இன்றைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியின் நியாயமான முதல் நாள். மழை, டிராஃபிக் ஜாம், பேரணி, அரசியல்வாதிகள் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாத வேலைநாள். மதியம் இரண்டு மணிக்குக் கண்காட்சி தொடங்கியது. பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் முதல் நாளுக்கே உரிய நியாயமான நல்ல கூட்டம்.
நெரிசலற்ற தினம் என்பதால் இன்றைக்குப் பணி ரீதியில் அல்லாமல் என் சொந்த விருப்பத்துக்காகச் சுற்றுவது என்று முடிவு செய்து இரண்டே கால் மணி முதல் ஏழரை மணி வரை சுற்றினேன். அதற்குமேல் முடியவில்லை. சென்ற வருடம் அடிபட்ட கால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று திரும்ப வலித்ததால், நிறுத்திக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டேன். நண்பர் குரு அதே சமயம் அலைந்து முடித்து அங்கே வந்து சேர்ந்ததால், இருவரும் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவு எழுதும் நண்பர்கள் சிலர் எங்களுடன் கலந்துகொண்டார்கள். ஒன்பது மணிக்குப் புறப்பட்டு வீடு சேர்ந்து மொபைலை எடுத்துப் பார்த்தால் 96 ஹேப்பி நியூ இயர். 96 பேருக்கும் மானசீகத்தில் ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டு இதனை எழுதுகிறேன்.
* நான் வாங்க உத்தேசித்திருந்த புத்தகங்களுள் பலவற்றை இன்று வாங்கிவிட முடிந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. திட்டத்தில் இல்லாத சில புத்தகங்களையும் வாங்கினேன். தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறை வாசிக்க வேண்டுமென்று வெகு நாளாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று வாங்கினேன். ஆய்வாளர் அ.கா. பெருமாள் எழுதியது. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலய வரலாறும் அவர் எழுதியிருக்கிறார். அதை வாங்காததன் நுண்ணரசியல் என்ன என்று வசந்தகுமார் சீண்டினார். நல்ல வேளையாக அருகில் இருந்த நாஞ்சில் நாடன் காப்பாற்றினார். அக்கறையும் அர்ப்பணிப்புணர்வும் தோய்ந்த அவருடைய ஆய்வு எழுத்துகள் எனக்குப் பிடிக்கும். அதைவிட திருவட்டாறு கோயில் மிகவும் பிடிக்கும். [தமிழினி, விலை ரூ. 190]
* கோரக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை உரை [இரண்டு பெரும் பாகங்கள். விலை 175 ரூபாய். புத்தகத்தின் அளவோடு ஒப்பிட்டால் இது விலையே அல்ல. இலவசம் என்றுதான் சொல்லவேண்டும்.] அநேகமாக என்னிடம் எல்லா கீதை உரைகளும் உள்ளன. திலகர், வினோபா போன்ற சிலர் வழங்கிய கீதை விளக்க சொற்பொழிவுகளின் நூல் வடிவமும் உண்டு. இதை மட்டும் ஏன் வாசிக்காதிருப்பானேன் என்று வாங்கினேன்.
* உயிர்மையில் ஜெயமோகனின் லோகி நினைவுகள் – மதிப்பீடுகள், நிகழ்தல் – அனுபவக் குறிப்புகள். அவரது இணையத்தளத்தில் இந்தக் கட்டுரைகளை எழுதியபோதே ரசித்து வாசித்துவந்தேன். முழுமையாக மீண்டும் வாசிக்க விரும்பியதால் இவை. தமிழினியில் ஜெயமோகனின் காந்தி கட்டுரைகள் தொகுப்பு வந்திருக்கிறது. ஆனால் வசந்தகுமார், கண்ணதாசன் பதிப்பக பாணியில் பிளாஸ்டிக் பேப்பர் சுற்றிக் கட்டியிருந்ததால் திறந்து பார்க்க வழியில்லாமல் போய்விட்டது. நாளைக்குப் பிரித்த பிரதிகள் ஒருசிலவாவது எடுத்து வையுங்கள் என்று மிரட்டிவிட்டு வந்தேன். பொதுவாக பார்சல் செய்யப்பட்ட புத்தகங்களை ஏனோ எனக்குத் தொடக்கூடப் பிடிப்பதில்லை.
* சந்தியா பதிப்பகத்தில் சில நல்ல வரலாற்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. பாபர், அக்பர் போன்றோரின் வாழ்க்கைக் குறிப்பு நூல்கள் அவற்றுள் முக்கியமானவை. யுவான் சுவாங்கின் இந்தியப் பயணம் என்ற புத்தகத்தை அங்கே வாங்கினேன்.[ரூ. 140] இது முதல் பகுதி மட்டுமே. இன்னொரு பாகம் விரைவில் வரும் என்று சொன்னார்கள்.
* திருவட்டாறு புத்தகம் வாங்கிவிட்டுக் கொடுத்த காசுக்கு பாக்கி கொடுக்கச் சில்லறை இல்லை என்று சொல்லி வசந்தகுமார் எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் இரண்டு அருமையான புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார். [இருபது வருஷங்கள், பகல் கனவு.] இதில் இருபது வருஷங்கள் நாவலை நான் ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். என்னிடம் ஒரு பிரதியும் உள்ளது. எனவே இந்தப் பிரதியை நல்லவர் யாருக்காவது அன்பளிப்பாகத் தர உத்தேசித்திருக்கிறேன்.
* அஹமதியாக்கள் குறித்த ஒரு புத்தகம், போருக்குப் பிந்தைய இராக்கின் நிலை பற்றிய ஒரு நூல், டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டின் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு என்ற புத்தகம் – மிச்சத்தை மூட்டையிலிருந்து பிரித்து எடுத்ததும் சாவகாசமாக எழுதுகிறேன்.
* எங்களுடைய ஸ்டால்களைப் பொருத்தவரை – கிழக்கில் முகிலின் முகலாயர்களும் ச.ந. கண்ணனின் இடி அமினும் ராஜிவ் கொலை வழக்குக்கு அடுத்தபடி சூப்பர் ஹிட் என்று தோன்றியது. நாளைக்கு விசாரித்தால் சரியான கணக்கு தெரிந்துவிடும். திருச்சி புக் ஹவுஸ் அரங்கில் உள்ள பிராடிஜி – மினிமேக்ஸ் புத்தகங்களுள் மினிமேக்ஸ் சமையல் புத்தகங்கள் பிசாசு வேகத்தில் விற்றுத் தீர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். கிழக்கு ஆரம்பித்த நாளாக எனக்கும் பத்ரிக்கும் ஒரு பெரிய ஏக்கம் உண்டு. நம் கடைக்குப் பெண்கள் அதிகம் வரமாட்டேன் என்கிறார்களே என்பதே அது. மினிமேக்ஸ் சமையல் அந்தக் குறையைத் தீர்த்தது. கடை முழுக்கப் பெண்கள் குவிந்து நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இன்றைக்கு அதைப் பா ர்த்து ரசிக்க பத்ரி வரவில்லை.
* அடையாளம் ஸ்டாலில் கோணங்கியின் எழுபது சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது [சலூன் நாற்காலியில் சுழன்றபடி]. பேப்பர் பேக் புத்தகக் கட்டமைப்புக் கலையில் இந்நூல் ஒரு மைல்கல் என்பேன். சாதிக் என்ற மனிதர் எப்பேர்ப்பட்ட கலைஞன் என்பதை இந்நூலின் கட்டமைப்பு உணர்த்தும். ஐயோ கோணங்கியா என்று யாரும் அஞ்சவேண்டாம். அவருடைய தொடக்ககாலக் கதைகள் அனைத்தும் இதில் உள்ளன. எனவே புரியும். கு.ப.ராவின் முழுச் சிறுகதைகள் தொகுப்பும் அடையாளத்தில் வந்திருக்கிறது.
* இம்முறை சிறுவர்களுக்கான பதிப்பு நிறுவனங்கள் அதிகம் வரவில்லை போல் இருக்கிறது. மிகக் குறைந்த அளவு சிறுவர் கடைகளே கண்ணில் பட்டன. நேற்றுவரை நான் கேள்விப்பட்டிராத சில புதிய பதிப்பு நிறுவனப் பெயர்ப்பலகைகளையும் பார்த்தேன். அவ்வண்ணமே சாமியார்கள் ஆதிக்கமும் சற்றுக் குறைந்திருப்பதுபோல் தோன்றியது. ஒருவேளை கடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இவை பரவலாக வேறு வேறு இடங்களிலும் இருந்து என் கண்ணில் சரியாகப் படவில்லையோ என்னவோ.
* கேண்டீன். தயவுசெய்து வீட்டிலிருந்து எதையாவது சாப்பிட எடுத்து வந்துவிடுங்கள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்டீன் மிகவும் மோசமாக உள்ளது. 30, 35, 50 ரூபாய் விலைகளில் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன. ஆனால் எதுவும் சொல்லத்தரமாக இல்லை. தவிரவும் உட்கார்ந்து சாப்பிட வசதி செய்யப்படவில்லை. விக்கலெடுத்துச் செத்தாலும் சாகலாம், தண்ணீர் வேண்டுமானால் காசு கொடுத்து பாட்டில்தான் வாங்கியாகவேண்டும் என்கிறார்கள். அரங்குக்குள்ளே சில டீக்கடைகள், ஜூஸ் கடை ஒன்று உள்ளது. லிச்சி பழச்சாறு அருமையாக இருக்கிறது. தேநீரும் ருசியாக இருக்கிறது.
* இன்றைக்குக் கால் வலிக்க வலிக்க மற்ற கடைகளைச் சுற்றிவிட்டேன். நாளை முழுவதும் கிழக்கு அரங்கில் இருந்து வேடிக்கை பார்க்க உத்தேசித்திருக்கிறேன். நாளை விடுமுறை நாள் என்பதால் காலை 11 மணி முதலே கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டமும் இணைவதால் கூட்டம் அலைமோதும் என்று நினைக்கிறேன்.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
நான் ரொம்ப நல்லவன்னு ஊர்ல சொல்லிக்கறாங்க பாராஜி! புக்கை என் பேர் போட்டு ஒரு நாலு வரி எழுதித் தனியா எடுத்து வெச்சுடுங்க இப்பவே!
ஆரம்பித்த நாளாக எனக்கும் பத்ரிக்கும் ஒரு பெரிய ஏக்கம் உண்டு. நம் கடைக்குப் பெண்கள் அதிகம் வரமாட்டேன் என்கிறார்களே
🙂
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பா.ரா நிறைய புத்தகங்கள் வரவேண்டும் உங்களிடமிருந்து.
//பொதுவாக பார்சல் செய்யப்பட்ட புத்தகங்களை ஏனோ எனக்குத் தொடக்கூடப் பிடிப்பதில்லை.//
பார்சல் செய்யப்பட்ட எல்லா புக்குமா? நம்பும்படியா இல்லையே!! 😉
நல்லா இரும்!!!
இதுவரை கால் வலிக்க கண்காட்ச்சியில் சுற்றிய எனக்கு தரையில் உட்கார்ந்து இன்று உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி. HAPPY NEW YEAR SIR.:)
பா.ராகவன் சார், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இந்த வருடமும் கண்காட்சியில் கிடைக்கின்றனவா?
எங்களுடைய பிராடிஜி அரங்கில் (திருச்சி புக் ஹவுஸ் அரங்கம்) அமர் சித்ரக் கதா கலெக்ஷன் கிடைக்கிறது. வேறு எங்கே என்ன என்று தெரியவில்லை. அதாவது கண்ணில் படவில்லை.
ராகவன் சார்,
நீங்கள் வாங்கிய பகவத் கீதை உரை கிடைக்கும் ஸ்டால் பெயரை அல்லது எண் குறிப்பிட்டால்,வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
கார்த்திகேயன், அது கோரக்பூர் கீதா பிரஸ் அரங்கில் கிடைக்கிறது. வாசலிலேயே தெரியும். கோவிந்தா மஞ்சளில் மலை மலையாக அடுக்கியிருப்பார்கள்.
தகவலுக்கு நன்றி !
புத்தகம் வாங்கி விட்டேன்.
// திருச்சி புக் ஹவுஸ் அரங்கில் உள்ள பிராடிஜி – மினிமேக்ஸ் புத்தகங்களுள் மினிமேக்ஸ் சமையல் புத்தகங்கள் பிசாசு வேகத்தில் விற்றுத் தீர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்//
அடடா இந்த பதிவை முன்னமே பார்க்காமல் போய் விட்டேனே…நேற்று என் மனைவி சில சமையல் புத்தகங்களை பார்த்து வாங்கச் சொன்னாள்..கிழக்கு ஸ்டாலில் இருப்பவர்களை கேட்ட போது சமையல் புத்தகம் இல்லை என்றல்லவா தகவல் தந்தார்கள்..பிராடிஜி-மினிமேக்ஸ் பற்றி சொல்லியிருந்தால் நான் போய் பார்த்து வாங்கியிருப்பேனே 🙁
கிழக்கு has lost a potential buyer in me yesterday (although not a huge deal)..
பிறகு வேறு ஒரு ஸ்டாலில் தாமுவின் சமையல் புத்தகத்தை வாங்கினேன்..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me