கிழக்கு ப்ளஸ் – 10

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள்.

என் பதில் இதுதான். பேசுவது என் தொழிலல்ல. இப்போது பேசியதன் ஒரே காரணம், உள்ளார்ந்த மகிழ்ச்சி. அதனைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியதன் விளைவு. வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பதிப்புத் துறையின்மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும், அதற்கான தொடக்கத்தை நாங்கள் ஏற்படுத்தியிருப்பதும் உண்டாக்கிய மகிழ்ச்சி. அவ்வளவுதான். இதில் பல பழைய தவறுகளைக் குறித்துக் குறிப்பிட நேர்ந்தது, அவையெல்லாமும் சரித்திரத்தின் பக்கங்கள் என்பதனால்தான். சொல்லிக்கொள்வதில் என்ன அவமானம்? எங்களுக்கிடையே ஒளிவு மறைவுகள் கிடையாது. எதையும் மறைத்துவைக்க அவசியமும் இல்லை. எங்கள் புத்தகங்கள் இப்போது Shrink Wrap செய்யப்பட்டு வெளிவந்தாலும் நாங்கள் திறந்த புத்தகங்கள்தாம்.

கிழக்கு என்று நாங்கள் முதலடியை எடுத்துவைக்கத் தொடங்கியதிலிருந்தே பாராட்டுகளுக்கு இணையாகக் கேலிகளையும் கண்டனங்களையும் பெற்றே வந்திருக்கிறோம். சில தவறுகள் நேர்ந்தன. சில சமயம் சறுக்கியும் இருக்கிறோம். ஆனால் எங்கள் நோக்கத்திலும் இலக்கிலும் செயல்பாடுகளிலும் பிழையிருப்பதாக ஒருபோதும் கருதியதில்லை. தவறுகள் எங்களுடைய ஆசிரியர்கள். அதிகம் ஃபீஸ் கேட்கும் ஆசிரியர்கள். என்றாலும் பரவாயில்லை. முட்டி உடையாமல் சைக்கிள் பழகமுடியாது. மூச்சு முட்டாமல் நீச்சல் வராது.

சென்ற வருடம் நாங்கள் தொடங்கிய கிழக்கு – வரம் ஆடியோ புத்தகங்கள் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் தெலுங்குக்குப் போகவேண்டும் என்று பத்ரி சொல்லிவிட்டார். அதற்கான ஆசிரியர், ஆசிரியர் குழு, எழுத்தாளர்கள், மார்க்கெடிங், மற்றவை என்று அடுத்தடுத்த பணிகள் அழைக்கின்றன. குன்றாத உற்சாகத்துடன் எங்கள் சக ஊழியர்கள் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உழைப்பதைப் போலொரு அழகான செயல் வேறில்லை. ஆகச் சிறந்த தியானமும் இதுவே. எனவே பழகுகிறோம்.

ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். NHM தொடங்கி இன்றுவரை பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இதனை ஒரு வெற்றிக்கதையாகக் கருதி, கடிதங்கள் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் அதைத்தான் பதிலாக எழுதினேன். என் நண்பன் ஆர். வெங்கடேஷ் உரிமையுடன் கோபித்துக்கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். இரண்டு விஷயங்கள் அதில் கேட்டிருந்தான்.

இது தற்பெருமையாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறதே, மறந்தாயா என்பது முதலாவது. இத்தொடரை நீ ஏன் எழுதினாய், பத்ரி அல்லவா எழுதவேண்டும் என்பது இரண்டாவது.

வேறு சிலரும் இதனைக் கேட்க விரும்பியிருக்கலாம். உண்மையில்,  பெருமை கொள்ளும் அளவுக்கு நாங்கள் எதையும் இன்னும் சாதித்துவிடவில்லை. ஆனால் தமிழ் பதிப்புத் துறையில் பெருமைக்குரிய சாதனை என்று சிலவற்றையேனும் கிழக்கு செய்யும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதை அறிவிப்பதே இதன் நோக்கம்.

இதனை பத்ரி எழுதியிருக்கலாம் என்பது சரியான வாதமே. நிச்சயம் அவர் எழுதியிருந்தால் வேறு பல விவரங்கள் சேர்ந்திருக்கும். இன்னும் பல புதிய தகவல்கள் கிடைத்திருக்கும். சந்தேகமில்லை. பொருந்தி உட்காரவைத்து இத்தனை அத்தியாயங்கள் அவரை எழுதவைத்திருக்க முடியாது என்பதுதான் என் பதில்.

தவிரவும் முன்பே சொன்னதுபோல் இது வெற்றிக்கதை அல்ல. வெற்றியை நோக்கிச் சரியான முதல் அடியை எடுத்துவைத்ததை அறிவிக்கும் ஒரு போஸ்டர் மட்டுமே. இதில் எனக்குத் துளி சந்தேகமும் இல்லை. வெற்றி அடையும்போது பத்ரி எழுதுவார்.

சில மாதங்கள் முன்பு பெங்குயின் நிறுவனரின் சுயசரிதம் ஒன்றினை சத்யா படிக்கக் கொடுத்தார். எத்தனை அனுபவங்கள், எத்தனை பாடுகள்! என் பார்வையில் எழுதப்பட்ட இந்தத் தொடரில் நிர்வாக நுணுக்கங்கள், அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள், இந்த நிறுவனத்தைக் கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள், நிதி திரட்டப் பட்டபாடுகள் குறித்து எதுவுமே இடம்பெறச் சாத்தியமில்லை. பத்ரி எழுதினால் அந்த விவரங்கள் அழகாக வந்திருக்கக்கூடும்.

NHMன் முதல் ஊழியன் என்கிற தகுதியில் என் கண்ணுக்குத் தென்பட்டு, புத்தியில் பட்டுத் தெரித்தவை மட்டுமே இவை. பெரும்பாலும் ஆசிரியர் குழுவின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே அதிகம் விவரித்திருக்கிறேன். பிழையென்று கருதவில்லை. இதுவும் முக்கியம். புத்தகம் என்கிற ஒரு பொருளைக் கொண்டுவந்து வைப்பதற்குப் பின்னால் எத்தனை மூளைகள் இயங்குகின்றன, எத்தனை மனித நேரங்கள் தேவைப்படுகின்றன, எத்தனை கலைஞர்களின் ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு வேண்டியிருக்கிறது என்பதை ஓரளவேனும் சுட்டிக்காட்ட முடிந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

எழுத்தாளர்களை, எழுதத் தெரிந்தவர்களை, எழுதும் வேட்கையுள்ளவர்களை – எழுத்து ஒரு பொழுதுபோக்கு என்று எண்ணாதவர்களை நாங்கள் எப்போதும் இருகரம் நீட்டி அழைத்துக்கொண்டிருக்கிறோம். இப்போதும் அதனைச் சொல்லி நிறைவு செய்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாருங்கள்.

[முற்றும்]

முந்தைய அத்தியாயங்களின் வரிசை இங்கே. 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி