நவீனத்துவத்தின் முகம்

நவீன இலக்கியம் என்றால் என்ன என்று நேற்று பின்னூட்டப் பெரியவர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அகராதி வைத்துப் படிக்க வேண்டியவையெல்லாம் பழைய இலக்கியம், அகராதி துணையின்றிப் படிக்க முடிகிறவை நவீன இலக்கியம் என்று சொல்லிவிடலாமா என்று அவரே தமது முடிவையும் இங்கே முன்வைத்திருந்தார்.

இம்மாதிரி விவகாரங்களில் பொதுவாக நான் கருத்து சொல்லுவதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தீவிரவாதி மனநிலை கொண்ட வாசகன் தானே தவிர அந்தப் பேட்டையில் கம்பு சுற்றியவனல்லன். எழுத்தில் என் நோக்கங்கள் வேறு, இலக்குகள் வேறு. எனவே எனது தெளிவுகள் அடுத்தவரின் குழப்பங்களாக இடம் கொடுக்கக்கூடாது என்கிற நல்ல புத்தி கொண்டவன்.

இருப்பினும் இங்கே ஒரு கேள்வி என்று வந்துவிட்டதால் மிகச் சிறிய அளவில் என் கருத்தைப் பதிவு செய்துவிடுகிறேன். இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. எனக்கு நான் வகுத்துக்கொண்டிருக்கும் இலக்கணம். அவ்வளவே.

நவீன தமிழ் இலக்கியம் பாரதியில் இருந்து ஆரம்பிக்கிறது என்று பொதுவாகச் சொல்லுவார்கள். நமக்கு அந்த வரலாறெல்லாம் வேண்டாம். என்னைப் பொறுத்தவரை ஒரு நவீன இலக்கியமானது அது எழுதப்படுகிற காலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அதாவது சமகால வரலாற்றுத் தன்மை அதற்கு இருக்கவேண்டும். ஒரு ஐம்பது வருஷங்களுக்குப் பிறகு அந்த இலக்கியப் பிரதியானது ஓர் ஆவணமாகக் கருதப்படவேண்டும். குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சமூக, அரசியல் சூழலை எதிர்கால வாசகன் உணரத்தக்கதாக இருக்கவேண்டும்.

இவ்விதத்தில் பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி நமது பாரம்பரியதாரிகள் எல்லோரும் அந்தந்தக் காலக்கட்டத்தைப் பிரதிபலித்தவர்களே. ஆனால் அது இன்று நவீன இலக்கியமாகுமா என்று கேட்டால் என்னளவில் இல்லை என்பேன். இன்றைக்கும் பொருந்தும் கூறுகள் சில அல்லது பல அவர்களிடத்தில் இருக்கலாம். இப்படி எக்காலத்துக்குமான கூறுகளைக் கொண்ட படைப்பே கிளாசிக் ஆகிறது.

அவ்விதத்தில், இன்றைய காலக்கட்டத்துக்கான ஆகச் சிறந்த படைப்புகளாக ஒரு பத்திருபதை என்னால் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் பட்டியலென்பது பேஜார். நமக்கு அவ்வளவாக ஆகாத காரியம். எனவே, சமகால எழுத்தில் சர்வ நிச்சயமாக நவீன இலக்கிய சாதனைகள் என்று நான் கருதும் முதல் மூன்றை மட்டும் உதாரணங்களாகச் சொல்லுகிறேன்.

முதலாவது, எட்டுத்திக்கும் மதயானை. இது நாஞ்சில்நாடனுடையது. இதன் நவீனத்தன்மை என்பது இந்நாவலின் கதாநாயகன் இத்தலைமுறை இளைஞர்களுடைய பொதுவான மனநிலையின் ஆகச் சரியான பிரதிநிதியாக இருப்பதால் கூடிவருகிறது என்பது என் அபிப்பிராயம்.

இரண்டாவது ஜீரோ டிகிரி. இது சாரு நிவேதிதாவினுடையது. மொழி, கட்டமைப்பு, கவித்துவம், தரிசனம் அனைத்தையும் தாண்டி இந்நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. மனம் மேலோட்டமாக எண்ணுவதற்கு அப்பால் நமக்குள்ள மைக்ரோ விகாரங்களைத் தமிழில் இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை. இந்நாவலின் அப்பட்டத்தன்மைக்கு முன்மாதிரியே இங்கு கிடையாது. சும்மா ஒரு பேச்சுக்கு நான் யார் என்று அத்தனை பேருமே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு ஜீரோ டிகிரியை வாசித்தால் உங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கண்டிப்பாக அதில் காண்பீர்கள். அந்த ‘நான்’ நீங்கள் வெளியே எடுத்துக்காட்ட விரும்பக்கூடிய நானாக இருக்காது. சமயத்தில் உங்களுக்கே உவப்பற்ற நானாகவும் இருக்கக்கூடும்!

மூன்றாவது, இரா. முருகனின் மூன்று விரல். இதை மென்பொருள் துறை சார்ந்த நாவல் என்று வகைப்படுத்துவது என்னைப் பொறுத்தவரை தவறானது. இது கம்ப்யூட்டர்களாகவும் மென்பொருள்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் காட்சிப் படிமம். சித்திரிப்புக்கு அப்பால் பல தளங்களுக்கு நம்மை இழுத்துச் செல்லக்கூடியது.

முகலாயர் காலத்தில் மதமாற்றமும் கோயில்கள் இடிப்பும் இங்கு பெரிய பிரச்னையாக இருந்தது. காந்தி காலத்தில் சுதந்தரப் போராட்டம். எம்.ஜி.ஆர். காலத்தில் இலங்கை யுத்தத்தின் தாக்கங்கள். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் ஊழல். இன்றும் அதே கருணாநிதி, ஜெயலலிதா காலம்தான். ஆனால் பொதுப் பிரச்னைகளின் முக்கியத்துவம் உதிர்ந்து தனி மனிதப் பிரச்னைகளே சமூகப் பிரச்னைகளாகக் கருதப்படுகிற காலக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். அல்லது தனி நபர்களின் பிரச்னைகளுக்கு முன்னால் சமூகப் பிரச்னைகளின் இடம் சுருங்கி வருவதாகவும் இதனைச் சொல்லலாம்.

தனியன்கள் இல்லாத சமூகமேது என்று கேட்கலாம். நான் சொல்ல வருவது அதுவல்ல. ஒவ்வொரு தனி நபரும் தன்னை அடையாளம் காணத்தக்க விதத்தில், தன் வாழ்வைக் கண்ணெதிரே இன்னொருத்தர் எழுத்தில் தரிசிக்கத் தக்க விதத்தில் எழுதப்படுவது எதுவோ, அதுவே என்னைப் பொறுத்தவரை நவீன இலக்கியம்.

அது எக்காலத்துக்குமான படைப்பாகிறதா இல்லையா என்பதை இன்று நாம் அறுதியிட இயலாது. அந்த வேலையை நாளைய தலைமுறை வந்து செய்யும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter