யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]

அது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம்.

“கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது பெரும்பாலும் இஸ்கான் (ISKCON) வழி கிருஷ்ணபக்தியாக இருக்கும். சைவத்தை தழைக்க வைக்கும் மஹானுபாவரின்னும் ஐரோப்பாவுக்கு கிடைக்கவில்லை என்ற எண்ணத்தில் ஒரு லாரி மண்ணள்ளிக்கொட்டினார் பிஸ்மார்க்.

எந்த மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் தனக்கு முன்னால் இருக்கும் ஃப்ரேம் செய்யப்பட்ட படத்தை கண்களில் ஒற்றிக்கொண்ட பின்னர் பேச ஆரம்பிப்பதும் (முழுவதும் அவர் பக்கமாக திருப்பி வைக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அநேகமாக சிவனனோ / பிள்ளையாரோ இருக்கவேண்டும் ) , மீட்டிங்கோ, அன்றைய பணியோ முடிந்த பின்னர், தன் ஸ்படிஹ மாலையை எடுத்து நமஷிவாய என்று கண்களில் ஒத்திக்கொள்வதாகட்டும், இரண்டு முறை கை நிறைய குழைத்து விபூதியை இட்டுக்கொள்வதாகட்டும் நிறைய ஆச்சர்யங்களை நாள்தோறும் ஆன்மிகம் சார்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் உச்சகட்டமாக, அந்த வார இறுதியில் நடந்த சத்சங்கத்தில் பெருங்குரலெடுத்து தமிழில் “ஓம் சிவாய நமச்சிவாய ஓம் சிவாய சங்கரா” பாடியபோது அதிர்ந்தே போய்விட்டேன்.

”இவ்ளோ நல்லா பாடுறீங்களே பிஸ்”, என்றேன்

சிரித்துக்கொண்டே “குருநாதரோட பரிசு” என்றார். நாசரின் கரகரப்புக்குரல் தோற்றுவிடுமளவுக்கு அழகான தமிழ்.

“உங்க குருநாதர்?”

”பரமஹம்சர்” என்றார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றே நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர் நிறைய ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றிருந்தன எங்கள் உரையாடலில். ’குரு நாதர்’, ’குருநாதர் இட்ட பணி’, ’குருநாதரின் அனுக்ரஹம்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். குரு பக்தியென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்.

அவரின் பணி நிறைந்து சொந்த நாடு திரும்பும் நாள் வந்தது. விடை பெறுவதற்கு முதல் நாள் அவர் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது,
“பிஸ்! எனக்கு உங்ககிட்ட கேக்க ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சம் இருக்கு” என்றேன். சிரித்தவண்ணம், புருவத்தை உயர்த்தினார்.

“உங்க முன்னாடி இருக்குற இந்த படம் , சிவபெருமானோடதா அல்லது பரமஹம்சரோடதாங்கிற டவுட் எனக்கு ரொம்ப நாளா” என்றேன்.

“சந்தேகமில்லாம குரு நாதர்தான். சிவனை எனக்கு அடையாளம் காட்டியது அவர்தானே” என்றவாறு புகைப்படத்தைக்காட்டினார்.

ஒரு பிரளய வெள்ளம் வந்தது போல மனம் அதிர்ந்தது. அடங்கவேயில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தனி புகைப்படத்தையோ, சாரதா தேவியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையோ எதிர்பார்த்திருந்த எனக்கு அப்புகைப்படம் அளித்த அதிர்ச்சி சாமானியமானதல்ல. அந்த புகைப்படத்தை தனது சிரித்த முகத்துடன் அலங்கரித்துக்கொண்டிருந்தது சாட்சாத் “நித்தியானந்தா”. ஆம், அதே “ரஞ்சிதா” புகழ் நித்தியானந்தா.

பரமஹம்ஸ நித்தியானந்தர் என்பதைத்தான் பிஸ்மார்க், “பரமஹம்சர்” என்று சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துக்கொண்டே இருந்தது என் மனம்.

அதிர்ந்து போயிருந்தேன் என்பது மிதமான வார்த்தை. ”எப்படி , எப்படி” என்று அறற்றிக்கொண்டிருந்தது மனது. இவ்வளவு தெளிவான ஆன்மிக விஷயங்களைப்பேசிக்கொண்டிருக்கும் இந்த பிஸ்மார்க்கிற்கு நித்தியானந்தா போன்ற ஒரு பிரஹஸ்பதி குருவாக இருக்கவே முடியாது என்று ஏனோ திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதற்குப்பிறகு நித்தியானந்தா தனது ஹீலிங் தெரபியும் ஆன்மிகமும் கலந்து பிஸ்மார்க்கின் சகோதரி ஒருவரின் கொடுநோயைக்கரைத்ததையெல்லாம் பற்றி விபரமாகக்கூறிக்கொண்டே சென்றாலும், என் மனதால் அதை ஒப்புக்கொள்ள முடியவே இல்லை.

இப்படியாகத்தான் என் வாழ்வில் ஆன்மிக அதிர்ச்சிகள் சங்கமிக்கத்தொடங்கின. அதற்கு முன்னால் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழி, ”கற்றலே ஆன்மிகம்” என்று மிகவும் சிரத்தையுடன் வேத, உபனிஷத்களை கற்றுக்கொள்ள முயன்றுகொண்டிருந்த எனக்கு, இதுமாதிரியான புதுமாதிரி ஆன்மிக சங்கதிகள் அறிமுகமாகத்தொடங்கின.
பிஸ்மார்க் தந்த இந்த அதிர்ச்சிகளுக்கு முன்பாகவே, துபாய்வாழ் இஸ்க்கான் ”டிவோட்டீஸ்” வாழ்வியல் சார்ந்து வழங்கி வந்திருந்த அதிர்ச்சிகள் சில மடங்கு டெசிபல்கள் குறைவானவை என்றாலும் அதிர்ச்சிகளின் முதற்படிகள் அவை. பின்பு, பினாமி பெயரில் நிலம் வாங்க வரும் அரசியல்வாதியின் பிரதிநிதியாக வந்த காவி உடை சன்னியாசி, ஷாந்தி மந்திரங்களை விளக்குவதற்காக முகாமிட்டிருந்த சுவாமிகளுக்கு எங்கள் நிறுவன ஐந்து நட்சத்திர ஹோட்டலின் படோடோபமான அறையில் ஜக்கூசி பிரத்யேகமாக நிறுவப்பட்ட செய்தி என இதன் அதிர்ச்சிகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் சென்றது.

இதிலெல்லாம் நான் அறிந்துகொண்ட (இதுவரையிலான) நீதி, துறவு, ஆன்மிகம்,காவி என்பதற்கெல்லாம் எவ்விதமான அடிப்படை வரையறைகள் கிடையாது. தேவையானதே தர்மம் என்பதைப்போன்றே அவரவர்க்கு தேவையானதை நிறுவிக்கொள்வதே, அவரவர்களின் நியமப்படி துறவறத்திற்கான பொருள் என்று எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். சந்நியாசம் என்ற வார்த்தைக்கான நியாயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தன. சொல்லப்போனால் அவநம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது.

*

என் மனம் எதை புரிந்து கொள்ளத்தவறியதோ, எதன் பொருள் தேடி அலைபாய்ந்து கொண்டிருந்ததோ அதை மையமாக வைத்து முழு நாவல் ஒன்று வரப்போகிறது, அதுவும் எனக்கு பிடித்த எழுத்தாளரிடமிருந்து என அறிந்தபோது எழுந்த மகிழ்வுக்கு அளவேயில்லை. துங்கபத்ரையில் ஆரம்பித்த அந்த மகிழ்வு, இறுதியில் முக்கூடற்சங்கமத்தில் நிறைவு பெரும் வரையிலும் எங்கும் தடையின்றி பிரவாஹித்துக்கொண்டே இருந்தது.

”ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் நான்கு ஆண் சகோதரர்களும் ஒருவர் பின் ஒருவராக துறவறம் காண்பது ஏன்?” என்ற ஒற்றை வினாவின் மேல் பல லேயர்களில் விஸ்தாரமாக, வெகு வீரியமாக தன் நாவலை எழுப்பிக்கட்டியிருக்கிறார் ஆசிரியர். ”ஒரு மின்மினியைப் போல சுடர்ந்து அணைந்து சுடர்ந்து அணைந்து நகர்ந்து நகர்ந்து எங்கெங்கே கொண்டுபோய்விட்ட” விமலின் குடும்பக்கதையை – அவன் கடந்த காலத்தை தனது வசீகரமான மொழியின் வழி நம் கண்களுக்கு கொண்டு வந்து காட்டுகிறார்.

”ஒழுக்கமோ, மீறலோ அல்ல லயமே ருசி.” என்றவாரு அறிமுகமாகும் விமலை “மொழியின் குழந்தையென” நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவன் வழி முன்னும், பின்னும் நாம் கடந்து செல்லும் காலங்களின் வீரியம் சாதாரணமானதல்ல.

அன்று மதியம் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருக்கும் சிஷ்யையை அணைத்துக்கொள்ளும் விமலின் வழி முதல் அத்தியாத்தின் இறுதியில் அவர் வைத்திருக்கும் ஒரு ஆச்சர்ய காற்புள்ளி, அடுத்தடுத்த அத்தியாயங்களில், இன்னும் இன்னும் ஒரு மிகப்பெரிய சுவாரசியப் பந்தென, சந்நியாசத்தையும், சாமியார்களையும் விசாரணை செய்து கொண்டே செல்கிறது. மேலோட்டமாகப்பார்த்தால் நான்கு சகோதரர்கள், நான்கு விதமான சந்நியாசங்கள் என்றுதான் இந்த நாவலின் அடிப்படைக்கட்டுமானம் நமக்குத்துலங்கும். ஆனால் வெகு சாமர்த்தியமாக இதில் வரும் அம்மா, கேசவன் மாமா, சித்ரா, பத்மா மாமி, சொரிமுத்து என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும், சந்நியாசத்தின் நிழலைப்படரவிட்டு வாசகனை ஆழம் பார்த்திருக்கிறார்.

என்னைக்கேட்டால் பெரிய அண்ணனைத்தான் ஹீரோவாக்கியிருக்க வேண்டும், அவன்தான் சூத்ரதாரி – இந்தத் தலைமுறையில் கேட்கும் வரங்களை மாயாஜாலங்களின் வழி நிகழ்த்திக்காட்டும் மோஸ்ட் வாண்டட் சாமியாராக அறியப்பட்டிருக்கலாம், அவனின் வழி மனிதனின் ஆசா பாசங்களின் ஆழத்தையும், சந்நியாசத்தையும், மோட்சத்தையும் விசாரணை செய்து வியாசங்களாக எழுதித் தள்ளியிருக்கலாம்.. ஆனால் பாரா விழைந்தது அதுவல்ல.

விமலை நாயகன் ஆக்கியதன் மூலமாக வாசக சமூகத்தின் உச்சி மோர்ந்து அவர் சொல்லிப்போயிருக்கும் சமாச்சாரம் சாதாரணமானதல்ல. ”இயற்கை பெரிதுதான், அது பெரிது என உணரும் மனத்தை விடவா” என்று கேள்வி கேட்கும் உச்ச நேரெண்ணங்கள் கொண்ட விமல், ”முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.” என்று தன் குருவின் பார்வையில் காமத்தின் மீதான சந்நியாசத்தின் பார்வையை ஒரே வாக்கியத்தில் விளக்கும் விமல், “சில அற்புதங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன், எனக்குத்தெரியாத ஒரு இயல் என்பது தாண்டி அதில் வியக்க ஒன்றுமில்லை” என அலைபாயும் மனதுக்கெல்லாம் அருமருந்தை அளிக்கும் விமல், ”என் சிந்தனையைக் கூட்டங்களில் உலவவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்று வெளியே அமர்ந்துவிடுவேன்” என “தனித்திரு” தத்துவத்தை விளக்கும் விமல், தவிர்க்க வேண்டிய மூன்றென்று ”பணம், அசையாச்சொத்து, நேரடி அதிகாரம்” என்று சந்நியாசத்திற்கான மும்மலங்களை குருவின் மூலம் உரைக்கும் விமல் என பெரிய ஆச்சர்ய அவதாரம் அவன்.

இந்த நாவல் ஆரம்பித்து துறவின் ஆதி அந்தங்களை விசாரணை செய்துகொண்டிருந்தபோதே ஆழ்மனதில் பெரும் உற்சாகத்துடன் மாயாப்பூரின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன். இஸ்கானின் அத்தியாத்தை விலக்கிவிட்டு கலியுகத்தில் ஒரு ஆன்மிகக் கதையோ சந் நியாசக்கதையோ எழுதுவதாவது! மிகச்சரியாக 108வது அத்தியாத்தில் வினோத்தை அறிமுகப்படுத்தி “ஹரே கிருஷ்ணா” சொல்லவைத்தபோது நானடைந்த மகிழ்வை இவ்வையகம் அறியாது. ஆசிரியருக்கு ஒரு டைரக்ட் ட்வீட் செய்து, அன்றைய நாளின் 11 மணி டீயை கேன்சல் செய்து, கேட்பரீஸ் சாப்பிட்டவன்.

கதைக்கு ஒரு நல்ல வில்லன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்வது. ஆனால் உள்ளதிலேயே நல்லவனாக அவனை ஃப்ரேம் செய்து, அவன் பாதை முழுதும் மலர்ப்பந்தாய் விரித்து வைத்து ஆசிரியர் ஒரு அழுகுணி ஆட்டம் ஆடி வைத்திருந்தார். சித்ராவை விட்டு எப்படிப்போனானோ அதே சாம்பல் நிற வன்மத்துடந்தான் அவன் வாழ்வு முழுதையும் கடந்திருப்பான் என்பதுதான் விஜய் மீதான என் அபிப்ராயமாக இன்றும் இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவன் சுயரூபம் வெளிவருமென்று இறுதி அத்தியாயம் வரைக்கும் காத்திருந்ததுதான் மிச்சம். என்னளவில் அது ஒரு பெரிய ஏமாற்றம் இந்நாவலில்.

அது போல இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்ததுதான், என்றாவது ஒரு நாள் சித்ராவை ஒரு பெண் சாமியாராக்கி பிடதி ஆசிரமத்திலிருந்து கொண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். நடக்கவில்லை!

தேடல், அலைச்சல், தோல்வி, வேறு வேறு டெஸ்டினி என்று பெரும் அலைபாய்தலோடு ஆசிரியர் படைத்திருக்கும் வினய் தான் கலியுகத்தில் இறைவனைத்தேடும் நம் அனைவரின் குறியீடோ என்று நாவல் முடிந்த பிறகு யோசிக்கிறேன். இந்த நாவலில் சித்ராவைத்தாண்டியும் நாம் பரிதாபம் கொள்ளும் ஒரு ஜீவன் உண்டென்றால் அது வினயாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். எனினும் கோரக்கரை அடைவதன் மூலமாக ”கலி”யிலும் ஒரு பூரணத்தை விதைக்கமுடியும் என்று கோடிட்டுச்சென்றிருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்து பெரும்புதிரென நமக்கு அறிமுகப்படுத்தி, வழி நடத்தி, வருவான் வருவான் எனப்போக்கு காட்டி கடைசியில் ஒரே ஒரு வசன வழி விஜயைக் கடந்துபோவது ஏனென்ற கேள்விதான் இந்த நாவலின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது. அதனைப் பின் தொடர்ந்து போகும் வழியில் ”யதி”யின் பூரணத்தை நாம் உணரமுடியும்.

-சிவராமன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter