ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22

1981ல் நாவலூரில் ஒரு வீடு விலைக்கு வந்தது. இன்றைய பழைய மகாபலிபுரம் சாலையில் நாவலூர் பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்துக்குப் பத்தடி தூரத்தில் அமைந்திருந்த வீடு. முக்கால் கிரவுண்டுக்குச் சிறிது அதிகமான நிலம். சுற்றிலும் அடர்த்தியாகத் தென்னை மற்றும் மா மரங்கள். மரங்களின் இடைவெளிகளில் கீரைப் பாத்திகளும் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளிச் செடிகளும் ஒரு அவரைப் பந்தலும் மிகச் சிறிய அளவில் சிறு வெங்காயமும் பயிரிடப்பட்டிருந்தன. மொத்த இடத்தில் தோட்டம்தான் பெரிது. வீடு சிறிய, ஓட்டு வீடுதான். சுற்றிலும் வேலி போடப்பட்டு ஒரு பண்ணை வீட்டின் தோற்றத்தில் இருந்தது. ஹெட் மாஸ்டர் வாங்குவாரென்றால் விலையில் சிறிது குறைத்துக்கொள்ளலாம் என்று வீட்டின் உரிமையாளர் சொல்லி அனுப்பியிருந்தார். அன்று அவர் சொன்ன விலை இருபத்தேழாயிரம் ரூபாய். ஹெட் மாஸ்டர் வாங்குவதில் ஆர்வம் காட்டியிருந்தால் எப்படியும் இருபது இருபத்திரண்டுக்கு முடிந்திருக்கும். ஆனால் அது நம் சக்திக்கு அப்பாற்பட்ட தொகை என்று என் தந்தை சொல்லிவிட்டார். நாவலூரில் இன்று இருபத்திரண்டாயிரம் ரூபாய்க்கு அபார்ட்மெண்ட் வேண்டுமானால் வாடகைக்குக் கிடைக்கலாம்.

அந்தப் பக்கம் போக நேரும்போதெல்லாம் அந்த வீடு இருந்த இடத்தைப் பார்ப்பேன். குத்து மதிப்பாகத்தான் நினைவில் இருக்கிறது. பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்களும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் கண்ணெட்டும் தொலைவுக்குப் பரவி நிறைந்து விட்டதில் அந்தக் குறிப்பிட்ட வீடு இருந்த இடம் அவ்வளவு துல்லியமாகத் தெரிவதில்லை.

ஈசிஆர் என்கிற கிழக்கு கடற்கரைச் சாலை வருவதற்கு முன்னர் அந்த இடமும் இது போலத்தான் இருந்தது. பனையூர், முட்டுக்காடு, கோவளம் பிராந்தியங்களில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் ரூபாய்க்கு ஏராளமான நிலம் விற்பனைக்கு இருந்தது. வாங்கத்தான் ஆள் இருக்க மாட்டார்கள். ஒரு நகரம் எப்போது, எப்படி விரிவடையும் என்று சொல்லவே முடியாது. தொழில் வளர்ச்சி கண்டால் விரிவாக்கம் நிகழும் என்பது மேலோட்டமான பதில். உண்மையில் ஒரு நகரம் தொழில் வளர்ச்சி காண்பதற்குப் பின்னால் நிறைய காரணிகள் உண்டு.

பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் வியாபார நிமித்தம் சென்னையில் கால் பதித்த கிழக்கிந்திய கம்பெனி ஓரிரு கிராமங்கள் தமக்கு சகாயமாக இருந்தால் போதுமானது என்றுதான் முதலில் நினைத்தது. ஆனால் ஐம்பது வருடங்களில் மதராசபட்டிணம் கிராமம் ஒரு கார்ப்பரேஷனாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு பம்பாய் ஒரு கார்ப்பரேஷன். சென்னை ஒரு கார்ப்பரேஷன். மொத்த தேசத்தில் அவ்வளவுதான். கூவக்கரை ஓரம் சிறியதொரு கிராமமாக அறியப்பட்ட மதராசப்பட்டணம், பல கிராமங்களை உள்ளடக்கிய கார்ப்பரேஷன் ஆவதற்கு ஐம்பது ஆண்டுகள் போதுமானதாக இருந்தன. அன்று தொடங்கி அதன் வளர்ச்சி வேகம் எப்போதுமே குறைந்ததில்லை.

ஆனால் அந்த வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு சரியான காரணம் இருந்தது. பஞ்சம். போர்கள். கொள்ளை நோய்கள். மத மாற்றங்கள். எல்லாமே ஒவ்வொரு எல்லை வரை நகர விஸ்தரிப்புக்குக் காரணமாகியிருக்கின்றன. பஞ்ச காலத்தில் வியாபாரிகள் எங்கெங்கிருந்தோ வந்து கடை விரித்தார்கள். தேவை இருந்தது. போர்க்காலத்தில் சகல விதமான தொழில்களும் பெருகும் அவசியம் இருந்தது. நோய்க்காலம் பற்றிச் சொல்லவே வேண்டாம். நகரத்துக்கு வந்துவிட்டால் எப்படியாவது வைத்தியம் செய்து பிழைத்துக்கொண்டுவிடலாம் என்று எண்ணியே லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். தொடக்க கால மதமாற்றங்கள் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன.

கம்பெனி காலத்தில் இப்படி இது விரிவடைந்ததன் தொடர்ச்சியாக இந்திய சுதந்தரத்துக்குச் சற்று முன்பு (1946 முதல்) மீண்டும் சென்னை நகர விரிவாக்கப் பணிகள் நடந்தன. கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, அயனாவரம், வேளச்சேரி எல்லாம் அப்போது இணைக்கப்பட்ட பகுதிகள். கோயம்பேடு, தரமணி, திருவான்மியூர், கொளத்தூர் எல்லாம் எழுபதுகளில் இணைந்தவை.

சரித்திரம் சில புள்ளிகளை மட்டும்தான் வண்ணத்தில் சுட்டிக் காட்டும். அதைப் பார்த்து முடித்துப் பார்வையை நகர்த்துவதற்கு முன்னால் நூறு புள்ளிகள் நகர்ந்து போயிருக்கும். நகர விரிவு என்பது நூறு நூறாக நூறாயிரம் புள்ளிகளின் சரித்திரத்தை உள்ளடக்கியது. தோட்டமுடன் கூடிய அந்த நாவலூர் வீட்டை வாங்க முடியாத வருத்தம் என் தந்தைக்கு நெடுநாள் இருந்திருக்க வேண்டும். முதல் முதலில் குரோம்பேட்டையில் அரை கிரவுண்டுக்குச் சற்றுக் குறைவான இடத்தில் ஒரு ஹால், ஒரு பெட்ரூம், ஒரு சமையலறை கொண்ட வீட்டைக் கட்டிக்கொண்டு வந்தபோது, கட்டியது போக எஞ்சியிருந்த அரையடி சுற்று வட்டத்தில் காய்கறித் தோட்டம் போடலாம் என்று சொன்னார். அங்கே பொன்னாங்கன்னிக் கீரை பயிரிட்டு, அறுவடை செய்து சமைத்து உண்ட பின்புதான் அவர் சமாதானமானார். பிறகு ஒன்றிரண்டு வாழை மரங்களையும் நட்டு விளைச்சல் பார்த்தது நினைவிருக்கிறது.

1989ம் ஆண்டு கிழக்கு தாம்பரத்தில் இருந்த எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் வீட்டுக்கு முதல் முதலில் சென்றேன். சிவகுமார் எனக்கு ஒரு வகையில் நண்பர். இன்னொரு வகையில் ஆசிரியர். அது புரிய வைக்க முடியாத ஒரு நூதனமான உறவு. நடுவில் சண்டை போட்டுக்கொண்டு பல வருடங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் இருந்து, பிறகு மீண்டும் இணைந்தோம். இடைப்பட்ட காலத்தின் கசப்புகள் அப்போது இருவருக்குமே ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. விஷயம் அதுவல்ல. நண்பராவதற்கு முன்னால் அவர் எனக்கு ஆசிரியராக மட்டும் இருந்த காலத்தில்தான் முதல் முதலில் அவர் வீட்டுக்குச் சென்றேன். தாம்பரத்தில் இறங்கி அரை மணி நேரம் நடந்த பின்பும் அவர் வீடு வரவில்லை. பாடுபட்டுத் தேடித்தான் கண்டுபிடித்தேன்.

நான் சென்றபோது அவர் வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையே ஒரு வீதியளவு இடைவெளி இருந்தது. எங்கும் வெட்டவெளி. சொந்தமாக ஒரு வாகனம் மட்டும் இல்லாவிட்டால் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனை அங்கிருந்து அடைவது மிகுந்த சிரமமான காரியம் என்று தோன்றியது. அக்கம்பக்கம் எந்தக் கடையும் இல்லை. என்ன அவசரமென்றாலும் தாம்பரம் மெயின் ரோடை அடைந்தால்தான் முடியும். குரோம்பேட்டையே பரவாயில்லை என்று சிவகுமாரிடம் சொன்னேன்.

‘அப்படி நினைக்கற இல்ல? எண்ணி அஞ்சு வருஷம் கழிச்சிப் பாரு. இங்க நீ சைக்கிள் நிறுத்தக்கூட இடம் கிடைக்காது. செகண்ட் லைன் பீச் ரோடு மாதிரி ஆயிருக்கும்’ என்று சொன்னார்.

அது உண்மை. ஐந்தல்ல; மூன்று வருடங்களிலேயே அது நடந்துவிட்டது. ஆயிரக் கணக்கான குடியிருப்புகளால் கிழக்குத் தாம்பரமே திணறிப் போயிருந்தது.

மிகச் சரியாக அதே போன்ற இன்னொரு சம்பவம் என் இன்னொரு நண்பர் பார்த்தசாரதி ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியபோது நடந்தது. இது சமீபத்தில் நடந்ததுதான். 2005ம் ஆண்டு. எச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கி ஃப்ளாட் வாங்கினார். அவர் வங்கிக்கு முதல் முதலில் சென்றபோது நான் உடன் சென்றேன். கடன் வாங்கியது அவர்தான் என்றாலும் எனக்குத்தான் பயமாக இருந்தது. லட்சங்களில் கடன் வாங்குவது குறித்து என்னால் அப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடிந்ததில்லை.

வங்கிக்குச் சென்றது போலவே அவரது அபார்ட்மெண்ட் உருவாகிக்கொண்டிருந்த இடத்துக்கும் போனேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கைக்காங்குப்பம் என்ற அந்தப் பிராந்தியம் அப்போது வெறும் பொட்டல் வெளியாக இருந்தது. எங்கு பார்த்தாலும் சாக்கடை, பன்றிகள். 1985ல் நாங்கள் குரோம்பேட்டைக்குக் குடி வந்தபோது இருந்ததைக் காட்டிலும் மிகவும் பின் தங்கிய பிராந்தியமாக இருந்தது கைக்காங்குப்பம். இந்த ஜென்மத்தில் இங்கெல்லாம் சாலை வரக்கூட வாய்ப்பில்லையே என்று அவரிடம் ஆதங்கப்பட்டேன். அந்த வீடு தயாராகி அவர் குடி போன நாள்வரை ஓயாமல் அவரைக் கிண்டல் செய்துகொண்டே இருந்தேன். ஆனால் பார்த்தசாரதி மிகவும் தெளிவாக இருந்தார். ஓரிரு வருடங்களில் கைக்காங்குப்பம் கேகே நகரைப் போல ஆகிவிடும் என்று சொன்னார். அப்படித்தான் ஆனது.

எதிர்கால வளர்ச்சியைக் கணித்து இடமோ, வீடோ வாங்கும் சாமர்த்தியம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. இருந்திருந்தால், குறைந்த செலவில் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்டைகள் கட்டியிருக்கலாம். இந்நேரம் கடன்கள்கூட அடைந்திருக்கும். என்ன செய்ய. கடனே வாங்கக்கூடாது என்பது என் தந்தையின் கொள்கை. இறுதி வரை அவர் அப்படித்தான் இருந்தார்.

இன்றுவரை நானும் அப்படியே இருக்கிறேன் என்று எண்ணித் திருப்தி அடைய வேண்டியதுதான்.

Share