ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23

பள்ளி நாள்களில் தற்செயலாகக் கேள்விப்பட்ட ஒரு தகவல் எனக்கு இப்போது நினைத்தாலும் வியப்பளிக்கும். மங்கோலியர்கள் குளிப்பதே இல்லை என்பதுதான் அது. என்னால் ஒருநாள்கூடக் குளிக்காமல் இருக்க முடியாது. சிலர் தினமும் இருவேளை குளிப்பார்கள். அந்தளவுக்கு இல்லை என்றாலும் காலை எட்டு, எட்டரை மணிக்குள் குளித்துவிடாவிட்டால் நான் செத்தேன். அது ஒரு தகாத காரியம் என்பதைப் போலவும், உலகின் மொத்தத் தூசும் மாசும் என்மீதுதான் மொத்தமாகப் படிந்து இருப்பது போலவும், குளித்து முடிக்கும்போது முதல் நாள் வரை செய்த மொத்தப் பாவங்களும் கழுவித் தள்ளப்படுவது போலவும் சிறு வயதில் எண்ணிக்கொள்வேன். அப்போது அது ஒரு பிடித்தமான நினைப்பு. ஆனால் மங்கோலியர்கள் வேறு விதமாக நினைப்பார்கள். குளிப்பது, உடை மாற்றுவது எல்லாம் அவர்களுக்கு அடாத செயல். நம் உடலின் அழுக்கைத் தண்ணீரால் கழுவினால், அது தண்ணீரின் அதிபதியான டிராகனுக்குக் கோபத்தைக் கொடுக்கும், பதிலுக்கு அது சபித்துவிட்டால் வாழ்வில் மீட்சியே இல்லாது போய்விடும் என்பது அவர்களது நம்பிக்கை. இன்றும்கூட மங்கோலியாவில் கிராமங்களில் வசிப்பவர்கள் தினசரி குளிப்பது கிடையாது. உடை மாற்றுவது கிடையாது. பண்டிகை நாள்களில் மட்டும் லேசாகத் துடைத்துக்கொண்டு வேறு உடைக்கு மாறுவார்கள். குளிக்காததால் வரும் உடல் துர்நாற்றத்தைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை. அதிலேயே, அப்படியே இருந்தால் பழகிவிடுமல்லவா? நகரக் கலாசாரத்துக்கு மாறியவர்கள் இந்த வழக்கத்தை விட்டிருக்கலாம். தினமும் குளிக்கத் தொடங்கியிருக்கலாம். யார் போய்ப் பார்த்தார்கள்? பிரதமரானதும் உலான் படாருக்குப் போய்வந்த நரேந்திர மோடிதான் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும்.

நான் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் சுமார் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் தொள்ளாயிரம் உருப்படிகள். ஒவ்வொரு வீடும் மாதத்துக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் செலவழிக்கிறது என்று நெடுநாள் தெரியாதிருந்தது. சென்ற ஆண்டின் தண்ணீர்ப் பஞ்சத்தின்போது வீட்டுக்கொரு மீட்டர் என்றொரு திட்டம் கொண்டு வந்தார்கள். அதன்படி மேல்நிலை நீர்த்தொட்டியில் இருந்து ஒவ்வொரு வீட்டுக் குழாய்க்கும் செல்லும் தண்ணீரின் அளவு கண்காணிக்கப்பட்டது. ஐயாயிரம் லிட்டருக்குள் செலவழித்தால் ஒரு தொகை, அதற்கு மேல் தண்ணீர் செலவானால் வேறொரு தொகை என்று கிட்டத்தட்ட மின்சார வாரியப் பாணியில் தண்ணீர்க் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோதுதான் செலவழிக்கும் தண்ணீரைக் குறித்து சிந்திக்கவே ஆரம்பித்தேன்.

ஒரு குடம், இரண்டு பக்கெட், நான்கு வாட்டர் பாட்டில் என்று சொல்லிக்கொண்டிருக்கும்வரை தண்ணீர் செலவின் சரியான கணக்கைப் புரிந்துகொள்ள முடியாது. லிட்டரில் பேசும்போதுதான் பகீர் என்றிருக்கும்.

நாம் குளிக்காதிருப்பதில்லை. துணி துவைக்காதிருப்பதில்லை. பாத்திரங்களைத் துலக்காமல், வீடு துடைக்காமல், கை கால் கழுவாமல் இருப்பதில்லை. மங்கோலியர்களைப் போல நாம் குளிர்ப் பிரதேசத்திலும் இல்லை. எனவே தண்ணீரின் தேவை நமக்குக் காற்றின் தேவையைப் போன்றதே. ஒரே ஒரு மணி நேரம் குழாயில் தண்ணீர் வராவிட்டால் எப்படித் தவிப்போம் என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. அனைத்தையும் கடந்தே தண்ணீர்ப் பஞ்சத்தையும் பழகிக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீர்ப்பஞ்ச காலம் நெருங்குகிறது என்பதை உணர நான் சில பிரத்தியேகமான வழிமுறைகளை வைத்திருக்கிறேன். சென்னை நகர உணவகங்களில் ஒவ்வொரு மேசையின்மீதும் ஒரு தண்ணீர்க் குடுவையும் சில தம்ளர்களும் வைக்கப்பட்டிருக்கும். காலி ஆக, ஆக, குடுவையை நிரப்பி வைப்பார்கள். ஆனால் சரியாக மே மாத நடுப்பகுதி கடந்ததும் அந்தத் தண்ணீர்க் குடுவைகள் மாயமாகிவிடும். இலை போடும்போது ஒரு தம்ளர் வைத்து, குடுவையை எடுத்து வந்து அதில் நிரப்பிவிட்டு, திரும்ப எடுத்துச் சென்றுவிடுவார்கள். தண்ணீர் வேண்டும் என்று திரும்பக் கேட்டால் வந்து ஊற்றிவிட்டுப் போவார்களே தவிர குடுவையை மேசையின்மீது வைக்க மாட்டார்கள். சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் இந்த விஷயத்தில் உணவகங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்றன. தண்ணீர் தம்ளர்களே திடீரென்று பாயச கப் அளவுக்கு மாறிவிட்டன.

பஞ்சம் நெருங்குவதை உணர்வதற்கு இன்னொரு வழி, பெட்டிக் கடைகளில் இக்காலங்களில் தண்ணீர் பாக்கெட் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டு, பாட்டில்தான் இருக்கிறது என்பார்கள். ஒரு ரூபாய் தண்ணீர் பாக்கெட்டில் ஒரு தம்ளர் அளவுக்குத் தண்ணீர் இருக்கும். இதுவே ஒரு லிட்டர் பாட்டில் என்றால் நான்கு தம்ளர் தண்ணீர். பாட்டிலில் அடைத்து விற்கும்போது பதினைந்தில் இருந்து இருபது ரூபாய் வரை விலை சொல்ல முடியும். பாக்கெட் தண்ணீர் என்றால் இரண்டு ரூபாய் விலை வைத்தாலும் நான்கு பாக்கெட்டுகளுக்கு எட்டு ரூபாய்தான் ஆகும். கவனித்துப் பாருங்கள். அக்டோபர், நவம்பரில் சென்னையில் சிறிதளவு மழை பெய்துவிட்டால் அதன்பின் தண்ணீர் பாக்கெட்டுகள் தாராளமாகக் கிடைக்கும். அது இல்லாதவரை பாக்கெட் தண்ணீரைப் பார்ப்பது சிரமம்.

மூன்றாவது வழி, லாரி ஊழியர்களின் திடீர் கோரிக்கைகள். இது எப்போது கேட்கத் தொடங்குகிறதோ, அன்று தொடங்கி பதினைந்து தினங்களில் பஞ்சம் தலை விரித்தாடப் போகிறது என்று அர்த்தம். தொடர்ச்சியாக வேலை நிறுத்த அறிவிப்புகள் வரும். பேச்சு வார்த்தைச் செய்திகள் வரும். பெரிய மனது வைத்து லாரி ஊழியர்கள் தண்ணீர் கொண்டு வரச் சம்மதிப்பார்கள். குடியிருப்புகளில் திருவிழா கலெக்‌ஷன் போல ‘லாரிக் காசு’ வாங்கப்படும்.

ஆண்டாண்டுக் காலமாகச் சென்னையின் வருடாந்திரத் தண்ணீர்ப் பஞ்சக் காலங்களை இப்படித்தான் கடந்து வந்திருக்கிறேன். தமிழகத்துக்கே இது பொதுவானதுதான் என்றாலும் சென்னையில் இதன் வீரியம் சிறிது அதிகமாக இருக்கும். ஒரு பிராந்தியத்துக்கு ஒரு தண்ணீர் லாரி வருகிறதென்றால் நூறு பேர், இருநூறு பேர் குடங்களுடன் ஓடிச் சென்று முட்டி மோதும் காட்சிகளை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியும். குழாயடிச் சண்டைகள் என்று மேலோட்டமாக விமரிசித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். உண்மையில் தண்ணீருக்கான போராட்டம் என்பது அடிப்படை மனித சுபாவத்திலேயே மாற்றம் விளைவிக்கக்கூடியது.

முன்னர் நான் குடியிருந்த ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. தினமும் காலை குழாயில் தண்ணீர் வரும் நேரத்துக்கு மற்றவர்களெல்லாம் வரிசையில் வந்து காத்திருக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வீட்டின் பெண்மணி மட்டும் எப்போதும் தாமதமாகவே வருவார். ஆனால் வரும்போதே அவருக்காக மற்றவர்கள் நகர்ந்து இடம் கொடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால், ‘பிள்ளைங்க தாகத்தால தவிக்குதுங்க. இப்படி இரக்கமே இல்லாம நடந்துக்கறிங்களே’ என்று அனைவரையும் திட்டுவார். அதெப்படி காலை ஆறு மணிக்குப் பிள்ளைகள் தாகத்தால் தவிக்கும் என்று எனக்குப் புரிந்ததே இல்லை.

கோடம்பாக்கத்தில் முன்னர் வேறொரு இடத்தில் அலுவலகம் இருந்தபோது அங்கே இன்னொரு பெண்மணி இருந்தார். இவர் வீட்டு ஓனர் இல்லை. ஓனரின் சார்பில் இங்கே இருந்து வாடகை வசூல் செய்பவர் மட்டுமே. நகரில் தண்ணீர்ப் பற்றாக்குறைக் காலம் தொடங்கிவிட்டால் போதும். மோட்டார் அறையைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். அதாவது காலை ஒருமுறை மோட்டார் போட்டு மேலே ஏற்றி வைத்திருக்கும் தண்ணீர் காலியாகும்வரை செலவழிக்கலாம். அதற்குப் பிறகு கிடையாது. மறுநாள் அவர் சுப்ரபாத சேவைக்கு வந்து மோட்டார் அறைக் கதவைத் திறக்கும்போதுதான் மீண்டும் தண்ணீர். இத்தனைக்கும் அந்தப் பிராந்தியத்தில் நிலத்தடி நீர் கையிருப்பு அவ்வளவு மோசம் கிடையாது.

சொல்ல வருவது, அது ஒரு மனநிலை. எனக்குத் தெரிந்து சென்னையில் யாரும் குடங்களைத் தூக்கிக்கொண்டு மைல் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவதில்லை. முன்னொரு காலத்தில் இருந்திருக்கலாம். எண்பதுகளில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வரும் காட்சிகளைக் கண்டிருக்கிறேன். தொண்ணூறுகளுக்குப் பிறகு வீட்டுக்கு வீடு குழாய் வந்துவிட்டது. குழாய்களில் தண்ணீர் வராத சூழல் உண்டானபோது லாரிகள் வரத் தொடங்கிவிட்டன. இதனால், தண்ணீர் பிரச்னை என்பது தண்ணீர் இல்லாமல் போவது என்பதில் இருந்து தண்ணீருக்கு அதிகம் செலவழிப்பது என்ற நிலையாக மாற்றம் கண்டது.

இந்த வருடம் சென்னையின் கோடை வழக்கத்தைவிடச் சிறிது உக்கிரமடைந்திருப்பது போலவே தோன்றுகிறது. தண்ணீர்ப் பிரச்னையும் உச்சத்தைத் தொடும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. இன்று காலை எங்கள் அடுக்குமாடி அசோசியேஷன் செகரெட்டரி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை உருவாகிவிட்டது என்றும் லாரித் தண்ணீர் வாங்கவேண்டியிருப்பதால் முன்பணமாக வீட்டுக்கு இவ்வளவு என்று கணக்குப் போட்ட எக்செல் ஷீட்டையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.

கிருமி வரும் போகும். சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் மட்டும் எப்போதும் இருக்கும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி