யதி – வாசகர் பார்வை 15 [துளசி கோபால்]

அன்புள்ள அனியன் பா.ராகவனுக்கு,

யதி வாசித்தேன்.  ஐந்துநாள் தொடர் வாசிப்பு. அதன் பின் மூன்று நாட்கள் ஆச்சு  அதிலிருந்து மீண்டுவர!

இதுவரை உங்கள் எழுத்துகளை அங்கொன்றும், இங்கொன்றுமா வாசிச்சிருக்கேனே தவிர , ஒரு முழுத் தொடரா வாசிக்க வாய்ப்பே கிடைக்கலை. யதி வாசகர் கடிதங்கள் பார்த்துட்டுத்தான் அப்படி என்ன இருக்குன்னு உள்ளே போனேன். போனேனா….. அவ்ளோதான். அப்படியே உள்ளே இழுத்துப் போயிருச்சு!

சந்நியாசிகள், துறவறம் என்ற சொற்கள் எல்லாம்  கூடுதல் கொக்கிகளாகத்தான் எனக்கிருந்தது. குடும்பத்தில் தகப்பனின் துறவறம் கண்டவள் நான். என்ன துறவறம் அது?  வேண்டாத காரியங்கள் பலதும் செய்து, கட்டிய மனைவியையும்,  பெற்ற பிள்ளைகளையும்  படுத்தி எடுத்தபின், மனைவி இறந்த பிறகு,  மனைவி இறக்கும் தருவாயில் இருந்தபோது, யாரும் வேணாமுன்னு உதறிப்போன துறவறத்தில் அறம் இருந்ததாக எனக்குத் தெரியலை. அதுக்கு முன்னால் மட்டும் குடும்பத்தோடு கொஞ்சிக்குலவிக்கிட்டு இருந்தாரா என்ன? மற்ற குடும்ப அங்கத்தினர்கள்  போகட்டும் பீடை என்றுதான் நினைத்திருப்பார்கள். யாரும் வருந்தினதாத் தெரியலை…..

யதி வாசிப்பில் சந்நியாச வாழ்க்கையின் திரிசமன்களை வாசித்த பின்,  இனி  எந்த சந்நியாசியைக் கண்டாலும், நினைத்தாலும்…. நம்பிக்கையே வராது எனக்கு!  இப்போ இருக்கும் பல சந்நியாசிகளின் (கார்ப்பொரேட் சந்நியாஸிகள் உட்பட) மூலக்கூறுகள் எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிட்டீங்க.  இனி யார் மேலும்  நம்பிக்கை வர்றது கஷ்டம்….. ஆசிரமங்களின் நடப்புகளைப் பார்த்தால் ….. சந்தேகம் இன்னும் பலமாக வருது. யாருடைய பினாமியோ?

கேசவன் மாமா என்ன ஒரு உயர்ந்த ஆத்மா!  அவரை அப்படித் தனியே விட்டு வச்சுருக்க வேணாம். போகட்டும்.. அவருடைய கர்மா.

நாவலைப் பற்றி ஒன்னும் விஸ்தரிச்சு எழுதப்போறதில்லை. கற்பனையில் கூட நினைக்க முடியாத பல சம்பவங்கள்  ஹாரி பாட்டர் லெவலுக்குக் கொண்டு போயிருக்கு! என்ன ஒரு சித்து வேலைகள்? அப்பப்பப்பா….

கிருஷ்ணன் ஒரு தத்துவம் என்றதைத்தான் என்னால் கடைசிவரை தாங்க முடியலை. ரத்தமும் சதையுமா அவனை  பாகவதத்திலும், மஹாபாரதத்திலும் வாசிச்சு உருகிப்போனவள் நான்.

அப்புறம், இந்த நால்வரின் பெயரில் கடைசிவரை எனக்குக் குழப்பமே. முதலும் கடைசியும்  விஜய், விமல் என்று இருக்கும் தெளிவு, மற்ற ரெண்டு பெயர்களில் வரலை.  அது வினய்யா, வினோத்தான்னு  குடைச்சல்தான். இதுக்குப் பேசாம ஏ பி ஸி டின்னு வச்சுருந்தால்கூட நினைவு வச்சு வாசிச்சுக்கிட்டே போக கொஞ்சம் சுலபமா இருந்துருக்கும்!

களேபரமா இப்போ இருக்கும் திருவிடந்தை ஊர், அப்போ எப்படி இருந்ததுன்னு வாசிச்சதும் அங்கலாய்ப்பா இருந்தது உண்மை.

சவுக்குத் தோப்புகள் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு, எல்லா இடங்களும் கமர்ஸியலா ஆனது மஹா மோசம்.  காலம் மாறணும்தான். அதுக்காக இப்படியா?

ஆனாலும் அஞ்சுநாட்கள் கட்டிப்போட்ட இந்த யதியை மறப்பது கஷ்டமே! புத்தகமா ஒருமுறை வாசிக்கத்தான் வேணும். அடுத்த இந்தியப் பயணத்தில் தேடுவேன்.

அளவற்ற பிரியங்களுடன்,
துளசி சேச்சி.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter