பால்ய கால சதி

இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள்.  எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசிக்கொள்ள இந்தக் கதை இன்னமும் எதையோ ஒன்றைப் புதிதாக எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் என்னும் சிற்றூர் [இன்று அது ஒரு நகரமாகிவிட்டது.] என் தந்தையின் பணி நிமித்தம் எனக்கு அறிமுகமான ஊர். நான்காம் வகுப்பு முதல் நான் அந்த ஊரில் படிக்க ஆரம்பித்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை அங்கேதான் இருந்தேன். அதன்பின் சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டோம்.

ஆனால் என் முதல் ஞாபகங்களாக உள்ள அனைத்துமே கேளம்பாக்கத்தில் நடந்தவைதான். இப்போதும் யாராவது உன் சொந்த ஊர் எது என்று கேட்டால் மனத்தில் கேளம்பாக்கம் என்றுதான் தோன்றும். கஷ்டப்பட்டு மாற்றிக்கொண்டு சென்னை என்பேன்.  நான் பிறந்ததும் வளர்ந்து வாழ்வதும் சென்னையே என்றாலும் கேளம்பாக்கத்தில் வாழ்ந்த அந்தச் சில வருடங்கள்தான் நினைத்தால் மகிழ்ச்சிதரும் தினங்களைத் தன்னகத்தே கொண்டவை.

இந்தக் கதையை முதலில் நான் எழுதத் திட்டமிட்ட விதமே வேறு. இது ஒரு பெரும் நாவலுக்கான முதல் அத்தியாயம் மட்டுமே. கேளம்பாக்கம் என்பது கோவளக் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு கிராமம். அன்றைக்கு மொத்தமே அங்கு இருநூறு வீடுகள் இருந்தால் அதிகம். ஊருக்குப் பொதுவாக ஒரு உணவகம், ஒரு மளிகைக்கடை, ஒரு டெண்ட் கொட்டகை, ஒரு பெட்டிக்கடை இருக்கும். எங்கு பார்த்தாலும் உப்பு மண்டிகளாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு அங்கே அதுதான் தொழில். உப்பெடுப்பது.

உப்பள முதலாளிகளே அங்கே பெரிய மனிதர்களாக இருந்தார்கள். எப்போது பெருநிறுவனங்கள் அயோடைஸ்டு உப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அனைத்து உப்பளங்களையும் தங்கள் சொத்தாக்கிக்கொள்ளத் தொடங்கினவோ, அன்றைக்கு உப்பள முதலாளிகள் அனைவரும் கிடைத்த காசுக்கு உப்பளங்களைக் கொடுத்துவிட்டு தொழில் மாற்றிகொண்டு போனார்கள். கேளம்பாக்கத்தின் கிராமிய முகம் அன்றுதான் மாறத் தொடங்கியது.

உப்புக்கு அயோடின். மனிதர்களுக்குப் பணம். கிராமத்தின் முகம் என்னவாகிப் போனால் என்ன?

கேளம்பாக்கத்தின் முகம் மாறத் தொடங்கியபோதே நாங்களும் அந்த ஊரைவிட்டுப் போய்விட்டோம். ஆனால் இன்றைக்குவரை நான் ஓடித் திரிந்த அந்த உப்புக் கிராமத்தின் பேரெழில் என் மனத்தை விட்டு அகலவில்லை. அது ஒரு கவித்துவ ஏக்கமாக அப்படியே தங்கித் தேங்கிவிட்டது.

உப்பளங்கள் நிறுவன மயமான காலக்கட்டத்தைப் பின்னணியாக வைத்து ஒரு நாவலை நான் திட்டமிடப் போக, அதன் முதல் சில பள்ளிக்கூட அத்தியாயங்களை மட்டும் வாசித்துவிட்டு, இதுவே ஒரு தனிக்கதை அல்லவா என்று கல்கி ஆசிரியர் சீதாரவி கேட்டார். அப்படி எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. மிக எளிமையான பள்ளிக்கூடக் காலத்துக் கதை.

கேளம்பாக்கத்தைப் பற்றி எழுத என்னிடம் இன்னும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இதைத்தவிரவும் பல சிறுகதைகள் அந்த ஊரின் பின்னணியில் எழுதியிருக்கிறேன். நான் எழுத நினைத்த உப்பளக் கதையையும் என்றேனும் எழுதுவேன் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன்.

ஆனால் எத்தனை எழுதினாலும் இந்தக் கதை, எழுதும்போது எனக்குக் கொடுத்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இன்னொருமுறை திரும்ப வராது என்றே தோன்றுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்களை சம்பந்தமில்லாத இன்னும் வேறு சிலருக்குப் பொருத்தினேன்.

இந்த விளையாட்டு எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஒரு கதைக்குள் நானே எனக்காக நிகழ்த்திப் பார்த்த மாறுவேடப் போட்டிபோல.

எல்லாருடைய பால்யங்களும் ரசனைமிக்கவை. நினைத்தால் இன்பமளிப்பவை. சுவாரசியமானவை. அந்த வயதுகளில் சந்திக்க நேர்கிற துக்கங்களுமேகூடப் பின்னாள்களில் நினைத்து வியக்கவோ, சிரிக்கவோ, சிலிர்க்கவோ எதையோ ஒன்றைச் சேமித்து வைக்கத்தான் செய்யும்.

இது என்னுடைய பால்யம். இது எனக்கே எனக்காக எழுதப்பட்ட கதை. என் பிரத்தியேக சந்தோஷம். உங்களுக்கும் பிடித்தால் அதைவிட சந்தோஷம்.

கல்கியில் தொடராக இது வெளிவந்தது. வெளியிட்ட கல்கி ஆசிரியருக்கும் ரசித்துப் பாராட்டிய வாசகர்களுக்கும் எப்போதும் என் நன்றியும் அன்பும்.

[கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – கிண்டில் பதிப்புக்கு எழுதிய முன்னுரை]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter