என்னுடைய நிலமெல்லாம் ரத்தத்தில் பாலஸ்தீனியர் பகுதிகளில் யூதர்கள் எப்படிப் பரவி நிறைந்தார்கள் என்று விரிவாக எழுதியிருப்பேன். ஏழைகளுக்கு வங்கிகளால் தர இயலாத அளவுக்குக் கடன் கொடுத்து, அடைக்க வேண்டிய காலம் கடக்கும்போது கடனுக்கு ஈடாக நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு விடுவார்கள். இது ஒரு வழி. இரண்டாவது, ரைட் ராயலாகவே ஒரு பெரும் தொகையைச் சொல்லி, அதற்கு நிலங்களை விற்கச் சொல்லிக் கேட்பார்கள். பணம் கிடைத்தால் அதைவைத்துப் பல மடங்கு நிலங்கள் வாங்கலாமே என்று எளியவர்கள் அவ்வலையில் விழுவார்கள். இதெல்லாம் நடக்கும்போதே யூத மருத்துவர்கள், யூதப் பள்ளி ஆசிரியர்கள், யூத செவிலியர்கள் ஒவ்வொரு குடும்பமாகக் குறி வைக்கப்பட்ட பிராந்தியத்துக்குப் ‘பணி நிமித்தம்’ இடம் பெயர்ந்து போவார்கள். தாற்காலிகப் பணி என்று சொல்லி வீடெடுத்துத் தங்குவார்கள். காலப்போக்கில் பணியும் வாழ்வும் அங்கு நிரந்தரமாகிவிடும். அது நிகழும்போது முன்சொன்ன நில பேரங்களும் முடிந்து மொத்த நிலமும் யூதர்களுக்குச் சொந்தமானவை ஆகியிருக்கும். பாலஸ்தீன அப்பம் தொடக்கத்தில் பங்கு போடப்பட்டது இப்படித்தான். பிறகு மேல்மட்டத் தலைவர்கள் நிலையில் பேச்சு வார்த்தைகள், வார்த்தை தடிப்புகள், போராட்டங்கள், யுத்தங்கள். வெற்றிகள். எல்லை வகுப்பு. ராணுவம். எப்போதும் பதற்றம். ஊடுருவலைச் சத்தமின்றிச் செய்யும் கலையாக இதனை வார்த்தெடுத்து உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்களே.
பின்னாளில் இலங்கையில் இதே ரக ஊடுருவல் வேறு வடிவில் அரங்கேறியது. தமிழ்க் குடியிருப்புகளின் மத்தியில் சில திடீர் சிங்களக் குடியிருப்புகள் தோன்றும். உரிய பாதுகாப்பு அவர்களுக்கு இருக்கும். படிப்படியாக அக்குடியிருப்புப் பகுதிகள் பெருகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் தமிழர்கள் வேறு இடம் தேடிப் போகவேண்டிய நிலை வரும்.
பாலஸ்தீனம், இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இந்த ஊடுருவி உரிமை கொண்டாடும் கலாசாரம் வெற்றிகரமாக இன்றளவும் வாழ்கிறது. நாடு – நிலம் – அரசியல் தளத்தில் இது நடப்பதால் செய்தியாகிறது. உலகுக்குத் தெரிய வருகிறது. போராட்டங்கள், எதிர்ப்புகள் என என்னென்ன முடியுமோ மக்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் இதே ரக ஊடுருவல் – ஒரு குறிப்பிட்ட தொழில் துறையில் – கடந்த சில ஆண்டுக் காலமாகவே தமிழகத்தில் நடப்பது தெரியுமா?
உணவுத் துறை.
நான் தமிழகம் முழுவதுமுள்ள அத்தனை ஊர் ஓட்டல்களிலும் சாப்பிட்டவன் இல்லை. ஆனால் சென்னையில் சுமார் எண்பது சதவீத உணவகங்களை எனக்குத் தெரியும். முன்னொரு காலத்தில் இங்கே இந்திக்கார பானிபூரிவாலாக்கள் சாலை ஓரங்களில் சைக்கிளில் சமைத்துக் கொண்டு வந்து விற்றார்கள். பிறகு அவர்களே சாலை ஓரங்களில் சிறு தட்டிகள் மட்டும் கட்டிக்கொண்டு ஒரு பெஞ்சின் மீது பானிப் பானைகளை அடுக்கிவைத்து வியாபாரம் செய்தார்கள். ஒரு தோசைக்கல். சில பன் பாக்கெட்டுகள். ஏற்கெனவே சமைத்து எடுத்து வந்த பாவ் எனப்படும் சைட் டிஷ். வெள்ளமாக நெய்யை அள்ளி ஊற்றி பாவ்பாஜி சுட்டுக் கொடுத்தார்கள். வியாபாரம் எல்லா இடங்களிலும் சூடு பிடிக்கவே நாமும் செய்தால் என்ன என்று தமிழ் உணவாளர்களும் இதைச் சமைத்தளிக்கப் பார்த்தார்கள். அப்போது ஒரு பிரசார இயக்கம் மேற்கொள்ளப் பட்டது. ‘ஆயிரம் சொன்னாலும் இந்திக்காரன் கடை பானிபூரி டேஸ்ட் நம்மாளுங்க கடைல இல்ல.’
ஒரு புளித்தண்ணீரில் அப்படியென்ன ருசியைக் கண்டார்கள். தெரியவில்லை. ஆனால் காலக்கிரமத்தில் பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி என்றாலே இந்திக்காரக் கடைதான் என்றாகிவிட்டது.
பிறகு அவர்கள் இனிப்புக் கடைகளின்மீது கண் வைத்தார்கள். ஸ்வீட் கடைகள் மித்தாய்க் கடைகளாயின. குஜராத்தி, ராஜஸ்தானி, வங்காள இனிப்புகள். அவற்றின் வண்ணமய அணிவகுப்பில் உள்ளூர்ச் சரக்குகள் பின் தங்கிப் போயின. லட்டு என்றாலும் மோத்திசூர் லட்டுதான் ருசி என்றார்கள். ஜாங்கிரி அவுட் டேட்டட். சுடச் சுட லாலா ஜிலேபி சுட்டு இறக்குகிறான் பார். ஒரு துண்டு கடித்தால், ஒரு கிலோவுக்குக் குறைந்து நிறுத்த மாட்டாய். ரச மலாய், பால் பேடா. பாஸந்தி, காஷ்மீரி குல்கந்த், காஜர் கா ஹல்வா, குல்ஃபி, கீர், பேசன் கா லாடு, காஜு கத்லி, மால்புரா, பிர்னி, ரப்ரி, ஷீரா, ஷிங்கோரி, அம்ரிதி, சம்சம். பெயரளவில் நாம் அறிந்த இவையெல்லாம் கடையளவில் நிறையத் தொடங்கியபோது நமது பாரம்பரிய ஸ்வீட் ஸ்டால்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இனிப்பு சேட்டுகளுக்கு இடம் பிடிப்பதும் சிரமம் இல்லை, வாடிக்கையாளர்களும் குறைவில்லை.
இனிப்பென்றாலே இவர்கள்தாம் என்றாகிவிட்ட சூழலில் மெல்ல மெல்ல அடுத்தபடியாக உணவகங்களில் வடவர் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்று தற்செயலாக மூன்று உணவகங்களுக்கு அடுத்தடுத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டது. (ஒன்றரை மணி நேர இடைவெளியில்) ஓர் இடத்தில்தான் சாப்பிட்டேன். அதை விடுங்கள். மூன்று இடங்களிலும் இருந்த அத்தனைப் பணியாளர்களும் வடவர்கள். சில வடகிழக்கு முகம் கொண்ட பெண்களும் உண்டு. அவர்களை மேய்ப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சூப்பர்வைசர்கள் சரளமாக இந்தி பேசுகிறார்கள். இந்தியில் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டக்கூடச் செய்கிறார்கள். சில தமிழ் ஊழியர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்றாலும் ஒப்பீட்டளவில் எண்ணிக்கை குறைவு எனக் கண்டேன்.
இன்னும் பரமசுத்தமாக வடபழனி முருகன் கோயில் இருக்கும் தெருவில் ஒரு நூறு சத வடவர் ஓட்டலே திறந்திருக்கிறார்கள். மருந்துக்கும் உள்ளே தமிழ் கிடையாது. தமிழர்கள் கிடையாது. சென்னா, படூரா, சமூசா, கச்சோரி, ரோஸ் மில்க், பாதாம் மில்க், நார்த்திண்டியன் லஞ்ச், ராஜஸ்தானி லஞ்ச், குஜராத்தி லஞ்ச் மற்றும் மித்தாய்கள், வடக்கத்தியப் பாணி முறுக்கு, மிக்சர் வகையறாக்கள். (மறக்காமல் கொல்கத்தா பீடா.)
ஒரு தேசத்தின் குடிமக்கள், எல்லைகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று என்ன தொழிலும் தொடங்கலாம். அவரவர் தகுதி, திறமை, சாமர்த்தியம். ஆனால் தமிழகத்தின் உணவுத் துறையைக் குறிவைத்து இப்படி ஆயிரக்கணக்கில் படையெடுத்து வந்து ஒரு கும்பல் நிரம்பியிருக்கிறது என்றால் இங்கிருக்கிற யாருமே ஏன் இதைக் கவனிப்பதில்லை? கேள்வி கேட்பதில்லை?
தமிழர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை என்னும் முதலாளித்துவ நியாயங்கள் வெறும் மொக்கை. இன்று குறைந்த சம்பளத்துக்கு இவர்கள் எடை நிறுத்து எடுத்து வந்து குவித்திருக்கும் இந்திக்கார சப்ளையர்கள் வாழ்நாள் முழுதும் அடிமாடாகவே இருப்பேன் என்று எழுதிக் கொடுத்தா வந்திருக்கிறார்கள்? இதெல்லாம் அறிமுக விலை, சிறப்புத் தள்ளுபடி மாதிரி ஆரம்ப ஜோர் என்பது கூடவா புரியாது?
உணவு, தண்ணீர், உடை, உறைவிடம் இதெல்லாம் வாழ்வாதாரங்கள். நான் கவனித்தவரை கேன் வாட்டர் சப்ளையர்கள் அநேகமாகத் தெலுங்கு பேசுவோராக இருக்கிறார்கள். அந்தப் பக்கம் அப்படி ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது போலும். கோடம்பாக்கத்தில் சென்ற வருடம் திடீரென்று நிறைய ஹிந்தி பேசும் வீட்டு ப்ரோக்கர்கள் முளைத்தார்கள். அப்போது அது பெரிதாகத் தெரியவில்லை. இன்றைக்கு என் அலுவலகம் இருக்கும் இடத்துக்கு நேர் பின்புறம் இரண்டு வீதிகள் முழுவதும் ஒரு தமிழரும் கிடையாது. எல்லாருமே சேட்டுகள். பீடாவோ பானிபூரியோ விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் குடும்பிகள். நடுத்தர மக்களின் வீடுகளாக நான் பார்த்த அனைத்துமே இடிக்கப்பட்டு பங்களாக்களாக்கப்பட்டுவிட்டன. சரியாகப் புடைவை கட்டத் தெரியாத சேட்டுப் பெண்கள், பிராந்தியக் குழந்தைகளுக்கு ஹிந்தி வகுப்பெடுத்து, அபாக்கஸ் வகுப்பெடுத்தே இந்தளவு சாதித்துவிட்டிருக்கிறார்கள்.
இது ஒரு எளிய பிரச்னையாக இப்போது தோன்றலாம். என் கணிப்பு சரியென்றால் 2025ம் ஆண்டு சென்னையில் ஓர் உணவகத்தில்கூட நீங்கள் தமிழ் பேசும் ஒரு நபரையும் காண இயலாது. சோறு வேண்டுமென்றால் அவர்கள் அறிந்த இந்தியில் நீங்களும் நானும் கேட்டாக வேண்டும். முடியாது என்று அடம் பிடித்தால், சரி எழுந்து போ என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் எழுந்து போகும் இடமும் இன்னொரு இந்திக்காரக் கடையாகத்தான் இருக்கும்.
எனக்கென்னவோ இது மொழியை உணவின் வழியே உள்ளே செலுத்தும் உத்தியாகத் தோன்றுகிறது. இது கொரோனோவைக் காட்டிலும் பயங்கரம். உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் தமிழர் உணவு என்ற ஒன்றே உணவகங்களில் இல்லாமல் போய்விடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.