சரியான உத்தியோகம் அமையாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்களில் என்னோடு சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்த சக சரியான வேலை அமையாத நண்பர்களில் பலர், எனக்குக் கல்கியில் வேலை கிடைத்த பிறகு என்ன காரணத்தாலோ மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினார்கள். இத்தனைக்கும் எங்கள் வட்டத்தில் யாருக்கு நல்ல வேலை கிடைத்தாலும் அவர்கள் அடுத்தவர்களைக் கைதூக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பது என்று தீர்மானம் செய்திருந்தோம். திட்டப்படி சிலரைக் கல்கியில் எழுதவும் வைத்தேன். எழுத்தைப் பொறுத்தவரை ஒரு வழியைத் திறந்து வைப்பதை மட்டுமே உதவியாகச் செய்ய முடியும். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வருவது என்பது அவரவர் எழுத்தின் தரம் சார்ந்தது மட்டுமே. அப்போது நண்பர்களாக இருந்தவர்களில் ஒருசிலர் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மற்றவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார்கள். ஒருவர் டிஐ சைக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்துப் போனார். இன்னொருவர் சக்தி உபாசகராகி, பகுதியளவு சாமியார் தொழில் செய்யத் தொடங்கினார். வேறொருவர் ஜோதிடத் துறையில் இறங்கி, குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தரானார். ஒருவர் டிகிரிக்கு மேல் டிகிரியாகப் படித்து அரசாங்கப் பரீட்சைகள் எழுதி சிவில் சப்ளை துறையில் வேலை கிடைத்துப் போனார். வேறு சிலரைப் பற்றித் தகவல் தெரியவில்லை. மீஞ்சூரைச் சேர்ந்த ஒரு நண்பர் மட்டும் அகால மரணமடைந்துவிட்டதாகப் பல நாள் கழித்துக் கேள்விப்பட்டேன்.
நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் (எண்பதுகளின் இறுதி) சென்னையில் ஆவிகளுடன் பேசுவது என்பது வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடைமுறையாக இருந்தது. யார் மூலமாக இந்தக் கலாசாரம் நகரத்துக்குள் வந்தது, எப்படி இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் அன்று நான் சந்தித்த – என்னைப் போன்ற ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு அனுபவமாவது நிச்சயமாக இருந்தது. எழுத்து, சினிமாத் துறையில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் இது சிறிது அதிகமாகவே செல்வாக்குப் பெற்றிருந்தது.
நான் அப்போது இருவேறு நண்பர் வட்டங்களில் இருந்தேன். ஒன்று, எழுத்து – பத்திரிகை ஆர்வத்துடன் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த குழு. இன்னொன்று சினிமாவில் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த குழு. இரு தரப்பிலுமே எப்படியாவது ஒரு ஆவியைப் பிடித்துப் பேசி, அதன் மூலமாக எதையாவது அடைந்துவிட வேண்டும் என்ற வெறி இருந்தது. அன்றைக்கு எங்களுக்குத் தெரிந்த ஆவி உலகப் பெயர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் மட்டும்தான். அவர் ஆவியல்ல. உயிருள்ள மனிதர். ஆனால் சக மனிதர்களுடன் பேசுவது போலவே ஆவிகளுடன் பேசக்கூடியவர் என்றும் ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து நிறைய எழுதுகிறார் என்றும் பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தோம். எப்படியாவது அவரைச் சந்தித்து எதிர்காலம் குறித்து அவரவர் மூதாதையர் ஆவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான முயற்சிகளில் இறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோதே எனது சினிமா நண்பர் குழுவைச் சேர்ந்த ஒருவர், யார் உதவியும் இன்றி ஆவிகளுடன் பேசக் கற்றுக்கொண்டுவிட்டதாகச் சொன்னார். சாளிக்கிராமம் தசரதபுரத்தில் இருந்த அவரது அறையில் ஒருநாள் இரவு எங்களையெல்லாம் வரச் சொல்லி, அவருடைய தாத்தாவின் ஆவியை அழைக்க ஆயத்தமானார்.
அன்றைக்குத்தான் ஓஜா போர்டு என்னும் பலகையை முதல் முதலில் பார்த்தேன். அது ஒரு நீண்ட செவ்வக வடிவ மரப் பலகை. அதன் நடுவே A முதல் Z வரை ஆங்கில எழுத்துகளும் 1 முதல் 0 வரையிலான எண்களும் எழுதப்பட்டிருந்தன. ஒரு பக்கம் சூரியன் படம். இன்னொரு பக்கம் சந்திரன் படம். (இது நண்பர் சொன்னது. அசப்பில் சூரியன், சந்திரன் இரண்டையுமே ஒரே மாதிரிதான் வரைந்திருந்தார்கள்.) தவிர yes, no, good bye என்ற மூன்று ஆங்கிலச் சொற்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. நம்பிக்கையுடன் ஒரு ஐம்பது பைசா நாணயத்தை அந்தப் பலகையின்மீது வைத்து ஆவியை அழைத்தால், நாம் விரும்பும் ஆவி அந்த அறைக்கு வரும்; நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஐம்பது பைசா நாணயத்தைப் பலகையில் உள்ள எழுத்துகளின் மீது நகர்த்தி நகர்த்தி சொற்களை உருவாக்கி பதில் சொல்லும் என்று நண்பர் சொன்னார்.
எனக்கு அந்த அனுபவம் புதிது. ஆர்வமும் அச்சமும் கலந்து இருந்தன. ஏழெட்டு நண்பர்கள் உடன் இருந்தபடியால் சிறிது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு தயாரானேன். நண்பர், இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு, தான் பார்த்தே இராத தனது பாட்டனாரை மானசீகத்தில் நினைத்து அழைத்தார். நாணயம் இதோ நகரும், நகரும், நகரும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அது நகரவில்லை. ‘தோ வரேன் மச்சான்’ என்று சொல்லிவிட்டு சிலர் எழுந்து வெளியே போனார்கள். பிறகு அவர்கள் வரவில்லை. நெடுநேரம் முயற்சி செய்துவிட்டு நண்பர் களைத்துப் போய் பலகையை எடுத்து வைத்தார். ‘என்னவோ தப்பு பண்ணியிருக்கேன். இல்லன்னா அது வராம இருக்காது’ என்று சொன்னார்.
இச்சம்பவம் நடந்த சிறிது காலத்துக்குள்ளேயே நந்தனம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒரு பெரியவர் வெறும் தம்ளரை வைத்துக்கொண்டு ஆவிகளை வரவழைத்துப் பேசுகிறார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கச் சென்றோம். அந்தப் பெரியவரின் பெயர் செல்லமுத்து. இப்போது அவர் மணலியில் எங்கோ இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். எப்படியும் எண்பது, எண்பத்தைந்து வயதாகியிருக்கும்.
நாங்கள் நான்கு பேர் அவர் வீட்டைக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்தபோது அவர் ஏற்கெனவே யாரோ ஒருவருக்காகத் தம்ளரை நகர்த்தித் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார். ஆர்வமுடன் அந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்தோம். அந்த நபர் விடைபெற்றுச் சென்ற பின்பு எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு உதவச் சொல்லிக் கேட்டோம். அந்தப் பெரியவரைப் பற்றிய தகவல்களை விசாரித்து, முகவரியையும் கண்டுபிடித்து எங்களை அங்கு அழைத்துச் சென்றிருந்த அன்புராஜாவின் தாய் வழித் தாத்தாவை அழைப்பதே சரியானது என்று நாங்கள் ஏக மனதாக முடிவு செய்து, பெரியவர் செல்லமுத்துவிடம் தெரிவித்தோம். அவரும் ஒப்புக்கொண்டு அன்புராஜாவின் தாத்தாவான நல்ல தம்பி முதலியாரை அழைக்க முயற்சி செய்யத் தொடங்கினார்.
ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் நடக்கவில்லை. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவர் விரல் வைத்திருந்த தம்ளர் மெல்ல அசைந்து கொடுக்கத் தொடங்கியது. தரையில் ஏ பி சி டி எழுதிய கட்டங்களின் நடுவே கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தம்ளர் மெல்ல நகர்ந்து சி என்ற எழுத்தின்மீது சென்று நின்றது. பிறகு ஐக்குப் போனது. அங்கிருந்து என். அடுத்தது ஈ.
உண்மையில் திகைத்துப் போய்விட்டோம். ஏனெனில் சினிமாக் கனவுகளுடன் திரிந்துகொண்டிருந்ததை நாங்கள் பெரியவர் செல்லமுத்துவிடம் சொல்லியிருக்கவில்லை. அன்புராஜா உணர்ச்சி மேலிட அப்படியே விழுந்து வணங்கினார். அன்று அவர் என்னென்னவோ கேள்விகள் கேட்டார். எப்போது வாய்ப்புக் கிடைக்கும்? யாரிடம் உதவி இயக்குநராகச் சேருவார்? எத்தனை ஆண்டுகள் அப்படி இருக்கவேண்டியிருக்கும்? சொந்தமாகப் படம் இயக்க எப்போது வாய்ப்புக் கிடைக்கும்? படம் வெற்றி பெறுமா? முதல் படத்தில் யார் ஹீரோவாக இருப்பார்கள்?
சலிக்காமல் தம்ளர் நகர்ந்து பதில் சொல்லிக்கொண்டே இருந்தது. எல்லாம் ஒரு சொல் பதில்தான். ஆனால் அதுவே அன்புராஜாவுக்குப் போதுமானதாக இருந்தது. நல்ல தம்பி முதலியாரின் பூரண ஆசீர்வாதம் தனக்கு இருப்பதில் அன்புராஜாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கிளம்பும்போதும் பெரியவர் செல்லமுத்துவை மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்கினார்.
அந்த ஆண்டு அக்டோபர் மாதம் அன்புராஜாவுக்கு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர வாய்ப்புக் கிடைத்துவிடும் என்று நல்லதம்பி முதலியாரின் ஆவி சொல்லியிருந்தது. எங்கள் ஒப்பந்தப்படி, அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் அடுத்தடுத்து எங்கள் அத்தனை பேருக்கும் அவரே ஒரு வழி செய்து கொடுத்துவிடுவார். பல்லாண்டுக்காலக் கனவும் போராட்டமும் வெற்றி அடைவதென்றால் எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது!
ஆனால் ஆவி சொன்னது போல அக்டோபர் வரை காத்திருக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டெம்பர் முதல் வாரத்திலோ ஓமனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்புவின் தாய் மாமன் முயற்சியில் அவருக்கும் அங்கே ஒரு வேலை கிடைத்தது. விசா போன்றவற்றுக்குத் தாய்மாமனே ஏற்பாடு செய்து மருமகனை அங்கே அழைத்துச் சென்றுவிட்டார்.
அன்று பெரியவர் செல்லமுத்துவைப் பார்க்கச் சென்ற எங்கள் நான்கு பேரில் என்னைத் தவிர மற்ற மூவருமே சினிமாவுக்குத் தொடர்பில்லாத ஏதோ ஒரு பணியில்தான் சேர்ந்தார்கள். ஆவி மாற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. பெரியவர் செல்லமுத்துதான் தாத்தாவை மாற்றி அழைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.