எனக்கு மட்டும் எழுத வராமல் போயிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வேன். முன்பெல்லாம் ஒரு துறவியாக, அல்லது ஒரு பொறுக்கியாக ஆகியிருப்பேன் என்று தோன்றும். அந்த இரண்டாவது சிந்தனை இப்போது இல்லை. மிக நிச்சயமாக ஒரு பொறுக்கியாகத்தான் போயிருப்பேன்.
சிறு வயது முதலே என் அந்தரங்க விருப்பம் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் வகுப்பில் இருந்தபோது என்னோடு படித்த மாணவன் ரவிக்குமார் ஒருநாள் என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு சொக்கலால் ராம்சேட் பீடியை எடுத்துப் பற்ற வைத்துப் புகைத்தான். எனக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் அச்சம் தடுத்தது. நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியராக என் தந்தையே இருந்தார். கண்டிப்புக்கும் தண்டனைகளுக்கும் பெயர்போன மனிதர். அவரால் வீட்டிலும் தலைமை ஆசிரியராகத்தான் இருக்க முடிந்தது என்பது என் அச்சத்தின் நியாயத்தை எனக்கு உணர்த்தியது.
அன்றைக்கு நான் அந்த சொக்கலால் ராம்சேட் பீடியைப் புகைத்துப் பார்க்கவில்லை. ஆனால் பலநாள் என் மனத்துக்குள் புகைத்துத் தீர்த்திருக்கிறேன். பின்னாளில் எனக்குச் சரியாகப் படிப்பு வராது போனபோது, என்னை ஒரு பொறுக்கி என்று அறிவித்துக்கொள்ள ஒரு சொக்கலால் ராம்சேட் பீடி எளிதாக உதவி செய்யும் என்று தோன்றியது. ஆனால் நான் பொறுக்கியாகத் தீர்மானித்திருந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாகத் தலைமை ஆசிரியர் ஒரு தந்தையாக மாறிவிட்டிருந்தார்.
வாழ்வின் எளிய தருணங்கள் எவ்வாறு கலையாகின்றன என்பது முதல் முதலில் எனக்குப் புரிந்தது அப்போதுதான்.
இந்தத் தொகுப்பில் உள்ள நாவல்கள் எதுவும் ஒரு பேருலகை உங்களுக்குச் சுட்டிக்காட்டாது. முன் சொன்ன எளிய தருணங்களை மட்டும்தான் எழுத்தில் தொட்டுப் பார்க்க முயற்சி செய்திருக்கிறேன். தொடர்கதையாகவும் நேரடி நாவலாகவும் – அந்தந்தச் சமயத்தில் தோன்றும் விதங்களில் எல்லாம் எழுதியிருக்கிறேன். எழுத்தில் என் நோக்கம், எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டும்தான். ஏனெனில், உண்மையிலேயே அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது.
இது ஓர் அழகிய அறியாமை. நிச்சயமாகப் பாசாங்கில்லை. வாழ்வின் வாசகனாக சௌகரியமாக ஓரிடத்தில் பொருத்திக்கொள்ள முடிந்துவிட்டால் வாசித்துக்கொண்டே இருந்துவிட வேண்டியதுதான். அடிக்கோடு இடுகிற வழக்கம் இருக்கிறவன் கோடு போட்டுக்கொண்டு போவான். இவை நான் போட்ட கோடுகள். அவ்வளவுதான்.
இந்தக் கதைகளில் பல பத்திரிகைத் தொடர்களாக வெளிவந்தவை. அலகிலா விளையாட்டு, முழு நாவலாக எழுதப்பட்டு அதன்பின் இலக்கியப் பீடம் மாத இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. புவியிலோரிடம் மட்டும் நாவலாக எழுதப்பட்டு, நாவலாகவே வெளிவந்தது.
திரும்பிப் பார்க்கும்போது என் பெரும்பாலான கதைகள் கல்கியிலேயே வெளிவந்திருக்கின்றன. கல்கியில் எழுதுவது குறைந்தும் நின்றும் போனபின்பு கதையல்லாத எழுத்திலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். அந்த மாற்றத்தையும் ரசித்தேதான் அனுமதித்திருக்கிறேன். அதுவும் போதும் என்று தோன்றியபோது மீண்டும் கதைகளின் உலகுக்குத்தான் திரும்பியிருக்கிறேன்.
ஆனால் சுற்றிச் சுற்றி எங்கே போனாலும் சொற்களால் நிறைந்த உலகில்தான் என்னால் பாதுகாப்பாக வாழ முடியும் என்று தோன்றுகிறது. சொல்லை இசையாகவும் மௌனமாகவும் மொழிபெயர்க்க முடிந்துவிட்டால் முடித்துக்கொண்டு விடலாம்.
தனித்தனி நூல்களாக முன்னர் வெளிவந்த இந்நாவல்களில் சில, பல காலம் அச்சில் இல்லாமல் இருந்தன. அச்சில் இருந்த சில, விற்காமல் இருந்தன. இவற்றை மொத்தமாகத் தொகுத்து, ஒரே நூலாகக் கொண்டு வரலாமென்று தோன்றியது. தமிழ்ச் சூழலில் இது விபரீதமான யோசனைதான்.
அதனாலென்ன. விபரீதங்களும் அழகுதான்.
இந்நாவல் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த நண்பர்கள் பத்ரி, ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
[சிமிழ்க்கடல் பெருந்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை]
சமர்ப்பணம்
இந்நூலைப் பார்த்திருந்தால் என் தந்தை மிகவும் பரவசப்பட்டிருப்பார். இன்று அவர் இல்லை. எஞ்சியிருக்கும் அவரது நினைவுகளுக்கு இதை சமர்ப்பணம் செய்கிறேன்.