யதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]

இடைநிறுத்தம், நிறுத்தம், வரையறை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், அடிக்கடி, பக்தன், அழிப்பவர், புனிதமான, தீவிரமான, தேடுபவர், துறவி, one who has controlled his passions and abandoned the world  என்றெல்லாம் பொதுவாக யதி என்னும் வார்த்தை விளக்கப்பட்டாலும் இவையெல்லாம் ஆண்பாலையே குறிக்கின்றது.

ஆனால் பாராவின் யதியைப் படித்தபின்பு, இந்த யதி இப்புனைவில் நடமாடும் நான்கு சகோதரர்கள், இவர்களின் அப்பா, மாமா, சம்சுதீன், சொரிமுத்து போன்ற சித்தர்கள் என எவரையும் குறிப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
மாறாக விதவை என்ற சொல்லாலும் தீவிரமாகத் தேடுபவர் என்னும் பொருளில் உலவும் பாத்திரங்களான அம்மா, சித்ரா,பத்மா மாமி என்னும் பெண்களையே இந்நாவலின் தலைப்பு குறிப்பதாக உணர்கிறேன்.

சித்து – மாந்தரீகம் – ஆவிகள், பேய் பிசாசுகள் என இருளுலகை இச்சிப்பவரும் யதியை வாசிக்கலாம்.   சைவ வைஷ்ணவ மந்திர தந்திர ஒளியுலகை விரும்புவரும் யதியை வாசிக்கலாம். துறவை விரும்பித் தேடும் வேட்கை உடையோரும், உலக வேட்கையை வெறுப்போரும் யதியை விரும்பலாம். குளத்துக்குள் பலவருடம் தவம் செய்வதாகக் கூறப்படும் தபஸ்வியை நேசிக்கக்கூடிய முது வயதினரும் யதி வாசிக்கலாம். சாஜிதாவை லிப்லாக் அடிக்கும் யோகியை விரும்பக்கூடிய விடலைப் பருவத்தினர் ரசிக்கலாம். ஓஷோ, ரஜ்னீஷ், இஷ்கான், சந்திராசாமி, சொரிமுத்துச் சித்தன், தினகரன், கோவளத்து தர்கா சித்தன் என மதம் பிடித்தவர்களும் யதியை நேசிக்க இடமுண்டு. கூலித் தொழிலாளியின் புற்று நோயை வெளியே எடுத்து ஒரு எள்ளுருண்டை ஆக்கி நோய் தீர்க்கும் மனிதம் பிடித்தவர்களும் யதியை ரசிக்க வகையுண்டு. இயற்கையையே கடவுளாக ஆராதிப்பவர்களுக்கோ எங்கும் விரவிக் கிடக்கும் வருணனைகள்.

துறவு என்றால் வாழ்வினின்று தப்பி ஓடுவதல்ல; பெருங்காதலுடன் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் அள்ளி அரவணைக்கும் பக்குவமே என்பதை துறவைத் தேடாதோரும் சுவைபட அனுபவிக்கும் வகையில் புனைவாக்கியுள்ள வருணனைச் சித்தன், வார்த்தைப் பித்தன் பாராவுக்கு வாழ்த்துகள் பல.

-Ms Fairy

[இதனை அனுப்பியவரின் பெயரே இதுதானா, அல்லது பெயர் எழுத மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter