பொன்னான வாக்கு – 08

ஆக, விஜயகாந்த் தனித்துக் களம் காண முடிவு செய்துவிட்டார். தெய்வாதீனமாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே பக்கமாக ஒதுங்கிப் போனதால் திமுக, அதிமுகவும் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுதந்தரமாக வேலை பார்க்கலாம். இந்தப் பக்கம் பாமக, அந்தப் பக்கம் பாஜக. எண்டர்டெயின்மெண்டுக்கு இருக்கவே இருக்கிறது மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மேற்படி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மநகூ.

யோசித்துப் பார்த்தால் இம்மாதிரி ஒரு கண்கொள்ளாக்காட்சி சமீபகாலங்களில் நமக்கு சித்தித்ததேயில்லை. இரண்டு பொட்டலம், மிஞ்சிப் போனால் மூன்று பொட்டலம். உடனே மூன்றாவது அணியின் வெற்றி சாத்தியங்கள் என்று பக்கம் பக்கமாக ஆய்வுக் கட்டுரைகள் வந்துவிடும். எத்தனை தேர்தல்களில்தான் இதையே பார்ப்பது?

இம்முறை சீட்டுக்கட்டுகள் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றன. அதிர்ஷ்டம் யார் காயங்களை ஆற்றப் போகிறதென்று பார்த்துவிடலாம். ஒரு விதத்தில் நமது கட்சிகளுக்கே இந்த அனுபவம் சற்றுப் புதிதாகத்தான் இருக்கும். மொழி தெரியாத பரதேசத்துக்குப் போய் நிற்கிற உணர்வு வர வாய்ப்பில்லை என்றபோதும் கொஞ்சம் முழி பிதுங்கிப் போவதை யாரும் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

காரணம் இருக்கிறது. உலக வங்கியின் செயல்பாடுகளை இதுவரை யாராவது முழுக்கப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? அந்த மாதிரிதான் இந்த வாக்கு வங்கி என்பதும். எந்தக் கட்சி பிரகஸ்பதியைக் கூப்பிட்டுக் கேட்டாலும் தமது கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு வங்கி என்று பாயிரம் பாடிவிட்டுத்தான் காவியத்துக்குள் நுழைவார்கள். முதலில் சதவீத அடிப்படையில் ஆரம்பிப்பார்கள். சே, ஒன்று இரண்டு மூன்று சதவீதம் என்று சொல்லுவதெல்லாம் ரொம்பக் கம்மியாகத் தெரிகிறதே என்று உடனே இத்தனை லட்சம் வாக்காளர்கள் என்று நிறைய சைபர் சேர்த்துச் சொல்லுவார்கள்.

சாதனைகள் சதவீதங்களைத் தீர்மானித்த காலமெல்லாம் வேறு. இது இன்ஸ்டண்ட் புரட்சிகளின் காலம். இன்றைய சதவீதம் நாளைய பக்கவாதம். அல்லது நேற்றைய முடக்குவாதம் இன்றைய பிழைப்புவாதம்.

எனக்கென்னவோ விஜயகாந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவதற்காக இம்முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. தனித்துப் போட்டி என்பதுதான் அவர் கட்சி தொடங்கிய காலத்தில் அவருடைய யுஎஸ்பியாக இருந்தது. பிறகு காலத்தின் கட்டாயத்தால் அவரும் சமஷ்டி பிரியாணி சமைக்கத் தொடங்கினாலும் இம்முறை தனித்து நிற்க எடுத்திருக்கும் முடிவுக்கு வேறு காரணம் இருக்குமென்று தோன்றுகிறது.

சொன்னேனே வாக்கு வங்கி. அதிலுள்ள பேலன்ஸைப் பார்க்க நினைத்திருக்கலாம். ஏனெனில் கடந்த வருடங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அவரது கட்சி குறிப்பிடத்தக்க சாதனை என்று எதையும் செய்யவில்லை. தம் பங்குக்கு விஜயகாந்த் சில பத்திரிகையாளர்களைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்ததையும் பஞ்ச் டயலாக் பேசியதையுமெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அவரது திருமதியாரின் வீரப் பேருரைகளுக்கு அபிதான சிந்தாமணியை எடுத்து வைத்துக்கொண்டுதான் அர்த்தம் தேடியாகவேண்டும்.

எனவே நீடித்த செயல்பாடுகளுக்குத் தனியாவர்த்தனம் சரியாக வருமா என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணியிருக்கலாம். இது அல்லாமல், தன்னையொரு எம்ஜிஆராகக் கற்பனை செய்துகொண்டு களம் காண முடிவெடுத்திருப்பாரேயானால், நாம் சொல்ல ஒன்றுமில்லை. விஜயகாந்துக்கு மிஞ்சிப் போனால் நாலைந்து சத வாக்குகள்தாம் இங்கே. அது எம்ஜிஆருக்கு விழாமல் போன வாக்குகளின் சதவீதமாயிருக்கும்.

பாமகவைப் பற்றித் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை; மநகூவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பாரதிய ஜனதாவைப் பற்றி அப்புறம். இப்போது நமக்குத் தெளிவாகியிருக்கும் ஒரே சங்கதி, இந்தத் தேர்தல் திமுக – அதிமுகவுக்கு இடையிலான போட்டியாக மட்டுமே நடக்கப் போகிறது என்பது. மற்ற அத்தனை பேருமே துரதிருஷ்டவசமாக மற்றும் பலர்தான்.

ஒருவேளை விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வந்திருப்பாரேயானால் ஒரு சில லாபங்கள் இரு தரப்புக்குமே சித்தித்திருக்கலாம். இனி அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால் விஜயகாந்த் இல்லாதது திமுகவுக்கு நஷ்டமாகாது என்றாலும், அது அதிமுகவுக்கு லாபமாகச் சில வாய்ப்புகள் இருக்கின்றன.

சென்ற தேர்தலில் போனால் போகிறதென்று தேமுதிகவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலும் அதிமுக அனுதாபிகள். கூட்டணி காரணத்தால் விருப்பம் இருந்ததோ இல்லையோ வாக்களித்துத் தீர்த்தவர்கள். இம்முறை அவர்கள் மனச்சிக்கல் ஏதுமின்றி அதிமுகவுக்கே தமது ஓட்டுகளை அளிக்க நினைப்பார்கள்.

அப்படிப் போகும் ஓட்டுகளைத்தான் விஜயகாந்த் இம்முறை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டும். அதையும் சேர்த்துத்தான் தனது வாக்கு வங்கியாக இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருந்தோம் என்பதை உணருவாரேயானால் –

இந்தத் தேர்தல் அல்ல; அடுத்தத் தேர்தல் அவருக்கு ஒருவேளை இனிக்கக்கூடும்.

0

(நன்றி: தினமலர் 16/03/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter