பொன்னான வாக்கு – 02

ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் கோடம்பாக்கத்திலிருந்து வீடு மாற்றிக்கொண்டு வேறொரு பிராந்தியத்துக்குக் குடி வந்தேன். வந்ததிலிருந்து எனக்கு இருந்த ஒரே பெரும் பிரச்னை முகவரிச் சான்று. இந்த அரசாங்க ஆபீசுகளில் தன் விவர மாறுதல்களைச் செய்வது என்பது கோடி குட்டிக்கரணங்களை ஒரே மூச்சில் போடுவதைக் காட்டிலும் கஷ்டமானது. நாம் ஒரு விவரத்தை மாற்றப் போனால் அதற்கு அவர்கள் நாலு அடையாள அட்டைகளை எடுத்து வரச் சொல்லிக் கேட்பார்கள். நாலும் நாலு முகவரிகளில் இருக்கும். இல்லாவிட்டால் அப்பா பெயர் இருக்கவேண்டிய இடத்தில் தாத்தா பெயர் இருக்கும். நம் பெயருக்கு பதில் நயந்தாரா பெயர் கூட இருக்கும். அனைத்திலும் உச்சமாக நமது போட்டோவைப் பார்த்து நாமே சந்தேகப்படும்படியாக அதில் அச்சிடப்பட்டிருக்கும். அதிகாரியாகப்பட்டவர் வெகு சுலபமாக நிராகரித்து அனுப்பிவிடுவார்.

இதெல்லாம் நிறைய பார்த்து அனுபவித்திருக்கிறேன் என்கிறபடியால், இந்தமுறை முகவரி மாற்ற யாகத்தை எந்த அசுரனும் குறுக்கே புகுந்து கெடுத்துவிடாதபடி கவனமாகச் செய்துவிட முடிவு செய்தேன்.

ஆச்சா? சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் தொண்டையைச் செருமிக்கொண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. வாக்காளர் அடையாள அட்டைத் திருத்தங்கள். பெயரை மாற்ற வேண்டுமா? முகவரி மாற்ற வேண்டுமா? பிறந்த தேதியைத் திருத்தவேண்டுமா? எதையும் செய்யலாம். சுலபமாக. வருகிறது சிறப்பு முகாம். விரைவில் திருத்துங்கள். நீங்களும் திருந்துங்கள். வோட்டுப் போடத் தயாராகுங்கள். ததாஸ்து.

எனவே நான் தயாரானேன். ஏற்கெனவே நமக்கு சொப்பன சுந்தர முகவெட்டு. அரசு அடையாளாஸ்பதங்களில் அது எந்நாளும் திருஷ்டி படாமல் பதிவானதில்லை. எனவே இம்முறை ஒரு சிறு குறையும் வந்துவிடாதபடிக்கு என்னவாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட ஒரு பேரழகுப் புகைப்படத்தை (என்னுடையதுதான்) முதலில் எடுத்து வைத்தேன். பிறகு விண்ணப்பப் படிவத்தில் (ஆல் கேப்ஸ்) பெயர், தந்தை பெயர், புதிய முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கரம் சிரம் புறம் நடுங்கக் கொட்டை எழுத்தில் எழுதினேன். தேவையான சகாயச் சான்றுகளை மறக்காமல் இணைத்தேன். நல்ல நாள் பார்த்து பூஜையில் வைத்து சிறப்புப் பிரார்த்தனையெல்லாம் செய்து எடுத்துச் சென்று சிறப்பு முகாம் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வந்தாயிற்று.

மூன்று மாதத்துக்குள் அழகிய பிளாஸ்டிக் அட்டை உங்கள் வீடு தேடி வரும் சார் என்று பணிவோடு சொன்னார்கள். இது ஏதடா தேசம் திருந்தித் தொலைத்துவிட்டதோ என்று அப்போதே சந்தேகம்தான். இருப்பினும் சர்வீசுக்கே விடப்படாத அரசு இயந்திரத்தின்மீது எனக்கிருந்த அபார நம்பிக்கை, ரொம்ப எதிர்பார்க்காதே என்று அவ்வப்போது எச்சரித்துக்கொண்டிருந்தது.

ஆனால் என்ன ஆச்சரியம்? சொல்லி வைத்த மாதிரி மூன்று மாதங்களுக்குள்ளாகவே வாக்காளர் அடையாள அட்டை வந்துவிட்டது. அழகிய பிளாஸ்டிக் அட்டை. உடையாது, அழியாது, மாறாது! அட நிர்வாகம் இத்தனை சீராகிவிட்டதா! பிரமித்துப் போனேன். காரணம் அதில் அச்சாகியிருந்த என் புகைப்படம் என்னைவிட அழகாக இருந்ததுதான். தவிரவும் என் பெயர் சரியாக இருந்தது. என் தந்தை பெயரும் மிகச் சரியாக இருந்தது. முகவரியைப் பாருங்கள் என்றாள் மனைவி. ஆர்வமும் படபடப்புமாகப் படித்துக்கொண்டே வந்தேன்.

முதல் வரி சரி. அடுத்த வரி சரி. மூன்றாவது வரியில் முத்திரை பதித்துவிட்டார்கள். ஐயய்யோ தெரு பெயர் தப்பு, டோர் நம்பர் தப்பு என்று அலறினேன். பரவாயில்லை; உங்கள் பெயர் சரியாக இருக்கிறதல்லவா? அது போதும் சார். திருத்தப்படிவம் வாங்கி சரியான முகவரியை எழுதிக் கொடுத்துவிடுங்கள்; மூன்றே மாதத்தில் வந்துவிடும் என்றார்கள் அதே அற்புத அதிகாரிகள். அட்டை மூன்று மாதத்தில் வந்துவிடும், ஆனால் தேர்தல் இப்போதே வந்துவிட்டதே என்றால் பதில் கிடையாது.

எனக்காவது முகவரி. எத்தனை பேருக்குப் பெயர்க் குழப்பங்கள்! இவர்களெல்லாம் இந்த அழகிய பிளாஸ்டிக் அட்டைகளுடன்தான் வோட்டுப் போடப் போகிறார்கள். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்று நேற்று புள்ளிவிவரம் கொடுத்திருந்தார்கள். அதில் எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் பேரை அடையாளம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப் போகிறார்களோ.

மேற்படி திருத்தத் திருப்பணியை எனது பேட்டையில் மேற்கொண்டது பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்கள் என்பதுதான் துயரத்தின் உச்சம் அல்லது எச்சம்.

(நன்றி: தினமலர் 07/03/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி