் இளங்கோவனின் இடைவிடாத [துர்]போதனைகளால் உலக அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கி, அது அமெரிக்கா – மத்தியக் கிழக்கோடு நின்றுவிட, அந்த இரு பிரதேசங்களின் அரசியல் நிலவரங்கள் குறித்து எழுதத் தொடங்கி விறுவிறுவென்று முப்பது புத்தகங்கள் ஓடியேவிட்டன. திரும்பப் படித்துப் பார்த்தால் எதுவுமே ஒரு எட்வர்ட் சயீத் தரத்திலோ, ஹோவர்ட் ஸின் தரத்திலோ இல்லை என்று தோன்றுகிறது.

கிழக்கு ஆரம்பித்த முதல் வாரத்தில் ஒருநாள் ‘நமக்கொரு வெப்சைட் வேண்டும்’ என்று அறிவித்துவிட்டு பத்ரி கையோடு உட்கார்ந்து ஒரு நோட்பேடை விரித்து New Horizon Media என்று எழுதி ‘page1.html’ என்று சேமித்ததைப் பார்த்தேன்.

அந்தக் கணம் எச்.டி.எம்.எல் என்கிற ஜாலம் என்னை வசீகரித்தது. அதென்ன எச்.டி.எம்.எல்? அதே நோட்பேட்தான். டாட் டெக்ஸ்ட் என்றால் ஒரு மாதிரி. டாட் எச்.டி.எம்.எல். என்றால் வேறு மாதிரி. எப்படி இது நடக்கிறது? அந்த நாலெழுத்துக்குள் என்ன சூட்சுமம்?

கிருபாஷங்கரைக் கூப்பிட்டு உட்காரவைத்து எனக்கு எச்.டி.எம்.எல் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். உலகின் நம்பர் ஒன் சோம்பேறியான அவனிடம் என்னைமாதிரி கோவிந்தசாமிகளுக்குப் புரியும் விதத்தில் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதித்தரும்படியும் கேட்டுக்கொண்டேன்.

இரண்டையுமே பாதியில் விட்டுவிட்டுக் காணாமல் போனான். எனவே என் ஆர்வத்தில் ஏகப்பட்ட சொந்த முயற்சிகள் செய்து ஒரு எச்.டி.எம்.எல். இணையப்பக்கத்தை வடிவமைக்கத் தேவையான அடிப்படைகளை நானே பரீட்சை செய்து பார்க்கத் தொடங்கினேன். இந்த வகையில் நான் செலவழித்த நேரத்தைச் சேர்த்தால் நிச்சயம் இன்னொரு டாலர் தேசம் அளவு புத்தகம் எழுதியிருக்க முடியும்.

அத்தனையும் வீண். இன்றைக்கும் ஓப்பன் Tag, க்ளோஸ் Tag ஊற்றிக்கொள்ளும். எதையாவது, எங்காவது சொதப்புவது வழக்கம். திடீரென்று எழுதியதைக் குறுக்கே அடிக்க என்ன கமாண்ட் கொடுக்கவேண்டுமென்று மறந்துவிடும். இட்லிவடை மெசஞ்சரில் வந்து ஸ்டிரைக் த்ரூவுக்கு என்ன செய்வது என்று சொல்லிக்கொடுப்பார். color=FFFFஐ align=centerக்கு முன்னால் போடுவதா, பின்னால் போடுவதா என்று சந்தேகம் வரும். இறுதியில் </color> என்று கொடுக்கவேண்டுமா கூடாதா என்று Tim berners-leeயே எண்ணிப் பார்த்திருக்க முடியாத ஒரு மாபெரும் குழப்பத்துக்கு ஆளாவேன். லே அவுட்டில் இரண்டு காலம் பிரித்துக்கொண்டு, கண்டெண்ட்டைச் சரியாகச் சொருகத் தெரியாமல் தடுமாறுவேன்.

எதற்கு இந்த இம்சையெல்லாம்? ப்ளாகர் ரெடிமேட். வேர்ட் ப்ரஸ் ரெடிமேட். எல்லாமே கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். ஆனால் விதி யாரை விட்டது?

வேர்ட் ப்ரஸ் எடிட்டரில் இதனை எழுதினாலும் வியூ எச்.டி.எம்.எல் போய் எங்கெங்கே என்னென்ன கமாண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருதரம் [ஒவ்வொருதரமும்] பார்ப்பது அனிச்சை [கெட்ட] வழக்கமாகிவிட்டது.

என்னுடைய தொழில்நுட்ப மேதாவிலாசம் பற்றி வெகு நன்றாக அறிந்த ஒரே பிரகஸ்பதி கணேஷ் சந்திரா. எனக்காக இணையத்தளத்தை உருவாக்கிக் கொடுத்த முதல் நாள் அவர் எனக்கிட்ட ஒரே கட்டளை : ‘எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நோண்டுங்கள். ஸ்டைல் ஷீட் பக்கம் போகக்கூடாது.’

அப்படியும் விடாமல் என் தளத்தின் தலைப்புப் பட்டையை எப்படி மாற்றுவது என்று [போட்டோஷாப் கற்றுக்கொண்ட பிறகு] ஒருநாள் கேட்கவே செய்தேன். முறைத்தார். எதுவானாலும் எனக்கு அனுப்புங்கள், நான் மாற்றிவிடுகிறேன் என்றார்.

நானா கேட்பேன்? உள்ளே போய் ஓரிருமுறை குடைந்து பார்க்கவே செய்தேன். என்ன ஒரு பிரச்னை என்றால் இந்த வேர்ட் ப்ரஸ் ஸ்டைல் ஷீட்டுகள் பிஎச்பி என்கிற இனான்ய மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்த [!] எச்.டி.எம்.எல் இல்லாத காரணத்தால் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

வேறு வழி? எனக்கு பி.எச்.பி. கற்றுத்தர முடியுமா, என் ஸ்டைல் ஷீட்டை நானே குடைய முடியுமா என்று ஐகாரஸ் பிரகாஷிடம் ஒருநாள் கேட்டேன். ‘அது ரொம்ப ஈசிங்க. எங்க வெப்சைட்ட நானேதான் டிசைன் பண்ணேன். சொல்லித்தரேனே’ என்று நம்பிக்கையளித்துவிட்டு இறுதியில் ‘இது கஷ்டம், அது முடியாது,  இது சந்தேகம், அது சொதப்பும், எதுக்கும் கணேஷ கேட்டுக்கங்க’ என்று அரசியல்வாதி மாதிரி அந்தர்பல்டி அடித்துவிட்டுப் போய்விட்டார்.

தொழில்நுட்பம் எனக்கு ஒரு போதை. இதுநாள் வரை எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் முழுக்கத் தெரிந்துகொண்டதில்லை – எழுத்து உள்பட. ஆனால் விடாப்பிடியாக அதனைத் துரத்திக்கொண்டிருப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. விதவிதமான ப்ளகின்கள், ஆட் ஆன்கள், மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்ப்பது, என் இணையத்தளத்தின் வடிவத்தை இஷ்டத்துக்கு மாற்றி மாற்றிப் பார்ப்பது [மகாஜனங்களில் முக்கால்வாசிப்பேர் கூகுள் ரீடரில்தான் படிக்கிறார்கள் என்றாலும்], பல இணையத்தளங்களின் view-source பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு அந்த சூத்திரங்களுக்கிடையே என்னுடைய கண்டெண்ட்டைப் போட்டு save as html ஆகச் செய்து ரசிப்பது [இவ்வகையில் நான் செய்த முதல் முயற்சி பத்ரியின் எண்ணங்களை கிண்ணங்களாக மாற்றி என் டெஸ்க் டாப்பில் வைத்து அலுவலகத்தை அதிர்ச்சியுறச் செய்ததுதான்.] போன்ற குரங்கு சேஷ்டைகள் ஏனோ விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன.

என்றைக்காவது ஏதாவது ஒரு தொழில்நுட்பம் எனக்கு முழுவதுமாகப் பிடிபடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அது எழுத்தோ, போட்டோஷாப்போ, எச்.டி.எம்.எல்லோ தெரியாது.

அப்படிப் பிடிபட்டுவிட்டால் இந்தப் பயிற்சிகால சுவாரசியங்கள் இல்லாது போய்விடுமோ என்பதுதான் எனக்குள்ள ஒரே கவலை.

Share

24 comments

  • // என் இணையத்தளத்தின் வடிவத்தை இஷ்டத்துக்கு மாற்றி மாற்றிப் பார்ப்பது [மகாஜனங்களில் முக்கால்வாசிப்பேர் கூகுள் ரீடரில்தான் படிக்கிறார்கள் என்றாலும்]//

    நானும் கூகுள் படிப்பானில் தான் படிக்கிறேன். என்னோடு சேர்ந்து 170 பேர் உங்கள் பக்கங்களை கூ.படிப்பானில் தான் படிக்கிறார்கள். 🙂

  • //கிருபாஷங்கரைக் கூப்பிட்டு உட்காரவைத்து எனக்கு எச்.டி.எம்.எல் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். உலகின் நம்பர் ஒன் சோம்பேறியான அவனிடம் என்னைமாதிரி கோவிந்தசாமிகளுக்குப் புரியும் விதத்தில் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதித்தரும்படியும் கேட்டுக்கொண்டேன்.//

    கிருபாவை யார் திட்டினாலும் சந்தோஷமாக இருக்கிறது. 🙂

  • அடங்கவே மாட்டேன்னு இருக்கீங்களே பாரா.. என்னத்த செய்ய.

    ஸ்டைல் ஷீட் மட்டும் அல்ல, பி.எச்.பி யும் சேர்த்துதான் சொன்னேன்.

  • //பல இணையத்தளங்களின் view-source பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு அந்த சூத்திரங்களுக்கிடையே என்னுடைய கண்டெண்ட்டைப் போட்டு save as html ஆகச் செய்து ரசிப்பது ///

    இப்படி ஆரம்பித்தால் மிக எளிதிலேயே ஹெச்டிஎம்ல நம் வசம் வந்துவிடும் அதுவும் ஸ்டைல்களினை அதிகம் மாற்றாது முதலில் டெக்ஸ்ட்களை மற்றும் மாற்றி பிறகு ஒவ்வொன்றாய் படிப்படியாக மாற்றிக்கொண்டே சென்றாலே போதும்! :)))

  • வேர்ட்பிரஸ்ஸில் சில வேலைகள் [http://wprocks.com/free-themes/] செய்து இருக்கிறேன்.
    வேர்ட்பிரஸ் தீம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் என்னுடைய http://wpthemetips.com என்னும் வலைத்தளத்தில் காணலாம்.

    இதற்கு மேல் சுயதம்பட்டம் அடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன்.
    குறிப்பாக எதுவும் தெரிய வேண்டுமானால் என்னைக் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்.

    சதீஷ்

  • //கிருபாவை யார் திட்டினாலும் சந்தோஷமாக இருக்கிறது. //

    உங்களைப் போலவே உன்னதமான எண்ணம்தான் எனக்கும். என்ன ஒரே பிரச்னை, அவனைத் திட்டும்போதும் வேறு யாராவது திட்டி, காது குளிரக் கேட்கும்போதும் ஏனோ சிரிப்பு வந்துவிடுகிறது.

  • சதீஷ்,

    நீங்கள் ரொம்ப லேட். உங்கள் தளத்தை பார்ட் பார்ட்டாக ஏற்கெனவே கழற்றி மேய்ந்திருக்கிறேன். ஆயினும் தானாக வந்து வலையில் சிக்கியிருக்கிறீர்கள். இனி உங்கள் நிம்மதி குறையுமானால் நான் பொறுப்பல்ல! சந்தேகக் கணைகளுக்குத் தயாராயிருங்கள்;-)

  • //அடங்கவே மாட்டேன்னு இருக்கீங்களே பாரா.. என்னத்த செய்ய.//

    ஒன்று செய்யலாம். ஒழியட்டும் என்று மன்னித்துவிடவும்.

  • ம்ம்ம்… இந்தப் பதிவை படித்தால் பலருக்கு சிரிப்பு வருகிறது. நம்மைப் போன்ற டெக்னிக்கல் அறிவிலிகளுக்கு தானே நம்ம பாடு புரியும். பாம்பின் கால் பாம்பறியும் 🙁

    ”ஆனாலும் உங்க வெப்சைட்டை போட்டோஷாப்பில் டிசைன் பண்ணி தரட்டுமா?” என்று நீங்கள் கேட்டபோது அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது உண்மைதான் 🙂

  • //அப்படிப் பிடிபட்டுவிட்டால் இந்தப் பயிற்சிகால சுவாரசியங்கள் இல்லாது போய்விடுமோ என்பதுதான் எனக்குள்ள ஒரே கவலை.//

    அப்படி எல்லாம் விட்டுடுவோமா? இதை எல்லாம் கிடப்பில் போட்டுட்டு அடுத்தது என்னான்னு போயிட மாட்டோம்!! 🙂

  • மெளனத்தில் இருந்து தான் அனைத்து சத்தங்களும் வந்தன என்பதால், அத்தனை சத்தங்களையும் அனுபவித்த பின் இறுதியில் அமைதி, மெளனத்தைச் சென்று கண்டடைவதில் மட்டுமே இருக்கும்.

    அத்தனை தொழில்நுடபங்களும் கைவரப்பெற்ற பின் தேடுவதற்கும் பல சமாச்சாரங்கள் இருக்கும் அல்லவா?

  • அடுத்தது Javascript கற்றுக் கொண்டு Ajax-ல் இறங்கி விடுங்கள். இருக்கவே இருக்கு பத்ரியின் கிண்ணங்கள்-மன்னிக்கவும்-எண்ணங்கள்.

  • பிரசன்னாவின் ரசனையும் உங்களுடையதும் ஒன்றுபோலவே இருப்பதைப் பார்த்தால், கவலையாக இருக்கிறது. உங்களுக்குக் கவிதை எழுதும் எண்ணமெல்லாம் ஒன்றும் இப்பொழுது இல்லையே? கூகுள் ரீடரில் ஏதாவது plugin போட்டு கவிதையை மட்டும் filter பண்ண வழி இருக்கிறதா தெரியவில்லை.

    closing tag ப்ரச்சனையைப் பற்றி அத்தியாயம் 3லும், குறுக்கே அடிப்பது பற்றி 6லும், கலரைக் கையாள்வது (நிறத்தைச் சொன்னேன்) பற்றி 7லும், layout/table பற்றி 9லும் உள்ளது. attributesகளான color=FFFFF, align=center பற்றி 1, 3 ஆகிய அத்தியாயங்களில் உள்ளது.

    நம்பீல்கா வலைப்பதீஉ முஹேவரி http://blog.krupashankar.com/pullivalai/Default.aspx

    பயிற்சிகால சுவாரசியம்: வாழக்கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடுமா என்ன? 🙂

  • //வாழக்கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடுமா என்ன?//

    க்ருபா, நீயா? கடவுளே இங்கு என்ன நடக்கிறது?!

  • பாரா ஜி, தொழில்நுட்ப ஜிகிடி வேலை பண்ற நாங்க கொஞ்சம் எலக்கண முயற்சிங்கிற பேர்ல செய்ற குரங்கு வேலைய நீங்க, இலக்கியத்திலேர்ந்து வந்து தொழில்நுட்பத்துல செய்றிங்க. உங்க இலக்கிய சித்துவேலைகளை கத்துக்க சரியான இடங்கள் இருக்கோ இல்லையோ, எங்க தொழில்நுட்ப ஜிகிடிய கத்துக்க நிறையவே இடங்கள் இருக்கு. http://www.w3schools.com வலைத்தளம் பாருங்க, நீங்க ஆசைப்படுற HTML, style sheet, PHP மட்டுமல்ல, நம்ம மக்கள் பரிந்துரைக்கிற javascript, ajax வரைக்கும் எல்லாமே கத்துக்கலாம். படிப்படியா கத்துக்கிற பொறுமை இருந்தா போதும். அந்தப் பொறுமை இல்லைன்னாலும் கவலை இல்லை, கொஞ்சம் கத்துக்கிட்டு இணையத்திலே இலவசமா கிடைக்கிற Source codeல கொஞ்சம் அங்கே இங்கே மாத்தி நம்மளோடது மாதிரி செஞ்சுக்கலாம்.

    //வாழக்கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடுமா என்ன?//

    க்ருபா, ஏன் இந்தக் கொலவெறி??????????

  • வேற ஒரு உதாரணம் தோணுது. வேணாம், சார்
    நிவேத்யமா போல்டான எல்க்யவாதியா ஆனப்பறம் சொன்னாதான் நல்ல எஃபக்டா இருக்கும். :-))

  • அன்புள்ள கொசப்பேட்டை குப்புசாமி,

    இப்படியொரு யூஆரெல் கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி. பாடங்கள் வெண்ணெயாக வழுக்கிக்கொண்டு ஓடுகின்றன. மிக அருமையான தளம். மிக்க நன்றி. இன்னும் 10 நாளில் நான் எச்டிஎம்மெல் ஏந்தலாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.;-)

  • //பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே பலிகடாவாக்கினார்கள்.//

    ஓ.. அப்போ.. இட்லிவடைங்கறது..?

    சாமீ.. புரிஞ்சது.. சந்தோஷம்..

    ஆமா எத்தனை பேர்தான் எழுதுறீங்க..?

    என்னையும் ஒரு ஆளா சேர்த்துக்கக் கூடாதா..?

  • உங்களுக்குள் இருக்கும் techie-யை கொல்லப் பார்க்கிறார்கள்!பொறாமைப் படுகிறார்கள்.இதற்கு எல்லாம் தாங்கள் அசரமால் அஞ்சா நெஞ்சனாய் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙂 🙂

  • // இன்னும் 10 நாளில் நான் எச்டிஎம்மெல் ஏந்தலாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.;-) //

  • //சாமீ.. புரிஞ்சது.. சந்தோஷம்..

    ஆமா எத்தனை பேர்தான் எழுதுறீங்க..?//

    அடச்சே. வேற வேலையே கிடையாதா உங்களுக்கு? கேட்டுக்கேட்டு போரடிச்சிப் போச்சுய்யா. “அந்தாளு” மட்டும் என்கையில கிடைச்சா கொத்துபரோட்டா போட்டுடுவேன்.

  • பாரா உங்கள் முயற்சியால் என்னைப்போன்ற பலருக்கு புதிய முயற்சிகள் செய்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது அதற்காக புதிய பதிவு போடாமல் இருப்பது என்ன நியாயம்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி