கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]

கோல்கொண்டா கோட்டை விழுந்துவிட்டது என்று ஜமீந்தார் சீட்டு அனுப்பியிருந்தார்.

எப்படியும் ஒரு மண்டலத்துக்குள் ஔரங்கஜேப் தொண்டை நாட்டைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து தஞ்சை வந்து சேர அவனுக்கு அதிக அவகாசம் எடுக்கப் போவதில்லை. மராட்டி ராஜா, ராமநாதபுரத்துக்குப் போய் பதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகச் சேதி வருகிறது. வருபவனுக்கு வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போவதா, கழட்டி எடுத்துவைத்துவிட்டுப் போவதா என்பதுதான் மிச்சமிருக்கிற சந்தேகம். நாட்டு வர்த்தமானம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குடிசனங்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் செய்வதறியாமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். தானியங்கள் பதுக்கப்படுகின்றன. தங்க, வைர வியாபாரிகள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு மலை தேசத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டையில் கப்பல் ஏறினால் நாநூறு கல் தொலைவில் ஒரு தீவு வருகிறதாம். படையெடுப்பு முடிகிற வரை அங்கே சென்று இருந்துவிடலாம் என்று பதினாயிரம் வியாபாரிகள் சம்மேளனத்தில் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள்.

மூன்றாம் திண்ணைக்காரர் ஜமீந்தாரின் லிகிதத்தை வாசித்து முடித்ததும் அவர்கள் அனைவரும் அச்சம் சுரந்து ஒழுகும் முகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

விநாச காலம் வந்தே விட்டது. இதில் பிழைத்திருக்கப் போவது யார்?

சந்தேகமில்லை. துலுக்கன்தான் என்று முதல் திண்ணைக்காரர் சொன்னார். அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள்.

‘ஆனால் வாழ்ந்துவிட்டோம். பார்க்காதது ஒன்றுமில்லை. சாவு மட்டும்தான் மிச்சம். வந்துவிட்டுப் போகட்டும் போ’ என்று நாலாம் திண்ணைக்காரர் சொன்னார்.

ஒரு ஆட்சி மாற்றத்தின் உண்மையான விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நடக்கப் போவதில்லை என்றாலும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்துக்களை மொத்தமாகக் கழுவேற்றிவிடுவான் என்று சங்கீதக்காரர் சொன்னார். கோயில்கள் இடிக்கப்படும் என்றும் வயல்கள் எரிக்கப்படும் என்றும் அனைத்து வீடுகளிலும் உள்ள ஆபரணங்கள், பெண்கள் களவாடப் படுவார்கள் என்றும் சொன்னார்கள். ‘குறி அறுத்துடுவானாம்லெ?’ என்றார் ஓவியர். ஐயோ என்று சட்டென்று பொத்திக்கொண்டார் இரண்டாம் திண்ணைக்காரர்.

‘அறுத்தாலும் அழியாத சின்னமாக இந்தச் சுவரில் இருக்கும்’ என்றார் கவிஞர்.

அவர்கள் கலவரத்துடன் சுவரருகே எழுந்து சென்று தங்கள் ஓவியங்களில் இருந்த தத்தமது குறிகளைத் தொட்டுப் பார்த்தார்கள்.

நான் பூனை. நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னால் அவர்கள் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. மாதக்கணக்கில் வெளிச்சம் பாராதவர்கள் மனத்தில் எத்தனையெத்தனை இருட்குகைகள் உருவாகியிருக்கும் என்று உங்களுக்குப் புரியாது. அச்சத்தையும் கலவர உணர்வையும் அவர்கள் மதுவால் வெட்டி வீழ்த்தப் பார்த்தார்கள். ஆனால் அது இன்னும் பேரச்சமாகக் கிளறி அனுப்பிவைத்துக்கொண்டிருந்தது.

சமஸ்தானத்தை மொத்தமாகச் சூறையாடிவிடுவார்கள் அல்லவா? ஜமீந்தார் பிழைப்பாரா?

தெரியவில்லை.

மொத்தமாகக் கொன்று காவிரியில் போட்டுவிடுவானோ?

நகை இருக்குமா சிலை இருக்குமா எனத் தேடி எப்படியும் இந்தக் கோயிலுக்கு வருவான். ஒன்றுமில்லாத கோபத்தில் இடித்துவிட்டுப் போய்விடுவான்.

கோயிலை இடித்தாலும் நாம் இருப்போம். இந்த நிலவறையை அவர்கள் யூகிக்க முடியாது.

ஓய், நிதானத்தில் பேசும். இடித்து மூடிவிட்டால் இப்படியே மூச்சு முட்டி சாக வேண்டியதுதான். காற்றுக் குழிகள் யாவும் கல்லடைத்துவிடும்.

மரணம் நிச்சயம். எழுதி முடித்துவிடுவோம்.

ஆம். எழுதி முடிப்போம். ஆனால் இன்று குடிப்போம். இனி குடிக்க நேரமிருக்கப் போவதில்லை.

மறுநாள் முதல் அவர்கள் வெறித்தனமாக எழுத ஆரம்பித்தார்கள். உறக்கம் அவர்களுக்கு மறந்துவிட்டது. உணவின் மீதும் மதுவின் மீதும் நாட்டம் குறைந்துவிட்டது. உற்சாகமான பேச்சுகளும் சிரிப்பொலியும் அங்கே இல்லாமல் போய்விட்டது. மனிதர்களைக் காக்க முடியாத சூழ்நிலையில் மண்ணின் கலைகளை மட்டுமாவது காப்பாற்றிக் கரை சேர்க்க விரும்பிய ஜமீந்தாரின் எண்ணத்தின் தீவிரம் எத்தனை உயர்வானது என்று அப்போது அவர்களுக்குத் தோன்றியது.

நூறு வருடங்கள் கழித்து யாராவது இங்கே அகழ்ந்து பார்க்க வருவார்கள். அவர்களுக்கு ஆறு எலும்புக் கூடுகளும் பிரம்மாண்டமானதொரு புத்தகத்தின் நூற்றுக்கணக்கான மட்கிய பக்கங்களும் கிடைக்கும். அதை வெளியே கொண்டு போய்ப் படித்துப் பார்ப்பார்கள். வியப்பிலும் அதிர்ச்சியிலும் அவர்களுக்குப் பேச்சற்றுப் போகும். பிராந்தியத்து ராஜன் உடனே சில வல்லுநர்களை அழைத்து அந்தப் பக்கங்களைப் பிரதியெடுக்கச் சொல்லுவான்.

இது கலை. இந்த மண்ணில் வாழ்ந்திருந்த கலை. அதன் சூத்திரங்களும் சூக்குமங்களும் இந்தப் பேரேட்டில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பற்றி நாம் ஒன்றுமே தெரியாதவர்களாக இத்தனைக் காலம் இருந்து வந்திருக்கிறோம். யாரங்கே. இந்தப் பேரேட்டைப் பாராயணம் செய்யுங்கள். இது சொல்லும் பாடங்களைப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவியுங்கள். கலைஞர்களை உருவாக்குங்கள். எங்கும் பாடல்கள் ஒலிக்கட்டும். தூரிகைகள் வரைய ஆரம்பிக்கட்டும். காவியங்கள் பிறக்கட்டும். இசை பெருகட்டும். கூத்துக் கலைஞர்களுக்குக் கொட்டகை அமைத்துக் கொடுங்கள்.

நடிப்பிசைக் கலைஞர் அன்றைக்கு மீண்டும் என்னிடம் கேட்டார். ‘ஓ பூனையே, தயவு செய்து சொல். அடுத்தப் பிறவியில் நான் நவாப் ராஜமாணிக்கமா?’

நான் அவர் மடியின்மீது ஏறி அமர்ந்துகொண்டேன். அவர் என்னை வருடிக் கொடுத்தார்.

‘இந்தப் பூனை நமக்கு அந்நியன். ஆனால் இது வந்ததில் இருந்து நமக்கு இருந்த எலித்தொல்லை ஒழிந்தது. இன்னொரு அந்நியன் இம்மண்ணுக்கு வரப் போகிறான். அப்போது நாமே ஒழிந்து போகப் போகிறோம்.’ என்று சொன்னார்.

‘மன்னர்கள் எல்லோரும் பூனைகளாகிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்றார் ஆறாம் திண்ணைக்காரர்.

அவர்கள் அப்போது குடித்திருந்தார்கள். இல்லாவிட்டால் அதையே நான் வேறு விதமாகத் திருத்திச் சொல்லிக்கொடுத்திருப்பேன்.

ஒரு பூனை ஏன் மன்னனாகிவிடக் கூடாது?

[வெளிவரவுள்ள பூனைக்கதை நாவலில் இருந்து ஓர் அத்தியாயம்]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter