பூனைக்கதை – ஒரு மதிப்புரை [ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி]

பூனை பேசுமா ? அதன் போக்கில் ஒரு நெடுங்கதையை அது சொல்லுமா ?  அதுவும் காலத்தைக் கடந்து அல்லது காலத்தை வென்று ஒரு பூனை இருக்குமா ? அப்படி இருந்தாலும் அது தான் தேர்ந்தெடுக்கும் மக்களோடு உரையாடுமா ? 

ஏன் நடக்காது. பேசும் மிருகங்களை நாம் புராணங்களில் பார்க்கிறோம், நீதிக்கதைகள் முழுவதும் அவை வந்துகொண்டேதானே இருக்கிறது. ஆனால் ஒரு நவீன நாவலில் பேசுகின்ற மிருகத்தை இப்போது பல ஆண்டுகளாக நாம் பார்ப்பதே இல்லையே. அந்த வகையில் இது ஒரு புதுவிதமான முயற்சி. 

ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டுதான், ஆனால் இருவேறு காலகட்டங்களை இணைப்பதற்கு ஒரு பூனையைப் பயன்படுத்தும் சுதந்திரம் உண்டா என்று எனக்கு திட்டவட்டமாகத் தெரியவில்லை. இருவேறு காலகட்டமா, இல்லையே புத்தர் காலத்தில் தொடங்கி ராமானுஜர் காலத்தைத் தொட்டு, பாபரின் அந்திமக்காலத்தில் கைவைத்து – மன்னிக்கவும் கதையை நகர்த்துவது பூனை என்பதால் கால்வைத்து என்பதுதான் சரியாக இருக்கும் – அவுரங்கசீப் காலத்தில் நடக்கும் முதல்பாகம். அங்கே இருந்து எந்த உயரத்தில் இருந்து விழுந்தாலும் அடிபடாமல் விழும் வித்தை தெரிந்த பூனை போல மெகாசீரியல் காலமான நிகழ்காலத்திற்கு வந்துவிடுகிறது கதை.

முகலாயப் படைகள் தக்காண சுல்தான்களைத் தாக்கத் தொடங்கும் காலத்தில் ஆரம்பமாகிறது கதை. வரப்போகும் பேரழிவில் இருந்து கலைகளைக் காக்கும் பொருட்டு ஆறு கலைஞர்களை அவர்களின் ஞானத்தை பின்னெப்போதோ வரவிருக்கும் மக்களுக்காக பாதுகாக்க எண்ணிய ஒரு ஜமீன்தார். அறிவு என்பது தகுதியான அனைவருக்கும் என்பது மாறி பிறப்பின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் நடக்கிறது கதை. 

ஆனால் அதற்கும் அடங்காமல் தானாகவே உருவான – சுயம்புவாகக் கற்றுத் தேறிய  கலைஞர்கள், தங்களின் கலையை பதிவு செய்ய அவர்களின் முயற்சி  மரணத்தின் வாயிலில் நிற்கும்போதும் சுயநலத்தினால் துரோகம் செய்யத் தூண்டும் மனித மனதின் விசித்திரப் போக்கு. இது முதல் பாகம்.

அநேகமாக இதுவரை பதிவுசெய்யப்படாத தொலைக்காட்சி நெடுந்தொடர் தயாரிப்பின் பின்புலம் இரண்டாம் கதையின் களம் கனவுத்தொழிச்சாலைக்கு நுழையும் வழியாகவோ அல்லது அங்கே நுழைய முயன்று அது முடியாதவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தனியான உலகம், அதன் சவால்கள், துரோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் அதன் நடுவே சிலச் சில சந்தோஷங்கள் என்று கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கையின் வழியாக நகர்கிறது இது.

இருக்க இடமும்,  வாழ்க்கையை நடத்தும் பணத்திற்கு யோசிக்க வேண்டிய தேவையும் இல்லாமல் கலைக்காகவே தனது நேரத்தை செலவு செய்யும் யோகம் முதல்பாகத்தில் வரும் கலைஞர்களுக்கு கிடைத்து விடுகிறது. இரண்டாம் பாகத்தில் வரும் பாத்திரங்களுக்கு அவர்களின்  நம்பிக்கை மட்டுமே ஊன்றுகோலாக இருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் நடந்த கதையை இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் பாராவுக்கு பூனையே விவரிக்கிறது. அதை ஆவணப்படுத்த ஆசிரியரை அது வேண்டிகொள்கிறது. ஆசிரியர் பாரா இதில் ஒரு பாத்திரமாகவே வருகிறார்.கதையை தனது விருப்பப்படி நகர்த்த இது ஒரு நல்ல யுக்திதான். சில இடங்களில் அவரது சுயவாக்குமூலம்களும் தென்படுகின்றது 

“அவனுக்கு அந்தத் தயாரிப்பாளர் ஒரு தொகையை முன்பணமாகக் கொடுத்தார். அதுநாள் வரை அவன் பார்த்திராத தொகை. பெரும் பணம். அருமை. கிள்ளிக் கொடுக்கவும் யோசிக்கும் கலைகளுக்கு இடையே அள்ளிக்கொடுக்க ஒரு கலை வடிவம். இதை விடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டான். தனது நாவலை முற்றிலும் மறந்துவிட்டு அந்தத் தொடருக்கு அவன் கதை வசனம் எழுத ஆரம்பித்தான்.” 

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை தொலைகாட்சி நெடுந்தொடருக்கு ஏன் செலவிடுகிறார் என்ற கேள்வியை எழுப்பும் மக்களுக்கு போகிறபோக்கில் பதில் சொல்லிச் செல்கிறார்.

கலைஞர்களைப் பராமரிக்கும் தனியார்கள் இல்லாமல் நிறுவனங்கள் வழியேதான் கலைகளை முன்னெடுக்கவேண்டும் என்ற இன்றய நடைமுறை உண்மையை ” இது சரியாக வரும். அமைதியாக இருந்து வேடிக்கை பார். நிறுவன பலமில்லாமல் எந்தக் கலை வடிவமும் மக்களிடம் போய்ச் சேரக் காலம் இப்போதெல்லாம் இடம் தருவதில்லை” என்று பதிவு செய்கிறார். அப்படியான நிறுவனங்களை நடத்துபவர்களின் நம்பிக்கையைப் பெற பல நேரங்களில் கலைஞர்கள் தங்கள் சுயமதிப்பை இழக்கத்தான் வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சாராயம் குடிக்கும் பூனை. அதனை ” சார்” என்று மரியாதையாக அழைக்கவேண்டியுள்ள மனிதர்கள். பலருக்கு கொடுமையாத்தான் இருக்கிறது வாழ்க்கை. 

பூனையின் கண்களின் வழியே புலனாகும் உலகமும், மனிதர்கள் பார்க்கும் உலகமும் ஒன்றாக இருக்கவில்லை. சரிதானே நாம் அனைவரும் வெவ்வேறு உலகங்களைத்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தொட்டும் தொடாமலும் விரியும் கதைக்களத்தின் நடுவே உருவாகும் கேள்விகள் இந்தப்படைப்பை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. வறுமையும் பசியும் பல மனிதர்களின் கனவுகளைக் கலைத்துப்போடும் இரக்கமற்ற முகத்தையும் வாழ்க்கை தன்வசம் வைத்துள்ளது. எந்தத் துறையானாலும் வெற்றிபெற்ற ஒவ்வொரு மனிதர்க்குப் பின்னால் ஆயிரமாயிரம் தோல்விக்கதைகள், நிறைவேறாத கனவுகள், ஏமாற்றத்தினால் சின்னாபின்னமான உறவுகள். ஆனாலும் எதோ ஒரு நம்பிக்கை எல்லார் வாழ்க்கையையும் நகர்த்திக்கொண்டு செல்கிறது. கனவுகள் கலைந்து வயிற்றுப் பிழைப்புக்காக எதோ ஒன்றை அது பிடிக்கிறதோ இல்லையோ உயிர் வாழ செய்யத்தான் வேண்டியுள்ளது. 

வழக்கம் போல பாராவிற்கே உரித்தான மெலிதான நகைச்சுவை ஊடும் பாவுமாக இந்தப் படைப்பு முழுவதும் வருகிறது.

” நான் எழுதி முடித்ததும் இந்த நாவலை ஒரு பூனைக்கு சமர்ப்பணம் செய்யப்போகிறேன் ” என்று கதைக்குள் கூறும் பாரா இந்த நாவலை கொஞ்சம் பூசினாற்போல உள்ள ஹரன் பிரசன்னாவுக்கு சமர்ப்பித்து உள்ளார்.

நல்ல படைப்பு – நன்றி பாரா.

 

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading