அனுபவம் மருத்துவமனை

காத்திருந்த காலம்

சமீபத்தில் சுமார் பத்து தினங்கள் அப்போலோ மருத்துவமனையின் EDU காத்திருப்போர் அறையில் வாழவேண்டி நேர்ந்தது. வீடு, அலுவலகம், எழுத்து, படிப்பு என்று வழக்கமான அனைத்துப் பணிகளும் அடியோடு பாதிக்கப்பட்டு இரண்டு காரியங்களை மட்டுமே செய்தேன்.

1. காத்திருப்போர் அறையில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கேடிவியில் தினம் இரண்டு  அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தேன்.

2. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உன்னிப்பாக கவனித்தேன்.

நான் அங்கிருந்த தினங்களில் அட்மிட் ஆக வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே அதிகமிருந்தன. சிலருக்கு சிறுநீரக பாதிப்புகள் இருந்தன. சுவாசம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், கடும் காய்ச்சல் கண்டவர்கள் ஒன்றிரண்டு பேர்.

இதய பாதிப்பு என்பதை, மைல்ட் ஹார்ட் அட்டாக், கடுமையான ஹார்ட் அட்டாக், பைபாஸ், ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இரண்டாவது அட்டாக்,மூன்றாவது அட்டாக், முதல் அட்டாக், இதயத்தில் ஓட்டை, ஆஞ்சியோவுக்கு வந்தவர்கள், ப்ளாஸ்டுக்கு வந்தவர்கள் என்று பல விதங்களில் பிரிக்கலாம்.

இன்னும் பகுத்து ஆராய்ந்தபோது இவ்வாறான நோய்களுடன் வந்திருந்தவர்களில் சுமார் 45-50 சதவீதத்தினர் முஸ்லிம்களாக இருந்தார்கள். மேலும் 30 சதவீதத்தினர் குஜராத்திகளாகவும் 10-15 சதவீதத்தினர் பிராமணர்களாகவும் இருந்தார்கள்.

இந்த விஷயம் எனக்கு வினோதமாகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. டாக்டர்களிடம் இதைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, என் அனுமானம் கிட்டத்தட்ட சரிதான் என்று சொன்னார்கள்.

பெரும்பாலும் முஸ்லிம்களும் குஜராத்திகளுமே ஹார்ட் அட்டாக் பிரச்னையினால் மருத்துவமனைக்கு வருவதாகச் சொன்னார்கள்.

உணவுமுறையே இதனை அதிகம் தீர்மானிக்கிறது என்று எடுத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளது. அளவுக்கு அதிகமாக அசைவ உணவு எடுத்துக்கொள்வது, அளவுக்கு அதிகமாக இனிப்பு வகைகளை உட்கொள்வது, எண்ணெய், நெய் போன்ற பொருள்களை கண்மண் தெரியாதபடி உட்கொள்வது ஆகியவை இதய பாதிப்பைத் துரிதப்படுத்துகின்றன.

இன்னொரு விஷயமும் கவனித்தேன். குஜராத்திகளில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் லாரியில் ஆள் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது.

ஒரு குஜராத்தி குடும்ப உறுப்பினர் ஹார்ட் அட்டாக் என்று அட்மிட் ஆகியிருந்தார். பார்வையாளர் நேரத்தில் அவரைச் சந்திக்க 49 பேர் வரிசை கட்டி நின்றிருந்ததைக் கண்டு வியந்தேன். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். [இன்றில்லா] சீரணி அரங்கில் நிற்கிற பாவனையில் அத்தனை பேரும் உரக்கப் பேசிக்கொண்டும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பரிவு காட்டிக்கொண்டும் கண்ணைத் துடைத்துக்கொண்டும் இடையிடையே குட் டே பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டும் – அங்கேயே துணி துவைத்துக் காயப்போட்டுக்கொண்டும், குழந்தைகளுக்கு உணவு தயாரித்து ஊட்டிக்கொண்டும் – ஒரு பொது இடத்தைத் தம் சொந்த வீடாகக் கருதும் இயல்பு எல்லோருக்கும் சாத்தியமில்லை.

எமர்ஜென்சி வார்டு, ஐ.சி.யூ என்கிற இண்டென்ஸிவ் கேர் யூனிட் ஆகிய இரண்டுக்கும் மேலாக இருப்பது சி.சி.யு என்கிற க்ரிட்டிக்கல் கேர் யூனிட்டும் ஹெச்.டி.யு என்கிற ஹை டிபெண்டன்ஸி யூனிட்டும். இந்த இடங்களில் சிகிச்சை பெறுவோருக்கான அட்டண்டர்கள் தங்கும் பகுதியில் – யாரானாலும் கவலையும் கண்ணீருமாகத்தான் நிச்சயம் இருப்பார்கள்.

மருத்துவமனை நிர்வாகம் அவர்களது கவலையைச் சற்றே மறக்கச் செய்யும் விதத்தில்தான் எப்போதும் டிவி ஓடவிட்டுக்கொண்டிருக்கிறது.

இதிலும் ஒரு சிறு சுவாரசியத்தைக் கண்டேன். காத்திருப்போர் அறையை இரண்டாகப் பிரித்து ஆண்களுக்கொன்று பெண்களுக்கொன்று என தடுப்பு எழுப்பியிருந்தார்கள். இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனியே டிவி உண்டு.

ஆண்கள் இருக்கும் பகுதியில் பகல் பொழுதில் கிரிக்கெட் மேட்சும் பெண்கள் இருக்கும் பகுதியில் மத்தியான சீரியல்களும் காட்டப்பட்டன. இரவு வேளைகளில் ஆண்கள் பகுதியில் கே டிவியும் பெண்கள் பகுதியில் ராஜ் டிவியுமே ஓடுகின்றன. கிரிக்கெட் மேட்ச் இல்லாத தினங்களில் ஆண்கள் பகுதிக்கு பிபிசியும் சன் செய்திகளும் கலைஞரின் இசையருவியும் சித்திக்கின்றன. பெண்கள் பகுதியில் இவையெல்லாம் கிடையாது. சீரியல்கள், சீரியல்கள், அல்லது தாலியைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படம் ஏதாவது இருந்தால் அது.

அமைப்பியல் ரீதியில் இதனை வெகுவாகக் கட்டுடைக்க இயலும். மருத்துவமனைகளைப் பொருத்தவரை டாக்டர்கள் மட்டுமே கட்டுடைக்கலாம் என்பதனால் இந்த அளவில் விவரித்தால் போதுமானது.

பி.கு: அந்தப் பத்து தினங்களில் நான் காண நேர்ந்த திரைப்படங்கள் அநேகமாக 20 இருக்கும். அவை பற்றிப் பிறிதொரு சமயம்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி