யதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]

மனம் என்ற ஒன்றை விட அதி பிரம்மாண்டமான ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி தான் யதி படித்து முடித்த பின்பு எனக்குள் தோன்றியது. துறத்தல் இத்துணை எளிதானதா? அல்லது இயல்பானதா?

சாதாரண இலௌகீக வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும், தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஏதோ ஒன்றைக் குறிவைத்து இடையறாது ஓடிக்கொண்டும் இருக்கும் சராசரி மனிதர்களுக்கு சந்நியாசத்தின் மீது தீராத பிரேமையையும் பொறாமையையும் ஏற்படுத்துகின்றது “யதி”.

அடர்ந்ததொரு பெருங்காட்டின் மெல்லிய சலனங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மௌனத்தை, ஊடறுத்துக் கலைக்கும் நதியின் பேரிரைச்சலோடு தொடங்குகின்றது முதல் அத்தியாயம். இயற்கையின் இந்த தவிர்க்க முடியாத நியதியைப் போலவே, எவ்விதக் கேள்விகளுமின்றி தீர்க்கமாக மேற்கொள்ளப்பட்ட துறவறத்தை, ஆக்ரோஷமாகக் குலைக்க எத்தனிக்கும் பூர்வாசிரமத்தின் எச்சங்களோடு நகர்கின்றது.

ஒரே குடும்பத்தில் சகோதரர்களாக வளர்ந்த, நான்கு துறவிகள்;. ஹடயோகம் பயின்று சித்தர் ஆகி விடத் தவம் புரியும் ஒரு  சிவனடியார். மாய, மாந்திரீக வழியில் காமரூபிணியின் அருள் பெறத் துடிக்கும் ஒரு சக்தி உபாசகன். நாம ஜபம் மற்றும் கூட்டுப்பிரார்த்தனை வழி பரமாத்மாவை ஆராதிக்கும் ஒரு கிருஷ்ண பக்தன். சிறிதளவு நாடி ஞானம், சில எளிய மூச்சு பயிற்சிகள், கொஞ்சம் மனோதத்துவம் என்பவற்றைக் கொண்டு மனிதர்களை வசப்படுத்தி, சுதந்திரத்தையும் சுகத்தையும் சுவாசிக்கும் ஒரு நாத்திகன். அந்த நான்காமவனின் தன் கூற்றாகக் கதை சொல்லப்படுவதால், அவன் நியாயமே கதை முழுவதும் மேலோங்கி இருக்கின்றது.

பிரம்மச்சர்ய ஆசிரமத்தில் கடைசியாகச் சந்தித்த இவர்கள், இடையில் இரண்டு நிலைகளை மேற்கொள்ளாமல்  சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின்பு மீண்டும் சந்தித்துப் பகிர்ந்து  கொள்ளும் அனுபவங்களாலும் அவை குறித்த காத்திரமான  விவாதங்களாலும் நிறைந்திருக்கின்றது.

உறவுகள், உணர்வுகள், வாழ்வு, தவம், துறவு, மரணம், சொற்கள், உணவு, உடல், அறம், காமம், ஆன்மிகம் மற்றும் இன்ன பிற வாழ்வியல் விஷயங்கள் குறித்து, சமூகத்துக்கு ஒருப் பொதுப் பார்வை இருக்கின்றது. ஆனால் இவையே ஒரு துறவியின் கோணத்தில் வேறுபட்ட வரைவிலக்கணங்களைக் கொண்டிருப்பதாக விளக்குகின்றார் கதாசிரியர். மொழியின் சுவையான நடையில் கதையை வேகமாகப் படித்துக்கொண்டு போகையில் அங்கங்கே சட்டென்று கடிவாளமிட்டு நிறுத்தி சிந்திக்க வைத்து விடுகின்றன அவை.

எடுத்துக்காட்டாகச் சில. உடலுக்கு ஆரோக்கியமான இரவு உணவைப்பற்றிப் பரவலானப் புரிதலொன்றுன இருக்கின்றதல்லவா? ஆனால், ஒரு வேளை உணவென்றாலும் கூட விமலானந்தரின் இரவு உணவு முறையைப் படிக்கையில் இது எப்படிச் சாத்தியம் என்றுத் தோன்றிற்று.

அடுத்தது. மனித வாழ்வில் சொற்சிக்கனம் என்பது எவ்வளவு வலிமையானது என்பதை எண்ணி இன்னமும் வியந்து கொண்டே இருக்கின்றேன். நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் இதைப் பின்பற்ற முடிந்தால் மனிதனுக்கு எத்துணை அமைதி கிடைக்கக்கூடும்?

ஒரு இடத்தில் சொல்கின்றார், “மனிதனின் ஆதிக்குணம் வன்மம் தானே தவிர அன்பு என்பது அதை மறைக்க அணியும் ஒரு போர்வை மட்டும் தான்” என்று. இருக்கலாம். கடவுளின் சொல்லை, ‘நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது’ என்று மறுதலித்ததால் பல்கிப்பெருகிய இனம் தானே?. அதன் நான்கில் ஒரு பகுதி சமூக வலைத்தளங்களில் அமர்ந்து கொண்டு, எத்தனை நேர்மறையான செய்தி வெளிவந்தாலும், அதிலிருந்து எப்பாடுபட்டாவது ஒரு எதிர்மறைக் குறிப்பைத் தேடிப்பிடித்து அர்த்தமற்ற விவாதங்களை மேற்கொள்வதைப் பார்க்கையில் மேற்கண்ட கூற்றை முழுமையாக உறுதிப்படுத்த முடிகின்றது.

இவை போன்று எழுதித் தீராத பல விஷயங்களை யதியிலிருந்து மேற்கோள் காட்டலாம். இவையெல்லாம் துறவறத்துக்குத் தானே என்றோ அல்லது புனைவு தானே என்றோ இயல்பாகக் கடந்து போக முடியவில்லை என்பதுதான் இந்த நாவலின் சிறப்பம்சம்.

இருக்கும் உறவுகளைத் துறந்த இந்த நான்கு சந்நியாசிகளை விட, இல்லாத உறவுகளை செயற்கையாகத் தோற்றுவித்துக்கொண்டு ஒரு கதம்ப மாலையைக் கட்டி உலகியலில் இருந்த படியே துறவறம் பூண்ட அம்மா தான் எவ்வளவு பெரிய யோகினி ! மிக நேர்மையான, முழு நியமமான துறவி, அவள் ஒருத்தி தான்.

விஜய்க்கும் விமலுக்கும் இடையே ஏறக்குறைய பத்து ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கின்றது. தவிரவும், அம்மாவின் திருமணம் நடந்து சுமார் ஒரு வருடம் சென்றபின் அவள் சந்தித்த மைதிலி, அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே திருமணமாகி நான்கு சிறு குழந்தைகளைப் பெற்றவள். இந்நிலையில் தாய் தந்தையின் அஞ்ஞாதவாசம் அவ்வவ் வயதுக்கான குழந்தைகளின் வளர்ச்சியை அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து எப்படி மறைத்திருக்க முடியும்? உண்மையில் யாரைப் பழிவாங்க அல்லது வேறு என்ன நோக்கத்துக்காக அவள் இவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டு இத்தனையும் செய்தாள்? இப்படிப் பூடகங்களாலும் புதிர்களாலும் நிறைந்திருந்தாலும் பெண்மையின் வைராக்கியத்துக்கான முழு உருவம் அவள்.

நிலையாமையின் நிரந்தரத்தை ஆழமாகச் சொல்லிக்கொண்டு வந்த கதை, கடைசி 20 அத்தியாயங்களில்  புனைவைப் போலில்லாமல் யதார்த்த வாழ்க்கை என்பது எப்போதும் தீர்வுகளை எட்ட இயலாத புதிர்களால் நிறைந்து, அந்த இயலாமையின் தடத்திலேயே பயணிப்பது என்பதை ஆணித்தரமாக நிறுவி முடிவது சிறப்பு.

படித்து முடிந்தபின்பு இன்னதென்று தெரியாத ஒரு மோன நிலைக்கு மனதை இட்டுச்சென்று விட்டது யதி. இறுதி அத்தியாயத்தின் கீழ்கண்ட பத்தியை மனதுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்து உருப்போட்டுக்கொண்டே இருக்கின்றேன். வாழ்வில் இனந்தெரியாத குழப்பங்கள் ஏற்படுகையில், ஒரு நிமிடம் நிதானிக்க இது எப்போதும் உதவும் என்பதில் ஐயமே இல்லை.

“கிழவா, தவமென்பது வாழ்வு. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக்கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும்”

  • தர்ஷனா கார்த்திகேயன்.
Share
By Para

Recent Posts

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி