கடிதம்

ஒரு கடிதம் – பொன் மகாலிங்கம்

அன்பின் பாரா,

வணக்கம்.

குமுதம் டாட் காமில், பாக் ஒரு புதிரின் சரிதம் தொடராக வந்ததில் இருந்து உங்கள் எழுத்து எனக்கு அறிமுகம். பின்னர் டாலர் தேசம், நிலமெலாம் ரத்தம் என அது விரிந்தது. இன்றளவும் எனக்கு, அந்த இரண்டு புத்தகங்களும் உங்கள் படைப்பில் மிகப் பிடித்தமானவை. சக செய்தியாளர்களிடம், அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பேன்.

அதையெல்லாம் தாண்டி, உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவனாக உணரச் செய்தது உணவில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு. ருசியியல் எனக்கு இன்னுமொரு கிளாஸிக். உணவை ஆராதிப்பதில் நாம் ஓரினம். அண்மையில், நீங்கள் எழுதிய புளியோதரை செய்முறையை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, முகம் தெரியாமல் உங்களிடம் அர்ச்சனை வாங்கிக்கட்டிக் கொண்ட அநேகரில் அடியேனும் அடக்கம்.
ஒவ்வொரு முறையும், படிக்கத் தொடங்கியதுமே உள்ளே இழுத்துப் போட்டுக்கொள்கிறது உங்கள் எழுத்து. அவ்வப்போது நீங்கள் எழுதியதில் ஓரிரு வரிகளை நறுக்கி நண்பர் சதக்கத்துல்லாவுக்கு வாட்சப்பில் அனுப்பிப் பூரித்துக் கொள்வேன். இந்த மனுஷன் இருக்காரே… என்று சிரித்துக்கொள்வோம்.

இடைப்பட்ட நாள்களில், உங்கள் எழுத்துகளை வாசிப்பதில் ஓர் இடைவெளி. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை நீங்கள் பகிரும்போது படிப்பதோடு சரி. ஊரடங்கை ஒட்டி நீங்கள் எழுதிய ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் குறித்து ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியதைப் படித்துவிட்டு, உடனே அதைப் படிக்க விரும்பினேன். கிருமிப்பரவலால், சென்னைக்கு வரமுடியாமல் அது சாத்தியமற்று இருந்தது. கிண்டில் வாங்கிச் சில ஆண்டுகள் ஆனாலும், இரண்டு புத்தகங்கள் மட்டுமே அதில் படித்திருக்கிறேன். அச்சுத் தாள் புத்தகத்தைப் படிப்பதில் உள்ள சுகம், அதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் தூக்கிப் போட்டுவிட்டேன்.


நேற்று உங்கள் புத்தகம் நினைவுவந்தது. ஆர்வம் தாளாமல், உடனே அளவற்ற வாசிப்புக்கான அனுமதியைக் கிண்டிலில் மீண்டும் வாங்கி இரண்டு புத்தகங்களைத் தரவிறக்கினேன். அதில் ஒன்று, செல்வேந்திரனின் வாசிப்பது எப்படி ? மற்றொன்று உங்களுடைய ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம். இதற்குமேல் காத்திருக்கமுடியாது என்று தோன்றியதால், கிண்டிலில் படிக்கத் தொடங்கிவிட்டேன். இன்று காலை தொடங்கி பிற்பகலில் முடித்துவிட்டேன்.

சென்னையின் பழைய முகத்தை எங்களுக்குப் படம் பிடித்துக் காட்டியிருந்தீர்கள். நானும் 1982ஆம் ஆண்டு முதல் சென்னையையும் அதன் வளர்ச்சியையும் பார்த்துவருகிறேன். உங்கள் அளவுக்கு அதன் மாற்றங்களை நினைவில் பதித்துக்கொள்ளவில்லை. ஈராயிரமாம் ஆண்டுக்குப் பின் சென்னை கண்டது, அசுர வளர்ச்சி. அது உங்கள் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது. 1981இல் நாவலூரில் முக்கால் கிரவுண்ட் நிலத்தோடு கூடிய ஓட்டுவீடு இருபத்தேழாயிரம் ரூபாய். சொக்கா !.. எனக்கும் இப்படி வேளச்சேரியில் முக்கால் கிரவுண்டில் ஒரு வீடு வந்தது 2003இல். தலைமை ஆசிரியரைப் போல் நானும் அப்போது வாங்கவில்லை. இப்போது அந்த இடம் மட்டும் சில கோடிகள். போகட்டும்.

பத்திரிகைப் பணியோடு திரைத்துறையிலும் நீங்கள் வாய்ப்புத் தேடியது எனக்குப் புதுத் தகவல். ஓஜா பலகை வைத்து ஆவிகளோடு பேசுவது பற்றி நாங்களும் முயன்றுபார்க்க முடிவெடுத்துக் கடைசியில் அது நண்பர் ஒருவரின் அச்சுறுத்தலால் நின்றுபோனது. அறைக்கு வந்த ஆவி, வெளியில போகாம அடம்பிடிச்சா என்னடா செய்யிறது? என்று கேட்டதும் ஏகமனதாக எல்லாரும் அதைக் கைவிட்டோம். பரவாயில்லை உங்களுக்கு நிறையத் துணிச்சல் இருந்திருக்கிறது. ஆரிய கௌடா சாலைக்கு இப்படி ஒரு வரலாற்றுப் பின்னணி இருப்பது ஆச்சர்யம். முதியோர் பேட்டையான மேற்கு மாம்பலத்தில்தான், என் சித்தி வீடு. அதனால், உங்கள் வருணனையை என்னால் அச்சு அசலாக மனக்கண்ணில் கொண்டுவரமுடிந்தது. இதுவரை நான் கண்ணால் கண்டும் கவனத்துக்கு வராத சில அம்சங்கள், நீங்கள் சுட்டிக் காட்டியதும் நினைவில் எழுந்தன. வடிவேலு போல, “அட, ஆமால்ல?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். புளூ பேர்ட் காப்பித் தூள் அரைக்கிலோ வாங்க முடிவெடுத்துள்ளேன், அடுத்தமுறை ஆரிய கௌடா சாலையைக் கடக்கும்போது…

உண்மையில் உங்கள் கட்டுரைகள், சென்னையின் புற அடையாளத்தைக் காட்டிலும் அதன் ஆன்மாவைத் தொட்டுச் செல்வதுதான் சிறப்பு. வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பது சரிதான். மும்பையைப் பற்றியும் அங்குள்ளவர்கள் இப்படித்தான் சொன்னார்கள். லேண்ட்மார்க் நான் ஒருமுறைதான் போயிருக்கிறேன். நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது, இன்னும் சிலமுறை போயிருக்கலாமே என்று தோன்றியது. சென்னைக்கு வரமுடியாத இந்த நேரத்தில், சென்னையை நினைத்து ஏங்கவைத்து விட்டன உங்கள் கட்டுரைகள். நன்றி பாரா சார்!…

-பொன் மகாலிங்கம்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி