பொன்னான வாக்கு – 09

ஞாயிற்றுக் கிழமை ஒரு சம்பவம் நடக்கிறது. உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் ஒருவரை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, சாதி வெறி மண்டிய தாதாக்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு பைக்கேறிப் போகிறார்கள். திங்கள் போனது, செவ்வாய் போனது, புதனும் போய்விட்டது. இதனை கௌரவக் கொலை என்று சொல்லலாமா, ஆணவக் கொலை என்று குறிப்பிடலாமா என்று வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் அதை க்ஷேமமாகச் செய்யட்டும். ஆட்சேபணையே இல்லை. ஆனால் நமது அரசியல் தலைவர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தார்களா? அம்மாவின் பொற்கால ஆட்சியில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட தமிழக நகரங்கள் அனைத்துமே அமைதிப் பூங்காதான். கொலையா நடந்தது? சேச்சே. இருக்காது. இருந்திருந்தால் அறிக்கை வந்திருக்கும். மாறாக மாண்புமிகு மகாராணி சாதிக் கட்சிக்காரர்களுடன் கூட்டணிப் பேச்சல்லவா நடத்திக்கொண்டிருக்கிறார்? யாரோ யாரையோ செல்லமாகத் தட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான். தண்டத்துக்கு ஊதிப் பெரிதாக்காதீர்கள்.

மறுபுறம் திமுக தலைவர் என்ன சொல்கிறார்? கலைஞருக்கு சமூக அக்கறை ஒரு பிடி தூக்கலல்லவா? துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க அவர் விரும்பமாட்டார். கண்டிப்பாக அவர் கண்டித்திருப்பார் என்று சல்லடை போட்டுத் தேடினாலும் நாலு வரி கூட அகப்படக் காணோம்.

அட அவருக்கு வேறு வேலையா இல்லை? அதான் ஸ்டாலின் கண்டித்துவிட்டாரே என்பீர்களானால் ஸ்டாலினின் கண்டனம் சம்பவம் பற்றியதா அல்லது சம்பவம் நடந்த பொற்கால ஆட்சியின் தலைமைப் பீடத்தைப் பற்றியதா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. ஜெயலலிதாவைத் திட்ட இது இன்னொரு சந்தர்ப்பம். முடிந்தது கதை.

இன்னொரு பிரகஸ்பதி இதெல்லாம் கருத்து சொல்லவே லாயக்கில்லாத சங்கதி என்ற ரீதியில், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது எழுந்து போயே போய்விட்டார். பிறகு போனால் போகிறது என்று ஒண்ணே முக்கால் வார்த்தையில் ஒப்புக்கு ஒரு கண்டனம்.

அட எழவே, நீ ஏன் தேர்தல் சமயத்தில் விழவேண்டும் என்பதுதான் நமது பெருந்தலைவர்களின் ஒரே பெரும் ஆதங்கமாக இருக்கிறது. கொல்லப்பட்ட இளைஞர் ஒரு தலித் என்பது அனுதாபத்துக்குரியதுதான். ஆனால் கொன்றவர்கள் ஆதிக்க சாதியினர். தவிரவும் நிறைய ஓட்டுகள் உள்ள சாதியினர். இன்னாருக்குப் போடு என்றால் போடுவார்கள். கூடாது என்றால் கிடையாது.

இப்போது, நடந்த கோரச் சம்பவத்தை என்ன சொல்லிக் கண்டிப்பார்கள்? ஏ சாதி வெறி பிடித்த மிருகங்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத்தான் முதல் ஆப்பு என்று சொல்ல நமக்கேது திராணி? கோகுல்ராஜ் சம்பவத்தின்போது அப்படிச் சொன்னார்களா? இளவரசன் மரணத்தின்போது பேசப்பட்டிருக்கிறதா? ம்ஹும்.

வன்மையான கண்டனங்களைக்கூட மென்மையான பேக்கேஜிங்கில் பொதித்துத் தரும் வல்லமை நமது தலைவர்களுக்கு உண்டு. ஆனால், இம்மாதிரியான சாதித் திமிர்ப் படுகொலைச் சம்பவங்களின்போது வன்மை மென்மையைக் காட்டிலும் மௌனம் பேரழகு என்று இருந்துவிடுவார்கள்.

சிக்கல்கள் மிகுந்த சாதிக் கட்டமைப்புகளை உள்ளடக்கியது நமது சமூகம். இங்கே அரசியல் செய்வது அத்தனை சுலபமில்லைதான். பாமகவைப் போல வெளிப்படையாக சாதிக் கட்சிதான் என்று காட்டிக்கொண்டுவிட்டால் இம்மாதிரித் தருணங்களில் அதிக தர்ம அடி விழாது. ஆனால் அனைத்துச் சாதியினரும் தமக்குரிய இயக்கமாக சுவீகரித்துக்கொண்டிருக்கும் திமுகவும் அதிமுகவும் இப்படிக் கள்ள மௌனம் காப்பது கேவலமன்றி வேறல்ல. தமிழக பாஜகவுக்கு இவ்விஷயத்தில் உள்ள சொரணைகூட இவ்விரு பேரியக்கங்களுக்கு இல்லாமல் போய்விட்டதன் ஒரே காரணம், ஓட்டு.

நேற்றைக்கெல்லாம் சமூக வலைத்தளங்களில் ரொம்ப சீரியசாக ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. படிக்கிற வயதில் இந்தப் பெண்களுக்கும் பையன்களுக்கும் காதல் எதற்கு? கல்யாணம் எதற்கு? இவர்கள் கொழுப்பெடுத்துப் போய் காதலித்துவிட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று அலறினால் என்ன அர்த்தம் என்கிற ரீதியில் விற்பன்னர்கள் வீர உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு பிரகஸ்பதி என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துக்கே வந்து, ‘அவரவர் சாதியிலேயே பிறந்த பெண்ணைக் காதலித்தால் இம்மாதிரி பிரச்னையெல்லாம் வராதல்லவா?’ என்று திருவாய் மலர்ந்துவிட்டுப் போனார்.

எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. தாலிபானியம் என்பது ஆப்கனிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினரால் வழிநடத்தப்பட்ட ஓர் இயக்கம் என்று தான் இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தேன். இல்லை; அது ஒரு மனநிலை – மனித குலத்துக்கே பொதுவானது என்று இப்போது தோன்றுகிறது. அருவருப்பூட்டக்கூடிய அடிப்படைவாத மனநிலையைக் கண்டிக்க வேண்டிய தலைவர்கள், ஓட்டுக்காக வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிற்பாடு இதர விஷயங்களில் சீர்திருத்தம் குறித்தும் புரட்சி குறித்தும் லெக்-டெம் நடத்தும்போது எந்தப் பக்கம் திரும்பி நின்று சிரிப்பதென்று தெரியவில்லை.

இப்படியொரு படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதியினரின் ஓட்டு எனக்கு வேண்டாம் என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய ஒரு தலைவர் இங்கில்லை. ஏனெனில் நாம் அப்படியொருவரை விரும்புவதில்லை. நாம் விரும்புவதெல்லாம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வகையறாக்களை வழங்கும் தலைவர்களை மட்டுமே.

0

(நன்றி: தினமலர் 17/03/16)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!