முதுகு வலி, கழுத்து வலி

இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார்.

மணிக் கணக்கில்லாமல் உட்கார்ந்து எழுதுவோருக்கு இவ்விரு பிராந்தியங்களும் வலிக்கத்தான் செய்யும். வலியைக் குறைத்துக்கொள்ள சில உபாயங்கள் உள்ளனவே தவிர, அறவே இல்லாமல் போகச் செய்ய என்ன உபாயம் என்று யாராவது கருணையுள்ள மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் (பேலியோவுக்கு முன்பு) எழுதும்போது எனக்கு இந்தப் பிரச்னை மிக அதிகம் இருக்கும். அரை மணிக்கு ஒருமுறை தரையில் படுத்துப் புரண்டு சிரம பரிகாரம் செய்துகொண்டு மீண்டும் எழுந்து அமர்ந்து எழுதுவேன். நிகரற்று அகன்று உருண்டு திரண்ட எனது தேகப் பெருந்தூண் வலிக்காதிருந்தால்தான் வியப்பு என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் வலியில் துடிக்கும்போது பின்னாளில் வந்து சேரப் போகிற நோபல் பரிசை நினைத்துக்கொள்வேன். அப்படியே தூங்கிவிடுவேன். பேலியோ பயிலத் தொடங்கி, எடை குறைய ஆரம்பித்தபோதே இந்த வலியின் வீரியம் சிறிது மட்டுப்படத் தொடங்கியது. ஆனால் இல்லாமல் இல்லை. எழுதும் மேசையின் உயரம்தான் வலிக்குக் காரணமாக இருக்கும் என்று ஒருநாள் நினைத்தேன். அன்றே எனது மேசையின் கால் அளவுகளை வெட்டினேன். சரியாக என் கைகள் நீண்டு தொடும் தூரத்திலேயே கீ போர்ட் வருகிற உயரத்தில் (எனக்கு இது இரண்டு அடி. பொதுவாக நமது மேசைகள் இரண்டரை அடி உயரம்) அமைத்துக்கொண்டேன்.

இதில் வேறொரு சிக்கல் வந்தது. முதுகு வளையாமல் எழுத இது வசதியாக இருந்தது உண்மையே. ஆனால் மானிட்டர் சிறிது கீழே இருப்பதால், புகைப்படங்களுக்காக நாணப்படும் மணப்பெண்ணின் குனிந்த தலை தோரணையிலேயே நாளெல்லாம் இருக்கவேண்டியிருந்தது. இது கழுத்து வலியைக் கடுமையாக்கியது. எனவே வோலினி, டி.எஃப்.ஓ ஸ்பிரேக்கள் அன்றாட உபயோகப் பொருள்களாயின. எழுத ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஒன்றும் இருக்காது. அதன்பின் லேசாக வலி தொடங்கும். மூன்று மணி நேரம் கடந்தால் கொன்று எடுத்துவிடும்.

என்ன செய்தால் இந்த வலிகளில் இருந்து விடுதலை பெறலாம் என்று அறிய நான் மருத்துவர்களைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, என் தொழில் போட்டியாளர்களான ஹாருகி முரகாமி, ஓரான் பாமுக் போன்றோரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். முரகாமி ஒரு பெரிய மாரத்தான் வீரர். உலகறிந்த ஓடுகாலியாகப் பெயரெடுத்திருக்க வேண்டியவர், தவறிப் போய் எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் எழுதுவதற்கான ஆயத்தங்களில் மிக முக்கியமாக அவர் சொல்வது, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல். ஒவ்வொரு நாளும் இதனைத் தவறாமல் செய்வதால்தான் தன்னால் வலிகள் இல்லாமல் உட்கார்ந்து எழுத முடிகிறது என்கிறார். தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் நானறிந்து நடைப் பயிற்சியை ஒரு கலையாகப் பயின்று, ஒரு நாளும் தவறாமல் செய்யும் எழுத்தாளர், சாரு. என்ன ஒன்று, நடந்துவிட்டு மகா முத்ராவுக்குப் போய் காப்பி டிபன் சாப்பிட்டுவிடுவார். ஓரான் பாமுக்கும் கிட்டத்தட்ட சாருவைப் போலத்தான். இரண்டு மணி நேரம் நடந்துவிட்டு, அரை மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு சாப்பிட்டுவிட்டு எழுத உட்காருவதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த விதத்தில் முற்றிலும் மாறுபட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. காலை கண் விழித்து எழுந்ததும் பல்லைக்கூட விளக்காமல் உட்கார்ந்து சிறிது நேரம் எழுதுவார். அதன் பிறகுதான் காலைக்கடன், நடை, குளியல் இன்னபிற. ஒரு நாளின் முதல் வேலை எழுத்தாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. ஆனால் என்னவானாலும் இவர்கள் யாருக்கும் நடை அல்லது ஓட்டம் இல்லாமல் ஒரு நாள் இல்லை.

முதுகு மற்றும் கழுத்துவலி என்பது எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அச்சம் தரத்தக்க உபாதைகள். ஏனெனில் எழுத்து வேலையை அப்பட்டமாக நிறுத்தி வைக்கக்கூடிய வல்லமை இவற்றுக்கு மட்டுமே உண்டு. என்ன நடந்தாலும், ஓடினாலும் ஒரு ஓரத்தில் இவை இரண்டும் இருந்துகொண்டே இருக்கும். என்னளவில் இந்த வலிகளின் வீரியத்தைக் குறைக்க நான் கையாளும் உபாயங்கள் இவை:

1. தினமும் ஒரு மணி நேரமாவது நிதானமாக நடப்பது. (இதை அவ்வப்போது விட்டுவிடுவேன். எழுத்துவேலை அதிகரிக்கும்போது மீண்டும் தொடங்குவேன்.)

2. நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது. (எழுதும்போது காயம் காய்ந்துவிடக்கூடாது என்பது முக்கியம். பல வியாதிகளுக்கு அதுவே முதற்காரணம்.)

3. எழுத்து வேலை அதிகமுள்ள தினங்களில் கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுப் பொருள் எதையும் கிட்டே சேர்க்காதிருப்பது. (இதனால் மந்தத்தனம் இராது)

4. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வேலையை நிறுத்திவிட்டு எழுந்து நின்று ஒரு தேசியகீதம் பாடும் நேரத்துக்கு நிற்பது; அல்லது அறைக்குள்ளேயே சிறு நடை.

5. செண்டிமெண்ட் என்று சொல்லிக்கொண்டு புராதனமான மர நாற்காலி அல்லது பிளாஸ்டிக் சேரைப் பயன்படுத்தாதீர். வசதியாக குஷன் வைத்த சுழல் நாற்காலியே நெடுநேரம் அமர்ந்து எழுத உகந்தது.

6. அரை மணிக்கொரு தரம் எழுதுவதை நிறுத்திவிட்டு, தலையை அண்ணாந்து நாற்காலியின்மீது பதித்து, கண்மூடி ஒரு மூன்று நிமிடங்கள் அப்படியே இருப்பேன். ரிவால்விங் சேர் என்பதால் லீவரை இழுத்துவிட்டால் அப்படியே வளைந்து சலூனில் சவரத்துக்கு வளைத்து வைப்பது போல வளைத்துக்கொள்ளலாம். இதுவும் வலி வீரியத்தைக் குறைக்கிறது.

7. அனைத்துக்கும் மேலே இருக்கவே இருக்கிறது வோலினி மற்றும் டி.எஃப்.ஓ ஸ்ப்ரே.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter