நாவல் புனைவு பூனைக்கதை

பேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]

வடபழனி பஸ் ஸ்டாண்டின் கடைசி வரிசை பெஞ்சில் மயில்சாமி அமர்ந்திருந்தான். மதிய நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லை. பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிடப் போயிருந்தார்கள். ஒவ்வொரு வரிசை பெஞ்சிலும் யாராவது ஒருவர் படுத்திருந்தார். ஈ மொய்ப்பதைப் பொறுத்துக்கொள்ளலாம் என்றால் மதியத் தூக்கத்துக்கு வடபழனி பேருந்து நிலைய பெஞ்சுகளைவிடச் சிறந்த இடம் வேறு கிடையாது. பின்புறச் சாக்கடை நெடி ஒரு தொல்லைதான். ஆனால் பேருந்து நிலையத்தின் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி நிற்கும் தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடைகளில் இருந்து வருகிற வாசனை இந்தச் சாக்கடை நெடியின் வீரியத்தைக் கணிசமாகக் குறைக்கும். சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகளைக் கவ்விக்கொண்டு நாய்களும் அந்த பெஞ்சுகளின் பக்கம்தான் வரும். ஆனால் பெஞ்சில் இடம் கேட்காது. அருகே இலையை விரித்து அழகாக நக்கி உண்ணும். நாய்கள் தூக்கி வந்துபோடும் அந்த இலைகள் வெகுநேரம் அங்கேயே இருக்கும். எப்போது யார் அவற்றை எடுத்துப் போடுவார்கள் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் எச்சில் இலைகளை யாரோ எடுத்துப் போடத்தான் செய்கிறார்கள்.

மயில்சாமி முதல் நாள் மதியத்தில் இருந்து சாப்பிட்டிருக்கவில்லை. அவனிடம் இருந்த முப்பத்தி ஏழு ரூபாய் பணம் சிறுகச் சிறுகக் கரைந்து பன்னிரண்டு ரூபாயாக ஆகியிருந்தது. டைரக்டரிடம் கேட்கலாம். நூறு ரூபாய் வரை யோசிக்காமல் தரக்கூடியவர்தான். நான்கு நாள் பார்த்துவிட்டு அடுத்த நாள் அவனுடைய பேட்டா பணத்தை அவரே அக்கவுண்டண்டிடம் கேட்டு வாங்கிக்கொண்டுவிட்டு மெசேஜ் அனுப்பிவிடுவார். கேட்கத்தான் வேண்டுமா என்றிருந்தது.

சட்டென்று மூன்று நாள் படப்பிடிப்புக்குத் தடை வரும் என்று அவனோ வேறு யாருமோ எதிர்பார்த்திருக்கவில்லை. செவ்வாய்க்கிழமை ரக்‌ஷிதா ஆஸ்பத்திரியில் ஷூட்டிங் போட்டிருந்தது. திருமணத்துக்கு முன்னால் கர்ப்பமாகிவிட்ட தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் அங்கே அழைத்து வந்து கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிற அக்காவைச் சுற்றிய காட்சிகள் எடுக்கவேண்டியிருந்தன. தங்கையும் அவளது காதலும். அவள் ஏமாற்றப்பட்டிருக்கவில்லை. ஆனால் காதலன் திடீரென்று துபாய்க்குப் போகவேண்டியதாகிவிட்டது. பெரிய வேலை. நல்ல சம்பளம். வேண்டாம் என்று எப்படி விட முடியும்? நான் போய் வேலையில் சேர்ந்து, இடம் பார்த்து வைத்துவிட்டு வந்து உன் வீட்டில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். போகிறவன், பேசிவிட்டுப் போய்த் தொலைத்திருந்தால்தான் என்ன?

ஆனால் போனவன் குறைந்தது ஒரு மாதத்துக்கு வரப் போவதில்லை. ஏனென்றால் அவனுக்குக் கால் உடைந்துவிட்டது. வேறொரு படப்பிடிப்பில் தற்செயலாக நடந்த விபத்து காரணம். ‘எந்திரிச்சி நடக்க ஒரு மாசம் ஆயிடும் மயிலு. முடிஞ்சா சீன் வராம பாத்துக்க சொல்லு. இல்லன்னா போட்டுத்தள்ளிடுங்க’ என்று போன் செய்து சொன்னான். மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக்கூடிய மனநிலை இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் எப்படியோ சாத்தியமாகிறது. ஒரு சீரியலில் சாகிற மாதிரி காட்சி வந்தால் உடனடியாக இரண்டு சீரியல்களில் புதிய வாய்ப்பு வரும் என்கிற நம்பிக்கையை யாரோ யோசித்து உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எனவே சாகலாம். தப்பில்லை.

ஆனால் பொதுவாக ஆண்களை யாரும் சாகடிக்க விரும்புவதில்லை. நெடுந்தொடர்களில் சில நாள் நடிகர்கள் இல்லாமல் போவதைப் பற்றி யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதே காரணம். முந்தைய காட்சி வரை நடித்திருக்கும் நபர் அடுத்தக் காட்சியின் தொடர்ச்சியில் இல்லாவிட்டாலுமே பிரச்னை இராது. கடைக்குப் போயிருக்கிறான், ஆபீசுக்குப் போயிருக்கிறான், வெளியே போயிருக்கிறான் என்று ஏதாவது ஒரு காரணத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியும். சிக்கலெல்லாம் நடிகைகள் இல்லாமல் போகும்போதுதான் உருவாகும். பெண்கள், பெண்களை விட்டுத்தர விரும்புவதில்லை. வில்லியாக இருந்தாலுமேகூட அப்படித்தான்.

‘இப்ப என்னய்யா செய்யிறது?’ என்றார் இயக்குநர்.

‘ஒண்ணும் பண்ண முடியாது சார். இப்போதைக்கு ஃபாரின் போயிட்டான்னு சொல்லி வெக்கறதுதான் நல்லது. சரவண வேல் எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சாத்தான் எதுவுமே செய்ய முடியும்.’

‘அது சரி மயிலு. அந்தப் பொண்ணு கர்ப்பம்னு இல்ல சொல்லியிருக்கு? கதைப்படி திருட்டுக் கல்யாணம். தனிக்குடித்தனம். அதுல படுற கஷ்டம், அவமானம். ரூட்டு அப்பத்தானே ஒட்டும்?’

‘கலைச்சிடலாம் சார். நடக்கப்போற கல்யாணம், பொறக்கப்போற குழந்தைய பத்தின கனவோட அவன் துபாய்லேருந்து திரும்பி வரான். வரும்போது இங்க இவ குடும்ப சூழ்நிலையால கர்ப்பத்த கலைச்சிருக்கா. அதுல ரெண்டு பேருக்கும் பிரச்னை வருது. அவன் விலகிப் போறான். விலகினவனுக்கு தற்செயலா வேற ஒருத்தியோட பழக்கம் வந்துருது… இந்த மாதிரி கொண்டு போயிடலாம் சார்’ என்று மயில் சொன்னான்.

சரி, பாப்பம் என்று யோசித்துக்கொண்டே நகர்ந்து சென்ற இயக்குநர் மதிய உணவு நேரத்தில் ரைட்டருக்கு போன் செய்து பிரச்னையைச் சொன்னார். ஒரு மாதம் அந்தப் பெண்ணின் காதலன் இல்லை. நாளைய எபிசோடில் இருந்தே கதையில் மாற்றம் தேவைப்படுகிறது.

அன்று மாலை திரைக்கதை ஆசிரியர் ஒரு புதிய லைனோடு வந்தார். சம்பந்தப்பட்ட கர்ப்பஸ்திரியின் அக்கா அதுவரை கதையில் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தாள். சட்டென்று அவளை இழுத்து நடுவே கொண்டு வந்து வைத்திருந்தார். அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்கப் போகிறது. மாப்பிள்ளை வீட்டார் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். துணி மணி எடுக்க, நகை எடுக்க என்று தினமும் ஒரு பயணம் இருந்துகொண்டே இருக்கிறது. ஊருக்கெல்லாம் பத்திரிகை வைத்தாகிவிட்டது. இந்த நேரத்தில் நீ கல்யாண மண்டபத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தால் நம் குடும்ப மானம் என்னவாகும் என்று யோசித்துப் பார் என்று உணர்ச்சிமயமாக அவள் தங்கையைப் பார்த்து ஒரு காட்சியில் பேசிவிட்டு நாளைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

மயிலுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த அக்காவாக நடிக்கும் சுபாஷிணி அப்படியொன்றும் பெரிய நடிகை இல்லை. வீட்டில் ஒரு உறுப்பினராக இருக்கத் தகுந்தவள்தான். ஆனால் ஒரு காட்சியை வழி நடத்துகிற அளவுக்குப் பெரிய திறமைசாலியா என்று சந்தேகமாக இருந்தது. ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை. மாற்றப்பட்டிருந்த புதிய கதையமைப்பில் அடுத்த இருபது முப்பது காட்சிகள் அவளை மையமாக வைத்தே நகரும்போல் இருந்தது.

வேறு வழியில்லை. தங்கையின் காதலன் குழந்தையைக் கொடுத்துவிட்டுக் காலை உடைத்துக்கொண்டு துபாய் போய்விட்டான். அவன் வருகிறவரை கதை நகர்ந்தாக வேண்டும். அக்காவைக் கொண்டு நகர்த்த எழுத்தாளர் முடிவு செய்தால் அதை ஏன் என்று கேட்க முடியாது. மதியம் இரண்டு மணிக்குச் சொல்லி ஆறு மணிக்குப் புதிய கதையோடு வருவதற்கு ஒரு சாமர்த்தியம் தேவை. அதை மதித்தாக வேண்டும்.

இயக்குநர் கதையை ஏற்றுக்கொண்டார். ‘டயலாக் ரைட்டருக்கு நீங்களே சொல்லிடுங்க சார்’ என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டு சுபாஷிணியை அழைத்தார். தொடர்ச்சியாக மூன்று நாள் தேவைப்படுகிறது. அதன்பின் நான்கு நாள் இடைவெளியில் மீண்டும் இரண்டு நாள்.

வந்துடறேன் சார் என்று சொல்லிவிட்டுப் போனவள் மறுநாள் படப்பிடிப்புக்கு வரவில்லை. மயில்சாமியும் ப்ரொடக்‌ஷன் மேனேஜரும் மாற்றி மாற்றி போன் செய்துகொண்டே இருந்தார்கள். அவளுக்கு. அவள் கணவனுக்கு. அவளது அண்ணனுக்கு. அப்பாவுக்கு. தோழிகளுக்கு. எங்கிருந்தும் பதில் இல்லை. வீட்டுக்கு ஆளனுப்பிப் பார்த்தால் வீடு பூட்டியிருப்பதாக வந்து சொன்னார்கள்.

டைரக்டர் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டிருந்தது. இன்னும் முதல் ஷாட் வைக்கவில்லை. அக்கா இல்லாமல் அன்றைய படப்பிடிப்பில் எதுவுமே நடக்கப் போவதில்லை.

‘என்னதான்யா ஆச்சாம் அவளுக்கு?’ வீட்டில் இருந்து புண்டரீகாட்சன் சார் போன் செய்து சத்தம் போட்டார்.

‘தெரியல சார். ரீச் பண்ணவே முடியல. மதியத்துக்குள்ள எப்படியும் பிடிச்சிடுவோம் சார். நீங்க பதட்டப்படாதிங்க’ என்று மயில்சாமி சொன்னான். அன்றைக்கு புண்டரீகாட்சன் சாரின் கம்பெனி சரித்திரத்திலேயே முதல் முறையாக இரண்டு அம்பாசிடர்கள் தருவிக்கப்பட்டன. சுபாஷிணி எங்கே இருந்தாலும் பிடித்து இழுத்து வந்துவிட வேண்டும் என்று இரண்டு டிரைவர்களிடமும் சொல்லிவைக்கப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரை ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.

மதியம் மூன்று மணி வரை அவளைத் தேடிவிட்டு இரண்டு வண்டிகளும் காலியாகத் திரும்பி வந்து சேர்ந்தன. அதுவரை தங்கை க்ளோஸ் அப் காட்சிகளை மட்டும் இயக்குநர் எடுத்துக்கொண்டிருந்தார்.

‘என்ன ஆச்சு?’

‘இல்ல சார். எங்க போனாங்கன்னே தெரியல சார். நேத்து காலைல விடியற நேரத்துலயே அவங்க வீட்ல பெரிசா எதோ சண்ட நடந்துட்டு இருந்ததா பக்கத்து வீட்ல சொன்னாங்க. அந்தம்மா வீட்டுக்காரர் டிவி பொட்டிய தூக்கிப் போட்டு உடைச்சிட்டாராம்.’

‘அந்தாளையாச்சும் கண்டுபிடிக்க முடிஞ்சிதா?’

‘இல்ல சார். நேத்து சுபாஷிணி மேடம் ஷூட்டிங்க்கு கெளம்பறதுக்கு முன்னாடியே அவரு கோச்சுக்கிட்டு வெளிய போயிட்டதா சொல்றாங்க சார்.’

‘அவங்கம்மா வீட்டுக்குப் போய்ப் பாத்தியா?’

‘போனேன் சார். அவங்க தெரியலன்றாங்க.’

டைரக்டர் அரை மணி நேரம் தனியே சென்று அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார். மீண்டும் திரைக்கதை ஆசிரியருக்கு போன் செய்து விவரம் சொன்னார். அக்காவை வைத்துக் கதை நகர்த்துவது இயலாது. அவளது கதையே ஒரு மர்மக் கதையாகிக்கொண்டிருக்கிறது. அக்கா – தங்கை இருவரையுமே சில நாள்களுக்குக் கதையில் இருந்து மறைத்து வைக்க முடியுமா?

‘யோசிக்கணும் சார். ரெண்டு நாள் ப்ரேக் விட்டுருங்க. வேற லைனோட வரேன்’ என்று அவர் சொன்னார்.

‘பிரேக் விடமுடியாது வினாயகம். கைல எபிசோடே இல்ல.’

‘அப்ப சீன் ஆர்டர் மாத்தி அனுப்பறேன். இந்த சீக்வன்ச ஒருவாரம் தள்ளி வர்ற மாதிரி வெச்சிப்போம்.’

அவர் மாற்றி அனுப்பிய சீன் ஆர்டரை வைத்துக்கொண்டு ஆர்ட்டிஸ்டுகளுக்கு மயில்சாமி போன் செய்தான். எதிர்பாராத திட்ட மாறுதல்களைப் பற்றிக் கலைஞர்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எபிசோட் இல்லை என்பதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஏற்கெனவே கொடுத்த தேதிகளை மாற்றிக் கேட்பது தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்னை. தேதி இல்லை என்று சொல்லுவது நடிகர் நடிகையரின் உரிமை.

ஒரு நாள் முழுதும் மயில்சாமி போன் பேசிக்கொண்டே இருந்தான். அன்று அவன் சாப்பிடக்கூட இல்லை. பசியோடும் தலைவலியோடும் நாளெல்லாம் பேசிப் பார்த்தும் அடுத்த இரு நாள்களுக்குப் படப்பிடிப்பு நடத்த சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றியது. இயக்குநரிடம் இதைத் தெரிவித்தான். அவர் ஒன்றும் பேசவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி யோசித்துக்கொண்டே இருந்தார். சட்டென்று, ‘சரி ஜெய்சங்கர்ட்ட சொல்லி அன் ஆர்டர்ல இருக்கற சீன்ஸ எடிட் பண்ணி எபிசோடாக்க சொல்லிரு மயிலு. மூணு நாளைக்கு பண்ணிட சொல்லு. லிங்க்கு மிஸ் ஆகுற இடம் மட்டும் நீ மார்க் பண்ணிக்க. தேவைப்பட்டா இருக்கற ஆள வெச்சி பாபா ஹவுஸ்ல ஒருநாள் போட்டு மேக்கப் பண்ணிடுவோம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.

மயில்சாமி ஒன்லைனை எடுத்துப் பார்த்தான். அன் ஆர்டரில் இருபது சீன்களுக்குமேல் எடுக்கப்பட்டிருந்தன. எபிசோட் தேற்றுவது பெரிய விஷயமில்லைதான். பாபா ஹவுஸ் கால்ஷீட் கூட வேண்டியிருக்காது என்று தோன்றியது. எடிட்டருக்கு நிலவரம் சொல்லிவிட்டு அன்றிரவு அவன் வீட்டுக்கு வந்தபோது சீதாராமன் போன் செய்தான்.

‘அண்ணே, எங்க இருக்கிங்க?’

‘சொல்லு சீத்தா.’

‘சுபாஷிணி தற்கொல பண்ணிக்கிச்சாம்ணே.’

ஐயோ என்று அலறிவிட்டான் மயில்சாமி. ‘எப்படா? யாரு சொன்னாங்க? நீ எங்க இருக்க இப்ப?’

‘நேத்து நைட்டு பேக்கப் ஆனதும் அது வீட்டுக்கே போகல போலண்ணே. பாரடைஸ்ல ரூம் போட்டுத் தங்கியிருக்குது. போன்கீனெல்லாம் ஸ்விச் ஆஃப் பண்ணிட்டு மருந்து குடிச்சிருக்குது. இப்பத்தான் ஓட்டல்க்காரங்களுக்கு மேட்டர் தெரிஞ்சி போலிசுக்கு சொல்லியிருக்காங்க. பாடிய ஜிஎச்சுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்களாம்ணே.’

மயில்சாமிக்கு அதிர்ச்சியைக் காட்டிலும் அப்போது பசி அதிகம் இருந்தது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. மாற்றி மாற்றி நிறையப் பேருக்கு போன் செய்துகொண்டே இருந்ததில் உணவு நேரம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. மிச்சம் இருப்பதைச் சாப்பிடலாம் என்று ப்ரொடக்‌ஷன் பக்கம் போனபோது தயாரிப்பாளர் வந்துவிட்டார்.

‘ரெண்டு நாள் சூட்டிங் போடலன்னா பரவால்ல மயிலு. ஆனா என்னா செய்யணுன்னா உக்காந்து அடுத்த செட்டு கதைய ரெடி பண்ணி முடிச்சிருங்க. கைவசம் எப்பவும் இருநூறு சீன் இருக்கணும்.’

‘ரைட்டர் ஊருக்குப் போறதா சொன்னார் சார். சனிக்கிழமைதான் வருவாரு.’

‘சனிக்கிழமை ஊருக்குப் போகமுடியுமான்னு கேட்டுப் பாரு’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.

வினாயகத்துக்கு போன் செய்தபோது, ‘ஒரு நிமிசம் லைன்ல இருங்க மயிலு’ என்று சொல்லிவிட்டு அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வேறு ஏதோ கதை விவாதம். தங்கை இல்லாத, அக்காவால் பிரச்னை இல்லாத, கர்ப்பம் கூட இல்லாத இன்னொரு கதை.

மயில்சாமி லைனில் காத்திருந்தான். இரண்டு நாள் கதை விவாதம் வைத்துக்கொள்ளச் சொல்லி தயாரிப்பாளர் சொல்கிறார். திரைக்கதை ஆசிரியர் ஒப்புக்கொண்டால் அடுத்த இரண்டு நாள்களுக்கும் காலை, மதிய உணவுப் பிரச்னை இருக்காது. புண்டரீகாட்சன் கம்பெனி பொதுவாக ஓட்டலில் ரூம் போடுவது கிடையாது. தயாரிப்பு அலுவலகத்திலேயே ஓர் அறையை ஒதுக்கித் தந்துவிடுவார்கள். அம்மாதிரி தினங்களில் மதிய உணவுக்கு கம்பெனி காசு தராது. அன்றைக்கு அலுவலகத்தின் பின்னாலேயே அடுப்பு மூட்டி சமைப்பார்கள். ஒரு சாம்பார் சாதம். ஒரு பொரியல். பணக்காரர்கள் சிக்கனம் கடைப்பிடிப்பது எப்போதும் பார்க்க வினோதமாக இருக்கும். ஆனால் அதுதான் அவர்களைப் பணக்காரர்களாக வைத்திருக்கிறது என்று மயில்சாமி நினைத்துக்கொண்டான்.

ஒரு நிமிடம் என்று சொன்ன வினாயகம், மூன்று நிமிடங்கள் காக்கவைத்து லைனுக்கு வந்தார்.

‘சொல்லுங்க மயில்.’

‘நாளைக்கும் மறுநாளும் டிஸ்கஷன் வெச்சிகலாமான்னு ப்ரொட்யூசர் கேக்கறாரு.’

‘நான் ஊர்ல இல்லன்னு சொன்னனே.’

‘உங்க டிரிப்ப கொஞ்சம் தள்ளிப் போட முடியுமான்னு கேட்டார் சார்.’

‘முடியாதுன்னு சொல்லிடுங்க’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

மயில்சாமி தயாரிப்பாளரைத் தேடிச் சென்று விவரத்தைச் சொன்னான். அவர் பார்வை நல்ல விதமாக இல்லை. பொதுவாக அவர் யாரையும் நேரடியாகத் திட்டமாட்டார். மறைமுகமாகக் கூட ஏதும் சொல்லமாட்டார். ஆனால் அவர் விரும்பிய ஒன்று நடக்காதபோது நிச்சயமாக அதற்கு அவரிடம் ஒரு பதில் இருக்கும். அநேகமாக அது அம்மாதச் சம்பளத்தை ஒருவாரம் தள்ளித் தருவதாக இருக்கும். அதுவும் சரியாக வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு போன் செய்து செக் ரெடி என்று அவரது அலுவலகத்தில் இருந்து சொல்லுவார்கள்.

‘சரி, பாப்போம்’ என்று சொல்லிவிட்டு புண்டரீகாட்சன் சார் காரில் ஏறிப் போய்விட்டார். மறுநாள் மதிய வேளை சாம்பார் சாதம் இல்லாமல் போய்விட்டதே என்று மயில்சாமிக்குக் கவலையாக இருந்தது. அந்தக் கவலையுடனேயே அவன் சாப்பிடும் இடத்துக்குப் போனபோது அன்றைய உணவுக்கடையும் முடிவடைந்திருந்தது. பாத்திரங்களைக் கழுவி அடுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். வேறு வழியில்லை. இன்று பட்டினிதான் என்று நினைத்துக்கொண்டு ஒரு பாட்டில் நிறையத் தண்ணீர் குடித்தான். படப்பிடிப்பு நடக்கிற வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி வந்து ஒரு மரத்தடியில் கால் நீட்டிப் படுத்தான்.

சுபாஷிணியின்மீது கோபம் வந்தது. கோபப்படுவதற்கு ஒவ்வொரு நடிகையும் குறைந்தது ஒரு காரணம் வைத்திருக்கத்தான் செய்கிறாள். வாழ்க்கையில் இல்லாவிட்டால் ஒழிகிறது. தொழிலில் ஒரு குறைந்தபட்ச நேர்மை வேண்டாமா? அது சோறு போடுகிறதல்லவா?

‘இதெல்லாம் அவங்களுக்கு சைடுதாண்ணே’ என்று சீதாராமன் சொல்லுவான். பலவற்றை எண்ணிப் பார்க்காதிருப்பதுதான் நல்லது என்று மயில்சாமி சொல்லிவிடுவான்.

அன்று படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது. பேட்டா இன்னொரு நாள் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அக்கவுண்டண்ட் எழுந்து போனார். கையில் காசில்லாததால் ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு மயில்சாமி வீட்டுக்குப் போய்ப் படுத்தான். அடுத்த மூன்று நாள்களுக்கு வேலை கிடையாது. ஓய்வு நல்லதுதான். ஒருநடை ஊருக்குப் போய் மனோன்மணியைப் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் அதற்கும் பணம் வேண்டும். திரும்பி வரும் பஸ் செலவு பிரச்னை இல்லை. மனோவிடமே பணம் வாங்கிக் கொண்டுவிட முடியும். போவதில்தான் சிக்கல்.

போனால் மாமாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ‘எதுக்கு மாப்ள கஷ்டப்படுறிங்க? பேசாம ஒரு சானல்ல வேலைக்கு சேந்துடுங்களேன்’ என்பார். யாரோ தயாராக வேலை வைத்துக்கொண்டு காத்திருப்பது போல. மனோவின் அண்ணன் சென்றமுறை சென்றிருந்தபோது ஒரு யோசனை சொன்னான். அவன் ஒரு லட்சம் முதல் போடத் தயாராக இருக்கிறான். ஆழ்வார் திருநகரில் சிறிய அளவில் ஒரு கேட்டரிங் தொழில் ஆரம்பிக்கலாம். ஆபீஸ் போகிறவர்களுக்கு காலை டிபன். மதிய சாப்பாடு. ஒரு சமையல்காரர். ஒரு உதவியாளன் போதும். சிறியதொரு வாடகை வீடு பிடித்துக்கொண்டால் வாசலில் போர்ட் மாட்டிவிடலாம்.

‘நீங்க பாத்துக்கங்க மாப்ள. நான் முதல் போட்டுட்டு ஒதுங்கிக்கறேன். லாபத்துல பாதி பாதி எடுத்துக்குவோம். உங்க ஏரியாவுல இதுக்கு ஒரு தேவை இருக்குதுன்னு தோணுது. நல்ல ஓட்டலுங்களே இல்ல அங்க.’

ஒரு கலைஞன் என்று தன்னை எண்ணிக்கொள்வதை மயில்சாமி கூடியவரை தவிர்த்து வந்தான். டெக்னீஷியன் என்பது சற்றுப் பரவாயில்லை என்றுதான் தோன்றியது. ஆனால் சமையல்காரன் என்று சொல்லிக்கொள்ள மனம் ஒப்புக்கொள்ளுமா என்று யோசித்தான். மனோவின் அண்ணன் சொன்னதுபோல அவன் குடியிருக்கும் ஆழ்வார் திருநகரில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு நல்ல உணவகம் இல்லைதான். சகாய விலையில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றால் எத்தனையோ உதவி இயக்குநர்களும் பிற டெக்னீஷியன்களும் தவறாமல் வருவார்கள். ஒரு வருடத்தில் நல்ல லாபமேகூடப் பார்த்துவிடலாம்.

உடனே அவனுக்குத் தான் வேலை பார்த்த ஒரு நெடுந்தொடர் நினைவுக்கு வந்தது. அதிலும் கதாநாயகி கஷ்டப்படுகிறவள்தான். பொறுப்பில்லாத கணவன். படிக்கிற பெண் குழந்தைகள். பள்ளிக்கூட ஃபீஸ் கட்டுவதற்குக் கூட வழியில்லாத நிலைமை. உறவினர்களிடம் கையேந்தி அவமானப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறாள். சமையல் அறையில் இருக்கும் கேஸ் அடுப்பையும் இட்லி பானையையும் எடுத்து வந்து வீட்டு வாசலில் வைக்கிறாள். இட்லி ஐம்பது காசு என்று கரும்பலகையில் சாக்பீஸால் எழுதி வைத்துவிட்டுத் தொழிலை ஆரம்பிக்கிறாள்.

ஐம்பது காசுக்கு இட்லியா? நம்ப முடியவில்லையே என்று ஊரே வியந்து வந்து இட்லி சாப்பிடுகிறது. உலகத் தரத்தில் இருக்கும் அந்த இட்லியின் சுவையைப் பற்றிப் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் பேசுகிறார்கள். கதாநாயகி இரவெல்லாம் இட்லி மாவு அரைக்கிறாள். அதிகாலை அலாரம் வைத்து எழுந்து சட்னிக்கு அரைக்கிறாள். வாளியில் சாம்பார் காய்ச்சி எடுத்து வைத்து, சரியாக ஏழு மணிக்கு வியாபாரத்தைத் தொடங்கிவிடுகிறாள். ஐம்பது ஐம்பது காசுகளாகச் சேர்த்தே அவளால் ஒரு பங்களாவும் காரும் வாங்கிவிட முடிகிறது. மகளுக்கு மெடிக்கல் சீட் பெற முடிந்துவிடுகிறது. குடும்பத்தில் திருமணமாகாமல் மிச்சம் இருக்கும் ஒவ்வொருவரையும் தேடித்தேடிப் பிடித்துக் கல்யாணமும் செய்து வைக்க முடிந்துவிடுகிறது.

உழைப்பால் உயரும் உத்தமர்களை மக்களுக்குப் பிடிக்கவே செய்கிறது. தானும் இட்லி கடை வைக்கலாம். விருகம்பாக்கம் மார்க்கெட்டில் சாலையோரம் குந்தி உட்கார்ந்து மீன் விற்கலாம். பேப்பர் போடலாம். வீட்டுத் தரகு வேலை பார்க்கலாம். யோசித்தால் இன்னும் சில சாத்தியங்கள் அகப்படாமல் போகாது. ஒரு லட்ச ரூபாய் முதல் போடத் தயாராக உள்ள மச்சான்கள் பலருக்கு இருக்கமாட்டார்கள். ஆனாலும் ஒரு மனத்தடை உள்ளது. மதமாற்றம் போலத்தான் என்று எண்ணிக்கொண்டான்.

தலை மிகவும் வலித்தது. ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும். திரும்பத் திரும்ப டீ குடித்துக்கொண்டிருப்பது சலிப்பாக இருந்தது. பேருந்து நிலைய பெஞ்சில் காலை நீட்டிப் படுத்தான். இன்று முழு நாள் ஓடியாக வேண்டும். பிறகு நாளை முழு நாள். நாளை மறுநாளும் படப்பிடிப்பு கிடையாது. இந்த மூன்று நாள்களுக்குள் மாற்றுக்கதை தயாராக வேண்டும். வேறு நடிகைகளை வைத்து நகர்த்தியாக வேண்டும். உலகம் சுழல்வது நின்றாலும் ஒளிபரப்பு நிற்க வாய்ப்பில்லை.

தூக்கம் வந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்தான். கண்ணை மூடிக்கொண்டு அதற்கு முயற்சி செய்யத் தொடங்கியபோது யாரோ தட்டி எழுப்புவது போலிருந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

‘சாரி மயில். என்னாலதான் உங்களுக்கு இவ்ளோ கஷ்டம்’ என்றபடி சுபாஷிணி அருகே வந்து அமர்ந்தாள்.

மயில்சாமி திடுக்கிட்டுப் போனான். பிரமையா என்று கண்ணைக் கசக்கிக்கொண்டான். ஒருவேளை உறக்கம் வந்து, அதில் கனவாக வருகிறாளோ என்றும் தோன்றியது.

‘இல்ல மயில். நான் சுபாஷிணிதான். சூசைட் பண்ணிகிட்டு செத்துட்டேன். இப்ப பேயாத்தான் வந்திருக்கேன்.’

அவனுக்குப் பசி, தலைவலி இரண்டும் மறந்துவிட்டது. ‘நீங்களா..? நிஜமாவே செத்துட்டிங்களா?’ என்றான். சட்டென்று அவனுக்கே அக்கேள்வி அபத்தமாகத் தோன்றி, ‘ஏன் செத்திங்க?’ என்றான்.

அந்தப் பேய் சில வினாடிகள் அமைதியாக இருந்தது. அசப்பில் சுபாஷிணி போலவே இருந்தாலும் தோற்றத்தில் சில மாற்றங்கள் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. குறிப்பாகக் கண்கள் இருந்த இரு இடங்களிலும் ஒரு புள்ளி மட்டும் இருந்தது. சினிமா பேய்களைப் போல் தலைமுடியைப் பறக்கவிடாமல் அள்ளி முடிந்திருந்தது. வெள்ளைப் புடைவை இல்லை. கடைசியாகப் படப்பிடிப்புக்கு வந்தபோது அணிந்திருந்த அதே காஸ்ட்யூமைத்தான் அணிந்திருந்தாள். பாரடைஸில் ரூம் போட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் முன் உடை மாற்றவில்லையா?

‘வாழ முடியல மயிலு. அதான் முடிச்சிக்கிட்டேன்’ என்றாள் சுபாஷிணி.

‘ஐம் சாரி.. உங்க வீட்டுக்காரர் சரியில்லியோ?’

‘அந்தாள் நல்ல மனுஷன் தான். ஆனா என்னோட எல்லாம் வாழமுடியாது’ என்று சொல்லிவிட்டு முந்தானையால் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘சரி இருங்க. நீங்க ரொம்ப பசியோட இருக்கிங்க’ என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள். வரும்போது அவள் கையில் ஒரு காகிதப் பொட்டலம் இருந்தது. பிரித்து எதிரே வைத்தாள். பிரியாணி.

மயில்சாமிக்கு ஒன்றும் புரியவில்லை. மாதம் பத்துப் பன்னிரண்டு நாள் ஷூட்டிங் இருக்கும் நடிகைக்கு ஒரு பிரியாணி பொட்டலம் வாங்குவது பெரிய விஷயம் இல்லைதான். பேயான பிறகும் அது சாத்தியமாகுமா?

‘என்னை யார் பாக்க முடியும்? வெளிய அந்தத் தள்ளுவண்டிக் கடைக்குப் போயி நானே எடுத்துப் போட்டுக்கிட்டு வந்தேன். சாப்பிடுங்க முதல்ல.’

மயில்சாமிக்கு சாப்பிடத் தோன்றவில்லை. அதிர்ச்சியும் குழப்பமுமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பேய் சட்டென்று நான்கு விரல்களால் பிரியாணியை எடுத்து அவன் வாயருகே கொண்டு வந்தது. ‘முதல்ல சாப்டுங்க மயில். நீங்க பட்டினியா இருக்கற வரைக்கும் நான் நார்மலா இருக்க முடியாது.’ என்று சொல்லி ஊட்டிவிட்டது.

‘இல்ல, வேணாம். நானே சாப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு இரண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டான்.

‘என்னால உங்க எல்லாருக்கும் ரொம்பக் கஷ்டம் ஆயிடுச்சில்ல?’

‘மூணு நாள் ஷூட்டிங் கேன்சல். அன் ஆர்டர்ல இருக்கற சீன்ஸ வெச்சி மேக்கப் பண்ணியிருக்கு.’

‘தெரியும். சட்டுனு கதைல எனக்கு இம்ப்பார்டன்ஸ் குடுத்தது புண்டரீகாட்சன் சாருக்குப் பிடிக்கலை’ என்று சுபாஷிணி சொன்னாள்.

‘சேச்சே. யார் சொன்னாங்க உங்களுக்கு? அவருக்கு இந்த மேட்டரே தெரியாது. இது டைரக்டரும் ரைட்டரும் பேசி எடுத்த முடிவு.’

பேய் சிரித்தது. ‘அப்படின்னு நீங்க நினைச்சிட்டிருக்கிங்க. கதைல எனக்கு இம்பார்டன்ஸ் குடுக்க சொல்லி ரைட்டர்ட்ட சொன்னதே புண்டரீகாட்சன் சாரோட சன் தான்.’

‘ஒரு நிமிஷம் இருங்க’ என்று சொல்லிவிட்டு பரபரவென்று அந்த பிரியாணியை அவன் சாப்பிட்டு முடித்தான். எழுந்து போய் குப்பைத் தொட்டியில் காகிதத்தைப் போட்டுவிட்டுக் கைகழுவத் தண்ணீர் தேடினான். ‘அங்க இருக்கு பாருங்க’ என்று பேய் சுட்டிக்காட்டிய இடத்தில் குடிநீர்த் தொட்டி இருந்தது. கையைக் கழுவிக்கொண்டு தண்ணீர் குடித்தான். முகத்தையும் கழுவி, சட்டையால் துடைத்தபடி மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்தான்.

‘ரொம்ப தேங்ஸ் மேடம். பசில செத்தே போயிருப்பேன். நீங்க செஞ்சது பெரிய உதவி எனக்கு.’

சுபாஷிணி புன்னகை செய்தாள். பொதுவாக அவள் சிரிக்கும்போது சற்று நன்றாகவே இருக்கும். ஆனால் பேயான பிறகு அவளது சிரிப்பு ரசிக்கும்படியாக இல்லை. ஒன்றிரண்டு பற்களைத் தவிர மற்றவை இல்லாதிருந்தது சற்று அச்சமூட்டும்படியாக இருந்தது. வாயைத் திறக்காதிருந்தால் பெரிய பயமாக இல்லை. அந்தக் கண்ணில் இருந்த புள்ளி ஒரு பிரச்னைதான். ஆனால் சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது.

‘உங்க கால காட்டுங்க’ என்று மயில்சாமி கேட்டான்.

‘எதுக்கு?’

‘பேய்க்குக் கால் இருக்காதுன்னு சொல்லுவாங்களே.’

அவள் மீண்டும் சிரித்தாள். பயமாக இருந்தது. புடைவையைச் சற்றே விலக்கிக் கால்களைக் காட்டினாள். இறக்கும்போது அணிந்திருந்த கொலுசுகூட இருந்தது. தங்க நிறத்தில் நகப்பூச்சு பூசியிருந்தாள். இதையெல்லாம் சீதாராமன் கண்டின்யுடி நோட்டில் எழுதி வைத்திருப்பான். ஆனால் இனி அவற்றால் பிரயோஜனம் இருக்காது.

‘டைரக்டருக்குத்தான் ரொம்பக் கஷ்டம் ஆயிருக்கும் இல்ல? இந்த மூணு நாள் நடிச்சிட்டுப் போயிருக்கலாம் நான்.’

‘தப்பா நினைக்காதிங்க மேடம். ப்ரொட்யூசரோட பிள்ளையே உங்களுக்கு சப்போர்ட் பண்ணதா சொன்னிங்க. அதுக்குமேல என்ன வேணும்? நல்லா சம்பாதிச்சிட்டுப் போயிருக்கலாம். மிஸ் பண்ணிட்டிங்க.’

அவள் வெகுநேரம் அமைதியாகவே இருந்தாள். பிறகு, ‘உங்ககிட்ட சொல்றதுக்கென்ன? இருக்கறது ஒரு கட்டை. அப்பனுக்கும் வேகணும், பிள்ளைக்கும் வேகணும்னா கஷ்டம்தானே?’ என்று சொன்னாள்.

சாப்பிடப் போன டிரைவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். பேருந்துகளின் இஞ்சின்கள் சத்தமிட ஆரம்பித்தன. அவள் திருமுல்லை வாயில் போகிற பேருந்தில் ஏறிக்கொண்டாள்.

‘கெளம்பினா சரியா இருக்கும். நாலு மணிக்கு என்னை எரிக்கப் போறாங்க. நீங்க வரலியா?’ என்று கேட்டாள். மயில்சாமி பதில் சொல்லவில்லை.

ஆனால் அவள் போனதும் தோன்றியது. பிரியாணி கிடைத்தது போல ஒரு குவார்ட்டர் பிராந்தி கிடைத்திருக்கலாம்.

[வெளிவரவுள்ள பூனைக்கதை நாவலில் இருந்து ஓர் அத்தியாயம்]
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி