இன்றுடன் இனிதே…

கிழக்கு மொட்டை மாடி புத்தக வெளியீடுகளின் இறுதிநாள் நிகழ்ச்சி இன்று நடந்தேறியது. சோம. வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ என்கிற இண்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் குறித்த புத்தகமும் பாலு சத்யாவின் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறும் வெளியிடப்பட்டன. எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ் இருவர் வழங்கியதுமே நிறைவான உரைகள். நிகழ்ச்சியின் இறுதியில் வழக்கம்போல் கலந்துரையாடல்.  இதன் ஒலிவடிவம் இங்கே கிடைக்கும்.

இந்த ஆறு நாள் கூட்டத்துக்கும் வாசக நண்பர்கள் நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஏராளமாகவும் ஆர்வமுடனும் வந்திருந்து பங்குகொண்டது மிகுந்த மன நிறைவைத் தந்தது. புத்தக வெளியீடு என்பது தனிப்பட்ட முறையில் என்னைக்கேட்டால் ஒரு திவசச் சடங்கு மாதிரி. எழுதியவரைப் பாராட்டி யாராவது நாலு வார்த்தை பேசினால், அது அவருக்கு சந்தோஷம். மற்றபடி புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாத பார்வையாளர்களுக்கு, பேச்சாளர் சொல்வதெல்லாம் பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடியதல்ல. தவிரவும் நெருக்கமாகத் தெரியாத யாரேனும் ஒருவர் சிபாரிசு செய்வதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தை யாரும் வாங்கிப் படிப்பார்கள் என்றும் நான் கருதவில்லை.

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி [மூவர்] வெளியானபோது மிகுந்த ஆசையுடன் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். என் பிரியத்துக்குரிய நண்பர்கள் மாலன், ஆர். வெங்கடேஷ், சாரு நிவேதிதா, திருப்பூர் கிருஷ்ணன், கல்கி ஆசிரியர் சீதாரவி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அத்தனைபேரும் என்மீது அன்பும் என் வளர்ச்சியின்மீது அக்கறையும் கொண்டவர்கள். அன்றைக்கு சாரு பேசிய பேச்சை இன்றும் என் தந்தை நினைவில் வைத்திருக்கிறார். இந்த மனிதர் எத்தனை வாசித்திருக்கிறார் என்று திரும்பத் திரும்ப வெகுநாள் வரை சொல்லிக்கொண்டிருந்தார்.

பொதுவாக இம்மாதிரியான விழாக்களில் ஒன்றுசேராத வழக்கம் கொண்ட பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். நினைத்துப் பார்த்தால் இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு வண்ணதாசன் வந்திருந்தார். சுபாவும் வந்திருந்தார்கள். ரா.கி. ரங்கராஜன் இருந்தார். விக்கிரமாதித்தனும் லஷ்மி மணிவண்ணனும்கூட வந்திருந்தார்கள். ஒரு பக்கம் இளையபாரதி. இன்னொரு பக்கம் யுக பாரதி. கல்கி, விகடன் நண்பர்கள் ஒருபுறம். கணையாழி போன்ற சிற்றிதழ் நண்பர்கள் ஒருபுறம். நம்பமுடியாத அளவுக்குக் கூட்டம்.

உண்மையில் என்னைப்பற்றி அப்போது என் பெற்றோருக்கு இருந்த சில அடிப்படைக் கவலைகளைக் குறைப்பதற்காகவே அந்த வெளியீடு விழாவினை ஏற்பாடு செய்திருந்தேன். சற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸாக, விழாவில் விக்கிரமாதித்தனும் லஷ்மி மணிவண்ணனும் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்து இலக்கிய உலகில் அன்றைக்குத்தான் ஒரு புதிய கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள். என் பெற்றோரின் கவலை தீரும்படியாக இல்லாமல் போனது.

அந்த ஒரு கூட்டத்துடன் வெளியீட்டு விழா என்கிற எண்ணமே எனக்கு எப்போதும் எழுந்ததில்லை. அதற்கான அவசியம் இல்லை என்று தோன்றிவிட்டதுதான் காரணம். எந்த ஒரு நல்ல புத்தகமும் தனக்கான வாசகர்களை எவ்வித சுய மார்க்கெடிங் உத்திகளையும் எதிர்பாராமல் தானே தேடிக்கொள்ளும். இது என் அனுபவம். நாற்பது புத்தகங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன. அந்த ஒரு விழாவுடன் சரி. அந்த சீமந்த புத்தகம் தனது முதல் ஆயிரம் பிரதிகளைத் தொடப் பல வருடங்கள் பிடித்தன. அதனாலென்ன? அதுவும் ஒரு சந்தோஷம் அப்போது. அவ்வளவே.

மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது கிழக்கில் புத்தக வெளியீடு – அதுவும் தினசரி இரண்டு, ஆறு நாளைக்கு என்று பத்ரி திட்டமிட்டபோது முதலில் எனக்குத் தயக்கமாகவே இருந்தது. என்னதான் ஃபார்மலாக அல்லாமல் ஜாலியாகக் கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தாலும், ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. இதனால் என்ன பயன் இருக்கும் என்கிற கேள்வி எழுப்பிய தயக்கம். தவிரவும் புத்தகக் கண்காட்சி நேரம், வேலைகள் மிகுதி. இது கணிசமாக நேரமெடுக்குமே என்கிற கவலை.

ஆனால் இந்த வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துரையாடல் என்றொரு அம்சத்தை இணைத்தது மிகப்பெரிய திருப்புமுனையானது. நிகழ்ச்சிக்கே புதுப்பரிமாணம் கொடுத்த இந்த விவாதங்களை நான் மிகவும் ரசித்தேன். சில நாள் சாதாரணமாகவே போனாலும், சில நாள்களில் இந்த விவாதங்கள் சுவாரசியமாகவும் தகவல்கள் நிறைந்ததாகவும் அமைந்தது.

எல்லா கூட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். எல்லா கூட்டங்களிலும் ஹிந்துத்வ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வோரும் அவசியம் இருக்கிறார்கள். எனவே விவாதம் என்று வரும்போது சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாமல் போய்விடுகிறது.

எண்ணெய் அரசியல் தொடர்பான விவாதங்களையும் இருளர்கள் புத்தகத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட விவாதத்தினையும் நீங்கள் பத்ரியின் பதிவிலிருந்து டவுன்லோட் செய்து கேட்கலாம். யாரும் தொழில்முறை பேச்சாளர்கள் அல்லர். மைக்கை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது கூட [என்னையும் சேர்த்து] பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முன்வைத்து ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்போது கிட்டத்தட்டவாவது ஒரு முழுமை கிடைத்துவிடுகிறது.

இத்தகைய எளிய கூட்டங்களை இனி அடிக்கடி நடத்தலாம் என்கிற எண்ணத்தை இந்த ஒருவார நிகழ்ச்சிகள் எங்களுக்குள் நம்பிக்கையாக விதைத்திருக்கிறது. வாரம் முழுதும் ஆர்வமுடன் நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்து கேள்விகள் கேட்டு, கலந்துரையாடலில் பங்குபெற்ற இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மொட்டை மாடிக் கூட்டத்தினை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதி தினசரி நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு பிரபலப்படுத்திய பத்திரிகைகளுக்குத் தனியே நன்றி சொல்லவேண்டும்.

பல புதிய வாசகர்கள், சில புதிய எழுத்தாளர்கள் இந்த ஒருவார காலத்தில் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இது உற்சாகத்தையும் பொறுப்புணர்வையும் இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்தக் கூட்டங்கள் நடைபெறாது போயிருந்தால் ஹரன் பிரசன்னா இத்தனை நன்றாக உரைநடை எழுதுவார் என்பதே எனக்குத் தெரியாது போயிருக்கும். அநியாயத்துக்குக் கவிதை எழுதிக் கெட்டுப்போய்க்கொண்டிருக்கும் அவரை இனி ஒரு வழி பண்ணிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்!

நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

Share

3 thoughts on “இன்றுடன் இனிதே…”

 1. பிரசன்னாவை இனி இறைவரால் கூட காப்பாற்ற முடியாது 😛

  Wishing you all a happy, healthy (?!) 2009…

 2. //அநியாயத்துக்குக் கவிதை எழுதிக் கெட்டுப்போய்க்கொண்டிருக்கும் அவரை இனி ஒரு வழி பண்ணிவிடலாம் //

  பாவம் பிரசன்னா 🙂

  நம் எண்ணத்தை வெளியே சொல்வதற்கு கவிதையோ கட்டுரையோ… எது உதவினாலும் நல்லது தானே..

 3. அரவிந்தன்

  அன்பின் பாரா,

  சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு,சரியான நேரத்திற்கு ஆரம்பித்தல்,பொருத்தமான நேரத்தில் சிற்றுண்டி.

  பல புதிய நண்பர்களையும்,உங்களை முதன்முதலாக நேரில் சந்தித்து பேசவும் வாய்ப்பினை எற்படுத்திய கிழக்கு மொட்டை மாடி புத்தக திருவிழா குழுவினருக்கும்,நிர்வாகி பத்ரி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!!!

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களுர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *