ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 10

தாமரையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வரை சைக்கிளில் செல்லும் ஒருவனுக்கு சிறுநீர் கழிக்க வழியில் எங்குமே இடம் கிடைக்காது. தவித்துப் போய்விடுவான். கடைசியில் சத்யம் திரையரங்கத்துக்குப் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் கசங்கிக் கிடக்கும் இந்திய வரைபடத் தாள் ஒன்றின்மீது ஆத்திரம் தீரப் பெய்துவிட்டுப் போவான்.

இந்தக் கதையை எழுதியபோது பதினெட்டு வயது. இன்றும்கூடத் தாம்பரம் முதல் அண்ணா சாலை வரை போகும் வழியில் ஒதுங்க ஒரு பொதுக் கழிப்பிடம் கிடையாது. சென்னை நகருக்குள் மிக நீண்டதும், கிட்டத்தட்ட நேர்க்கோட்டில் வரக்கூடியதும், அதிகப் போக்குவரத்து உள்ளதுமான சாலை அதுதான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த நீண்ட சாலையின் ஏதோ ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பணி எப்போதும் நடக்கிறது. கடந்த முப்பத்தைந்து வருடங்களில் மூன்று மாதங்கள்கூட இந்தச் சாலையில் சாலைப் பணியாளர்கள் இல்லாதிருந்ததில்லை. வேலை நடக்காதிருந்ததில்லை.

ஒரு வேலை தொடங்குவார்கள். உடனே ஏதாவது விவகாரம் வரும். அல்லது யாராவது வழக்குப் போடுவார்கள். அல்லது நிதி வரத்துப் பிரச்னை ஏற்படும். அதுவும் இல்லாவிட்டால் விபத்து நடந்துவிடும். உடனே பணி பாதியில் நிற்கும். சாலைப் பணி பாதியில் நின்றால் போக்குவரத்து சிக்கலாகும். அதைப் பற்றியெல்லாம் அந்தப் பணியாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. பணி நடக்கும் இடத்தை ஒட்டிய காலி இடங்களில் அவர்கள் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். அது பாண்ட்ஸ் மேம்பாலப் பணியானாலும் சரி, திருசூலம் ரயில் நிலையக் கட்டுமானப் பணியானாலும் சரி, பறங்கிமலை சுரங்கப் பணியானாலும் சரி, கிண்டி மேம்பாலம் அல்லது கத்திப்பாரா பல அடுக்கு மேம்பாலப் பணியானாலும் சரி, இப்போது நடைபெறும் மெட் ரோ இருப்புப்பாதைப் பணியானாலும் சரி.

இவை எதுவும் இல்லாத காலங்களில், சில சமயம் இப்பணிகள் நடக்கும்போதேகூட ‘நாய்’ சார்பில் (NHAI – National Highway Authority of India) உடைந்த சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற ஆரம்பிக்கும். பெரிய பெரிய தார் டின்களையும் கருங்கற்களையும் கொண்டு வந்து கொட்டிக் குவிப்பார்கள். போகிற வருகிற வாகனங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் குறுக்கே கயிறு கட்டிக்கொண்டு பொக்லைன் இயந்திரங்களை இயக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்தப் பணிக்குப் பகல் இரவு பேதம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அல்லது இரு வேளைகளிலும்கூட நடக்கும். விமான நிலையம் உள்ள வழி அல்லவா? சாலை சரியாக இருக்க வேண்டியது அவசியம். குறைந்தது, பிரமுகர்கள் வந்து போகும்போதாவது.

அது நடக்கும்போது, பிரம்மாண்டமான பேருந்துகளும் லாரிகளும் இதர வாகனங்களும் அரசனின் முன்னால் ஆண்டியைப் போலத் தம்மை ஒடுக்கிக்கொண்டு ‘நாய்’ கோடு கிழித்துக் காட்டியிருக்கும் குறுகிய வழித் தடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்துப் போகவேண்டும். அந்தப் பெருவாகனங்களுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் இரு சக்கர வாகனங்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எந்தக் கணமும் போட்டு மிதித்துவிட்டுப் போய்விடுவார்கள் என்ற அச்சத்துடனேயேதான் நெடுஞ்சாலையை தினமும் கடந்தாக வேண்டும்.

ஒப்பீட்டளவில் இன்றைய மெட் ரோ ரயில் தடக் கட்டுமானப் பணிகள் நடக்கும்விதம் சிறிது பரவாயில்லை என்று தோன்றுகிறது. கத்திப்பாரா மேம்பாலப் பணி நடந்துகொண்டிருந்தபோது சுமார் ஆறு மாத காலத்துக்காவது ஜோதி திரையரங்கில் இருந்து அம்பாள் நகர் நிறுத்தம் வரை எனது டிவிஎஸ் 50ஐத் தள்ளிக்கொண்டு நடந்து போயிருக்கிறேன். எம்.ஐ.டி மேம்பாலப் பணி நடந்த மொத்த காலத்திலும் பேட்டையின் மறுபுறத்துக்கு நான் சென்றதேயில்லை. பாலம் கட்டி முடித்த பின்பு ஆர்வத்துடன் அதன் மீதேறி அந்தப் பக்கம் போய்ப் பார்த்தால் கிழக்கு மேற்கே மறந்துவிடும் போலிருந்தது.

முன்னொரு காலத்தில் அஸ்தினாபுரத்தில் என்.ஆர். தாசன் என்றொரு எழுத்தாளர் இருந்தார். அசோகமித்திரன் மூலமாக அறிமுகமானவர். என் நண்பன் ஆர். வெங்கடேஷும் அந்தப் பக்கம் புருஷோத்தம நகரில்தான் இருந்தான். ரயில்வே கேட் தாண்டி அவர்களைப் பார்க்கப் போகும்போதெல்லாம் புராதனமானதொரு சாம்ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிப்பது போன்ற உணர்வு உண்டாகும். அஸ்தினாபுரத்தில் நிறைய இடைவெளி விட்டு சுற்றுச் சுவர்களுடன் வீடுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டையும் நிறைய மரங்கள் மூடியிருக்கும். செம்மண் சாலைதான் என்றாலும் இந்தப் பக்கத்து நியூ காலனி சாலைகளைப்போல அல்லாமல், நன்றாகவே இருக்கும். நடக்க சிரமம் இருக்காது. தவிர, சாலையோர அடி பம்புகளில் தண்ணீர் வரும். சிறுவர்கள் வீதியிலேயே தண்ணீர் அடித்துக் குளித்துத் தரையை நனைத்து வைப்பார்கள். அவர்களுக்கு இடம்விட்டு, பெண்கள் நகர்ந்து நின்று சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். எங்கெங்கும் மாடுகள் சுற்றிக்கொண்டிருக்கும். வீடுதோறும் மாடு கட்டிப் பால் கறந்து காப்பி குடிக்கும் கலாசாரம் அங்கு தழைத்திருந்தது. மயிலிறகு சொருகிய கிரீடத்துடன் எங்காவது வழியில் கிருஷ்ணர் எதிர்ப்பட்டால் வியப்பதற்கில்லை என்று தோன்றும்.

இதெல்லாம் பாலம் கட்டுவதற்கு முன்பு வரை. பாலத்துக்குப் பிறகு சாம்ராஜ்ஜியங்களின் முகங்கள் மாறின. லெவல் க்ராசிங் நெரிசல் குறையும் என்று நினைத்து அஸ்தினாபுரத்தின் மொத்தப் போக்குவரத்தை அதிகரித்துவிட்டார்கள். உடனே ரியல் எஸ்டேட் வளர்ந்தது. கோட்டைச் சுவர்களுடன் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு அபார்ட்மெண்ட்களாயின. நிறைய கடைகள் வந்தன. எப்போதோ ஒருமுறை அந்தப் பக்கம் சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மிக விரைவில் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் பிராந்தியம் ஆக்கப்பட்டது. ஒரு மேம்பாலத்தின் சக்தி கற்பனைக்கு அப்பாற்பட்டது.

திருசூலம் மேம்பாலம் கட்டிய தினங்களை என்னால் மறக்க முடியது. என் வீட்டில் இருந்து அண்ணாசாலை வரை செல்வதற்கு ஒரு மணி நேரம் என்றால் திருசூலம் பாலக் கட்டுமானத்தைக் கடப்பதற்கு மட்டும் தனியே முப்பது, நாற்பது நிமிடங்கள் ஆகும். நடுநடுவே வண்டியை ஓரமாக நிறுத்தி, தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் கிளம்புவேன். கிளம்பியது முதல் இப்படித் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால் வழியில் ஒதுங்க ஓர் இடம் தேவைப்படத்தான் செய்யும். சர்க்கரை நோயாளிகள் என்றால் இன்னும் சிரமம். அவர்களால் இயற்கையின் அழைப்பை நிராகரிக்க முடியாது. ஆனால் ஒதுங்க இடமில்லாத பெருஞ்சாலையில் என்ன செய்ய முடியும்? ஓரங்களில் நிறுத்தலாமே தவிர, வண்டியை விட்டு இறங்கிப் போக முடியாது. கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்கள் அங்கெல்லாம் ரிப்பன் கட்டி எல்லை வகுத்துக்கொண்டு அடுப்பு மூட்டி ரொட்டி சுட்டுக்கொண்டிருக்கும்.

ஏதாவது உணவகம் இருந்தால் இறங்கி ஒரு காப்பி குடித்துவிட்டோ அல்லது காப்பி குடிக்க உள்ளே நுழைந்தாற்போன்ற பாவனையிலோ கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டு வந்துவிடலாம். அதற்கு அன்று வழி இல்லை. பல்லாவரம் கிருஷ்ணா லாட்ஜை விட்டால் சைதாப்பேட்டை வரை நடுவே ஒரு டீக்கடைகூட இருக்காது. பறங்கிமலை ராணுவ வளாகத்தை அடுத்த மைதானம் ஆண்களுக்கு ஒரு வசதியான இடம்தான். ஆனால் சிப்பாய்கள் பார்த்தால் சுட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கும். சைதாப்பேட்டையைத் தாண்டிவிட்டால் போக்குவரத்து நெரிசல் இயல்பாகவே அதிகரித்துவிடும். ஒதுங்குமிடம் என்ற ஒன்றை அங்கெல்லாம் எதிர்பார்க்க முடியாது. எப்படிப் பார்த்தாலும் இந்து அலுவலகம் தாண்டி வெட்டவெளி வரும்வரை இயற்கைக்கு எதிரான துவந்த யுத்தத்தை நிகழ்த்தியே ஆகவேண்டும். பெண்களுக்கு வழியே இல்லை.

இன்றுவரை இது எனக்குப் புரிந்ததில்லை. சென்னையில் வேறு எந்த ஒரு சாலையிலும் இப்படி முப்பது முப்பத்தைந்து வருடங்களாக ஏதேனும் ஒரு பணி நடந்துகொண்டே இருந்ததில்லை. ஒரு மணிநேரப் பயணத் தொலைவு, நிரந்தரமாக இரண்டு மணி நேரத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதில்லை. எத்தனையோ பாலங்கள் கட்டிவிட்டார்கள். எவ்வளவோ சுரங்கப் பாதைகள் திறக்கப்பட்டுவிட்டன. பல சாலைகள் பழுதாகி மாற்றப்பட்டுவிட்டன. ஒரு வழிகள் இரு வழிகளாகியிருக்கின்றன. இரு வழிகள் ஒரு வழிகளாகியிருக்கின்றன. தாம்பரத்தில் இருந்து கிண்டி வரையிலான சாலைக்கு ஒரு மாற்று வழி அமைக்க ஏன் யாருக்கும் தோன்றவேயில்லை என்று தெரியவில்லை. வேளச்சேரியைச் சுற்றிக்கொண்டு போவது மாற்று வழி ஆகாது. அது சுற்று வழி.

எல்லா நலப்பணிகளும் மக்களுக்காகத்தான் என்பது எளிய சமாதானம். முப்பத்தைந்து வருடங்கள் என்பது வாழ்வின் மிக நீண்ட காலம். இக்காலத்தில் ஒருநாள்கூட, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்காவது காலைத் தரையில் ஊன்றி விந்தி விந்தி வண்டியைத் தள்ளிக்கொண்டு போகாமல் இத்தூரத்தை நான் கடந்ததில்லை. என்னைப் போல எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் பேர்கள்! எண்ணிப் பார்க்கக்கூட மறந்து போய் பழகிவிட்டிருப்பார்கள்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நாள்களில் வீட்டைவிட்டு எங்குமே போகவில்லை. மேம்பாலப் பணிகள், பறக்கும் ரயில் தடப் பணிகள் எல்லாம் அப்படி அப்படியே நின்றிருக்கும். அவை மீண்டும் நடைபெறத் தொடங்கும்போது நான் மீண்டும் வீட்டை விட்டு வெளியே வருவேன். எல்லா பணிகளும் எனக்காகத்தான் நடக்கின்றன என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலை மராமத்துப் பணிகள் அனைத்தும் இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் நிச்சயமாக முடிந்துவிடும். அதன்பின் நூறடிக்கு ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டத் தொடங்குவார்கள். மக்களுக்கோ மக்களையோ ஏதாவது செய்துகொண்டேதான் இருந்தாக வேண்டியிருக்கிறது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!