கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!

'நீங்கள் New Horizon Media Private Limited' என்ற பெயரில்தான் பபாசியில் உறுப்பினராகியிருக்கிறீர்கள். எனவே உங்கள் அரங்க முகப்பில் அந்தப் பெயரைத்தான் பலகையில் வைக்க முடியும். கிழக்கு பதிப்பகம் என்று திருத்த முடியாது.’

முந்தைய வருடங்களில் எல்லாம் அப்படித்தானே இருந்தது என்று பிரசன்னா குழுவினர் வாதாடிப் பார்த்து வெறுத்துப் போய்த் திரும்பியிருக்க, [‘முன்ன இருந்திருக்கலாம் சார். இப்ப புது கமிட்டி. புது ரூல். பேரை மாத்த முடியாது!’] சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்குப் பெயர்ப்பலகை இல்லாத குறையை, தமிழக முதல்வர் கலைஞரின் தொடக்க விழாப் பேச்சு சுத்தமாகப் போக்கிவிட்டது.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து, பொதுமக்களைக் கண்காட்சி வளாகத்துக்குள் அனுமதித்த மறுகணமே, ‘எங்கே அந்த சென்னை வரலாறு புத்தகம் கிடைக்கும்? யார் வெளியிட்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டபடியே வர ஆரம்பித்துவிட்டார்கள். பெயர்ப்பலகையை மாற்றி வைத்து அலகிலா விளையாட்டு நிகழ்த்திய அமைப்பாளர்களே கிழக்குக்கு வழி சொல்ல வேண்டியதானது.

கலைஞருக்கு நன்றி. இத்தனைக்கும் அவர் குறிப்பிட்டது Madras Rediscovered ஆங்கில மூலப் புத்தகத்தை. அதற்குத்தான் சென்ற ஆண்டு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்டபோது அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் வெளியிட்டிருக்கவில்லை.

‘என் பெயரால் வழங்கப்படும் விருதினை நீங்கள் வழங்கிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தில் மிகக் கவனமாக என் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று நூலுக்கு விருது கொடுக்கும்போது, வரலாறு சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா?’ என்று பபாசி விருது கமிட்டியை ஒரு பிடி பிடித்தபடிதான் ஆரம்பித்தார்.

விஷயம் சற்று சுவாரசியமானது. முத்தையாவின் Madras Rediscovered புத்தகத்தின் பின்னிணைப்பாக ஒரு கால வரிசை இடம்பெற்றிருக்கிறது. அதில் தி.மு.க ஆட்சிக்கு வந்த வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் கலைஞர் பதவியேற்ற விவரம் இருக்காது. அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த விவரம் வரும்போது எம்.ஜி.ஆர். முதல்வரான தகவல் இருக்கும். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஜானகி முதல்வரான விவரம் இருக்கும். திரும்பவும் கலைஞர் முதல்வரான தகவல் இருக்காது. அம்பேத்கர் பெயரால் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்ட விவரம் இருக்கும். தொடங்கி வைத்தவர் கலைஞர் என்று இருக்காது.

கலைஞரின் குற்றச்சாட்டு இதுதான். ‘நான் என்ன தவறு செய்தேன்? தமிழனாகப் பிறந்தது தவறா? ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாகப் பிறந்தது தவறா? இந்தக் கருணாநிதியை ஏன் சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்தார்கள்? அப்படி இருட்டடிப்பு செய்த புத்தகத்துக்கு நீங்கள் முந்தைய ஆண்டு என் பெயரால் வழங்கப்படும் விருதினை அளித்திருக்கிறீர்கள். இருந்தாலும் எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும். வாசிப்பு பிடிக்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் பக்கத்தில் உட்காரத்தான் மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு நீங்கள் என்னை அழைக்காதிருந்தாலும் நானாக வந்து முன் வரிசையில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருப்பேன். [சென்ற ஆண்டு கலைஞர் வரவில்லை. அப்துல் கலாம் வருவதாக இருந்து, அவரும் வரவில்லை.] ஒரு எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கக்கூடிய விருதுகளும் கௌரவங்களும்தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. என் ஆட்சியை  யார் பாராட்டினாலும் எனக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுவதில்லை..’ என்றெல்லாம் வெகு உருக்கமாகப் பேசிவிட்டு, தான் பேசியது யாரையாவது வருத்தியிருந்தால் பொறுத்தருளக் கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

*

முத்தையாவின் புத்தகத்தில் கலைஞர் குறிப்பிட்ட விடுபடல்கள் இருப்பது உண்மையே. ஆனால் அந்நூல், தமிழகத்தின் அரசியல் வரலாற்று நூல் அல்ல. சென்னை நகரின் வரலாறைச் சொல்லும் புத்தகம் அது. கலைஞர் பெயர் மட்டுமல்ல. காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் போன்றவர்களின் பெயர்களும் அந்த நூலில் உள்ள கால வரிசையில் இருக்காது.

மூல நூலில் உள்ள அதே கால வரிசைதான் எங்களுடைய தமிழாக்கத்திலும் உள்ளது.

விருது கமிட்டி, ஆங்கில மூலத்துக்குத்தான் பரிசளித்திருந்தது என்றபோதிலும், கலைஞர் வாசித்தது நாங்கள் வெளியிட்ட ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதியைத்தான். அவர் தமது பேச்சில் குறிப்பிட்ட பக்க எண்ணை வைத்து இதனைச் சொல்ல முடியும்.

கலைஞரை எதற்காகவோ சந்திக்கப் போயிருந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்த நூலை அவருக்குப் பரிசளித்திருக்கிறார். நூல் கைக்கு வந்த அன்றிரவே அதை முழுமையாகப் படித்து முடித்ததாகக் கலைஞர் சொன்னார்.

‘சரித்திர நூல்தான். நல்ல ஆய்வு நூல்தான். பரிசளித்தது ஏன் என்று நான் கேட்கவில்லை, பரிசளித்ததைக் குறை சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரி விடுபடல்களை தேர்வு கமிட்டி கவனிக்கக்கூடாதா?’ என்றுதான் கலைஞர் கேட்டார்.

விளைவு, தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை வாசகர்களும் எங்கே அந்தப் புத்தகம் என்று உள்ளே பாய்ந்துவிட்டார்கள்!

இதனால் அறியப்படும் நீதி 1: சரித்திரம் எழுதுவது பேஜாரான காரியம். விடுபடல்கள் தவிர்க்க முடியாதவை. எனவே கண்டனங்களையும் குட்டுகளையும்கூட.

இதனால் அறியப்படும் நீதி 2: கண்டனங்கள் அமோகமான விற்பனையைக் கொடுக்கும். நிறுவனத்தின் பெயர்ப்பலகையை வைக்கக்கூட அனுமதி கிடைக்காவிட்டாலும்.

Share

20 comments

 • கிழக்கு
  சூரியனின் பார்வையில் புத்தக கண்காட்சியின் முதல் நாளிலிருந்தே ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது 🙂
  வாழ்த்துக்கள்!

 • யார் மறைக்க நினைத்தாலும், மறைத்தாலும் கிழக்கின் திசையை சூரியன் காட்டிக் கொடுத்துவிட்டது.

   இந்த வருட கண்காட்சியில் விற்பனையாகும் சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகதை மார்க்கெட்டிங் செய்த கலைஞருக்கு  கிழக்கு பதிப்பகம் கமிஷன் தருமா? 🙂 ஹா ஹா ஹா…

 • யார் மறைக்க நினைத்தாலும், மறைத்தாலும் கிழக்கின் திசையை சூரியன் காட்டிக் கொடுத்துவிட்டது.

   இந்த வருட கண்காட்சியில் விற்பனையாகும் சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகதை மார்க்கெட்டிங் செய்த கலைஞருக்கு  கிழக்கு பதிப்பகம் கமிஷன் தருமா? 🙂 அல்லது அவர் பாணியில் இதயத்தில் இடம் மட்டும் தானா? இதயம் இனித்தது கண்கள் பனித்தது.
  ஹா ஹா ஹா…

 • பேஷ்… பேஷ்.. எல்லாம் ம(ஞ்சள்)ங்களகரமாகத் தொடங்கியிருக்கிறது போல, வாழ்த்துகள். சொன்னபடி சூட்டோடு சூடாக பதிவையும் போட்டு விட்டீர்கள். சூப்பர் மேன்தான். ’ஜன கண மண’ என்று தேசியகீதம் பாடுவதற்கு முன்னாலேயே மக்கள் கூட்டம்  காட்சி வாயிலுக்குச் சென்று வழியை அடைத்து நின்றதைப் பார்த்தேன்.
  சரி, கலைஞர் குறைப்பட்டுக் கொண்டதில் என்ன தவறு? எம்.ஜி.ஆர். பெயர், ஜானகி அம்மையார் பெயர் எல்லாம் இருக்கும் போது அவர்களுக்கெல்லாம் முன்னாலேயே முதல்வர் பதவியில் அமர்ந்த அவர் பெயர் எப்படி விடுபட்டுப் போக முடியும்? ஒருவேளை, அப்போது மதராஸ் மாகாணமாகவோ அல்லது ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியாகவோ இருந்ததா சென்னை?
  நீங்கள் விளக்கினால் நல்லது. இல்லாவிட்டால் நாளை புத்தகத்தை வாங்கி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.
  இந்தமுறையும் வழக்கம் போல் விற்பனையில் சாதிக்க வாழ்த்துகள்.
   

 • அருமையான அலசல்.

  கிழக்கு விற்பனையில் முதலிடம் பிடிக்க வாழ்த்துகள்.

   

 • Dear sir ,
                 I am a great admirer of your books ,which date you will come to BOOK FARE and Which Stall?
  Regards 
  pithan
   
   

 • முதல்வர்களின் பெயரை சரியாக வெளிப்படுத்தாத நூல் எப்படி தலைநகரின் வரலாற்றைச் சொல்வதாக  இருக்க முடியும்?  முத்தையா ஒரு எழுத்தாளர் தானே தவிர வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்ல. ஆனால் அவரை ஏதோ ஒரு வரலாற்று நிபுணர் போல ஊடகங்கள் சித்தரித்து சென்னையின் வரலாற்றுக்கே பெரும் ஊறு விளைவிக்கின்றன. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில் முன்பு இருந்தது என்பதையும் அவர் நன்றாக இருட்டடிப்பு செய்துள்ளார்.

 • கிழக்குக்கும் சூரியனுக்கும் நல்ல ராசி இருப்பதை அறிந்து சந்தோஷம்.
  இங்கே அமெரிக்காவில், பல கம்பெனிகளுக்கு -dba (doing business as) என்பது மிகச் சாதாரணமான ஒரு வசதி. New Horizon Media கம்பெனியின் 'dba' கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகம் பெயரில் பலகை வைக்கக்கூடாது என்று படுத்துவதெல்லாம் அறிவீனம், முட்டாள்தனமான, கடைந்தெடுத்த red tapism.
  அரசாங்கத் துறைகளில் மட்டுமே இருந்து வந்த இந்த அசிங்கம் பல தரப்பட்ட இந்திய தனியார் கம்பெனிகளிலும் இப்போது வெகுவாகப் பரவி இருப்பதை நான் நேரடியாகக் கண்டு, 'அனுபவித்து' எரிச்சலுக்கு உள்ளாகிறேன். சாதாரணமாக, ஒரு கம்பெனியில் ஒரு காசோலை வாங்கவேண்டுமானால் கூட, காசோலை கொடுங்கள் என்று ஒரு கடிதம், காசோலை தரப் போகிரோம் என்றொரு மறு கடிதம், காசோலை பெற்றுக்கொண்டோம் என்றொரு (தருவதற்கு முன்னாலேயே!) பதிவு, காசோலை பெற்றுக்கொண்டேன் என்றொரு ….. அய்யோ சாமி, அபத்தம் தாங்க முடியல!
  அமெரிக்காவில் Paperwork Reduction Act (1995) என்றொரு சட்டமே இருக்கிறது. சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ள சட்டம். இந்தியாவில் இது போன்ற ஒரு சட்டம் எப்போது வரும்? 

 • பெரியவர் வழக்கம் போல் புலம்பியிருக்கார்  என்று தான் நினைத்தேன். முழுதாய் படித்த பிறகு தான் தெரிந்தது அவர் சொல்வதும் உண்மைதான் என்று. ஜானகி இராமச்சந்திரன் பேரைக் குறிப்பிட்டு இவர் பேரைக் குறிப்பிடாதது தற்செயல் என்று தோன்றவில்லை. இதைப் படிக்கும்  ஏன் இந்த மனிதர் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று தான்  தோன்றுகிறது. அதனால் அவர் பேரில் ஒரு அனுதாபமும். (அந்த அனுதாபத்தை அவர் வாயால் அவரே கெடுத்துக் கொள்வார் என்பது வேறு விடயம் ). ஆனால் இதன் பின்னால் இருக்கும் காரணங்கள் நியாயமானதாக இருக்க சந்தர்ப்பங்கள் மிக குறைவு. மூக்கு சுந்தர் ஒரு முறை அவர் பதிவில் எழுதியிருந்தது தான் ஞாபகத்திற்கு வந்தது.
  நான் இன்னும் மேல் குறிப்பிட்ட புத்தகம் படிக்கவில்லை.

 • விடுபட்டது "கலைஞர் பெயர் மட்டுமில்லை" என்பது நொண்டிச்சாக்கு . எந்தத் தமிழன் எப்படி மோசமாக சென்னையின் வரலாற்றை  எழுதினாலும் விடுபட முடியாத பெயர் அது. அதுவும் ஜானகி அம்மையாரைவிடவும்  மறந்துவிட்ட பெயராக  பதிவு செய்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
  அடுத்தபதிப்பில் சரி செய்யப்படும் என்பதினை ஆசிரியர் கிழக்கின் மூலம் அறிவிப்பதுதான், எழுதியவர், பதிப்பித்தவர் படிப்பவர் எல்லோருக்கும் கெளரவம்
  வீ. ரமணன்.

 • தலைப்பு நல்லா இருக்கு. 🙂
   
  கருணாநிதியின் பெயர் விடுபட்டிருப்பது சரியானதல்ல. ஆனால் ஆங்கில மூல நூலிலேயே அப்படி இருந்தால் மொழிபெயர்ப்பாளர் ஒன்றும் செய்யமுடியாது. கருணாநிதியின் வருத்தம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரே ரக புலம்பலான, நான் தமிழன் என்பதாலா நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாலா என்பதெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. வேறு ஏதேனும் புதியதாகக் கண்டுபிடித்துக்கொண்டால் நல்லது.
  உளியின் ஓசை போல நல்ல படத்துக்குத்தான் விருது போய்ச் சேரவேண்டும் என்று கருணாநிதி நினைப்பதில் குற்றம் காண ஏதுமில்லை!

 • நூல் பதிப்பாளர்களின்  நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள  ஒரு சங்கம் ,அதனுடைய உறுப்பினரிடமே 'சட்டம்' பேசும் அழகு, எல்லாத்துறையிலும் உள்ள 'அரசியலின்' கொடுமையை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்துறைகளுக்கே உரித்தான இந்த அபத்தம் தனியார் அமைப்புகளிலும் ஊடுருவியிருப்பது சம்பந்தப்பட்ட துறைகளின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாகவே முடியும்.
  ஆனால் இந்தத் தடையைத் தாண்டி, EAST OR WEST, "EAST" IS THE BEST, என்று சொல்ல வருகிறீர்கள் போலிருக்கிறது. 🙂
  சமீப காலங்களில் பபாசிக்கும் கருணாநிதிக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. 'நான் நன்கொடையாக அளித்த பணத்தில் விருது அளிக்கப்பட்டதை ஒரு மரியாதைக்கு கூட எனக்குச் சொல்லவில்லை' என்று கடந்து ஆண்டுகளில் குற்றஞ்சாட்டினார். பின்னர் நூல் அரசுடமையாக்கும் விஷயத்திலும் சில பதிப்பகங்களுக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

  ஆனால் இம்முறை கருணாநிதி வருத்தப்படுவதில் மிகுந்த நியாயமுண்டு. தன்னை ஒரு 'எழுத்தாளராக' நிறுவிக் கொள்ள அவர் எப்போதுமே சற்று முனைப்பு காட்டுவார். அதுவும் ஜெயமோகன் அவரை நவீன இலக்கிய அடிப்படையில் ஏற்றுக் கொள்ளாதது மனக்குறையை ஏற்படுத்தியிருக்கும். இப்பேர்து அரசியல்வாதி எனும் அடிப்படையில் கூட நிராகரிக்கப்படுவது முறையற்றது. முத்தையாவின் விவரத் தொகுப்பு தற்செயலானதாக தெரியவில்லை. திட்டமிட்ட இருட்டடிப்பாகத்தான் தெரிகிறது. காமராஜ் போன்றவர்களின் பெயர்கள் இல்லை என்று கூறி இதை நியாயப்படுத்தி விட முடியாது. விரும்புகிறோமோ இல்லையோ, சமகால அரசியலில் கருணாநிதி ஒரு முக்கியமான ஆளுமை.

  ராகவன் உங்களிடம் நேரடியாக ஒரு கேள்வி. தெளிவுப்டுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன்.

  தமிழாக்கத்தின் போது 'கிழக்கு'  ஆசிரியர் குழு எவ்வாறு இதை தவறவிட்டது என்பது புரியவில்லை. ஆங்கில நூலில் இருப்பதை – தவறாகவோ அல்லது முழுமையற்ற தொகுப்பாகவோ இருந்தாலும் – அப்படியேதான் தமிழ்ப்படுத்த முடியுமா? ஆங்கில நூலாசிரியருடன் கலந்து பேசி திருத்தப்பட்ட பதிப்பாக தமிழில் வெளியிட முடியாதா?

  சற்று தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

 • கிழக்கு புத்தகங்களை யார் படிக்கிறார்களோ இல்லையோ? கலைஞர் படித்துவிடுகிறார். முன்பு தசாவதாரம் விழாவின் போது ஜாக்கிசான் குறித்து அவர் பேச கிழக்கு வெளியிட்ட புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது.
  சூரியனுக்கும், கிழக்குக்கும் தொடர்பு விட்டுப் போகுமா என்ன?
  அடுத்ததாக மலர்மன்னனின் ‘திமுக ஏன் தோன்றியது?' நூலை யாரையாவது விட்டு கலைஞருக்கு பரிசளிக்கச் சொல்லவும் 🙂

 • முதல் நாளே காற்று கிழக்கு பக்கமாக வீசியது குறித்து மகிழ்சி. வாழ்த்துகள்.
  ஒரு சிறு தகவல் வேண்டும் – கண்காட்சியில் கார்ட் ஸ்வைப் செய்யும் வசதி ஏற்பாடாகி விட்டதா? முந்தைய வருடங்களில் சில முறை முதல் இரண்டு நாட்களுக்குள் கார்டை நம்பி வந்து பின் வெளியே சுற்றி சுற்றி தேடி ஏடிஎம் கண்டுபிடிக்கும் துரதிர்ஷ்டத்துக்கு ஆளான முன் அனுபவம் காரணமாகவே இந்த விசாரிப்பு.

  • லஷ்மி: எல்லா கடைகளிலும் கார்ட் தேய்க்கும் வசதி இல்லை. ஆனால் கிழக்கு கடைகளில் உண்டு. இரு தினங்களாக நானே நோட்டு நோட்டாகத் தேடிக் கொடுத்துப் புத்தகம் வாங்கி வெறுத்தே போய்விட்டேன். தமிழ் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் இன்னும் கற்காலத்தில்தான் உள்ளார்கள். கார்ட் காலத்துக்கு வரவில்லை.

 • கலைஞர் சொல்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. கிழக்கு, 'சென்னை மறு கண்டுபிடிப்பு' புத்தகத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சி செய்யுமா? கிழக்கன் அனைத்து புது வெளியீடுகளும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

  • சென்னை மறு கண்டுபிடிப்பு நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். மொழிபெயர்ப்பில் பதிப்பாளர் விருப்பத்துக்கேற்ற திருத்தம் என்பது சாத்தியமில்லாதது. மூல ஆசிரியரின் அனுமதி இருக்குமானால் / கிடைக்குமானால் செய்யலாம்.

 • தாத்தாவை இந்த வயசுல அழுக வைக்காதீங்க..!

  தயவு செஞ்சு அதுல திருத்தம் பண்ணி அவருக்குக் கொஞ்சம் நிம்மதியைக் கொடுங்க..!

  பாவம்.. வயசானவரு..! ஏதோ பார்த்து செய்யுங்க சாமிகளா..!!!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter