வெங்காயம், பூண்டு

உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பது / சேர்க்காதது குறித்துச் சில நாள்களாக நிறைய கருத்துகள் கண்ணில் படுகின்றன. எல்லாம் அட்சய பாத்திரத்தின் அருள். அந்த இரண்டும் கெட்டது என்று நினைக்கக்கூடியவர்கள் இன்று அநேகமாக யாரும் இல்லை. ஆசாரம் என்று சொல்லி பூண்டு வெங்காயத்தை ஒதுக்கி வைத்த தலைமுறை இன்றில்லை. உண்மையில் பூண்டு வெங்காயம் மட்டுமல்ல. நிலத்துக்கு அடியில் விளையும் எதையுமே உணவில் சேர்க்கக்கூடாது என்பதுதான் ஹண்ட்ரட் பர்சண்ட் ஆசாரம். அந்த வகையில் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி தொடங்கி வேர்க்கடலை வரை எதுவும் கூடாது. [இந்த ஆசாரத்தை இன்று பேலியோ வேறுவிதமான அறிவியல் காரணங்களுக்காக வலியுறுத்துகிறது. ஆனால் அதுவுமே பூண்டு வெங்காயம் மட்டும் சேர்க்கலாம் என்கிறது.]

சன்னியாசிகள் சில ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்தவும் திடீர் கிளுகிளுப்புத் தாக்குதல்களுக்கு ஆளாகாதிருக்கவும் தமது உணவில் சில நியமங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள். உதாரணமாக, நான் மயிலை ராமகிருஷ்ண மடத்துக்கு ரெகுலராகச் சென்றுகொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த பிரம்மச்சாரிகள், சன்னியாசிகளின் உணவைக் கண்டிருக்கிறேன். காய், கூட்டு, கீரை, பருப்பு, சாம்பார், ரசம் எல்லாம் இருக்கும். ஆனால் எதுவுமே பார்த்ததும் சுண்டி இழுக்கும் வண்ணமயமாக இராது. உண்ணும் பதத்தில் வேகவைத்து உப்புப் போட்டுப் பிசைந்திருப்பார்கள். அவ்வளவுதான். காரம் இருக்கும். ஆனால் மிக மிக மென்மையான காரம். பெரிதும் மிளகு சார்ந்தது. மிளகாய் சார்ந்ததல்ல. சமைப்பவர்கள் பெரும்பாலும் கர்நாடகத்தில் இருந்து அப்போது வருவார்கள் என்பதால் சகட்டுமேனிக்கு அனைத்திலும் வெல்லத்தைப் போட்டு வைத்துவிடுவார்கள். வெல்லம் போட்ட குழம்பை மனுஷன் தின்பானா? சன்னியாசிகள் உண்ணுவார்கள்.

எனக்கு ஹரே கிருஷ்ணா பிடிக்கும் (கண்டிஷன்ஸ் அப்ளை). என் நண்பர் ஒருவர் சென்னை ஹரே கிருஷ்ணாவில் சன்னியாசியாக இருக்கிறார். சன்னியாசிகளின் உணவொழுக்கம் குறித்து அவருடன் சில சமயம் பேசியிருக்கிறேன். ஒருமுறை அவரது குருமகராஜ் சாம்பார், சட்னி தொட்டுக்கொண்டு ரவா தோசை சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன். அதில் எல்லாம் என்ன தவறு? ஒன்றுமே இல்லை. பசிக்கு உணவு. அது எதுவாக இருந்தால் என்ன?

நானறிந்த இன்னொரு சன்னியாசிக்கு (இவர் யதியிலும் வருவார்) உருளைக்கிழங்கு என்றால் உயிர். ‘வெறுங்கிழங்குக்கே இப்டி சொல்றிங்களே. வெங்காயம் சேந்தா எப்டி இருக்கும் தெரியுமா?’ என்று அருகே இருந்து சீண்டியிருக்கிறேன். முறைத்துவிட்டு அமைதியாகிவிடுவார். மடங்களின் கட்டுப்பாடுகளை கொஞ்சம்போல் அவ்வளவு எளிதாக மீறிவிட முடியாது. (மொத்தமாகத்தான் மீறலாம்.)

சரி, அது அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை. அதில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தரும் உணவில் வெங்காயம் பூண்டு இருந்தால் என்ன? இரண்டுமே ரத்த சுத்திகள். இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. வெங்காயச் சாறு பல வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இன்றுவரை உள்ளது. புகை பிடிப்பவர்கள் தினமும் மூன்று வேளை வெங்காயத்தை அரைத்து, சாறெடுத்து அருந்தி வந்தால் நுரையீரல் அசுத்தங்கள் நீங்கும் என்று ஒரு ஆயுர்வேத மருத்துவர் சொன்னார்.

பூண்டு, வெங்காயத்தை விடவும் விசேடமானது. பலப்பல வியாதிகளுக்கு அது ஒரு மௌன மருந்து. சிறுநீர்ப்பை கற்களை நீக்க, கைகால் நடுக்கங்கள் போக, வாயுத் தொல்லை நீங்க, தொற்றுக் கிருமிகளைக் கொல்ல – இன்னும் நிறைய உண்டு. ஒவ்வொரு நாள் உணவிலும் நான்கு பல் பூண்டு சேர்க்க முடியுமானால் போதும். இதையே சமைக்காமல் பச்சையாக உண்ண முடிந்தால் பரம விசேடம். என் மனைவி, உணவைச் சமைத்து முடித்துவிட்டு, பூண்டை நறுக்கி மேலே தூவிக் கலந்துவிடுவார். சமைக்காத பூண்டு, ஆனால் தனியே நாறாது.

பள்ளிப் பிள்ளைகளையெல்லாம் சத்வ குண சீலர்களாக்க ஏராளமான வழிகள் உள்ளன. உணவு விஷயத்தில் இருந்து அதை ஆரம்பிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. மற்றொன்று, திணிக்கப்படும் எதுவும் நிலைக்காது என்பது இயற்கை விதி. குழந்தைகளுக்குப் பூண்டு வெங்காயம் உணவில் சேர்க்கப்படவில்லை என்பது கூட அநேகமாகச் சாப்பிடும்போது தெரியாமல் இருக்கலாம். புனிதம் நீங்காத அந்த அறியாமையை அடுப்பில் போட்டுச் சமைத்தால் வந்துவிடுமா சத்வ குணம்?

ஒதுக்கல்கள் இல்லாமல் நிறையக் காய்கறிகள், தேவையான ப்ரோட்டின், குறைவான அளவில் கார்போஹைடிரேட். முடிந்தால் தினமொரு முட்டை. இது மதிய உணவாகுமானால் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். வெங்காயம் பூண்டே கூடாதென்னும்போது முட்டைக்கு எங்கே போக?

நான் முட்டை தொடுவதில்லை. அதற்கு அப்பால் உள்ள எந்த ஒரு புலால் உணவையும் என்றும் உண்டதில்லை. ஆனால் என் உணவின் சரி விகிதத்தைக் காய்கறிகள், கீரைகள், நட்ஸ், சீஸ், பனீர் கொண்டு அமைத்துக்கொண்டுவிட முடிகிறது. யாராவது ஆரோக்கிய டிப்ஸ் கேட்டால் முதலில் முட்டையைத்தான் சொல்வேன். நமக்கு வள்ளலார் வழி என்றால் வந்தவர் என்ன பாவம் செய்தார்? எனவே ஒருவேளை முட்டை, மறுவேளை காய்கறிகள், கீரை, மூன்றாம் வேளைக்கு சிக்கன் மட்டன் என்று சொல்லி அனுப்புவேன். எண்ணி மூன்று மாதங்களில் அவர் நீரிழிவு குறைந்து, ஹைப்பர் டென்ஷன் குறைந்து, எடை குறைந்து சிக்கென்று வந்து நிற்பார். பல முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது.

இதெல்லாம் பள்ளிகளில் சாத்தியமில்லை; குறிப்பாக அட்சய பாத்திரத்தில் சாத்தியமில்லை என்பதை அறிவேன். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் வெங்காயம் பூண்டு வேண்டாம் என்ற கொள்கையை மட்டும் காசிக்குப் போய் விட்டுவிடுங்கள் என்பதுதான்.

ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். இம்முறை அட்சய பாத்திரத்துக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு, அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது வேறு ஒரு மத அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ போகுமானால் இந்த உணவொழுக்கம் தொடருமா? யோசிக்கலாம்.

வெங்காயம் பூண்டு உண்ணாத ஓர் இந்துகூட இன்று இல்லை என்னும்போது வம்படியாக இந்து சாமியார்களுக்கு மட்டுமான டயட்டை எல்லா மதங்களையும் சார்ந்த பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை.

(ஃபேஸ்புக்கில் எழுதியது)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading