ருசியியல் – 15

தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய்.வினைத்தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன். நான் ஆறாங்கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக்கொண்டிருந்தபோது இதே வினைத்தொகைக்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்தமரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி பார்க்கத் தொடங்கினார். இதெல்லாம் செய்வினை செயப்பாட்டு வினையல்ல. கர்ம வினை.

கிடக்கட்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஈரேழு பதினான்கு உலகுக்கும் ஊறுகாயை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். மத்தியக் கிழக்கு மக்கள் பேரிச்சம்பழத்தில் ஊறுகாய் போட்டு அது ரொட்டிக்குச் சேராமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஐரோப்பிய தேசத்து காரப் பிரியர்கள் வெள்ளரிக்காயில் ஊறுகாய் போட்டுப் பரிட்சை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆப்பிள் பழத்தில், அன்னாசிப் பழத்தில், வாழைக்காயில் எல்லாம் ஊறுகாய் போட சீனர்களும் மங்கோலியர்களும் முயற்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, இந்தியர்கள்தாம் ஊறுகாய்க்கு உகந்த காய்களைக் கண்டறிந்து பேரல் பேரலாக ஸ்டாக் வைத்து சாப்பிட்டவர்கள். மா, நெல்லி, எலுமிச்சையெல்லாம் ஊறுகாய்க்கென்றே அவதரித்த காய்கள் என்பது இந்தியர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பலகாலம் வரை தெரியாது. சரியாகச் சொல்லுவதென்றால் இயேசுநாதருக்கு ஆயிரத்தி எழுநூறு வருடம் மூத்தது இந்திய ஊறுகாய். மற்ற தேசத்தவர்களுக்கு இயேசு பிறந்து எழுநூறு எண்ணூறு ஆண்டுகளூக்குப் பிறகும் வெள்ளரிக்காய் ஊறுகாய் மட்டும்தான் தெரியும். நம்மாள்கள்தான் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்தே வினைத்தொகை ருசி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இந்தக் கதை இப்போது எதற்கு என்பீர்களானால் ஒரு சங்கதி இருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாயை ருசி பார்க்க வேண்டுமென்று ஓர் இச்சை.

இந்த நாகா ஜொலாகியா என்பது அஸ்ஸாமுக்கு அந்தப் பக்கம் மட்டும் விளைகிற ஒரு மிளகாய் ரகம். 2007ம் ஆண்டு வரை உலகின் அதி பயங்கரக் கார மிளகாய் என்று அறியப்பட்டது இதுவே. (இப்போது ட்ரினிடாடில் விளைகிற ஏதோ ஒரு ரகம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது)

மேற்படி நாகா ஜொலாகியாவை சும்மா நாக்கோரம் வைத்துப் பார்த்தாலே நாலு நாளைக்கு கார்க் கழண்டுவிடும் என்பார்கள். ஆனால் மேகாலயா, நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் ஆதிகுடி மக்கள் இந்த மிளகாயில் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்தி வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுவார்கள். கற்பனை செய்ய முடியாத உச்சக்கட்ட காரத்தில் அவர்களுக்கு போதை மாதிரியோ, ஞானம் மாதிரியோ என்னமோ ஒன்று அவசியம் கிடைக்கத்தான் வேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?

நான் அஸ்ஸாமுக்குப் போனபோது அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போகிற வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கொல்கத்தாவுக்கு ஒரு முறை போனபோது மேற்படி நாகா ஜொலாகியாவின் ஒண்ணு விட்ட சித்தப்பா பையன் முறை வரக்கூடிய வேறொரு மிளகாயாலான ஊறுகாயை ருசி பார்க்க வாய்த்தது.

உண்மையில் கொல்கத்தாவில் நான் உண்ண விரும்பியது ரசகுல்லா உள்ளிட்ட வண்ணமயமான வங்காளி இனிப்புகளைத்தான். மிஷ்டி தோய் என்ற இனிப்புத் தயிர் அங்கே ரொம்பப் பிரபலம். ராத்திரி வேளைகளில் வீதியோரங்களில்கூடக் கிடைக்கும். சிறிய மண் குடுவைகளில் பனங்கற்கண்டு, ஏலம் மணக்கத் தோய்த்து வைக்கப்பட்ட கெட்டித் தயிர். ஒரு நாலைந்து சிறு பானைத் தயிர் குடித்து முடித்த பிறகு என்னுடன் வந்திருந்த நண்பர் (அவர் ஒரு மராட்டியக் கவிஞர்) சட்டென்று கேட்டார், ‘இந்த இனிப்புத் தயிருக்குக் காரசாரமாக மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?’

அசப்பில் கேனத்தனமான யோசனையாகத் தெரிந்தாலும் இம்மாதிரி கிறுக்குத்தனங்களில்தான் தரிசனம் மாதிரி என்னவாவது ஒன்று சித்தித்துத் தொலைக்கும்.

‘ஆனால் கண்டிப்பாக பாக்கெட் ஊறுகாய் கூடாது!’ என்று சொன்னேன்.

‘வா என்னோடு’ என்று என்னை உள்ளூர் இலக்கியப் பிரகஸ்பதி ஒருத்தரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

நான் தமிழன். நண்பரோ சிங்க மராட்டியர். நாங்கள் பார்க்கப் போன இலக்கியவாதியாகப்பட்டவர் ஒரு வங்காள நாடகாசிரியர். தெரியாத்தனமாக எங்களுக்கு அங்கே ஒரு விருது கொடுக்கக் கூப்பிட்டிருந்தார்கள். விருதுதான் கொடுத்துவிட்டார்களே என்று, மூச்சு விட்டுக்கொண்டிருக்கிற சமயமெல்லாம் இலக்கிய விசாரம் மட்டுமேவா செய்துகொண்டிருக்க முடியும்? நமக்குப் பேரிலக்கியமானது நாக்கில் பிறந்து நெஞ்சில் நிறைவது. எழுதுவதெல்லாம் அதன் விளைவான சிற்றிலக்கியம் மட்டுமே.

எனது மராட்டிய நண்பரும் இந்த விஷயத்தில் என்னை மாதிரியான ஆசாமியாகவே இருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. மேற்படி வங்கத்து நாடகாசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் கதவைத் தட்டியபோது மணி ராத்திரி ஒன்பது இருக்கும்.

‘வாருங்கள்’ என்றார் வங்கத் தங்கம்.

‘உட்கார்ந்து பேச அவகாசமில்லை நண்பரே. படு பயங்கரக் காரத்தில் ஒரு மிளகாய் ஊறுகாய் வேண்டும். என்ன பிராண்ட் சரியாக இருக்கும்?’ என்றார் மராட்டியக் கவிஞர்.

ஏற இறங்கப் பார்த்த நாடகாசிரியர், ‘பிராண்டெல்லாம் சரிப்படாது. ஒரு நிமிடம் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு என்ன கொடுப்பது என்று அவரது தர்ம பத்தினி சிந்தனை வயப்பட்டிருக்க வேண்டும்.

‘அவர்களுக்குக் கொஞ்சம் ஊறுகாய் வேண்டும்’ என்றார் சிநேகித சிரோன்மணி.

குடிகாரப் பாவிகள் என்று அந்தப் பெண் தெய்வம் நினைத்திருக்கக்கூடும். என்ன செய்ய? ஆசை வெட்கம் மட்டுமல்ல; நளின, நாகரிக, நானாவித நாசூக்கு வகையறாக்களையும் சேர்த்து அறியாது.

கொஞ்சம் முறைத்துவிட்டு அந்தப் பெண் உள்ளே போனபோது நான் வங்காள நண்பரிடம் விளக்கம் சொன்னேன். இது சாராய சகாயத்துக்கல்ல. மிஷ்டி தோய்க்குத் துணையாகுமா என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக.

அவரும் நம்பிய மாதிரி தெரியவில்லை. மராட்டியக் கவிஞனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ‘நண்பரே, இன்றிரவு நீங்களும் எங்களுடன் மிஷ்டி தோய் சாப்பிட வரவேண்டும். ஓரிரவில் ஓரண்டா அளவுக்குத் தயிர் குடித்து கின்னஸ் சாதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்!’

அவர் மறுத்துவிட்டார். ஆனால் அன்றைய எங்கள் இரவை வண்ணமயமாக்குவதற்கு அவசியமென நாங்கள் கருதிய மிளகாய் ஊறுகாய் கிடைத்துவிட்டது. ‘இது மிஜோரம் ஸ்பெஷல் ஊறுகாய். ரொம்பக் காரம். அளவோடு சாப்பிடுங்கள்!’

அவரது மாமியார் வீடு மிஜோரத்தில் இருந்ததோ என்னமோ. கபோதிகள் போயும் போயும் ராத்திரி வேளையில் வந்து ஊறுகாய் கேட்டு நிற்கிறார்களே என்ற வினோதக் கடுப்பில் ஒரு பாலிதீன் கவர் நிறைய ஊறுகாய் அடைத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர் அந்த சதிபதியினர்.

ஊறுகாய் வந்துவிட்டது. அடுத்தது என்ன? அந்த இனிப்புத் தயிர்தான்.

நாங்கள் இருவரும் பலபேரிடம் விசாரித்து அலைந்து எஸ்பிளனேடிலேயே தலை சிறந்த மிஷ்டி தோய் கடை எது என்று தெரிந்துகொண்டு அங்கு சென்றோம். அரை ஜாண் உயரப் பானைகளுக்குள் அடைபட்ட தயிர். மேலே கோவணத்தில் பாதியளவு கொண்ட துணியால் இறுக்கிக் கட்டியிருந்தது.

‘எத்தனை பானைகள் வாங்கலாம்?’ என்றார் நண்பர்.

எனக்கு நாலு அவருக்கு நாலு என்று கணக்கிட்டு, கொசுறாக இரண்டு சேர்த்துப் பத்துப் பானை தயிர் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.

உண்மையில் அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. உச்ச இனிப்பும் உச்சக் காரமும் இணைவது ஓர் உன்மத்த நிலை என்பதை அன்று அறிந்தேன். விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

(ருசிக்கலாம்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!